ஹெவுந்தே கார்டு.. (சாங்வான் குறிப்புகள் #11)
ஹெவுந்தே கார்டு என்ற பெயரில், கொரிய மொழியில் ஓர் எண்ணிலிருந்து அன்று காலை என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது… அந்த ஒரே ஒரு அழைப்பு கொடுத்த பதற்றத்தில், சில நிமிடங்களுக்கு என்னுடைய கொரிய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
அந்த அழைப்பிற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமைதான் இந்தக் கதையின் தொடக்கம்…
நாங்கள் வசிக்கும் சாங்வானிலிருந்து அருகிலிருக்கும் ஹெவுந்தே கடற்கரைக்குச் சென்றிருந்தோம். குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால், இரவு வரை அங்கேயே இருந்து நேரத்தைக் கழிக்கலாம் என்று அங்கும் இங்குமாகச் சுற்றிக்கொண்டிருந்தோம்.
பொதுவாக மாலை ஆறு மணிக்கு மேல் ஹெவுந்தே கடற்கரையின் ஓரங்களில் கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டோ, பாடல்களைப் பாடிக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்கு முன்னாலிருக்கும் படிகளில் அமர்ந்து இசையைக் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அப்படி இசை நிகழ்த்தும் கலைஞர்களுக்கும், படிகளில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பெட்டி இருக்கும். விருப்பமுள்ளவர்கள் அதில் பணம் செலுத்தி அந்தக் கலைஞர்களை ஊக்குவிக்கலாம்.. ஆனால் கொரியாவில் ஒருவரிடம் பணம் இருப்பது வேறு.. அதைச் செலவழிக்க வைப்பது வேறு.. எவ்வளவு வசதியானவராக இருந்தாலும், நூறு வொன் தள்ளுபடி என்று அறிவித்தால் போதும். நம்மூர் மதிப்பில் ஏறத்தாழ ஆறு ரூபாய்தான். ஆனால் அந்த ஆறு ரூபாயைக் காப்பாற்றுவதற்காக நீண்ட வரிசையில்கூட மிகவும் பொறுமையாக நின்றுவிடுவார்கள். பணத்திற்கு மரியாதையும், அதைத் தங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசமும் எல்லாச் சமூகங்களிடமும் இருக்கிறது. கொரியர்களிடம் அது சற்றுக் கூடுதலாகவே இருப்பதாக எனக்குத் தோன்றும்..
அன்றும் கடற்கரையில் அப்படியே நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தோம்.. மாலையில் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய அலை வந்து தாக்கியது. கடலிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு கணம் பதறிப்போனார்கள். அந்த அலையில் மகனைப் பத்திரமாகப் பிடித்துக்கொள்ளும் மும்முரத்தில், என்னுடைய கண்ணாடியை விட்டுவிட்டேன்.. கடல் எடுத்துக்கொண்டது!
இதனைப்பற்றி முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா… தொலைந்த பந்தைத் தேடுவதுபோலக் கடலுக்குள் சென்று தேடிவிட்டு வரலாம் என்று என் மகனிடம் கண்ணாடியைக் கேட்ட நிகழ்வுதான்!
சரி… கண்ணாடிதானே போனது.. நாம் தப்பித்துவிட்டோமே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.. ஆனால் மனம் என்ன என்னைப்போல அவ்வளவு சமத்தா என்ன.. அது திரும்பத் திரும்பக் கண்ணாடியிடமே சென்றது.. அது ஒரு ஃபிரெஞ் கனெக்சன் கம்பெணியின் கண்ணாடி.. மேலே குவியாடியாக்வும், கீழே குழியாடியாகவும் அமைக்கப்பெற்றிருக்கும்.. புத்தகத்தை படிக்கும்பொழுது, கீழ் நோக்கி பார்ப்போம் என்பதாலும், எனக்கு இரண்டு கரெக்சனும் இருந்தன என்பதாலும் அப்படி உருவாக்கப்பட்டிருந்தது.. அதன் மீது தேவைப்படும்பொழுது வட்டமுனைவுற்ற அதாவது சர்குலர்லி போலரைசுடு கூலிங் கிளாசை காந்தம் கொண்டு ஒட்டிக்கொள்ளும் வசதியும் இருந்தது.. அவ்வப்பொழுது அதனை தூக்கிப்போட்டு ஒட்டும்படியாக ரஜினியைப்போல ஸ்டைல் செய்து குழந்தைகளிடம் விளையாட்டு காண்பிப்பேன்.. இவை எல்லாமும் வாய்க்கால் வழியோடி, ஒற்றை சாளரத்தில் இணைந்து கண்ணாடியின் விலையாக மன அழுத்தத்தை ஏற்றிக்கொண்டிருந்தது.
சரி, இந்த நினைப்பிலிருந்து கொஞ்சம் வெளியே வருவோம் என்று மகனுடைய ட்ரோனை எடுத்தேன். கடற்கரையில் அங்கும் இங்குமாக இருபது நிமிடங்கள் பறக்கவிட்டேன். மேலிருந்து கழுகுப்பார்வையில் இந்த உலகத்தைப்பார்ப்பது என்பது எவ்வளவு அழகு.. பொதுவாக நூறு மீட்டர் வரை உயரத்தில் இருநூற்று ஐம்பது கிராமுக்கு கீழே இருக்கும் டிரோனை எந்தவித அனுமதியும் இன்றி பறக்கவிடலாம் என்பது கொரியாவின் விதி.. ஆனால், நிறைய வெளிநாட்டினர் இந்த கோடையில் இந்த கடற்கரையில் குளிப்பார்கள், சிலர் வைட்டமின் டி துகள்களை வலைவீடி பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், மாலை ஆறு மணிவரை டிரோன் ஓட்டுவதற்கு தடை விதித்திருந்தாத்கள்.. மணி ஏறக்குறைய எட்டு ஆகிவிட்டதால், டிரோனை எடுத்து பறக்கவிட்டேன்.. மனமும் கொஞ்சம் அமைதியானது..
போதும் என்று ட்ரோனை மிகவும் பக்குவமாக ஓரத்தில் இறக்கினேன்.. திடீரென்று பின்னாலிருந்து ஒருவர் வந்தார்.
நோ நோ.. நோ திரோன்.. என்றார்..
எனக்குத் தெரிந்த விதியை வைத்து, ஏன்.. மாலை ஆறு மணி வரைதானே பறக்கவிடக் கூடாது.. இப்போது எட்டு மணியாகிவிட்டதே… என்றேன்.
அவர் மீண்டும், நோ நோ.. நோ திரோன் ஆப்டர் சன் செட்.. என்றார்.
அவ்வளவுதான்…
மன்னிச்சு.. என்று சொல்லிவிட்டு ட்ரோனை எடுத்துக்கொண்டேன்.
அவர் ஏதோ ஒரு புகைப்படத்தை எடுத்தார். அதற்குப் பிறகு அவரும் சென்றுவிட்டார். நாங்களும் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம்.
கண்ணாடி போன சோகம் கொஞ்சம் குறைந்திருந்தது, அலை கொடுத்த பதற்றமும் மறைந்திருந்தது, ட்ரோன் சம்பவத்தையும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன்…
மறுநாள் காலை அலைபேசி ஒலித்தது.. அறிமுகமில்லாத எண். அலைபேசியின் திரையில் கொரிய மொழியில் அந்த ஒரு பெயர் தெரிந்தது.. என்னுடைய அரைகுறை கொரிய வாசிப்பில் அது…
ஹெவுந்தே கார்டு.. அவ்வளவுதான்… அதாவது.. Haeundae guard...!
பதற்றம் உச்சிக்குச் சென்றது.. அடப்பாவிகளா.. கண்டுபிடித்துவிட்டார்களா.. முதல் நாள் கடற்கரையில் புகைப்படம் எடுத்தவர் நினைவுக்கு வந்தார்.. எப்பேர்ப்பட்டவர்கள் இந்தக் கொரியர்கள்.. ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து, அந்த ட்ரோன் என்னுடையது என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்களா.. எப்படி?
அடுத்த நொடியே, தேவையில்லாத நேரத்தில் மட்டுமே மிகச் சிறப்பாக வேலை செய்யும் என்னுடைய மூளை ஒரு செநுவைப்போல சட்டென சம்பந்தமில்லாமல் பதில் தயாரித்தது...
டிரோன் DJI நிறுவனத்துடையது. அதை வாங்கியபோது என்னுடைய அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எல்லாவற்றையும் கொடுத்துப் பதிவு செய்திருக்கிறேன்.. டிரோனில் GPS இருக்கிறது.. அது முந்தைய நாள் எங்கு பறந்தது என்ற தரவு நிறுவனத்திடம் இருக்கும்.. அந்த மனிதர் எடுத்த புகைப்படமும் இருக்கிறது.. அந்த புகைப்படம்… GPS… DJI… அலைபேசி எண்… அவ்வளவுதான்… வசமாக மாட்டிக்கொண்டாய்.. என்றது என் மூளையின் இன்பில்ட் செநு.. காவல்துறையினர்கூட இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை. ஆனால் நான் எனக்கு எதிரான மொத்த ஆதாரங்களையும் சேகரித்து, குற்றத்தை நிரூபித்து, தீர்ப்பையும் எழுதிவிட்டேன்..
அடுத்ததாக அபராதம் நினைவுக்கு வந்தது.. ஒரு மில்லியன் கொரிய வொன்.. இந்திய மதிப்பில் ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய்.. இப்பொழுது எழுபதாயிரம்.. இந்த கண்ணாடி போனது ஒருபக்கம், டிரோனின் செலவு இன்னொரு பக்கம்.. இப்போது அந்த டிரோனால் அறுபதாயிரம் ரூபாய் வேறு போகப்போகிறதா.. வேதியியலில் தொடர்வினை (செயின் ரியாக்சன்) என்று ஒன்று இருக்கிறது.. ஒரு வினை அடுத்த வினையைத் தொடங்கிவைக்கும்.. எதிர்பாராதா பெரிய அலையால் கண்ணாடி காணாமல் போய், டிரோன் விட்டு மனதை ஆற்றி, அதுவும் இப்பொழு வினையாக வந்து நிற்கிறதே..
அந்த அழைப்பை நான் எடுக்கவே இல்லை.. எடுத்தால் உடனே கொரிய மொழியில் பேசுவார்கள். அவர்கள் சொல்வதில் பாதி புரியாது. புரியாத மீதியை என்னுடைய மூளை இன்னும் கொடூரமாக மொழிபெயர்த்துத் தரும். எனவே பேசாமல் இருப்பதே அப்போதைக்குச் சிறந்த சட்ட ஆலோசனையாகத் தோன்றியது. அலுவலகத்திற்கு வந்த பிறகும் எந்த வேலையும் ஓடவில்லை.. மனம் என்னிடம் புலம்பித்தள்ளியது..
சிறிது நேரத்திற்குப் பிறகு, சரி… என்னதான் நடக்கப்போகிறது.. அந்த எண் யாருடையது என்றாவது பார்ப்போம்… என்று அந்த எண்ணைக் கணினியில் போட்டுத் தேடினேன்.
பேரதிர்ச்சி!
அலைபேசியில் வந்திருந்த கொரியப் பெயரை நான், Haeundae Guard என்று வாசித்துப் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அது…
..
..
..
..
Hyundai Card..
என்னுடைய கிரெடிட் கார்டின் கடன் வரம்பை அதிகப்படுத்திக்கொள்ளச் சொல்லி வந்த சாதாரண விளம்பர அழைப்பு.. ஒரு நிமிடம் நாற்காலியில் சாய்ந்து, கைவசம் மிச்சமிருந்த ஒட்டிக்கொள்ள ஃப்ரேம் இல்லாத அந்த கூளிங் கிளாசை, கண்ணில் வைத்துக்கொண்டு மேல்நோக்கி சாய்ந்து, கண்ணை மூடி தியானித்தேன்..
இந்த அரைகுறை கொரிய வாசிப்பு இன்னும் என்னென்ன பதற்றங்களைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது… கொரிய மொழியை ஒழுங்காகப் படிக்க வேண்டும். இல்லையென்றால், Hyundai Card கூட ஒருநாள் Haeundae Guard ஆகி, காவல்துறை வாகனத்தில் வந்து வீட்டின் முன்னால் நிற்கும்..
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக