செஸ்ட் நட்டும் பெர்சிம்மானும் - சாங்வான் குறிப்புகள் #12
சில வாரங்களுக்கு முன்புவரை நாற்பது டிகிரியைத் தொட்டுக்கொண்டிருந்த வெப்பநிலை, இப்போது படிப்படியாகக் குறைந்து இருபது டிகிரிக்குள் வந்து நிற்கிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் குளிர் அதிகரித்துவிடும். மரங்களின் இலைகள் நிறம் மாறி, கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, சாலைகள் வெறுமையாகும். அதற்குப் பிறகு குளிர்காலம் வந்து எல்லாவற்றையும் உறையவைத்துவிடும். சில நாட்களில் வெப்பநிலை சுழியத்திற்குக் கீழே சென்று, மைனஸ் பத்து டிகிரியையும் தொட்டுவிடும்.
இப்படிக் கடுமையான குளிருக்கு முன்னும் பின்னுமாக, கொரியர்களின் வாழ்வில் இரண்டு பெரிய விழாக்கள் வருகின்றன..
நிலவை மையமாகக்கொண்ட ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது சொல்லால்.. அதுதான் கொரியப் புத்தாண்டு...
அடுத்தது, வேனிற்காலம் முடிந்து இலையுதிர்காலம் தொடங்கும் காலத்தில் வரும் அறுவடைத் திருவிழா.. செசோக்..
இரண்டுமே கொரியர்களின் பழமையான நிலவு மற்றும் கதிரவ நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டவை.. சொல்லால் நிலவை மையமாகக் கொண்ட ஆண்டின் முதல் நாள்... அதற்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு வரும் முதல் முழுநிலவு நாளைத் தனியாகக் கொண்டாடுகிறார்கள்... செசோக் எட்டாவது நிலா மாதத்தின் பதினைந்தாம் நாள்.. ஒரு முழுநிலவு நாள்..
நாட்காட்டியில் பெரிய வேறுபாடு இருந்தாலும், கொண்டாட்டம் என்று வந்துவிட்டால் கொரியாவும் நம்மூரைப் போலத்தான்.. நகரங்களில் வேலைசெய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திப்பார்கள். முன்னோர்களை நினைவுகூர்வார்கள்.. ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.. வழக்கமாக மனிதர்களும் வாகனங்களும் நிரம்பியிருக்கும் நகரங்களின் நடுப்பகுதிகள்கூட அப்போது வெறிச்சோடிக் காணப்படும். பொங்கலன்று காணப்படும் சென்னையைப்போல..
நான் கொரியாவிற்கு மீண்டும் வந்தபின் சந்திக்கும் இரண்டாவது இலையுதிர்காலம் இது.. இரண்டாவது முறையாகச் சாலையோரக் கடைகளைச் செஸ்ட்நட்டுகளும் பெர்சிம்மான்களும் அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன..
செஸ்ட்நட்டை கொரிய மொழியில் பாம் என்பார்கள்... நம்மூரில் பலாப்பழத்தைப் பாதுகாக்க இயற்கை முட்களால் ஒரு பெரிய கவசத்தை உருவாக்கி வைத்திருப்பதைப்போல, செஸ்ட்நட்டிற்கும் முழுவதும் முட்கள் நிறைந்த ஓர் உறை இருக்கும்.. தெரியாமல் கையை வைத்தால், அந்த கொட்டையை சாப்பிடுவதற்கு முன்பே அது நம்மைக் கொஞ்சம் சாப்பிட்டுவிடும்.. அந்த முட்களுக்குள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று கொட்டைகள் பாதுகாப்பாக உறங்கிக்கொண்டிருக்கும்..
செப்டம்பர் மாதத்தில் நம்மூரில் நாவற்பழம் விழும் இடங்களைத் தேடிப்போய் பொறுக்குவதைப்போல, கொரியாவில் இந்தச் செஸ்ட்நட்டுகளைத் தேடிச் சேகரிப்பவர்களைப் பார்க்கலாம். சிலர் குடும்பமாகவே பைகளுடன் வந்துவிடுவார்கள். மரத்திலிருந்து விழுந்தது யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனையெல்லாம் நாம் மட்டும் சந்திப்பதல்ல.. உலகளாவிய பிரச்சனை..
பொதுவாக மற்ற கொட்டைகளைப்போல செஸ்ட்நட்டில் எண்ணெய் அதிகம் இல்லை.. மாவுச்சத்துதான் அதிகம்.. அதனால்தான் வேகவைத்துச் சாப்பிடும்போது, கொட்டை ஒன்றைச் சாப்பிடுகிறோம் என்பதைவிடச் சிறிய கிழங்கு ஒன்றைச் சாப்பிடுவது போன்ற உணர்வு வரும்..
அதை வேகவைக்கலாம்.. நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. கொரியர்கள் சாலையோரங்களில் வறுத்த செஸ்ட்நட்டுகளை விற்பார்கள். அந்த மணம் குளிர்ந்த காற்றுடன் சேர்ந்து வந்தால், வாங்காமல் கடந்து செல்வது சிரமம்..
நம் வீட்டில், நம் ஸ்டைலில் அதைச் சாப்பிட வேண்டுமென்றால், குக்கரில் குறைந்தது பத்து விசில் வைத்துவிடவேண்டும்.. செஸ்ட்நட்டே தான் வெந்துவிட்டோம் என்று தன்னம்பிக்கை கொள்ளவேண்டும்.. அவசரப்பட்டு எடுத்தால், உரிப்பது சிரமமாகிவிடும்..
சுட்ட செஸ்ட்நட்டைச் சாப்பிடும்போது எனக்கு நம்மூர் புளியங்கொட்டை நினைவுக்கு வந்துவிடுவது வழக்கம்..
சிறுவயதில் வீட்டில் தின்பண்டங்கள் அதிகம் இல்லாத நாட்களில், புளியங்கொட்டைகளை அடுப்புத் தணலுக்குள் போட்டுவிடுவோம்.. சிறிது நேரம் கழித்து அவற்றை எடுத்து, கருகிய தோலைத் தட்டி, உள்ளே இருப்பதைச் சாப்பிடுவோம்..
செஸ்ட்நட் சற்றுப் பெரியது.. மென்மையானது.. கொஞ்சம் இனிப்பானது.. கொஞ்சம் என்றால், சர்க்கரை போடாத பாலில் இருக்கும் இனிப்பு அளவிற்கு.. ஆனால் அதன் சுவையின் ஏதோ ஒரு மூலையில் அந்தப் புளியங்கொட்டை ஒளிந்திருப்பதுபோல எனக்குத் தோன்றும்.. மாஸ் ஸ்பெக்ரோமீட்டர் வைத்து ஆய்வு செய்து இரண்டிலும் ஒத்த வேதிப்பொருள் இருக்கிறதா என்பதை கண்டறியவேண்டும்.. இல்லையேல் என் மூளைக்கு எம்ஆர்ஐ எடுத்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.. சுவை என்பது நாக்கில் மட்டும் உருவாவதில்லையே.. நினைவிற்கும் சிறிது பங்கு உண்டுதானே..
கொரியர்களின் செசோக் உணவான அரைநிலவு வடிவ சொங்பியோன் அரிசிக் கொழுக்கட்டைக்குள் எள், தேன், சிவப்புப் பயறு ஆகியவற்றுடன் செஸ்ட்நட் பூரணமும் வைப்பார்கள்.. நம்மூர் பருப்பு பூரணம் போல.. அறுவடையில் கிடைத்த புதிய உணவுகளை முன்னோர்களுக்குப் படைக்கும் பாரம்பரிய மேசையிலும் செஸ்ட்நட்டுக்கும் ஓர் இடம் உண்டு..
அதனால், செஸ்ட்நட் இங்கு வெறும் சாலையோரத் தின்பண்டம் மட்டுமல்ல.. இலையுதிர்காலத்தையும் குடும்பத்தையும் முன்னோர்களையும் இணைக்கும் ஒரு பண்பாட்டு நினைவு..
செஸ்ட்நட்டைப் போலவே, பெர்சிம்மானுடனும் எனக்குப் பெரிய தொடர்பிருக்கிறது... பெர்சிம்மனை கொரிய மொழியில் கம் என்பார்கள்.
என்னுடைய முந்தைய கொரிய வாழ்வின்போது, அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் கிவான் ஞாங் தன்னுடைய தோட்டத்திற்கு அழைத்துச் செல்வார். குளிர் தொடங்கியிருக்கும், அருகில் ஓடும் ஓடையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும், மலைக்காடுகளின் வாசனையைச் சுமந்துகொண்டு காற்று வீசும்..
இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு, கிளைகள் முழுவதும் ஆரஞ்சு நிறப் பழங்களை மட்டும் தாங்கி நிற்கும் பெர்சிம்மான் மரங்களைப் பார்க்கும்போது, எனக்குக் கொய்யா மரங்கள்தான் நினைவுக்கு வரும்..
அந்தக் குளிருக்கு நடுவே, மரத்திலிருந்து பறித்த பெர்சிம்மானை அங்கேயே சாப்பிடுவோம்..
என்ன ஒரு சுவை..
கொய்யாப்பழத்தில் நன்றாகப் பழுத்த பழத்தை விட்டுவிட்டு, சற்று செங்காயாகவும் கறுக்மொறுக்கென இருப்பதை தேடிப்பிடித்துச் சாப்பிடும் மனநிலை இருக்கிறதல்லவா.. அதே மனநிலைதான் எனக்கு பெர்சிம்மானிலும்.. நன்றாகப் பழுத்த பெர்சிம்மான் மென்மையாகவும் அதிக இனிப்பாகவும் இருக்கும்.. ஆனால் சற்றுக் காயாக இருக்கும்போது கிடைக்கும் அந்த கிரஞ்ச் தனி சுவை.. எகைன் பிளேவர் மேட்டர்ஸ்..
ஆனால் எல்லாப் பெர்சிம்மானையும் காயாகச் சாப்பிட்டுவிட முடியாது. சில வகைகளில் இருக்கும் டானின் நம் உமிழ்நீரிலுள்ள புரதங்களுடன் ஒட்டிக்கொள்வதால், வாயையே யாரோ உள்ளிருந்து இழுத்துக் கட்டியதுபோலத் துவர்க்கும்.. பழம் கனியும்போதோ, அதை உலர்த்தும்போதோ அந்தத் துவர்ப்பு குறைந்து இனிப்பு மேலெழும்..
அப்படிக் காற்றில் உலர்த்தப்பட்ட பெர்சிம்மானை கொத்கம் (நான் சரியாகத்தான் உச்சரிக்கிறேனா.. தெரியவில்லை) என்பார்கள்... அதை அப்படியே சாப்பிடுவார்கள்.. சில பானங்களிலும் சேர்ப்பார்கள்.. குளிர்காலம் தொடங்கும்பொழுது, தோல் உரிக்கப்பட்ட பெர்சிம்மன்கள் வரிசையாகக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பதே ஒரு இலையுதிர்காலக் காட்சி..
கொரியர்களுக்கு இந்த செஸ்ட்நட்டும், பெர்சிம்மானும் என்ன நினைவுகளை கொடுக்கின்றன என்பது தெரியவில்லை ஆனால், எனக்கு அடுப்பில் சுட்ட புளியங்கொட்டையையும், ஊரில் சுற்றி பொறுக்கிய நாவற் பழங்களையும், தேடிப்பறித்த செங்கொய்யாவையும் நினைவுபடுத்துகிறது.. நினைவு என்றாலே படுத்திக்கொண்டேதான் இருக்கும் போல..
இன்று மீண்டும் இந்த மலையடிவாரச் சாலைகளில் நடந்துகொண்டிருக்கிறேன்.. கால்கள் சாலையில் நடந்துகொண்டிருந்தாலும், கண்களும் மனமும் மரத்தடியில் செஸ்ட்நட்டுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.. கீழே கிடந்தவை அனைத்தும் வெறும் முள் ஓடுகள்.. எனக்கு முன்பே யாரோ வந்து அறுவடையை முடித்துவிட்டார்கள்.. நாளை காலையிலேயே எழுந்து வந்து எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.. ஆனால் கொரியத் தாத்தா பாட்டிகளின் வேகத்தைப் பார்த்தால், நான் நாளை காலை வருவதற்குள் அவர்கள் அடுத்த ஆண்டுக்கான செஸ்ட்நட்டையும் பொறுக்கிவைத்துவிடுவார்களோ என்றுதான் தோன்றுகிறது..
நினைவுகளை மட்டுமே பொறுக்கி எடுத்துவரமுடியும் என நினைக்கிறேன்.. அதையாவது பொறுக்குவோமாக..
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக