ஐமேக்சில், சன் டிவி பார்த்த கொழுக்கட்டை!
அரிசி மாவு இல்லை.. ஊரிலிருந்து எடுத்து வந்த இடியாப்ப மாவு தீர்ந்து மாதங்கள் கடந்துவிட்டன.
ஒருநாள், கொரியாவில் கிடைக்கும் அரிசி மாவில் ஆசையாக இடியாப்பம் செய்து பார்த்தோம். அதற்குப் பிறகு, இடியாப்பம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையே பயன்படாத ஓர் ஆழ்துளைக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு, மீதமிருந்த மாவை வைத்து நிரப்பி, செய்த இடியாப்பத்தை மூடியாக்கி அடைத்துவிட்டோம். பிள்ளையார் நினைத்தாலும் அந்த மூடியை அசைக்கமுடியாது..
ஊரில், அதுவும் எங்கள் வீட்டில் கொழுக்கட்டையை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்வது வழக்கம். அதனால், அம்மா இனிப்புக் கொழுக்கட்டையுடன் சேர்த்து, உருளைக்கிழங்கு வறுவலை உள்ளே வைத்து காரக் கொழுக்கட்டையும் செய்வார். அந்த வர்ஷன் கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால், இங்கு மாவு கிடைக்கவில்லை. என்ன செய்வது.. அதற்காகக் கொழுக்கட்டைச் சாப்பிடும் ஆசையை விட்டுவிட முடியுமா.. எப்படியாவது கொழுக்கட்டை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற உறுதியுடன் வீட்டிற்கு வந்தேன். மனைவியிடம் முன்கூட்டியே உருளைக்கிழங்கு வறுவலைச் செய்து வைத்துவிடச் சொல்லியிருந்ததால், அவரும் தயாராக இருந்தார்.
கொரியாவில் கிடைக்கும் அரிசி மாவு இடியாப்பத்திற்கும், கொழுக்கட்டைக்கும் ஏற்றதாக இருப்பதில்லை. பிசைந்ததும் கொழகொழவென்று பசைபோல மாறிவிடுகின்றன. அதில் குளுட்டன் என்ற புரதம் அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.. சரியான வகை அரிசி மாவைத் தேடி வாங்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. கைவசம் கிடைத்தது கோதுமை மாவு!
இரண்டு கப் கோதுமை மாவில் சிறிது வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவின் பதத்தில் பிசைந்தோம். அதற்குள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி, இட்லி பானையில் வேகவைத்தோம்.
குழந்தைகளுக்காக இனிப்புக் கொழுக்கட்டையும் செய்ய வேண்டுமே.. குழந்தைகள் என்பது ஒரு காரணம்தான். நமக்கும் இனிப்பு பிடிக்காதா என்ன.. ஆனால், தேங்காய்..
பருப்புப் பூரணம் என்றால் எனக்குப் பெரிதாகப் பிடிக்காது. ஊரில் பருப்புப் பூரணக் கொழுக்கட்டை செய்தால், அதன் பூரணத்தை அப்பாவிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, அதில் ஒட்டியிருக்கும் கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் கொழுக்கட்டைத் தோலை மட்டும் சாப்பிடுவது என் வழக்கம். தேங்காய்ப் பூரணம் என்றால் மட்டும் பிடிக்கும்..
இந்தத் தேங்காய்ப் பூரணம் வைத்த கொழுக்கட்டையைச் சுவைப்பதற்காக, தஞ்சையிலிருந்து காரணமே இல்லாமல் காட்டூரில் இருக்கும் அஸ்வின்சுக்கு சென்றதெல்லாம் இந்த உலகத்திற்குத் தெரியவந்தால், அந்த இடியாப்ப ஆசையைப் புதைத்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே எனக்கும் ஒரு பட்டா போட்டுவிடுவார்கள். இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஒன்றுக்கு இரண்டாக அஸ்வின்ஸ் தஞ்சையை அலங்கரிக்கிறது.
(கொழுக்கட்டை வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று தெரியவில்லை. நான் இங்கே இருக்கிறேன்.. பிறகு அங்கே யார்தான் அவ்வளவு கொழுக்கட்டை சாப்பிடுவது..)
சரி.. நம் சங்கதிக்கு வருவோம். தேங்காய் இல்லாத நாட்டில் குடியிருக்கக் கூடாது என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்(!!) சரி, என்ன செய்வது.. காய்ந்த தேங்காய்த் துருவல் கிடைக்கிறதே..
அதை வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஏனென்றால் அது ஓர் இலங்கையிலிருந்து வரும் வஸ்து. அதனால், அதன் உரையில் தமிழிலும் எழுதியிருப்பார்கள். அந்தத் தமிழ் எப்படி இருக்கும் என்று மட்டும் என்னிடம் கேட்டுவிடாதீர்கள். இடியாப்ப ஆசையைப் போட்டுவைத்த அதே ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில்தான் அந்தத் தமிழையும் வைத்திருக்கிறார்கள்..
அந்தத் தமிழை... சே... அந்தத் தேங்காயைக் காட்டித்தான், இங்கு தேங்காய்ச் சட்னியையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காய்ந்த தேங்காய்த் துருவலில் வெல்லமும் வெண்ணெயும் சேர்த்து இனிப்புப் பூரணமும் செய்துவிட்டோம்.
எப்படி வருமோ என்ற பயத்தில் நாங்கள் வியர்வையில் வேக, கொழுக்கட்டையை முதலில் எடுத்துப் பார்த்தபோது அது வேகாமல் இருப்பதுபோலத்தான் தெரிந்தது. ஆனால், நீங்கள் நம்பமாட்டீர்கள்... உண்மையில் சுவை அடிதூள்..
ஒருமுறை நீங்களும் முயன்று பாருங்கள். நாங்க ஏன்டா ஐமேக்சுக்குப் போயி சன் டிவி பார்க்கணும், என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதுவும் சரிதான்..
எனிவே... கொழுக்கட்டையைக் குறைவாகச் சாப்பிட்டு உடல்நலனைப் பேணுங்கள்.
அன்புடன்
- சகா
கருத்துகள்
கருத்துரையிடுக