சாங்வான் குறிப்புகள்#01
சாங்வான் பல்கலைக்கழகம்..
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பின்பு இந்த அழகிய இடத்தின் மேற்கு ஓரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும் ஒரு பதினைந்துமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் நிற்கிறேன்... இது வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் தங்குமிடம்.. இங்கிருந்து மேற்கு சன்னல்கள் வழி பார்க்கையில் மொத்த சாங்வான் நகரமும் கண்ணுக்குப் புலப்படும்.. அதே வேளை நீங்கள் காணும் இந்த படம், கிழக்கு திசையில் இருக்கும் சன்னல் வழி எடுக்கப்பட்டது.. மொத்த பல்கலைக்கழகமும் இதில் தெரியும், மரங்களால் மறைக்கப்பட்ட ஒன்றிரண்டு கட்டிடங்களை தவிர்த்து..
இங்கிருந்து எனது ஆய்வகத்திற்கு செல்ல மகிழுந்தில் ஐந்து நிமிடமும், நடந்தால் இருபது நிமிடமும் ஆகும்.. மின்கலன் உதவியுடன் இடம்பெயரும் பல உருளிகளும் உண்டு.. அதற்கு ஆண்டு சந்தா, மாத சந்தா என செலுத்த வேண்டும்.. பெரும்பாலான மாணவர்கள் இந்த உருளிகளையே பயன்படுத்துகின்றனர். நடந்துசெல்வதை அவர்கள் விரும்பாததற்கு காரணம், இந்த தங்கும் விடுதிகள் குன்றின் மேல் அமைத்திருப்பதுதான்.. அதுவன்றி, இந்த உருளிகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திவிட்டு போகலாம்.. மீண்டும் அதை பயன்படுத்த வேண்டுமானால், அதே உருளியை தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை.. அருகில், வேறு ஏதேனும் உருளி இருந்தால் அதை எடுத்துச்செல்லும் வசதியும் உண்டு..
மின்கலன் பொருத்தப்பட்ட மிதிவண்டியும் இருக்கின்றன.. சமமான சாலையில் அதனை தமது ஆற்றலை பயன்படுத்தியும், செங்குத்தான சாலையில் மின்கலனை பயன்படுத்தியும் பெரும்பாலானவர்கள் கடக்கிறார்கள்..
இதைத்தாண்டி சிலர் வழமையான மிதிவண்டிகளையும் பயன்படுத்துகிறார்கள்.. அதுவும் சொந்தமானது என்றில்லை, நுபுஜா என்றொரு வாடகை மிதிவண்டி உண்டு. இதனையும் சந்தா செலுத்தி பயன்படுத்தமுடியும்.. இதனை மின்கல உருளிகளைப்போல எந்த இடத்தில் வேண்டுமானாலும் விட்டுவிடமுடியாது.. அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட இடங்களிலில் இருந்து மட்டுமே ஒரு மிதிவண்டியை எடுத்து, அதேமாதிரியான இன்னொரு அல்லது அதே குறிப்பிட்ட இடத்தில்தான் அதை விடவேண்டும்.. ஆனால் இந்த நகரம் முழுவதிலும், ஏன் உள்ளார்ந்த கிராமங்களிலும் இந்த நுபுஜா மிதிவண்டி நிலையத்தை காண இயலும்..
ஒருமுறை ஒரு மிதிவண்டியை எடுக்கிறோம் என்றால், அதனை தொண்ணூறு நமிடங்கள் வரை நாம் தொடர்ந்து பயன்படுத்தலாம் அதற்கு மேலும் வேண்டுமெனில், அருகில் இருக்கும் நுபுஜா நிலையத்தை அலைபேசியில் கண்டறிந்து, அங்கே அதனை விட்டுவிட்டு, இன்னொரு மிதிவண்டியை எடுத்துச்செல்லலாம். அதேபோல, அடுத்த தொண்ணூறு நிமிடங்கள் கழித்து, இன்னொரு மிதிவண்டியை எடுத்துக்கொள்ளலாம். இப்படியே மொத்த கொரிய தீபகற்பத்தையும் மிதிவண்டியிலேயே சுற்றிவரலாம்....
சாங்வான் குறிப்புகள்#01
- சகா..
கருத்துகள்
கருத்துரையிடுக