தலைப்பில்லாத மின்னஞ்சல் கற்றுத்தந்த பாடம்!

மாணவர் ஒருவர், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.. நான் அந்த மாணவருக்கு அவரின் ஆய்வை மேற்பார்வையிட்டு நெறிப்படுத்தும் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவன்.. DC member என்று சொல்வார்கள்.. அந்த மின்னஞ்சலில் தலைப்பு இல்லை, உள்ளீட்டு செய்தி எதுவும் இல்லை.. படித்தபின் கிழித்துவிடவும் என்றவாறு ஒரே ஒரு இணைப்பு மட்டும் இருந்தது..


ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில், என்னுடைய மெட்டீரியல் ஒன்றின் காந்தப்பண்பை அளவிட வேண்டியிருந்தது.. அதற்காக SQUID-VSM என்ற கருவியைப் பயன்படுத்த வேண்டும்.. அதன் விரிவாக்கம் Superconducting Quantum Interference Device–Vibrating Sample Magnetometer.. தமிழில் சொல்வதென்றால்… மீக்கடத்தும் குவாண்டம் குறுக்கீட்டுக் கருவியுடன் இணைந்த அதிரும் மாதிரிக் காந்தமானி.. என்று வைத்துக்கொள்ளலாம்.

 

இந்த மொழிபெயர்ப்பை ஒரே மூச்சில், பிழையில்லாமல் மூன்று முறை சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு. பரிசு என்ன என்பதைப் பின்னர் முடிவு செய்துகொள்ளலாம்.. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பொருளின் காந்தப்பண்பை மிகத் துல்லியமாக அறிய உதவும் கருவி அது.

 

அந்தக் கருவி எங்கள் ஆய்வகத்தில் இல்லை. எனவே என்னுடைய ஆய்விற்காக உருவாக்கிய மெட்டீரியலை TIFR - டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன்.. அங்கு முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த என்னுடைய மைத்துனரின் நண்பர் ஒருவர் அந்தக் கருவியைப் பயன்படுத்தி, என் மாதிரிக்குத் தேவையான அளவீடுகளை எடுத்தார்.. அனைத்துத் தரவுகளையும் மின்னஞ்சல் வழியாக எனக்கு அனுப்பியும் வைத்தார்.

 

அவற்றைப் பார்த்தபோது ஒரு சிக்கல் இருப்பது தெரியவரவே, நான் எதிர்பார்த்திருந்த ஒரு குறிப்பிட்ட தரவு அதில் இல்லை என அவரைத் தொலைபேசியில் அழைத்து, எனக்கு என்ன வேண்டும் என்பதை விளக்கினேன். அவரும், நீ கேட்கும் தரவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உசாத்துணை ஏதாவது இருந்தால் மின்னஞ்சலில் அனுப்பிவிடு… என்றார். அதாவது, நான் எதிர்பார்க்கும் முடிவுக்கு மூலமாக இருக்கும் ஏற்கெனவே வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரையை அனுப்பச் சொல்லியிருந்தார்.

 

அன்று ஆய்வகத்தில் வேலை முடியவே நடுநிசி கடந்துவிட்டது.. பேய்கள் பேசிக்கொள்ளும் நேரம்.. இருந்தாலும் அவர் கேட்ட ஆய்வுக் கட்டுரையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிவிட்டுதான் வீட்டிற்குக் கிளம்பினேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நள்ளிரவு கடந்தும் இந்தப் பையன் ஆய்வகத்தில் வேலை செய்கிறானே.. என்று அவர் நினைக்க வேண்டும் அல்லவா.. அதற்குத்தானே அந்த நேரத்தில் மின்னஞ்சல் அனுப்பியது.. எல்லாம் ஒரு விளம்பரம்…

 

நாம் செய்யும் வேலையைவிட, அதை எந்த நேரத்தில் செய்தோம் என்பது சில நேரங்களில் முக்கியமானதாகத் தோன்றும் வயது அது. மறுநாள் காலை எழுந்ததும், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாக ஜீ-மெயில் (Ji Nahi.. G) அறிவித்தது. ஆவலுடன் மின்னஞ்சலைத் திறந்தேன்.. நான் எதிர்பார்த்தது, நள்ளிரவிலும் வேலை செய்துகொண்டிருக்கிறாயா.. உன்னுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.. என்பது போன்ற இரண்டு வரிகள். அதனுடன், நீ கேட்ட தரவுகளை மாலைக்குள் அனுப்புகிறேன்… என்று எழுதியிருப்பார் என்றும் நினைத்தேன்.

மின்னஞ்சலைத் திறந்தேன்..

ஆனால்…

ஆனால்…

அதில் இப்படி எழுதியிருந்தார்..

உனக்கெல்லாம் அறிவில்லையா.. நீ ஓர் அறிவியல் ஆய்வாளன்தானே.. ஒரு மின்னஞ்சலில் தலைப்பே எழுதாமல், உள்ளடக்கமாக ஒரு வரிகூடக் குறிப்பிடாமல், வெறும் இணைப்பை மட்டும் சொருகி அனுப்பியிருக்கிறாய்.. ஒரு கடிதம் எப்படி எழுத வேண்டும் என்று பள்ளியில்கூடக் கற்றுக்கொள்ளவில்லையா..

நள்ளிரவு வரை வேலை செய்ததற்காகப் பாராட்டு கிடைக்கும் என்று மின்னஞ்சலைத் திறந்த எனக்கு, காலையிலேயே இலவசமாக அறிவுரையும் திட்டும் கிடைத்துவிட்டன. அவருக்கு நான் வெறும் ஆய்வுக் கட்டுரையை மட்டும்தான் இணைத்து அனுப்பியிருந்தேன். Subject மற்றும் உள்ளீட்டு செய்திகள் எழுத மறந்துவிட்டிருந்தேன்..

ஆனால் அப்போது எனக்குத் தோன்றியது வேறு.. பள்ளியில் எழுதிய விடுப்பு விண்ணப்பம்தான் இதுவும் என்று எனக்கு எப்படித் தெரியும்.. பள்ளியில் கடிதம் எழுதும்போது கூட எனக்குப் பெரிய குழப்பம் இருக்கும் Yours lovingly என்று முடிப்பதா Yours obediently என்று முடிப்பதா.. என்று.. ஆசிரியருக்குக் கடிதம் எழுதும்போது அன்பாக இருப்பதா, கீழ்ப்படிந்து இருப்பதா என்ற குழப்பம் அப்போதே இருந்தது..

 

அந்தக் குழப்பம் என்னைப்போலவே வளர்ந்து, பின்னர் பல குழப்பங்களை குட்டிப்போட்டிருந்தது. அதில் ஒன்றுதான் இந்தத் தலைப்பில்லாத மின்னஞ்சல்.. இந்த நேரத்தில் தலைப்பாம்… உள்ளடக்கமாம்… என்று கோபப்பட்டுக்கொண்டு, அவருக்கு எந்தப் பதிலும் அனுப்பாமல் விட்டுவிட்டேன்.

 

இனி பள்ளிகளில் விடுப்பு விண்ணப்பம் மட்டும் எழுதப் பழக்குவதற்குப் பதிலாக, ஒரு மின்னஞ்சலை எப்படித் தொடங்குவது, பொருத்தமான தலைப்பை எப்படிக் குறிப்பிடுவது, கோப்பை எப்படி இணைப்பது, ஒருவருக்குப் பதில் எழுதும்போது எப்படி எழுதுவது என்பதையும் கற்றுக்கொடுக்கலாம்.. ஏனென்றால் இப்போது யார் தாளில் கடிதம் எழுதி, உறையில் வைத்து, அஞ்சல்தலை ஒட்டி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்..

 

ஆனால் அன்றைக்கு என்னுடைய கோபம் அவ்வளவு எளிதில் குறையவில்லை.. அவர் திட்டியதிலிருந்து, நான் அவருக்கு எந்தப் பதிலும் எழுதாமல் இருந்தேன். என்ன பெரிய மின்னஞ்சல் நாகரீகம்.. என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அவர் கோபத்தை மனதில் வைத்துக்கொள்ளவில்லை.

 

நான் கேட்டிருந்த புதிய அளவீடுகளை அன்று மாலையே எடுத்து, முறையாகத் தொகுத்து, மீண்டும் மின்னஞ்சலில் அனுப்பிவைத்திருந்தார். அவர் திட்டியதைவிட, அதற்குப் பிறகும் பொறுப்பாக அந்த வேலையைச் செய்து கொடுத்ததுதான் இப்போது நினைக்கும்போது பெரிதாகத் தெரிகிறது.

 

அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். பல முடிவுகளை ஒன்றோடு ஒன்று இணைத்தோம்.. மீண்டும் மீண்டும் திருத்தினோம்.. குட்டிக்கரணம், நெட்டிக்கரணம் என ஆய்வுக்கட்டுரைக்குத் தேவையான எல்லாக் கரணங்களையும் அடித்தோம்.. என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளர் அனைத்தையும் ஒருங்கிணைக்க, ஒருவழியாக ஓர் ஆய்வுக் கட்டுரை தயாரானது. SQUID-VSM தரவுகளை எடுத்துக் கொடுத்த அந்த மைத்துனரின் நண்பரையும் ஆய்வுக் கட்டுரையில் co-author ஆக சேர்த்தோம். ஒருவழியாக அந்தக் கட்டுரையை Journal of Materials Chemistry இதழுக்கு அனுப்பினோம். அப்போது அது ஒரே இதழாக இருந்தது. இப்போது A, B, C என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்துவிட்டது. பங்காளிகள் பிரச்சனையாக இருக்குமோ..

 

எனி வே.. சில சுற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு எங்களுடைய ஆய்வுக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி வந்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர், மின்னஞ்சல் எழுதத் தெரியவில்லை என்று என்னைத் திட்டிய அந்த அண்ணன்தான். இத்தனை நாட்களாக அவர்மீது வைத்திருந்த கோபம் ஒருபக்கம். கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிழ்ச்சி இன்னொரு பக்கம். இப்போது அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.. இந்த முறை மிகவும் கவனமாக எழுதினேன் தலைப்புடன், உள்ளடக்கச் செய்தியுடன்... எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தேன். இப்போது குறை கண்டுபிடித்துவிடு பார்க்கலாம்.. என்ற கெத்துடன் அந்த மின்னஞ்சலைத் தட்டிவிட்டேன்...

 

அன்றிலிருந்து இன்றுவரை, யாருக்கும் தலைப்பும் உள்ளடக்கமும் இல்லாமல் ஒரு மின்னஞ்சலை அனுப்பியதில்லை.. Please find attached file அல்லது PFA என்று எழுதிவிட்டு, இணைப்பை மறந்து அனுப்பிய சந்தர்ப்பங்கள் வேறு உண்டு. அது மனிதகுலத்தின் பொதுவான மின்னஞ்சல் துயரங்கள் அல்லவா.. அதற்குள் இப்போது செல்ல வேண்டாம்.. ஆனால் வெறும் இணைப்பை மட்டும் அனுப்பும் பழக்கம் அன்றோடு முடிந்தது.

 

இப்போது இந்த ஆய்வு மாணவர் தலைப்பில்லாமல், உள்ளடக்கம் இல்லாமல், வெறும் இணைப்பை மட்டும் எனக்கு அனுப்பியவுடன் அந்தப் பழைய நினைவு வந்துபோகிறது.. அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே பார்வேர்ட் செய்துவிடலாமா என்று தோன்றியது. பின்னர் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு, மென்மையாக ஒரு பதிலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

யுவர்ஸ் லவ்விங்லி,

- சகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

சாங்வான் குறிப்புகள்#02

விளையாட்டாக சொல்கிறேன் #2