தஞ்சையை எனக்குள் சுமந்து வருபவன்..
அந்தப் பேரரக்கன் என்னையும் பற்றிக்கொண்டான்.. அது மே மாதத்தின் ஒரு காலை. சாதாரணத் தொண்டை வலியில்தான் அந்த நாள் தொடங்கியது.. அன்று இரவே கடுமையான காய்ச்சலாக மாறியது. அதன்பிறகு தொடர்ந்து பதினைந்து நாட்கள் வாட்டி வதைத்தது.
அது ஒரு ஊரடங்குக் காலம்.. நேரக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஒருவரையொருவர் சென்று பார்த்துக்கொள்வதற்குக்கூட வாய்ப்பில்லாத நாட்கள். வீட்டில் இருப்பவர்களுக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற பயத்தில், என்னை நானே ஓர் அறைக்குள் முடக்கிக்கொண்டேன். அந்தத் தனிமையில் புத்தகங்கள் மட்டும் சிறிது ஆறுதல் கொடுத்தன. வேளாவேளைக்கு உணவு, அறையின் வாசலைத் தேடி வந்தது.
தஞ்சையில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த காவலர் குடியிருப்பை, கோவிட் நோயாளிகளுக்கான தற்காலிக முகாமாக மாற்றியிருந்தார்கள். அங்கே சென்றுவிடலாமா என்று ஒருகணம் நினைத்தேன். கவிதாவும், நண்பனும் வேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். காய்ச்சல் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே நுரையீரலில் ஏதோ தொற்று இருப்பதை என்னால் உணர முடிந்தது. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலும், ஆக்சிஜன் அளவில் பெரிய குறைபாடு இல்லாததால் வீட்டிலேயே ஓய்வெடுத்தேன்.
அந்த நேரத்தில் எது மருந்து, எது நம்பிக்கை, எது பயம் என்று யாரும் சரியாக அறிந்திருக்கவில்லை.. ஊரில் இருந்த பப்பாளி மரங்களெல்லாம் என்னைப் பார்த்து நிச்சயம் பயந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாளுக்கு ஒரு பப்பாளி இலைச் சாறு.. பப்பாளி மரங்கள் மட்டுமல்ல, அந்தச் சாற்றின் சுவையைத் தாங்கிய என் நாக்கும் பயத்தில் ஆழ்ந்திருந்தது... இவ்வளவு மருத்துவ வசதிகளும் தகவல் தொடர்புகளும் இருக்கும் இந்த நவீன காலத்திலேயே, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியை எதிர்கொள்ள முடியாமல் நாம் தவித்துக்கொண்டிருந்தோம். அப்படியானால் பிளேக் போன்ற பெருந்தொற்றுகள் பரவிய காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படித் தவித்திருப்பார்கள் என்று நினைத்தால் இன்றும் மனம் பதைபதைக்கிறது.
காய்ச்சல் தொடங்கி ஐந்தாவது நாள் இருக்கும். உடல்நிலையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் என்னைப் பார்ப்பதற்காக ஒருவன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டு கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். கவிதா அவனிடம் எவ்வளவோ விளக்கியும், அவன் அங்கிருந்து நகர்வதாக இல்லை. தினமும் பேசிக்கொண்டிருப்பவன்தான்.. நான் பட்ட இன்னல்கள் அனைத்தையும் கேட்டறிந்து, அலைபேசி வழியாகவே மருந்துகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தவன் ஐந்து நாட்கள் கடந்தும் சரியாகவில்லை என்பதை அறிந்ததும், நேரடியாக வந்துவிட்டான்.
நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.. சன்னல் வழியாக நின்று பேசினேன், எனக்கு ஒன்றுமில்லை.. நீ போ.. என்று கெஞ்சிப் பார்த்தேன். ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் நண்பனாக வரவில்லை.. ஒரு முடிவோடு வந்திருந்தான்..
வேறுவழியில்லாமல், ஒரு வாரம் கழித்து வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.. என்னை பைக்கில் ஏற்றிக்கொண்டு, எப்போதும்போல தஞ்சை வீதிகளில் ஒரு வலம் வந்தான். இன்றுவரை அது எங்களுடைய தலையாய பணிகளில் ஒன்று..
மருத்துவக் கல்லூரி சாலை வழியாகப் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்வோம். பெரிய கோயிலைப் பார்த்துக்கொண்டே பேருந்து நிலையம் அருகிலிருக்கும் அன்பு பால் நிலையத்தை அடைவோம். பகல் நேரமாக இருந்தால் சில்லென்று பாலாடை, பன்னீர் எஸ்சென்ஸ் போட்ட ஒரு லஸ்ஸி.. மாலையாக இருந்தால் சூடான பனங்கற்கண்டு பால்.. அருகிலிருக்கும் இன்னொரு கடையில் அசோகா, திகட்டாமல் இருக்க கொஞ்சம் காராச்சேவு.. கூடவே ஒரு பாதாம் பால்.. இவற்றை அடித்துவிட்டு ஜூபிட்டர் வழியாக வீதிகளை அளப்போம்.. அரண்மனையை வெளிப்புறமாக நின்று பார்த்துவிட்டு, மார்க்கெட் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவோம். அங்கிருந்து ஆத்துப்பாலத்தில் திரும்பாமல் நேராக வண்டியை விட்டு, லோபிரிஜ் வழியாக கான்வென்ட் சாலையை அடைவோம். பரிசுத்தம் நகர், அருளானந்த நகர் வழியாக சிவாஜி ரவுண்டானா வந்து, மணிமண்டபத்தைக் கடந்து புதிய பேருந்து நிலையம் செல்வோம். புதிய பேருந்து நிலையத்தின் பின்புறமாக ரகுமான் நகர் வழியே சுற்றி, மீண்டும் மருத்துவக் கல்லூரிச் சாலைக்கு வந்து சேருவோம்.
தஞ்சையில் எங்களுக்கென்று ஒரு சுற்றுப்பாதை இருக்கிறது.. எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், எங்கே லஸ்ஸி குடிக்க வேண்டும், எந்தக் கடையில் அசோகா வாங்க வேண்டும், எந்தத் தெருவில் மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்கள் பைக்குகளுக்கும் தெரியும்.. தீபாவளி இரவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை விரிந்திருக்கும் கடைகளை நள்ளிரவில் பார்த்துக்கொண்டே ஒரு வீதியுலா வருவோம். அந்தச் சுற்றை முடித்த பிறகுதான் மறுநாள் ஊருக்குச் செல்வது எங்கள் வழக்கம்.
அவனுடன் பயணிக்கும்போது, நான் தஞ்சைக்குள் சுற்றுகிறேன் என்ற உணர்வு வருவதில்லை. தஞ்சையே எனக்குள் சுற்றிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்.. அப்படியான உணர்வுடன் அவனோடு ஒன்றிப்போய் ஒரு சுற்று வந்த என்னை, எனக்கே தெரியாமல் நேராக சி.டி. ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றுவிட்டான். அங்கு அவனுடைய நண்பர் ஒருவர் இருந்தார். ஸ்கேனை பார்த்துவிட்டு, ஆமாம்… அதுதான்... தனிமையில் பதினைந்து நாட்கள் இருங்கள்.. என்று சொல்லிவிட்டார்.
இருவரும் திரும்பினோம்.. பொலிவிழந்த அந்த சாலைகள் வழி பயணிக்கையில் அவன் என்னிடமிருந்து விலகி நின்றானா என்றால்.. இல்லை.. முன்பைவிட இன்னும் ஒட்டிக்கொண்டான். முகக்கவசத்துடன் இருந்த என்னை, இளநீர் குடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினான். இருவரும் இளநீர் குடித்தோம்.. சற்று இடைவெளிவிட்டு நிற்பதில் மட்டும் நான் கராராக இருந்தேன். பின்னர் என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டான்.. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அவனிடமிருந்து மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்துவிடும்.. காய்ச்சல் எப்படி இருக்கிறது.. ஆக்சிஜன் அளவு எவ்வளவு.. சாப்பிட்டாயா.. இந்த மூன்று கேள்விகளும் ஏறத்தாழ வேளாவேளைக்கு வந்து சேர்ந்துவிடும்.. இன்றுவரை அவனுடைய அன்பின் வழிமுறை மாறவில்லை.
இந்த உலகத்தில் எதற்காகவும் யாரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத ஒருவன் நண்பனாக வாய்ப்பதைவிட, வேறு என்ன பெரிய செல்வம் வேண்டும்.. நண்பா… நமக்கென்ன அவ்வளவு பெரிய ஆசைகளா இருக்கின்றன.. நமக்கென ஒரு சிறிய நிறுவனம். ரசித்து வாழ்வதற்கான ஒரு அமைப்பு.. முடிந்தவரை அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற மனம்.. நோய்நொடியற்ற வாழ்க்கை.
அவ்வளவுதான்!
அந்தச் சிறிய ஆசைகளை நாம் அடைய இந்த இயற்கை கட்டாயம் துணைபுரியும். என்றும் இதே அன்புடன் மகிழ்ச்சியாக இரு நண்பா..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உன்னைப்போல் கவிதை எழுதும் மொழி எனக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை கவிதை எழுதத் தெரிந்திருந்தாலும், சில வரிகளுக்குள் நம் செயல்களையும், நம் நட்பையும் அடக்கிவிட என்னால் முடியாது. இந்தக் கட்டுரையில்கூட முடிந்தவரை அவற்றை நிரப்பி, ஏறி நின்று மிதித்து உள்ளே அமுக்கியிருக்கிறேன்.. இன்னும் ஊருப்பட்ட கதைகள் முளையின் திண்ணையில் ஊஞ்சல் கட்டி ஆட்டமாக ஆடிக்கொண்டே இருக்கின்றன.. நமது ஐந்து வயதில் தொடங்கி இதோ நம்முடைய நாற்பது வயது வரையான நட்பென்றால் சும்மாவா என்ன..
அவற்றையும் பேசுவோம்…
தஞ்சை வீதிகளையும் தொடர்ந்து அளப்போம்…
@Vinoth Kannan
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக