விளையாட்டாக சொல்கிறேன் #9

கோடையென்றாலே சில்வண்டுகள் துவங்கி, காளையர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சிதான். காரணம் ஊரில் நடத்தப்படும் கபடிப்போட்டி. நான்கைந்து வயல் வெளிகளில் நீட்டிக்கொண்டிருக்கும் நெல் தாள்களை, மடித்து, ஆட்டம்கண்டு போன புடியின் நுனியில் தொங்கியிருக்கும் மண்வெட்டியை வைத்தே சமப்படுத்தி, பலர் வீட்டு கயிறென்பதால், மீட்டு கொடுக்க ஏதுவாக சுருக்கு முடிச்சுகளிட்டு, அதனை நான்கு பக்கங்களிலும் கட்டி, யார்வீட்டிலோ வெள்ளையடிக்க வைத்திருந்த சுண்ணாம்பினை வைத்து தொடு கோடுகளையும், பார்வையாளர்கள் தொடக்கூடாத கோடுகளையும் வரைந்து, மைக்கு செட்டுகள் கட்டப்பட்டு, கொடுத்தது போக மீதமிருக்கும், முதல் பரிசு 1000, இரண்டாம் பரிசு 500 என குறிப்பிடப்பட்டிருக்கும் துண்டறிக்கைகளையெல்லாம் ஊர்சாலையில் பரப்பிவிட்டு, பல ஊர்க் காளையர்களை ஒன்றிணைத்து நடைபெறும் அந்த ஆட்டம் இன்றைய கேபிஎல்-ன் முன்னோடி என்றால் மிகையாகாது. உலகத்தரம் வாய்ந்த வர்ணனையாளர்கள் அன்று ஊரில் இருந்திருந்தார்கள், தம்பி பார்த்திபனின் அப்பா உட்பட. விளையாடும் அணிகளைத்தவிர்த்து, ஏனைய அணிகள் யாவும், ஊர் சாலைகள் முழுதும் வார்மப் என்ற பெயரில் அலைந்து திரிந்து பாதி உயிருடன்தான் மைதானம் வருவார்கள். ஆட்டம் ஆரம்பித்தால் போதும் மின்னல் வேகத்தில், இருள் அறையில் தனியாய் மாட்டிய நாயைத் தாக்கும் பூனை போல, எதிராளிகளை பிராண்டி எடுத்துவிடுவார்கள். வங்கிகளை அறியா அன்றைய பொழுதில் உள்ளூர் RBI கவர்னர்களிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தை நுழைவுக்கட்டனமாக செலுத்தி, தன் திறமை மீது பாரத்தை போட்டு விளையாடிய அன்றைய ஆட்டக்காரர்களுக்கு, பெரும் எதிரி உள்ளூர் அணிதான். அது எந்த ஊராக இருத்தாலும் சரி, அவர்கள் வகுக்கும் சட்டதிட்டங்கள் அனைத்திற்கும் மேலே கண்களுக்கு புலப்படாத ஒரு ஸ்டார் மின்னிக்கொண்டேதான் இருக்கும். அந்த குறியீடு, 'சப்ஜக்ட் டூ சேஞ்ச் அட் எனி மொமன்ட் (எந்நேரமும் மாறுதலுக்கு உட்பட்டது)' என்பதையே உணர்த்திக்கொண்டருக்கும். உள்ளூர் அணி தோற்கும் தருவாயில் இருந்தால் மட்டுமே, அந்த புலப்படாத ஸ்டார் வெளிச்சத்திற்கு வரும்!

கபடி அன்றைய முக்கிய கற்பகிரக கடவுள் என்றால் அதனை சுற்றிய சிறுகடவுள்கள் ஏராளம். கல்லா மண்ணா, குளமா கரையா, ஓட்டாஞ் சுள்ளி, குலைகுலையா முந்திரிக்கா, நுங்கு வண்டி, கூட்டாஞ் சோறு, நொண்டி கோடு, பச்ச குதிரை, பம்பரம், கோலி, குச்சி குச்சி தாம்பாலம், ஒளிஞ்சி புடிச்சி, ஆடுபுலி, சில்லு (ஒருகல்), நாயா உடும்பா, ஓடி புடிச்சி, புதையல், பல்லாங்குழி, தாயம், பரமபதம், பறபற என அடுகிக்கொண்டே போகலாம். அதிலும் அந்த பறபற விளையாட்டை ஆட நண்பர்கள் கூப்பிட்டால், சாப்பிட்டதுவரை போதுமென பறந்தேவிடுவேன். அந்த விளையாட்டை குழுவாகவும் விளையாடலாம், தனி இரு நபர்களாகவும் விளையாடலாம். குழுவெனில், அதில் ஒருவர் மட்டும் நடுவர், அவர் 'கோழி பறபற' என தொடங்க மற்றவர்கள், பறபற என கைகளின் விரல்களை மேல்தூக்கி அசைக்க வேண்டும், அதுவே 'முட்டை பறபற' என நடுவர் சொன்னால், மற்றவர்கள் 'பறக்காது' என்றுதான் சொல்லவேண்டும், பறபற என்று சொல்லி கைகளை அசைத்துவிட்டால், அவுட். வைல்ட் கார்ட் என்றியெல்லாம் கிடையாது, ஆட்டத்தின் சுற்று முடியும் வரை வாயை பார்த்து நிற்க வேண்டியதுதான். எங்கே ரெடியா நீங்கள்விளையாட,
'கொழி பறபற
கொக்கு பறபற
மயிலு பறபற
காட பறபற
கௌதாரி பறபற
சிட்டு பறபற
கோழிமுட்டை பறபற'

அடடா ஆல் அவுட்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! 
இதுபோல் பாட்டாகவே பாடி ஆடும் ஆட்டங்கள் பல கபடி உட்பட. ஒரு கல் என்றொரு விளையாட்டும் உண்டு, ஒரு கல்லை மட்டும் வைத்து விளையாடும் ஆட்டமது. கல்லை மேல்தூக்கி எறிந்து, நெஞ்சில் தட்டி, நிலத்தில் தட்டி 'ஒன்னாங் கல்லு ஒசந்த கல்லு' என்று பாட்டு பாடிக்கொண்டே பிடிக்க வேண்டும், விட்டால் ஆட்டமிழப்பீர்.. இல்லையேல் தொடர்ந்து 'ரெண்டாங்கல்லு ரெத்ணகல்லு, மூன்றாங்கல்லு முத்து கல்லு, நான்காங்கல்லு... என்று எதுகை மோனையோடு பாடி பத்து முறை பிடித்துவிட்டால் அவர்தான் வெற்றியாளர். இப்படி பாட்டுபாடி விளையாடும் ஆட்டத்திற்கிடையே, பாட்டையே விளையாட்டாகவும் ஆடுவதுண்டு.. சில வேளைகளில் விடுகதை பாட்டுகள், சில வேளைகளில் நாக்கிற்கு பயிற்சி கொடுக்கும் பாட்டுகள், அதில் ஒன்றுதான் இந்த கேள்வி பதில் பாட்டு. ஒருவர் கேட்க, இன்னொருவர் பதில் சொல்ல கடைசியில் கும்மாங்குத்து குத்த ஓடியாடுவோம்.
"டீச்சர் டீச்சர்
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டுக்கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்ட
பழனி மொட்ட
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆம வட
என்ன ஆம
கொளத்தாம
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்கு திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து!"

குத்து பெற்ற அடுத்த நொடியே அடுத்தடுத்த விளையாட்டுகளுக்கு தாவிவிடுவது வழக்கம். ஆட்டங்களைத் தவிர்த்து, புளியங்கொட்டை சேர்த்தல், சோழிகள் சேர்த்தல், வேப்பங்கொட்டை பொறுக்குதல், நாவற்பழம், இலந்தை பழம் பறித்தல், நுங்கு வண்டி, வாழமட்டை வண்டி செய்தல், மண்ணிற்குள் பொந்திட்டிருக்கும் நொழு நொழு பூச்சியைப்பிடித்து அழுத்தி பார்த்தல், பொன்வண்டு வளர்த்தல், ஓணான் அடித்தல், திருட்டு மாங்காய் அடித்தல், புளிய மரமேறி புளியங்காய் கடித்தல், ஆற்று குளியல், உப்பு குளத்தில் உறுதல், ஊஞ்சல், சைக்கிள் டயர் அடித்து ஓட்டுதல், ஒரு கம்பை வைத்து ரிம் உருட்டுதல், பட்டம் விடுதல், பனை காற்றாடி செய்தல், ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் ஆட்டங்கள் வரை அடுக்கக்கடுக்கா எத்தனை அலுப்பு தட்டா ஆட்டங்கள். 
'சார் சார் ஒண்ணுக்கு
சட்டான் பிள்ள ரெண்டுக்கு
நா போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்க' 
என பாடி ஓடிய ஆட்டங்கள் எல்லாம் ஓய்ந்தேதான் போய்விட்டன. 
தாத்தா தாத்தா என்ன தேடுற
ஊசி
ஊசி எதுக்கு?
பை தைக்க
பை எதுக்கு?
காசு போட
காசெதுக்கு
கத்தி வாங்க
கத்தி எதுக்கு?
உங்களையெல்லாம் வெட்ட என துரத்திய பொழுதிகளை நான் துரத்தியும் பிடித்தபாடில்லை!

பிற்பாடு கிரிக்கெட் என்ற ஒற்றை அரக்கன் இந்த பராம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் உண்டு செரித்து வளர்ந்துவிட்டான். எனக்கு தெரிந்துதான் ஊரில் கிரிக்கெட் ஆட்டம் தலைதூக்கியது. அதற்கு முதற்காரணம், அது கிட்டத்தட்ட கிட்டிபுள்ளு போலவே இருந்ததால்தான். எது எப்படியோ, அந்த ஆட்டத்தின் சிறப்பு என்னவென்றால், எந்த சிறப்பு பயிற்சியும் இன்றி யார் வேண்டுமானாலும் எளிதில் விளையாடிவிடலாம் என்பதுதான்.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #9

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10