விளையாட்டாக சொல்கிறேன் #2

நட்பு என்ற சொல்லின் விளக்கமறியாதபொழுதில் கிடைத்த கன்னி நட்புதான் வினோதன். தமிழை காதலிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தமிழையே தன்னை காதலிக்க வைத்துவிடுவார் தன் தமிழ் ஆளுமையால். அதற்கு காரணமும் உண்டு. அந்த காரணம் வேறுயாருமில்லை அவனின் தாத்தா, தமிழ் ஆசிரியர். அவன் தாத்தாவைப்பற்றி சொல்லி உடல் சிலிர்த்துக்கொள்ளும்பொழுதெல்லாம் எனக்கு அப்படியொரு தாத்தா இல்லையே என்றொரு ஏக்கம் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட அமுத தமிழின் காதலன், சுற்றத்தாரை நேசிக்கும் அன்பன் சிறிதுகாலம் நட்பு பாராட்டிவிட்டு ஏம்பல் பள்ளிக்கு மாற்றமாகிவிட்டான் என்னை ஏமாற்றிவிட்டு! அன்றைய பொழுதில் என் நண்பர்களாக வாய்த்தவர்களில் முக்கியமானவர்கள் காளி, கணேஷ், அன்பு, அருள், கார்மேகம், உத்ராபதி, ஸ்டாலின், சக்தி. இவர்களில் காளி கணேஷ் இருவர் வீட்டில்தான் என் முழுநாளைய விளையாட்டும்.. பிற்பாடு மற்ற நண்பர்கள் வீட்டிற்கும் செல்லதுவங்கினேன். எந்த வீட்டிற்கு சென்று, அவர்களின் வீட்டுவேலையும் முடிக்காத எந்த நண்பனையும் முழு நேரமாக விளையாட அழைத்துவந்துவிட்டாலும், அவர்களின் பெற்றோர்கள் ஏதும் என்னை கடிந்துகொண்டது கிடையாது. அதற்கு என் குடும்ப பின்னனியும் காரணமென நினைக்கிறேன். இன்று அது நெருடலாக பட்டாலும், அன்றைய சிறு வயதில் எதுவும் தோன்றியதில்லை. 
---------------------------
நேரம் (time) என்பது நான்காவது பரிமாணம் (4th dimension) என்கிறது அறிவியல், அந்த நான்காவது பரிமாணம் மட்டுமே நம் மற்ற மூன்று பரமாணங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதே இயற்கை. அப்படி அந்த நான்காவது பரிமாணமான நேரத்தை விரயமாக்காதே என்று பலரும் இன்றளவில் சொல்வதுண்டு! அந்தளவிற்கு அறிவின் தேவையிருக்கிறது இன்றைய நாளை வாழ்ந்து கழிப்பதற்கு. ஆனால் அன்றளவில் நேரத்தை ஒரு பலனும் எதிர்பாராது கடக்கவே செய்தோம் என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட கடந்த இறந்தகால பொழுதுகளை அசைபோடும்பொழுது கிடைக்கும் இன்பம் எந்த உணவாலும், எந்த பொருளாலும், எந்த திரைப்படத்தாலும் கொடுத்துவிடமுடியாது. அப்படி அசைபோடும் பொழுதுகளில், நாம் நம்மையறியாது நேரத்தை கடக்கும் எந்திரமாய் (time machine) மாறிவிடுகிறோம். அசைபோட்டுக்கொண்டே அந்த வாழ்ந்து முடித்த வாழ்வுக்குள் சென்றுவிடுகிறோம் சிறுவனாக! 

அப்படியாய் நான் எப்பொழுது அசைபோட்டுக்கொண்டிருந்தாலும் நான் செல்கின்ற நேரம், நான் சிறுவனாய் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும் வேளையாகத்தான் இருக்கும். அப்படித்தான் நான் இப்பொழுது நேரம் கடக்கும் எந்திரத்தில் கடந்து அடைந்த நேரமும், அது பல குச்சிகளை வைத்து விளையாடும் விளையாட்டென நினைக்கிறேன். அதன் பெயர் நூத்தாங்குச்சி (நூற்றாங்குச்சி - நல்ல தமிழில்) என்றழைப்பார்கள்.

சரியாக ஒரு 4 செமீ அளவுள்ள பத்து குச்சிகளை எடுத்துக்கொள்ளவேண்டும், பதினொன்றாவது குச்சியை சரிக்கு சரியாய் இரண்டு மடங்கு பெரிய அதாவது 8 செமீ அளவுள்ளதாய் உடைத்துக்கொள்ளவேண்டும். அந்த பெரிய குச்சியின் பெயர்தான் நூத்தாங்குச்சி, அதற்கு 100 எண்கள் உண்டு. மற்ற பத்து குச்சிகளுக்கும் 10 வீதம், 100 எண்கள். ஆக மொத்தம் 200 எண்கள். இவ்விளையாட்டினை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம், குழுவாகவும் விளையாடலாம். இருவர் இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள் என்றால், முதல் ஆள் அந்த பத்து குச்சிகளை அடுக்கி கைகளிள் வைத்துக்கொண்டு, நூத்தாங்குச்சியை அதற்குள் செருகி, வேகமாய் கீழே வீசவேண்டும். ஆனால் அதில் கவனம் தேவை, அந்த நூத்தாங்குச்சி மீது குறைந்தது ஒரு சிறுகுச்சியாவது விழுந்திருக்க வேண்டும் இல்லையேல் அவருக்கு வாய்ப்பு பறிபோகும்.  அதேவேளை அதிகமான சிறுகுச்சிகள் அந்த நூத்தாங்குச்சி மீது விழுந்தாலும் ஆபத்துதான், அவரால் அந்த ஆட்டத்தை நிறைவு செய்வது கடினம். அதனால் குறைந்தபட்ச குச்சிகள் மட்டுமே அந்த நூத்தாங்குச்சி மீது விழுமாறு செய்யவேண்டும், அதற்கு கவனமும், பக்குவமும் வேண்டும். இப்பொழுது, ஒரு சிறு குச்சியை, மற்ற குச்சிகள் அலுங்காது லாவகமாக எடுக்கவேண்டும், அலுங்கினால் எடுத்த குச்சியின் 10 மதிப்பெண்ணுடன் அவரின் ஆட்டம் ஓவர். ஒருவேளை அலுங்காது எடுத்துவிட்டால், அந்த குச்சியை பயன்படுத்தி மற்ற குச்சிகளை ஒவ்வொன்றாக, மற்ற குச்சிகளை அசைக்காது, ஆட்டாது எடுக்கவேண்டும். இரு குச்சிகளை சேர்த்தெடுக்க அனுமதியில்லை. இதற்கு சிதறலற்ற மன ஒருங்கிணைப்பு மிகமுக்கியம். கடைசியாய் கிடக்கும் நூத்தாங்குச்சியையும் எடுத்துவிட்டால் 200 மதிப்பெண்களுடன், மீண்டும் ஆட தகுதி பெறலாம். இப்படி எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனைக்கொண்டு வெற்றி தோல்வி கணக்கிடப்படும். ஒருமுறையிலும் கணக்கிடலாம் அல்லது டென்னிஸ் விளையாட்டைப்போல பல செட்டாகவும் வைத்து வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம். 

இருங்க, இருங்க, அதற்குள் குச்சியை எடுக்காதீர்கள். விளையாட துவங்கும் முன் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். நீங்கள் குச்சியை தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல பயன்படுத்தப்பட்ட பட்டுக்குஞ்சத்திலிருந்து எடுங்கள். பட்டுக்குஞ்சம் என்பது துடைப்பத்தை என் அம்மா குறிப்பிடும் சொல். குறிப்பாக நான் வம்பு செய்கையில், பட்டுக்குஞ்சத்தை எடுத்து கொஞ்சிடுவேன் கொஞ்சி என்பார், சில வேளைகளில் கொஞ்சியும் இருக்கார். அதை விடுங்க, நம்ம விளையாட்டுக்கு வருவோம், அந்த பயன்படுத்தப்பட்ட துடைப்பத்திலிருந்து எடுத்தால்தான் அதன் நுனி மிகவும் கூர்மையாக இருக்கும், மற்ற குச்சிகளை எடுக்க அது ஏதுவாக இருக்கும். அதனால் அனைத்தையும் கூர்மையானதாய் தேர்ந்தெடுத்தால் அதுவும் ஆபத்துதான், எளிதில் அலுங்கிவிடும். ஏனெனில் அதன் நிறை மையம் அல்லது மைய ஈர்ப்பு பள்ளி (center of gravity) சரியாக மையத்தில் அமையாத. அதாவது குச்சியின் நீளம் 4 செமீ, எடை 4 கிராம் என வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அந்த குச்சியை சரிசமமாக வெட்டி கிடைக்கும் 2 செமீ நீளமுள்ள இரு வெட்டப்பட்ட துண்டுகள், ஒரே எடையாக இருந்தால் (h/2) அதில் மைய ஈர்ப்பு புள்ளி, மையத்தில் அமையும். அதுவே ஒரு பக்கம் கூரான குச்சியை எடுத்துக்கொண்டால், வெட்டப்பட்ட 2 செமீ துண்டுகள் இரண்டும் ஒரே எடையில் இருக்காது. எனவே அதன் மைய ஈர்ப்பு புள்ளியை கண்டுபிடிப்பது மிகக்கடினம். அதனை எடுக்க முற்படுகையில், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதனால் இரண்டு குச்சிகளை மட்டுமே கூரான நுனியுடனும் மற்ற குச்சிகள் சம அளவுடனும் எடுத்துக்கொள்வது உசித்தம். விளையாடும் பொழுது அந்த இரண்டில் ஒரு கூரிய நுனி குச்சியாவது வெளியல் வந்து விழுமாறு ஆடுங்கள், வெற்றி உங்கள் பக்கம்தான். மேலும், குச்சி ஆடுகிறதா இல்லையா என்பதை கவனிக்க ஒரு நடுவரை நியமித்துக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் மிடுக்கு அலைபேசியில் காணொளியாய் பதிவு செய்து முடிவை எடுங்கள், அதை செய்யாது விளையாடி குடும்பத்தில் சண்டைசச்சரவுகள் ஏற்பட்டால் அட்மின் பொறுப்பல்ல என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #2

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10