அழகாக காண்பித்துக்கொள்ள எதற்கு சாதனை!?

கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களைத் திறந்தாலே 80களின் புகைப்படங்கள்தான்.. ஆண்கள், பெண்கள் என்று எல்லோரும் எண்பதுகளுக்குள் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறொன்று தோன்றியது.

நம்மவர்கள் தங்களை அழகாகப் பார்த்துக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கமுடியும்.. ஆனால், அதைச் செய்வதற்குக்கூட நமக்கு AI (செநு) தேவைப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. செநு மூலம் நம்மை அழகுபடுத்திக்கொள்வதில் இரண்டு வசதிகள் இருக்கின்றன.

ஒன்று, நாம் எப்படி இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படி நம்மையே ஒருமுறை பார்த்துக்கொள்ள முடிகிறது. இரண்டாவது, யாராவது,
என்னப்பா... இவ்வளவு பில்டப்பா..
என்று கேட்டால்,
அட, செநு பண்ணினதுப்பா...
என்று சிரித்துக்கொண்டே கடந்துவிடலாம்.
அதாவது, அழகாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை நம்முடையது. ஆனால் அந்த ஆசைக்கான பொறுப்பை மட்டும் செநுவிடம் கொடுத்துவிடுகிறோம். இதில்தான் கொஞ்சம் உளவியல் இருக்கிறது. நம்மில் பலருக்கு நம்மை முதன்மைப்படுத்திக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது..

நன்றாக உடை அணிவது, முடியை கொஞ்சம் அலங்கரித்துக்கொள்வது, நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது, நமக்குப் பிடித்தபடி நம்மை வெளிப்படுத்திக்கொள்வது... இவற்றையெல்லாம் செய்வதற்கு முன்பு,
ஊர் என்ன சொல்லும்.. என்றொரு குரல் நமக்குள் கேட்டுவிடுகிறது.

மனோதத்துவத்தில் இதை சமூக பரிணாமத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பதைவிட, மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள் என்று நாம் கற்பனை செய்கிறோமோ, அது நம்முடைய நடத்தையை அதிகமாகக் கட்டுப்படுத்தத் தொடங்குகிறது. அதனால்தானோ என்னவோ, நம்மை அழகாகக் காட்டிக்கொள்வதற்குக்கூட ஒரு காரணம் தேவைப்படுகிறது.

நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன் தெரியுமா..
என் வாழ்வே ஒரு போராட்டம்தான்... 
இன்று என் திறமையால் இங்கு வந்து நிற்கிறேன்... 
இப்படியாக நம்மை நாம் உருவகித்துக்கொண்ட பிறகுதான், நம்மை நாம் கொண்டாடிக்கொள்ள அனுமதி கொடுத்துக்கொள்கிறோம்.

ஏன் இப்படி.. அழகாக நம்மை காட்டிக்கொள்ள சாதனை செய்திருக்க வேண்டுமா, என்ன..

ஒரு வட இந்திய ஆணோ பெண்ணோ மிக இயல்பாக செய்துகொள்ளும் சில ஒப்பனைகளைக்கூட நாம் செய்துகொள்ளத் தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். உடனே நம் மனதிற்குள் நான்கு பேர் வந்துவிடுகிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்.. இவர்கள் என்ன பேசுவார்கள்.. இதையெல்லாம் கொஞ்சம் உள்ளார்ந்து பார்த்தால், நம்முடைய சமூக நடத்தைகளில் தாழ்வுணர்வின் சில தடயங்கள் இருக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது..

அழகு என்பது மற்றவர்களிடமிருந்து பெறவேண்டிய சான்றிதழ் அல்ல..
அதேபோல நம்மை மெருகேற்றிக்கொள்வது தற்பெருமையும் அல்ல... நமக்குப் பிடித்த சட்டையை அணியலாம்.. பிடித்தபடி முடியை வைத்துக்கொள்ளலாம்.. வயதாகிவிட்டதே என்று நினைக்காமல் எந்த நிறத்திலும் ஆடைகளை அணியலாம்.. ஒரு நல்ல புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.. அதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ளலாம்.. அதற்காக நோபல் பரிசு வாங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை..

உண்மையில் பார்த்தால், நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு அளவில் சாதனையாளர்கள்தான்.. அதன் அளவு வேண்டுமானால் மாறலாம். அதுவும்கூட நாம் எந்த அளவுகோலை வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான்..

இந்த எண்ணவோட்டம் எனக்கு இன்று வந்ததற்குக் காரணம் என் அண்ணனின் 80களின் புகைப்படம். அதைப் பார்த்ததும் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதில் அவருடைய முகத்தை செநு பெரிதாக மாற்றியிருக்கவில்லை. அவரேதான் இருந்தார். ஆனால் உடையும், தலைமுடியும் மாறியிருந்தன.. அவ்வளவுதான்.. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.. அவர் ஏன் உண்மையிலேயே இப்படியொரு தலைமுடி அலங்காரம் செய்துகொள்ளக்கூடாது.. ஏன் இன்னும் அழகாக உடை அணியக்கூடாது.. ஏன் தன்னை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக்கொள்ளக்கூடாது..

அடுத்த நொடியே இன்னொரு கேள்வியும் தோன்றியது.. நான் மட்டும் செய்கிறேனா என்ன.. நானும் அப்படித்தான். என்னை அழகுபடுத்திக்கொள்வதில் எனக்கும் தயக்கம் இருக்கிறது.. என்னை முன்னிறுத்திக்கொள்வதில் எனக்கும் பிரச்சினை இருக்கிறது. நானும் அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள்.. என்ற சமூகத்தின் தயாரிப்புதானே.. அதனால் இது அண்ணனுக்கான, மற்றவர்களுக்கான அறிவுரை அல்ல.. எனக்குமானதுதான்.

நம்மை நேசிப்பதற்கும், நம்மை அழகாக வைத்துக்கொள்வதற்கும், நம்மை நாமே கொண்டாடிக்கொள்வதற்கும் எந்தச் சாதனைச் சான்றிதழும் தேவையில்லை.
வாழ்ந்துகொண்டிருக்கிறோமே, அதுவே போதுமானது..

தாண்டுவோம்...

- சகா..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

சாங்வான் குறிப்புகள்#02

விளையாட்டாக சொல்கிறேன் #2