விளையாட்டாக சொல்கிறேன் #11
கிராமங்களின் பின்புலம் கொண்ட, என் வயதொத்த எவருக்கும், தோசை விளையாட்டை ஆடிய அனுபவம் இருக்கும். அதில், அனைவரும் வட்டமாக அமர்ந்து, தரையில் புறங்கை படுமாறு வைத்திருக்க, ஒருவர் மட்டும் தீமூட்டி, தோச கல்லு வையி, எண்ண தீத்து, தோச ஊத்து என வெர்ச்சுவல் ரியாலிட்டியில் தோசை ஊத்தி முடிப்பார். பின், ஊத்தியவர் 'வெந்துச்சா வேகலையா' என கையை கிள்ளி கேட்க, அனைவரும் 'வேகலை' என பதிலளிப்பார்கள்.. அடுத்தமுறை மீண்டும் கேட்க, 'வெந்துடுச்சி' என பதிலளிக்க, அனைத்து தோசைகளையும் அடுக்கி வைப்பதுபோல் பாவனை காண்பித்துவிட்டு, அந்த தோசை ஊற்றியவர் குளிக்க போறேன் எனக் கூறி, திரும்பி பார்த்துவிட்டு உட்கார்வார்.. ஆனால் அங்கு தோசை எதுவும் இருக்காது. அதைக் கண்டு அதிர்ந்து போகும் அவர், மற்றவர்களிடன் இப்படித்தான் கலந்துரையாடுவார்,
தோசை எங்கே?
காக்கா தூக்கிட்டு போச்சி,
தூக்கிட்டு போன காக்கா எங்கே?
கெளையில உக்காந்துருக்கு
உக்காந்த கெளை எங்கே?
மரத்துல இருக்கு
அந்த மரமெங்கே?
வெட்டி வெறகாக்கியாச்சி
வெட்டுன வெறகெங்கே?
அடுப்பெரிச்சாச்சி
அடுப்பெரிச்ச சாம்பலெங்கே?
பாத்திரம் கழுவியாச்சி
கழுவுன தண்ணி எங்கே?
மாட்டுக்கு வச்சாச்சி
அதகுடிச்ச மாடெங்கே?
வெட்டி தின்னாச்சி!
அய்யய்ய... என ஓடி துரத்தி ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடுவார்கள். நானோ வலது கையால், தலையை சுற்றி இடது காதை தொடும் முன்னரே, வெல்லத்தை திருடி கதவு இடுக்கினுள் மறைத்து சாப்பிடுவதையும், அதைப் பார்க்கும் என் தாத்தா, திருடன் ஒருத்தன் வந்துட்டான் என சொல்ல, நானும் வெல்லத்தை வாயினுள் அடக்கி, உதட்டை துடைத்துக்கொண்டு 'காக்கா தூக்கிட்டு போச்சி' என சொல்வேன் என அம்மா அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
குறிப்பிட்ட நாட்கள் வரையின் நான் தகட்டூர் பெரியம்மாவின் செல்லப்பிராணிதான். திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் முக்கியசாலையின் அருகிலேயே அமைந்திருந்த பெரியம்மாவின் பழைய வீடே ஒரு அலாதியானது. பேருந்திற்குள் கேட்பதைவிடவும், எதிரொலிப்பால் அதிக இரைச்சலாக அதே சமயம் ரசிக்கும் படியாக கேட்கும் உறுமும் சத்தம், காய்த்து குலுங்கும் பின்புற நெடிய நெல்லிமரம், குண்டுமல்லிகை பூச்செடி, காக்க ரெட்டை கொடி, கோழிக்கொண்டை பூ, பலா மரங்கள், அருகாமை நெல் பிடிக்கும் மையம், மாந்தோப்பு என ஆயிரம் குரங்குகள் வசிக்க ஏதுவான இடம் அது. இருந்தும் இந்த ஒற்றை குரங்கையே பெரியம்மாவும், அன்னபூரணி அக்காவும் சமாளிக்க திணறுவார்கள். ஒரு நாள் மாலை வேளையில், அம்மாவிடம் சொல்லாது, என் வீட்டிற்கு அருகே இருந்த பெரியம்மா வீட்டு ரைஸ் மில் ட்ரைவரின் சைக்கிளில், நான் பாட்டிற்கு பெரியம்மா வீடு வந்துவிட்டேன். முன்பே சென்னை மருத்துவமனையில் ஒரு முறையும், ஊரிலேயே ஒருமுறையும் காணாமல் போன வரலாறு இருந்ததால், அம்மா அலறி அடித்துக்கொண்டு தேட ஆரம்பித்துவிட்டார். ஊரார்களோ, எலேஏஏஏ இன்னார் வீட்டுஉஉஉ, சின்ன புள்ள சக்திய காணோமாடாஆஆ, என அனைவருக்கும் வாய்வழி தந்தியடிக்க, செய்தி காட்டுத் தீயைவிடவும் விரைவாக பரவியது, எதுவரையிலென்றால், நரித்துறையில் குளித்திக்கொண்டிருந்த அண்ணாத்துரை அண்ணன் செவி வரை. என் மீது அளவில்லா அன்புகொண்ட அவர், போட்டிருந்தது அன்ட்ராயர் மட்டும்தான் என்பதையும் சட்டென மறந்து, ஊர் முழுதும் தேடி கிடைக்காததால் தகட்டூர் பெரியம்மா வீட்டிற்கும் வந்துவிட்டார். அங்கே மார்கழி மாத குளிருக்கு பயந்து நான்கைந்து போர்வைக்குள் மறைந்திருந்த என்னைப் பார்த்துவிட்டுதான், வீடு திரும்பினார். இப்படி அம்மாவிடமும் கூறாது, பெரியம்மா வீட்டிற்கு வந்ததற்கு பல காரணங்கள் உண்டு, அது அன்னபூரணி அக்காவின் பாசம், பெரியம்மா சுடும் மெல்லிசான, ட்ரான்ஸ்பரன்ட் தோசை, பெரியப்பாவின் பேச்சு, மகாலிங்கம், மகேந்திரன் போன்றோர்களின் நட்பு. நான் வந்துவிட்டாலே அக்கா பூரி செய்வார், ஆனால் என்னிடத்தில் முன்பே சொல்லிவிடுவார், 'மொத்தம் பதினோரு பூரி செய்றேன், அதில் எனக்கு மூனு, பெரியப்பாவுக்கு ரெண்டு, பெரியம்மாவுக்கு ரெண்டு, அப்ப உனக்கு!' என்று. என் வரலாற்று பக்கங்களை நன்கு படித்திருந்ததன் விளைவாகத்தான் அக்கா அப்படி முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
கூண்டு வண்டியில் அக்காக்களுடன் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு பயணித்த பொழுதுகளில், அந்த பெரம்பால் செய்யப்பட்ட கூண்டு வண்டியின் பின்புற வாசலில் யார் புட்போர்டு அடிக்கிறார்கள் என்பதில் வரும் சண்டை தொடங்கி, திருவிழாவில் இனிப்பு சேவும், கார சேவும் வாங்கி தின்பது, மஞ்சலாட்டு குதிரையை பார்க்க முண்டியடித்து கால்களுக்குள் நுழைந்து செல்வது, மேலக்காரர் சீனிவாசன் அருகில் அமர்ந்து அவரின் இசையை ரசிப்பது போலவே நடிப்பது, ராட்டினத்தில் உலகை சுற்றிவர எத்தனித்தது என, நேரம் கடக்கும் எந்திரத்தால் பின்னோக்கி ஓடி கடக்க முடிந்த தூரத்தையும் கடந்துவிட்ட பொழுதுகள். என் அக்கா உஷாவிடம் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம்தான் எனக்கு. எங்களுக்கிடையே நடக்கும் ரஸ்லிங்கிற்கு அன்னபூரணி அக்காதான் எப்பொழுதும் ரெப்ஃரி. சண்டை போட ஊக்கப்படுத்த அல்ல, சமாதானப்படுத்த.
பெரியம்மாவின் வீட்டருகேயே அமைந்த பெரிய பங்களாவை ஒத்த வீட்டில், கொள்ளு தாத்தா இருந்தார், அவர் ஐஎன்ஏ வில் இருந்தவர். வெடிக்காத துப்பாக்கி ஒன்றையும் வைத்திருப்பார். இராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு காய்ச்ச சென்ற பொழுது, அவர்களுக்கு தேவையான உணவுகளை வழியெங்கும் மரங்களில் கட்டிவிட்டிருந்தார் என்று அவரைப்பற்றி கூறுவார்கள். அப்படி உப்பெடுக்க சென்றவர்களுக்கே உதவியவர், அவர் வாடகைக்கு விட்டிருந்த பின் அறையில் செய்யப்படும் பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை நாங்கள் எடுக்கப்போகும் பொழுதெல்லாம் அடிக்க துரத்துவார். என்ன நியாயம் பாருங்கள், உப்பெடுத்தவருக்கு ஒரு நியதி, இனிப்பெடுக்க போன எனக்கொரு நியதி. இருந்தும் மனதை தளரவிடாது, அவர் தூங்கும் சமயமாக பார்த்து, பின் அறைக்கு சென்றால், சொர்க்கத்தில் உணவு தயாரிக்கும் அறைக்குள் போனதொரு மயக்கம் வரும். அப்படி ஒரு மணம். கிரைன்டர் போலொரு எந்திரத்தில் ஒருவர் வெள்ளை சர்க்கரையை அளவின்றி அள்ளிக்கொட்ட, மற்றொருவர் அந்த எந்திரத்தை சுற்ற, ஆடிக்காற்றில் பறக்கும் பட்டம் போல கலர்கலராக பஞ்சுமிட்டாய் மெலெழும். பட்டமிடுபவர் கையாளும் மாஞ்சா கயிறைப் போன்று, மிக நேர்த்தியாக கையால் சுருட்டி ஞெகிழிப் பையில் அடைப்பார். அதை அப்படியே நாக்கை சுழற்றிக்கொண்டு, நான்கு நாட்கள் பட்டினி இருந்ததுபோல் முகத்தை பாவனை செய்து, கதவோரம் நின்று பார்க்க, நான்கு பாக்கெட்டுகள் கையருகில் வந்து விழும், 'எடுத்து சாப்பிடுப்பா' என்ற குரலையும் சுமந்துகொண்டு. இராஜாஜியை விடவும் உயர்ந்த மனிதர்களான இவர்களை இந்த சமூகம் கொண்டாடவேண்டுமென மனதில் 'வாழ்க' கோஷம் போட்டுகொண்டே, மீண்டும் தாத்தா எப்பொழுது தூங்க போவாரோ என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்போம்!
ஒரு நாள் தாத்தா இறந்த செய்தி எட்டியது. மனம் முழுதும் பஞ்சுமிட்டாய் மணக்க, அவரை இறுதியாய் காண சென்றது என் உடல். அது சாவு வீடாக இல்லை, ஏனென்றால் அவர் நூறை நெருங்கி, வாழ்க்கையை வாழ்ந்து லயித்து இறந்தவர் என்பதால். என் பாட்டியின் அப்பா ஆதலால், பாட்டியின் உடன்பிறப்புகள் சூழ கல்யாண சாவாகவே மாறி இருந்தது. பின்பிற கிணற்றருகில் சோடா கம்பெனியை வரவழைத்து, வருபவர்களுக்கு கொடுப்பதற்காக சோடா பாட்டில்கள் தயாராகிக் கொண்டிருந்தன. பின்னென்ன, நானும் சோடா கம்பெனிக்கு அருகிலேயே அவர்களுக்கு ஒத்தாசையாக, நான்கு நாட்கள் சாப்பிடாத மூஞ்சியுடன் சென்றுவிட்டேன். பிற்பாடு தாத்தாவின் படையலில் செய்த சுவையான, சற்றே இனிப்பான மணத்தக்காளி வற்றல் குழம்பை ஒரு மாதமாக வைத்திருந்து உண்டதெல்லாம், பஞ்சம் தலைவிரித்தாடும் கென்யாவிலும் நடந்திருக்காத நிகழ்வு. பின்னொருநாள், அந்த வீட்டில் பெரியம்மா குடிபெயர்ந்த பின்பு, தாத்தா எங்களை அடித்து துரத்த பயன்படுத்திய கம்பை பார்த்து வெற்றிடத்தை உணர்ந்தேன். தாத்தாக்கள் வலிகொடுத்தாலும், அவர் குடும்பத்தின் முதுகெலும்பு என்பது உண்மைதான்.
தொடருங்கள்!
விளையாட்டாக சொல்கிறேன் #11
-சக்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக