முருகன் பழையப் புத்தகக்கடை.. (சாங்வான் குறிப்புகள் #10)

 தஞ்சாவூர் பெரிய கோயிலிலிருந்து இப்போது இருக்கும் கிருஷ்ணா உணவகத்தைக் கடந்து, பழைய பேருந்து நிலையம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒரு காலத்தில் பழைய புத்தகக் கடைகள் விரவிக் கிடந்தன.. இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு வாக்கில் நான் தஞ்சாவூரில் இளங்கலை வேதியியல் படித்துக்கொண்டிருந்தேன்.. அப்பொழுது அந்தக் கடைகளிலிருந்துதான் பி.எல். சோனியின் கனிம வேதியியல், பால் மற்றும் அருண்பாலின் கரிம வேதியியல் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்... தேடிப்பார்த்தால் வில்லியம் கெம்பின் கரிம நிறமாலையியல் நூலைக்கூட பெற்றுவிடலாம்...


கடைக்குள் நுழையும்பொழுது எந்தப் புத்தகத்தை வாங்கப்போகிறோம் என்று கடைக்காரருக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் சில நேரங்களில் நமக்குமே தெரியாது.. புத்தகக்குவியலுக்கு நடுவே, தூசியுடன், யாரோ ஒருவரால் அடிக்கோடிடப்பட்டு, ஓரங்களில் குறிப்புகள் எழுதப்பட்ட ஒரு புத்தகம் நமக்காகக் காத்திருக்கும்.. சிலவேளைகளில் காதல் கதைகளும், பாடமாக்கப்பட்ட அரச இலையும் கூட தென்படும்..

எதையோ வாங்கப்போய் எதையோ வாங்கிவருவது பல முறை நடந்திருக்கிறது.. பழைய புத்தகக் கடையின் அழகே அதுதான்.. ஆனால்.. இப்போது தஞ்சையில் வெகு சில கடைகளில்தான் பழைய புத்தகங்கள் கிடைக்கின்றன. இன்று ஏறத்தாழ ஒவ்வொரு ஊரிலும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. புதிய புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் அந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், அந்தப் புத்தகக் காட்சிகளில் பழைய புத்தகங்களுக்காகவும் சில அரங்குகள் ஒதுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்..
பழைய புத்தகம் என்பது விலை குறைந்த புத்தகம் மட்டுமல்ல. அது இன்னொரு வாசகரின் கையிலிருந்து நம்மிடம் வந்து சேர்ந்த நினைவு..

இங்கு கொரியாவில் அலாடின் என்ற புகழ்பெற்ற புத்தகக் கடையொன்று இருக்கிறது. நமக்கு தெரிந்த அந்த அலாவுதீன்தான் ஆங்கிலத்தில் அலாடின் ஆகி, கொரியாவில் புத்தகக் கடையாக உட்கார்ந்திருக்கிறார்.. அந்த அற்புத விலக்குதான் அந்தக் கடையின் லோகோவாக அமைக்கப்பட்டிருக்கும்.

நாங்கள் வசிக்கும் சாங்வானிலும் ஓர் அலாடின் கடை இருக்கிறது. அங்கு பலமுறை சென்று, ஒவ்வொரு அடுக்கையும் ஆராய்ந்து, கடைக்கே எங்களைப் பார்த்தால் அலுப்புத் தட்டும் நிலை வந்துவிட்டது. எனவே இந்த முறை பக்கத்து நகரமான கிம்ஹேவிலிருக்கும் அலாடின் கடைக்குப் படையெடுத்தோம். அந்தக் கடையிலும் பழைய புத்தகங்களுக்கென்று தனிப் பகுதிகள் இருந்தன. ஓர் அடுக்கில் மட்டும் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட பழைய ஆங்கிலப் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

கொரியாவில் வாசிப்புப் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. ஒரு கடற்கரையின் ஒரத்தில் நடந்துசெல்லும்பொழுதோ, ஒரு பேருந்தில் பயணிக்கும் பொழுதோ குறைந்தது ஐந்து கொரியர்களையாவது புத்தகமும் கையுமாக பார்த்துவிடலாம்.. கிண்டில் ரீடர் போல சில ரீடர்களை வைத்து வாசிக்கும் சிலரையும் பார்க்கமுடியும்.. அமெசான் விற்பனைத் தளம் கொரியாவில் இல்லை என்பதால், கிண்டில் வைத்திருப்போர் மிகக்குறைவு.. பெரும்பாலும் நேரடியாக புத்தகங்களை வாங்கி வாசிப்பது இங்கு அதிகம்.. அதனால் பெரிய வணிக வளாகங்களிலும் காபி கடைகளிலும்கூட புத்தகங்களையும், வாசிப்பிடங்களையும் பார்க்கலாம். சில ஸ்டார்ஃபீல்ட் மால்களில் மிகப்பெரிய நூலக அமைப்புகள் இருக்கின்றன. அதைப்பற்றி முன்பொருமுறை எழுதியிருக்கிறேன்.

ஸ்டார்ஃபீல்ட் மாலில் இருக்கும் நூலகத்தைப்பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கும்.. ஆனால் அவற்றைப் பார்த்தவுடன், மேலே இருக்கும் அத்தனை புத்தகங்களையும் ஏணியிட்டு எடுத்துப் படித்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.. கைக்கு எட்டும் உயரம் வரையில்தான் உண்மையான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும். அதற்கு மேலே பார்ப்பதற்குப் புத்தகங்களைப்போலவே இருக்கும் வெற்றுப் பெட்டிகள்.. அறிவை உயரத்தில் வைத்தால் யாரும் எடுக்க முடியாது என்பதால், அலங்காரத்தை மட்டும் உயரத்தில் வைத்திருக்கிறார்கள் போல (அட சத்தியமா நான் சொன்னதுதாங்க)..

பெரிய நூலக அமைப்பு இல்லாத ஸ்டார்ஃபீல்ட் மால்களில் குறைந்தபட்சம் பெரிய புத்தகக் கடையாவது இருக்கும். சாங்வானில் ஸ்டார் ஃபீல்ட் இல்லை.. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இங்கு வந்துவிடும் என்கிறார்கள்.. எங்களுக்கு மிக அருகில் இருக்கும் ஸ்டார் ஃபீல்ட் மால் என்றால் அது மியான்ஞி என்றொரு ஊரில் இருக்கும் மால்தான்.. ஏறத்தாழ முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.. வார இறுதியில் நுழைய இடமிருக்காது, வார நாட்களில் நுழைய ஆள் இருக்காது என்ற நிலைதான் (அட இதுவும்.. ஆனா வெத மதராசப்பட்டினம் படத்துப் பாட்டுதான்)..

கொரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் அதிகமாக இருந்தாலும், ஆங்கிலப் புத்தக வாசிப்பு ஒப்பீட்டளவில் குறைவு. பெரும்பாலான புகழ்பெற்ற ஆங்கில நூல்கள் விரைவாகக் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துவிடுகின்றன. மொழிபெயர்ப்புப் பணிகளுக்கான ஆதரவும் இங்கு இருக்கிறது.. அருந்ததி ராய் எழுதி ஆங்கில மொழியில் வெளிவந்து சில மாதங்களே ஆன மதர் மேரி கம்ஸ் டூ மீ புத்தகத்தைக் கூட கொரியனில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டார்கள்.. அந்த அளவிற்கு விரைவாக மொழிபெயர்ப்பு வேலைகள் நடக்கும்..

எனவே ஆங்கிலப் புத்தகங்களுக்கான தேவை குறைவாக இருக்கிறது. குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைச் சீண்டுவதற்கே பெரிதாக ஆட்கள் இல்லை.. அதனால் அலாடினுக்குச் சென்றால், மற்றவர்கள் தொடாமல் விட்ட அந்தப் பழைய ஆங்கிலப் புத்தகப் பகுதியில்தான் நாங்கள் முதலில் படையெடுப்போம்..

இன்றும் அப்படித்தான்.. அதிரனும் தென்றலும் நீண்ட நேரம் தேடி எடுத்த புத்தகங்கள்,
The Midnight Gang - David Walliams
The Tiger Rising - Kate DiCamillo
Henry Huggins - Beverly Cleary
Mermaid Tales
The Breakfast Club Adventures - Marcus Rashford
Book Scavenger - Jennifer Chambliss Bertman

புத்தகங்களைக் கையில் எடுத்ததும் இருவருடைய முகத்திலும் ஏதோ புதையலைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி.. அந்த மகிழ்ச்சியைப்பார்த்த நமக்கு ஒரு மகிழ்ச்சி.. எழுத்தாளர் எஸ்ராவின் குரலில் சொல்லவேண்டுமானால், புதிய புத்தகத்தின் வாசனைக்கு ஒரு இனிமை இருக்கிறது என்றால், பழைய புத்தகத்தின் வாசனைக்குள்ளும், அதை முன்னர் வாசித்த யாரோ ஒருவரின் காலமும் நினைவும் ஒளிந்திருக்கின்றன (குரல் மட்டும்தான் மக்களே அவருது.. ஆனா டயலாக்..).


தஞ்சையின் சாலையோர பழைய புத்தகக் கடைகளை நினைவுபடுத்திய இந்த அலாடின் கடைக்கு, முருகன் கடையென பெயரைக்கொடுத்திருக்கிறோம் நாங்கள்.. சாங்வானுக்கு கொரியாவின் தஞ்சை என்று பெயரிட்டதுபோல.. அதனால் இனி இது எங்களுக்கு முருகன் பழையப்புத்தகக்கடைதான்..

- சகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

சாங்வான் குறிப்புகள்#02

விளையாட்டாக சொல்கிறேன் #2