எலிபெண்ட் மேனும் இரண்டு கொழுக்கட்டைகளும்!
எலிபெண்ட் மேனும், இரண்டு கொழுக்கட்டைகளும்!
காலை ஒன்பது மணியிருக்கும். சென்ற வாரத்தில் ஒருநாள் அலுவலகத்தைத் திறந்த எனக்குத் தாங்க முடியாத வியப்பு! என்னுடைய மேசையின் மீது ஒரு வெள்ளைப் பிள்ளையார் வீற்றிருந்தார். என்னால் நம்பவே முடியவில்லை.
இன்னும் இரண்டு கொரிய நண்பர்களுடன் சேர்த்து, எங்கள் மூவருக்கும் இருக்கைகள் உள்ள அலுவலகம் அது. இந்தப் பிள்ளையாரை நான் கொண்டுவந்து வைத்திருந்தால் ஒழிய, அவர் அங்கு வந்து அமர்ந்திருக்க வேறு சாத்தியமே இல்லை. எப்படி வந்தார்.. என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அடுத்த அறையே ஆய்வுக்கூடம் என்பதால், அந்த இரண்டு கொரிய நண்பர்களும் பல நாட்கள் அலுவலகத்திலேயே தங்கிவிடுவார்கள். இரவு முழுவதும் வேலை செய்வார்கள்.. பகல் முழுவதும் தூங்குவார்கள்...
அந்தக் கேடுகெட்ட பழக்கத்தையெல்லாம் நான் விட்டொழித்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. நண்பர்கள் இன்னும் தங்கள் உடலை முழுமையாகக் கெடுத்துக்கொள்ளவில்லை என்பதால், தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். நான் அலுவலகத்திற்குள் வந்தபோது நண்பர்களின் குறட்டைச் சத்தம் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருந்தது.
மேசையிலிருந்த பிள்ளையாரைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் சட்டென்று கீழே விழுந்துவிட்டார். பிள்ளையாருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், நண்பரின் தூக்கம் உடைந்துவிட்டது.
தூக்கத்திலிருந்து எழுந்தவர்,
காந்தி, வந்துட்டியா? யானை எப்படி இருக்கு? என்றார்.
என்னது... யானையா? கனவு கினவு கண்டாரோ என்று கேட்டேன்.
ஆமாம்... வெள்ளை யானை.. உன்னோட மேசை மீது வைத்திருக்கிறேன் பார். என்னுடைய 3D பிரிண்டரில் செய்தது.. என்றார்.
ஆகா... எங்கள் ஊரில்தான் 3D பிரிண்டரை இதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். நீங்களுமா.. என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, இது யானை இல்லை.. இவர் பிள்ளையார். இந்தியாவில் முதற்கடவுளாக வழிபடப்படுகிறார்.. என்றேன்.
ஓகோ.. அதனால்தான் கை, காலெல்லாம் இருந்ததா.. நான் யானையை வைத்துக் கலைநுட்பமாகக் கற்பனை செய்து இப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி இவர் எலிபெண்ட் மேன் இல்லையா? என்றார்.
உண்மைதான்... கலைநுட்பமான படைப்பு.. படைத்தவனை விட்டுவிட்டு, படைப்பையே படைப்பவனாக நினைத்ததால் எலிபெண்ட் மேன் கடவுளாகிவிட்டார் என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தேன்.
என்ன சொன்னாய்? என்று கேட்டார்.
ஒன்றுமில்லை... ஆமாம், இது நல்ல கலைநுட்பமான படைப்புதான். ஆனால் இவர் ஸ்பைடர்மேனெல்லாம் இல்லை. அவர்களுக்கும் மேலே.. என்று சொல்லிவிட்டு, தமிழில் வந்த நான்கு பிள்ளையார் திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லி பார்க்கச் சொன்னேன்..
ஓ... வாவ்.. என்றவர், ஆனால், எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன, என்று கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
அவற்றில் இரண்டு கேள்விகள் என்னை மிகவும் ஈர்த்தன.
முதல் கேள்வி, இந்த 3D பிரிண்டர் கொஞ்சம் விலை அதிகமானது.. அதனால் மிகவும் நேர்த்தியாகப் பிரிண்ட் செய்யும். இருந்தாலும், அந்தத் தந்தம் இருக்கிறது பார்... அதை மட்டும் என்னால் இருபுறமும் சமமாகக் கொண்டுவர முடியவில்லை. பிறகுதான் கவனித்தேன், நான் பார்த்த படத்திலும் அப்படித்தான் இருந்தது. உண்மையிலேயே பிள்ளையாருக்கு அப்படிதானா? என்று கேட்டார்.
ஆமாம். அவருடைய ஒரு தந்தம் உடைந்திருப்பதாகத்தான் பெரும்பாலான படங்களிலும் சிலைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கும். அதற்குப் பல கதைகள் இருக்கின்றன. அவற்றில் எனக்குப் பிடித்த கதை ஒன்று இருக்கிறது, என்று தொடங்கினேன்.
ஒருவர் கதை சொல்ல வேண்டும். பிள்ளையார் அதை எழுத வேண்டும். வியாசர் கதையைச் சொல்லிக்கொண்டே போக, பிள்ளையார் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். இடையில் பிள்ளையாரின் எழுதுகோல் உடைந்துவிட்டது. வேறொரு எழுதுகோலைத் தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. வியாசரோ இதைக் கவனிக்காமல் கதையைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போயிருக்கிறார். ஒரு நொடி யோசித்த பிள்ளையார், தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து, அதையே எழுதுகோலாக்கித் தொடர்ந்து எழுதத் தொடங்கிவிட்டார். என்று, சொல்லி முடித்தேன்.
சிறிது நேரம் அமைதியாக யோசித்தவர், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. என்பதுபோல என்னைப் பார்த்தார். பின்னர் தனது இரண்டாவது கேள்வியை முன்வைத்தார்.
இப்போது நாம் (AI) செநுவில் ஒரு காணொளி உருவாக்கினால், அதில் மனிதர்களுக்கு மூன்றாவதாக ஒரு காலும், மூன்று நான்காவதாக இரு கைகளும் முளைத்துவிடுகின்றன.. ஆனால், அந்தக் காலத்திலேயே இந்தப் பிள்ளையாருக்கு ஏன் இத்தனை கைகளை வரைந்தார்கள்?
நல்லா கேட்ட பாரு ஒரு கேள்விய.. என்று ஒரு விரலை அவரிடம் காண்பித்துவிட்டு, வெளியில் வந்தவன், அவசர அவசரமாக யோசித்தேன்.. என்னவா இருக்கும்.. இப்பொழுது மனிதனுக்கு நான்கு கைகள் கொடுக்கும் மூன்றாவது கையான செநுவுக்கு தெரியாதா.. என்று அவனிடம் கேட்டேன். அவன் ஊருபட்டதை அவிழ்த்துவிட்டான்.. இதற்கு திருவிளையாடலே பரவாயில்லையென்று, நானாக ஒன்றை திரித்தேன்..
திரும்பியவன், அதுவா... கடவுள் மனிதனைவிட அதிக ஆற்றல் கொண்டவர் அல்லவா.. அதனால், அவரை உருவாக்கியவர்களின் நம்பிக்கையின்படி, அவர் இந்த உலகையே ஆளக்கூடியவர் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பல கைகளுடன் உருவகித்திருக்கலாம்.. என்றேன்..
ஓகோ... மனிதனுக்கு என்னவொரு மூளை.. எவ்வளவு கற்பனை.. உண்மையில் செநு வந்தாலும் மனிதனின் கற்பனையை அதனால் எட்ட முடியாது, இல்லையா.. என்று கேட்டார்.
ஆமாம்... என்றேன்.
சரி... நீயும் இவற்றையெல்லாம் நம்புகிறாயா என்ன, என்று அடுத்த கேள்வியை வீசினார்.
கொழுக்கட்டை தெரியுமா? அது உங்கள் ஊர் முல்மந்து போல இருக்கும். வேண்டுமா? என்று கேட்டேன்.
ஓ... அப்படியானால் நானும் நம்புகிறேன். எனக்கு இரண்டு கொழுக்கட்டைகள் எடுத்துவா! என்றவர் எனக்கு இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.. அதனை உங்களுக்கும் பகிர்கிறேன் மக்களே.. அடுத்த பதிவில் நாங்கள் செய்த அற்புத கொழுக்கட்டையை படைக்க இருக்கிறேன்.. அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் அமைதிகாத்து சுவைத்து, அருள் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
இப்படிக்கு
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக