நம்பிக்கையை மதிப்பதும் பகுத்தறிவுதான்!
என்னிடம் நட்பு பாராட்ட வருபவர்களிடம் முதல் சந்திப்பிலேயே ஒன்றைச் சொல்லிவிடுவேன்.. நான் ஒரு பெரியாரியவாதி.. என்று.. இதைச் சொன்னவுடன் சிலருடைய முகத்தில் மெல்லியதொரு பதற்றம் தோன்றும். இனி இவர் கடவுளைத் திட்டுவாரோ, கோயில்களை இடிக்கச் சொல்வாரோ, நெற்றியில் திருநீறு வைத்திருப்பவர்களுடன் சண்டையிடுவாரோ என்றெல்லாம் நினைத்துக்கொள்வார்கள். ஆனால், என்னுடைய பெரியாரியம் என்பது கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் எதிர்ப்பதல்ல. கண்ணைத் திறந்து அனைத்தையும் கேள்வி கேட்பது.
எங்களுடைய வாழ்வியலுக்கான
அடிப்படைக் கோட்பாடாக நாங்கள் வகுத்துக்கொண்டது மிகவும் எளிமையானது.. மனிதர்கள் அனைவரும்
சமம்.. அவர்களுக்கிடையில் உயர்வு, தாழ்வு சாதியால், பாலினத்தால், மதத்தால், அவரவர்கள்
செய்யும் தொழிலால், பணத்தால் வருவதில்லை. ஒரு மனிதனின் பிறப்பு, இன்னொரு மனிதனின் காலடியில் வாழ்வதற்கான தண்டனையாக
இருக்க முடியாது. ஒருவருடைய பாலினம், அவருடைய உரிமைகளுக்கான எல்லையாக இருக்க முடியாது. பொருளாதார வசதி இல்லாத காரணத்தால்
ஒருவரின் மரியாதை குறைந்துவிடவும் முடியாது. இவையெல்லாம் இன்று சொல்வதற்கு மிகச் சாதாரணமான
கருத்துகள்போலத் தோன்றலாம். ஆனால் மூடநம்பிக்கையும், சாதிய ஏற்றத்தாழ்வும், பெண்ணடிமைத்தனமும் சமூகத்தின் நரம்புகளில் புரையோடிக் கிடந்த
காலத்தில் ஒருவர் இவற்றைச் சிந்தித்திருக்கிறார். மேடையில் பேசிவிட்டு வீட்டிற்குச்
சென்றவர் அல்ல, தன்னுடைய வாழ்விலும் அவற்றைச் செயல்படுத்தியிருக்கிறார். தன்னுடன் வாழ்ந்த சமூகத்தையும்
மிகுந்த வீரியத்துடன் கேள்வி கேட்க வைத்திருக்கிறார். அதை நினைக்கும்போது பெரியார் மீது எனக்கு ஏற்பட்ட அன்பு திட்டமிட்டு
உருவாக்கப்பட்டதல்ல... அது தன்னிச்சையாக வந்தது..
இந்தச் சிந்தனை என்னைப்
பல இடங்களில் அந்நியப்படுத்தியிருக்கிறது. சில நண்பர்களிடமிருந்து விலக்கியிருக்கிறது.
சில உறவுகளுக்குள் சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது. குடும்பத்தில்கூட சில நேரங்களில்
என்னைத் தனித்து நிற்க வைத்திருக்கிறது. ஆனால் அதற்காக அந்த எண்ணத்தைக் காவுகொடுத்துவிட
முடியுமா என்ன.. இப்போது மட்டுமல்ல.. வாழும் வரை இதே எண்ணத்துடன்தான் வாழ்வேன். என் மகனும்
மகளும் இதே கேள்வி கேட்கும் மனத்துடன் வளர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால்,
நான் சிந்திப்பதை அப்படியே அவர்கள் மீது திணிக்க
மாட்டேன். அதுவும் இன்னொரு வகையான ஆதிக்கம்தான். அவர்களுக்கு நான் கொடுக்க விரும்புவது
சில உருவாக்கப்பட்ட பதில்கள் அல்ல.. கேள்விகளைக் கேட்கும் துணிவு..
யார் சொன்னது? ஏன் சொன்னார்கள்? அதற்கு ஆதாரம் என்ன? இதனால் யாராவது பாதிக்கப்படுகிறார்களா? புதிய ஆதாரம் கிடைத்தால் நமது கருத்தை மாற்றிக்கொள்ள
முடியுமா? இந்தக் கேள்விகளைக் கேட்கக் கற்றுக்கொண்டால்,
அவர்கள் தங்களுக்கான பாதையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.
கோயில்களை மறுப்பதா பகுத்தறிவு?
பெரியாரியவாதியாக இருப்பதால் கடவுளை மறுக்க வேண்டும்.. கோயிலே இருக்கக்கூடாது.. திருநீறு வைக்கக்கூடாது.. வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கக்கூடாது என்று நான் நினைப்பதில்லை. கோயிலை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில்தான் வேறுபாடு இருக்கிறது. கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவற்றில் ஒரு சமூகத்தின் கட்டடக்கலை இருக்கிறது, சிற்பக்கலை இருக்கிறது, இசை, நடனம், ஓவியம், திருவிழா, உணவு, உடை, மொழி எனப் பல பண்பாட்டு அடுக்குகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தொழில்நுட்ப அறிவும் உழைப்பும் அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உயரமான கோபுரங்களின் பின்னால் பொறியியல் இருக்கிறது, கற்சிலைகளின் பின்னால் பொருளறிவும் சிற்பியின் கைத்திறனும் இருக்கின்றன, மணியின் ஒலியில் அதிர்வியல் இருக்கிறது, தீபத்தின் எரிதலில் வேதியியல் இருக்கிறது. கற்பூரம் ஆவியாகி எரிவதில் பதங்கமாதலும் எரிதல் வினையும் இருக்கின்றன, கோயில் குளங்களில் நீர் மேலாண்மையின் வரலாறும் இருக்கலாம்..
இவற்றையெல்லாம் ரசிப்பதற்கு
ஒருவர் கடவுளை நம்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேபோல, கடவுளை நம்புகிறவர் அறிவியலை மறுத்தே ஆக வேண்டும்
என்ற அவசியமும் இல்லை. நான் கோயில்களைவிட,
அவற்றைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும்
மூடநம்பிக்கைகளையே அதிகம் எதிர்க்கிறேன். ஒருவரின் பிறப்பை வைத்து
கோயிலுக்குள் நுழையத் தடை செய்வது பண்பாடு அல்ல. பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வைத் தீட்டு என்று கூறுவது
ஆன்மிகம் அல்ல. பணம் கொடுத்தவருக்குக்
கடவுளை அருகில் காட்டி, ஏழையை வரிசையில் நிறுத்துவது
சமத்துவம் அல்ல. நோய்க்கான மருத்துவத்தைத்
தவிர்த்துவிட்டு, சடங்கை மட்டும் தீர்வாக
முன்வைப்பது நம்பிக்கை அல்ல.. அது உயிருக்கு ஆபத்து. மனிதனை இழிவுபடுத்தும் இடத்தில்தான் என் எதிர்ப்பு
தொடங்குகிறது.
வீடு:
இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு, பல ஆண்டுகளாக நாங்கள் கண்ட கனவுக்கு உயிர்கொடுக்கும்
விதமாக ஒரு வீட்டை வாங்கினோம். அந்த வீட்டிற்குக் குடிபுகும்போது சில சடங்குகளைச் செய்ய
வேண்டியிருந்தது. நான் பகுத்தறிவுவாதி.. இதெல்லாம் கூடாது.. என்று ஒரே வரியில் மறுத்துவிடுவது எனக்கு
எளிதானதாக இருந்திருக்கும். ஆனால் அது எனக்கான வீடு மட்டும் அல்ல.. அங்கு என் தோழி
இருக்கிறார், என் குழந்தைகள் இருக்கிறார்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருடைய
அன்பும் எதிர்பார்ப்பும் அந்த வீட்டுடன் இணைந்திருக்கின்றன. அது ஒரே மனிதரின் சித்தாந்தத்திற்கான
அலுவலகம் அல்ல, பல மனிதர்களுடைய உணர்வுகள்
வாழப்போகும் இடம். எனவே, அங்கு மற்றவர்களின்
நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதும் ஒரு வகையான பகுத்தறிவுதான் என்று நினைத்தேன்.
ஒரு சடங்கைச் செய்வதால்
யாரும் தாழ்த்தப்படவில்லை.. யாருடைய உரிமையும் பறிக்கப்படவில்லை..
யாருக்கும் பொருளாதாரச் சுமை ஏற்படுத்தப்படவில்லை.. மருத்துவமோ கல்வியோ மறுக்கப்படவில்லை என்றால்,
அந்தச் சடங்குடன் எனக்கு எள் நுனியளவும் பிரச்சினை
இல்லை. அதையும் சித்தாந்தத்தின் பெயரால் கட்டாயமாக எதிர்த்தே ஆக வேண்டும் என்று நினைப்பது
இன்னொரு வகையான மூடநம்பிக்கையாகிவிடும். ஏனெனில் பகுத்தறிவு என்பது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட
மறுப்பல்ல. சூழலை ஆராய்ந்து, விளைவுகளை மதிப்பிட்டு,
மனிதர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் கருத்தில்
கொண்டு முடிவெடுக்கும் அறிவு.
சடங்குகளுக்குள் இருக்கும் உளவியல்:
மனித வாழ்வில் சடங்குகள்
ஏன் உருவாகின என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பு, திருமணம், புதுமனை புகுதல், இறப்பு போன்றவை மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தருணங்கள்.
அத்தகைய தருணங்களில் நிச்சயமின்மையும் பதற்றமும் அதிகமாக இருக்கும். மீண்டும் மீண்டும்
செய்யப்படும் சில ஒழுங்கான செயல்கள் மனத்திற்கு ஒரு கட்டுப்பாட்டு உணர்வைக் கொடுக்கின்றன.
குடும்பத்தினரையும் சமூகத்தினரையும் ஒன்றாகச் சேர்க்கின்றன. ஒரு வாழ்க்கை நிலையிலிருந்து
மற்றொரு நிலைக்குச் செல்கிறோம் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள உதவுகின்றன. இதுதான் சடங்குகளின்
உளவியல் அடித்தளம்.
ஆனால், மனஅமைதிக்காக உருவான சடங்கு, காலப்போக்கில் பயத்தை விற்பனை செய்யும் கருவியாக
மாறும்போது பிரச்சினை தொடங்குகிறது. இதைச் செய்யாவிட்டால் தீங்கு நேரும், இந்த நேரத்தில்
வெளியே சென்றால் குடும்பம் அழியும், இந்தச் சாதியைச் சேர்ந்தவர் தொட்டால் புனிதம் கெடும்,
இந்தப் பரிகாரம் செய்யாவிட்டால் நோய் குணமாகாது, என்று பயமுறுத்தத் தொடங்கும் இடத்தில்
அது தனிப்பட்ட நம்பிக்கையாக இருப்பதில்லை. அது மனிதனின் சுதந்திரத்தையும் அறிவையும்
பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரமாக மாறிவிடுகிறது. அந்த இடத்தில் கேள்வி
கேட்பது முக்கியம்.
நம்பிக்கையும் அறிவியலும்:
ஒருவர் நெற்றியில் திருநீறு
வைப்பதில் எனக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்.. திருநீறு பெரும்பாலும் எரிக்கப்பட்ட பொருளிலிருந்து கிடைக்கும்
சாம்பலை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஒரு வேதியியல் அமைப்பு இருக்கிறது. அதைப் பூசுபவருக்கு
அது சமய அடையாளமாக இருக்கலாம்.. குடும்ப மரபின் நினைவாக இருக்கலாம்.. மனநிறைவாக இருக்கலாம்.. அதை வைத்துக்கொள்வது அவருடைய
உரிமை. ஆனால், திருநீறு வைத்தால் எந்த
நோயும் வராது, மருத்துவம் தேவையில்லை.. என்று ஒருவர் கூறினால், அங்குதான் அறிவியல் தனது கேள்வியை எழுப்ப வேண்டும்.
கடவுளின் சிலையை வீட்டில்
வைத்திருப்பதும் அவரவர் விருப்பம். ஒருவர் அதைத் தெய்வமாகப் பார்க்கலாம். இன்னொருவர்
கலையின் வடிவமாகப் பார்க்கலாம். மற்றொருவர் தன் தாய், தந்தை அல்லது முன்னோர்களின் நினைவுடன்
இணைத்துப் பார்க்கலாம். ஒரே பொருள் ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு உணர்வை உருவாக்கும்.
மனித மூளை வெறும் தகவல்களை மட்டும் சேமிப்பதில்லை.. பொருட்களுடன் நினைவுகளையும் உணர்வுகளையும் இணைத்தே சேமிக்கிறது.
அதனால்தான் ஒரு பழைய புகைப்படம், ஒரு பாடல், ஒரு மணம், ஒரு சிறிய சிலை என ஏதோ ஒன்று நம்மை நொடியில் பல ஆண்டுகள் பின்னால்
அழைத்துச் செல்கிறது. அந்த உணர்வை அறிவியல் மறுப்பதில்லை. அது எப்படி உருவாகிறது என்பதைப்
புரிந்துகொள்ள முயல்கிறது.
நம்பிக்கை ஒருவருக்கு
மனஅமைதியைக் கொடுக்கலாம். ஆனால் அந்த மனஅமைதி கிடைத்ததால், நம்பிக்கையோடு இணைக்கப்பட்டுள்ள எல்லாக் கூற்றுகளும் அறிவியல்
உண்மைகளாகிவிடுவதில்லை. அறிவியல், நம்பாதே என்று மட்டும் சொல்வதில்லை. ஆய்ந்து பார்,
என்று சொல்கிறது. ஆதாரம் எங்கே, என்று கேட்கிறது. தவறாக இருந்தால் திருத்திக்கொள், என்று அறிவுறுத்துகிறது.
அதுதான் அறிவியலின் அழகு.
அறிவியல் இயற்கைக்கு எதிரானதா?
அறிவியல் இயற்கைக்கு
எதிரானது என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் அறிவியல் என்பது இயற்கைக்கு எதிரானதல்ல, இயற்கையை அறியும் மனித முயற்சி. ஒரு விதை எப்படிச்
செடியாகிறது? மழை எப்படி உருவாகிறது? நமது உடல் நோயை எப்படி எதிர்கொள்கிறது? ஒரு மூலக்கூறு ஏன் மற்றொரு மூலக்கூறுடன் வினைபுரிகிறது? வானத்தில் உள்ள கோள்கள் ஏன் கீழே விழுவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு இயற்கையிடமிருந்து ஆதாரங்களுடன்
பதில் பெற முயல்வதே அறிவியல்.
இயற்கையை வணங்குவது
ஒரு பண்பாட்டு உணர்வாக இருக்கலாம். இயற்கையைப் புரிந்துகொள்வது அறிவியல். இயற்கையைப்
பாதுகாப்பது மனிதப் பொறுப்பு. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ஆனால் இயற்கை
என்ற பெயரில் ஆதாரமற்ற மருத்துவத்தை விற்பதும், மரபு என்ற பெயரில் மனிதர்களைத் தாழ்த்துவதும், நம்பிக்கை என்ற பெயரில் கேள்விகளுக்குத் தடை விதிப்பதும்
ஏற்றுக்கொள்ள முடியாதவை.
மரபு என்பதற்காக எல்லாவற்றையும்
பாதுகாக்க வேண்டியதில்லை. பழையது என்பதற்காக அனைத்தும் புனிதமானவையும் அல்ல. அதேபோல,
பழையது என்பதற்காக அனைத்தையும் தூக்கி எறியவும்
தேவையில்லை.
ஒரு மரபு மனிதர்களை
இணைக்கிறதா, அது கலைக்கும் மொழிக்கும்
வாழ்வளிக்கிறதா, அது இயற்கையைப் பாதுகாக்கிறதா,
அது அடுத்த மனிதரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் மதிக்கிறதா, அப்படியானால் அதைப் பாதுகாக்கலாம்.
ஒரு மரபு மனிதனைத் தாழ்த்துகிறதா, பெண்ணின் உரிமையை மறுக்கிறதா, சாதியை நிலைநிறுத்துகிறதா, பயத்தை உருவாக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறதா, மருத்துவ அறிவை
மறுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா, அப்படியானால் அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
பழமையானதாக இருந்தாலும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
மனிதனே அளவுகோல்:
நம்பிக்கை வைத்துக்கொள்வதோ,
அதன்படி வாழ்வதோ தனிமனித உரிமை. அது இன்னொருவரைப்
பாதிக்காதவரை, இங்கு எதுவும் பிரச்சினையில்லை.
அதே நேரத்தில் அறிவியலை விளக்குவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஓர் ஆசிரியனாகவும்
அறிவியலாளனாகவும் என்னுடைய கடமை.
அதைச் செய்யும்போது,
நம்பிக்கையாளர்களை முட்டாள்கள் என்று அழைப்பது விழிப்புணர்வு
அல்ல. ஒருவருடைய மனதைப் புண்படுத்திவிட்டு, அவருடைய சிந்தனையை மாற்றிவிட்டதாக நினைப்பதும் பகுத்தறிவு அல்ல. அவருடைய நம்பிக்கை எங்கிருந்து வந்தது என்பதை முதலில்
புரிந்துகொள்ள வேண்டும். அது குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம்.. பயத்திலிருந்து வந்திருக்கலாம்.. இழப்பின் வலியிலிருந்து வந்திருக்கலாம்.. தனிமையிலிருந்து வந்திருக்கலாம்.. ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழவேண்டிய தேவையிலிருந்து
வந்திருக்கலாம்..
அறிவியல் உண்மையைச்
சொல்ல வேண்டும். ஆனால் அதை மனிதநேயத்துடன் சொல்ல வேண்டும். திருநீறு வைக்கலாமா.. வைத்துக்கொள்ளுங்கள், பிள்ளையார் சிலையை வீட்டில்
வைத்திருக்கலாமா.. வைத்துக்கொள்ளுங்கள்.
கோயிலுக்குச் செல்லலாமா.. தாராளமாகச் செல்லுங்கள்.
ஆனால், நெற்றியில் இருக்கும் திருநீற்றைவிட மனத்தில் இருக்கும்
மனிதநேயம் முக்கியம். வீட்டில் இருக்கும் சிலையைவிட, வீட்டிற்குள் வாழும் மனிதர்களின் சமத்துவம் முக்கியம். கோயிலில்
ஏற்றும் விளக்கைவிட, அறிவில் ஏற்றும் விளக்கு
முக்கியம்.
நம்பிக்கை மனிதனுக்காக
இருக்க வேண்டும்.. மனிதன் நம்பிக்கைக்காகப் பலியிடப்படக் கூடாது. பண்பாடு மனிதர்களை இணைக்க வேண்டும்.. பிரிக்கக் கூடாது.
என்னைப் பொறுத்தவரை
இதுதான் பெரியாரியம். எதையும் காரணமின்றி மறுப்பதல்ல, எல்லாவற்றையும் கேள்வி கேட்பது.
யாருடைய நம்பிக்கையையும் அவமதிக்காமல், அந்த நம்பிக்கையின் பெயரால் இன்னொரு மனிதன் அவமதிக்கப்படுவதைத் தடுப்பது.
மரபை முற்றாக அழிப்பதல்ல.. அதிலிருக்கும் மனிதநேயத்தைப் பாதுகாத்து, ஆதிக்கத்தைக் களைவது.
கடவுள் இருக்கிறாரா,
இல்லையா என்ற விவாதத்தைவிட, நமக்கு அருகில் இருக்கும் மனிதனை மனிதனாக நடத்துகிறோமா
என்பதே முதன்மையான கேள்வி.
ஏனெனில் கோயிலுக்குள்
யார் இருக்கிறார் என்பதை அறிவியல் இன்னும் நிரூபிக்காமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்கு
வெளியே ஒரு மனிதன் நிற்கிறான். அவனும் நம்மைப் போலவே சமமானவன் என்பதை நிரூபிக்க எந்த
அதிசயமும் தேவையில்லை.
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக