விளையாட்டாக சொல்கிறேன் #19
ஏதோ ஒரு கடிதம் வந்ததாக அப்பா சிரித்துக்கொண்டே என்னிடம் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு திறந்தே இருக்கும் மஞ்சள் நிற சிறு காகிதத்தில், ஒரு பக்கத்தின் வலது மூலையில், சிரித்துக்கொண்டே இருந்த காந்தித்தாத்தாவின் கீழே, என்பெயரிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் மறுமுனையில் கீழே அனுப்பியவர் முகவரியுடன், மேலே நீண்டிருந்தது முதல்பக்க எழுத்துகளின் தொடர்ச்சி. 'அன்புள்ள ஜிஎஸ் க்கு, அன்புடன் எஸ்எஸ்பி எழுதிக்கொண்டது, நலம் நலமறிய ஆவல். ஜிஎஸ்பி கடிதம் எழுதினானா, விடுமுறை எப்படி கழிகிறது', என நீண்டுகொண்டே போன சொற்கள், அன்புடன் எஸ்எஸ்பி என்று முடிந்திருந்தது. நான் படிக்க படிக்க, பின்னணி இசை போல சிரித்துக்கொண்டே இருந்தார் பெரியண்ணன். அவர் முன்பே அந்த கடிதத்தை படித்துவிட்டார் போல. அனைத்து பெயர்களுமே இனிசியலாக மட்டுமே குறிப்பிடப்பட்டதை நினைத்து சிரித்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், ரிமோட்டிலிருந்து பாய்ந்து செல்லும் கண்ணிற்கே புலப்படாத அந்த அகச்சிவப்பு கதிரை, தொலைக்காட்சி பெட்டி மட்டும் கண்டுகொள்வதைப்போல, அந்த கடிதத்துள் பதுக்கப்பட்டிருந்த நண்பனின் அன்ப