சாங்வான் குறிப்புகள் #09 - முகக்கவசம் உயிர்கவசம், நன்நடத்தை இனத்திற்கான கவசம்..

முதன்முதலில் கொரியாவில் வந்திறங்கியபோது குளிர்காலம் தொடங்கியிருந்தது. கடும் குளிரிலிருந்து உடலைக் காத்துக்கொள்ள மூன்று அடுக்குகளாக ஆடை அணிய வேண்டியிருந்தது. உடலை எப்படியோ மூடிக்கொள்ளலாம்.. ஆனால் மூக்கும் வாயும் என்ன செய்யும்?
அதனால், அப்போதே முகக்கவசம் அணிவது எனக்குப் பழகிவிட்டது.

பொதுவாகவே கொரியர்களுக்கு முகக்கவசம் அணிவது பழக்கப்பட்ட ஒன்று. குளிர், தூசு, உடல்நலக் குறைவு என்று பல காரணங்களுக்காக அவர்கள் முகக்கவசம் அணிவார்கள். பிறகு கொரோனா வந்து நம்மவர்களையும் அந்தப் பழக்கத்திற்கு ஆட்படுத்தியது. ஆனால், நம்மவர்களில் பலர் வேண்டாவெறுப்பாக, ஏதோ வீட்டுப்பாடத்தைச் செய்வதுபோல கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்தார்கள். இப்போது கேட்கவே வேண்டாம், பெரும்பாலும் அணிவதே இல்லை..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது முறையாகக் கொரியாவில் வந்திறங்கியபோதும், அது ஒரு குளிர்கால மாலை. அதனால் முகக்கவசத்துடன்தான் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். ஆனால், கொரியர்களிடம் ஒரு பெரிய மாற்றத்தைக் கவனித்தேன். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் சாலைகளில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
கொரோனாவுக்கு முன்பிருந்தே அவர்களிடம் இயல்பாக இருந்த ஒரு பழக்கம், கொரோனாவுக்குப் பிறகு எப்படிக் குறைந்துபோனது.. ஒருவேளை கொரோனாதான் அவர்களை இப்படி மாற்றியிருக்குமோ என்று தோன்றுகிறது.. எப்படியும் வருவது வரத்தானே போகிறது, அதுவரை நிம்மதியாகவாவது மூச்சுவிடுவோம்.. என்பதுபோலத்தான் இப்போது அவர்களுடைய மனநிலை இருக்கிறதோ என்னவோ..

ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் சென்றிருந்தேன். மிகப்பெரிய மாநகரமான டோக்கியோவின் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, தூய்மைப்பணியில் இருத்த வயதான ஒருவர் என்னைப் பார்த்ததும் அவசரமாகத் தனது முகக்கவசத்தை அணிந்துகொண்டார். அந்தக் காட்சி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. நான் என்ன வைரஸ்களின் கூட்டமா.. என்னைப் பார்த்ததும் ஏன் இப்படிச் செய்கிறார்.. என்ற கேள்வி எழுந்தது.

அவர் என்ன காரணத்திற்காக முகக்கவசத்தை அணிந்தார் என்பது எனக்குத் தெரியாது. அது அவருடைய வழக்கமான முன்னெச்சரிக்கையாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இன்னொரு நாட்டில் நின்றுகொண்டிருந்த அந்த நொடியில், அவருடைய செயல் என்னை நிராகரிப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. ஒரு நாட்டைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் ஊடகங்களும், சமூகத்தில் பரவிக்கிடக்கும் கருத்துகளும் உருவாக்கும் பிம்பங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதையும் அப்போது நினைத்துப் பார்த்தேன்.

கொரியாவிலும் சிலர் என்னைப் பார்த்ததும் முகக்கவசம் அணிந்துகொண்ட நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். தொடக்கத்தில், அது என்னை ஒதுக்கும் செயலாகவே தெரிந்தது. பிறகுதான் எல்லாச் செயல்களுக்கும் நாம் நினைக்கும் பொருளே காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். சிலர் இயல்பாகவே அந்நியர்களிடம் சற்றுத் தயக்கத்துடன் நடந்துகொள்வார்கள். மொழித் தடையும், கூச்சமும், எப்படி உரையாடுவது என்ற குழப்பமும் அவர்களை விலகி நிற்கச் செய்யலாம். நம்மை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அவர்கள் நம்மிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம். இதனைப் புரிந்துகொள்வதற்கு எனக்குப் பல நாட்கள் ஆனது.

என்னதான் இருந்தாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் நாம் அங்கு எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்மைப் பற்றிய பிம்பமும் பல நேரங்களில் உருவாகிறது. ஒருவர் பொறுப்பில்லாமல் ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு வந்தால், அவருக்குப் பிறகு அங்கு செல்லும் பலரும் அதன் அவப்பெயரைச் சுமக்க வேண்டியிருக்கலாம். நாம் அங்கு தனிநபர்களாகச் சென்றாலும், மற்றவர்கள் நம்மைத் தனிநபர்களாக மட்டும் பார்ப்பதில்லை. நம்முடைய மொழி, மாநிலம், நாடு என அனைத்தையும் நமது நடத்தையோடு சேர்த்தே பார்க்கிறார்கள்.

அதனால், பொறுப்புடன் நடந்துகொள்வது ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழரின் கடமையாகவும் இருக்க வேண்டும். சொந்த ஊரிலும் பொறுப்புடன்தான் நடந்துகொள்ள வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெளிநாட்டிற்குச் செல்லும்போது நமது செயல்கள் நம்மைத் தாண்டி இன்னும் பலரைப் பாதிக்கக்கூடும் என்பதால், சற்றுக் கூடுதல் பொறுப்பு அவசியமாகிறது.

இன்று லண்டன் வீதிகளிலும் ஐரோப்பிய நகரங்களின் சாலைகளிலும் கடவுளின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும், அரசியலின் பெயராலும், சினிமா ரசிகன் என்ற பெயராலும் சிலர் நடத்தும் அத்துமீறல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப் பார்க்கும் அந்நாட்டு மக்கள், அதில் ஈடுபட்ட சிலரை மட்டும் வைத்து முடிவெடுப்பதில்லை. சில நேரங்களில் ஒரு சமூகத்தையே, ஏன் ஒரு நாட்டையே அந்தச் செயல்களோடு இணைத்துப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

அந்தப் பிம்பத்தின் விளைவுகளை எந்தத் தவறும் செய்யாத மற்றவர்கள்தான் பின்னர் சுமக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் நமது ஆய்வுகளைப் பற்றிப் பேசச் செல்வதற்குக்கூட சில நாடுகளின் விசா நடைமுறைகள் கடுமையாகியிருக்கின்றன. இதற்கு அரசியல், குடியேற்றக் கொள்கை, பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், வெளிநாட்டில் நம்முடைய ஒவ்வொரு செயலும் நம்மோடு முடிந்துவிடுவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

முகக்கவசம் அணிந்துகொள்வது அவரவர் விருப்பம். ஆனால், நமது நடத்தையால் மற்றவர்கள் முகம் சுளிக்காமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பு.

எனவே, பொறுப்பு அவசியம் மக்களே!

- சகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

சாங்வான் குறிப்புகள்#02

விளையாட்டாக சொல்கிறேன் #2