விளையாட்டாக சொல்கிறேன் #10

ஒரு இரண்டடி நீளம் கொண்ட கம்பை கொண்டு, இருபுறமும் கூர்மையாக்கப்பட்ட ஒரு ஜான் அளவுள்ள சுறு குச்சியை அடித்து விளையாடுவதுதான் அந்த கிரிக்கெட்டின் முன்னோடியான கிட்டிபுள்ளு. பல ஊர்களிலும் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டென்றே மதிப்பிடலாம். ஏனென்றால் விளையாடும் யாருக்குவேண்டுமானாலும் அடிபட நேரிடலாம், மைதானத்தில் கிடைக்கவில்லை என்றாலும் வீட்டில் கட்டாயம் கிடைக்கும்!

கிட்டிபுள்ளு பல மாதிரிகளாக விளையாடப்பட்டாலும், எங்கள் பகுதியில் விளையாடப்படுவது இந்த வகைதான். ஒரு சிறு குழி தோண்டி, அதன் குறுக்கில் முதலில் அந்த கூர்மையாக்கப்பட்ட புள்ளை வைத்து, எதிர் வீரர்கள் நிற்கும் திசைக்கு எதிர் திசையாக திரும்பி, முகம் முட்டியை தொடும் வண்ணம் குனிந்து, கிட்டியை வைத்து ஆளில்லா பக்கம் நெம்ப வேண்டும். உந்தப்பட்ட புள்ளை யாரும் பிடித்துவிட்டால், ஆடியவர் அவுட், இல்லை என்றால், எங்கேனும் கீழ்விழுந்திருக்கும் புள்ளை எடுத்து எங்கிருந்து வந்ததோ அந்த இடம் நோக்கி எறிய வேண்டும். நெம்பியவர், கிட்டியை கையில் வைத்துக்கொண்டு ஷேவாக் போல கண்ணை மூடிக்கொண்டு எதிர் வரும் புள்ளை அடிப்பார். அது அடிபடாமல் அந்த குழிக்கும் அருகில், சரியாக அந்த குழியிலிருந்து கிட்டியின் நீளத்திற்குள் அந்த புள்ளு விழுமாயின், டக் அவுட்டுடன், கிட்டியை அக்குளில் வைத்துக்கொண்டு கிளம்பலாம். ஒரு வேளை புள்ளு குழியைவிட சிறிது தூரமாகவோ, இல்லை நெம்பியவர் கிட்டியில் பட்டு அதிக தூரமாகவோ வீழ்ந்திருக்கலாம். இப்பொழுது கிட்டியை குழியின் குறுக்கில், நெம்பியவர் வைத்துவிடுவார். எதிராளிகள், பிள்ளு கிடக்கும் இடத்திலுருந்து கிட்டியை நோக்கி எரிய வேண்டும். கிட்டியில் பட்டுவிட்டால், அவுட். படவில்லையென்றால்தான் உண்மையான ஆட்டமே. கிட்டியை எடுக்கும் அந்த நெம்பியவர், புள்ளின் கூர் முனை ஒன்றை அடிக்க, அது மேல் எழும்பும், எழும்பிய புள்ளை, ஒரே அடியிலோ அல்லது பல முறை தட்டி அடித்தோ எங்கோ தூரத்திற்கு அனுப்பிவிடுவார். இப்பொழுது தட்டிய இடத்திலிருந்து, பிள்ளு கிடக்கும் தொலைவை கிட்டியால் எண்ணுவார். ஒரே அடியில் அவ்விடம் சென்றிருந்தால், ஒரு கிட்டி அளவுக்கு 5 எண்களும், இருமுறை கிட்டியால் அடிபட்டு சென்றிருந்தால் ஒரு கிட்டி அளவுக்கு 10 எண்கள் என கூடிக்கொண்டே செல்லும். யார் அதிக எண்களோ அவர்களே வெல்வர். பின் வென்றவர் கேட்பதை தோற்றவர் செய்து தருவதுதானே உசித்தம். 

அது உலக கோப்பை நடந்த நேரம், அதற்கு, முதல் உலகக்கோப்பை வரை பக்கத்து வீவோ மாமா வீட்டில்தான் சிறப்பு இட ஒதிக்கீட்டோடு பார்த்து வந்தோம். ஆனால் அந்த முறை முதன்முதலில் எங்கள் வீட்டு புதிய தொலைகாட்சி பெட்டியில் பார்க்க முடிந்தது. 'மழ பேஞ்சா உங்க வீட்டு கொடை தரீங்களா அம்பி' என்று வடக்கு வீட்டு செல்வம் அண்ணனின் அப்பா அடிக்கடி கலாய்த்துவிட்டு போவார். அப்படி ஒரு பெரிய குடை (dish) ஒன்றுதான் ஆன்டனா அப்பொழுது. அந்த ஆன்டனாவில் சன்டிவி மட்டிமே வரும் என்பதால், குச்சி போல் இருக்கும் yagi ஆன்டனாவை வீட்டில் சண்டை போட்டு அண்ணன் வாங்கி வைத்திருந்தார். அம்மாவின், நாடகமெல்லாம் போச்சே இந்த பரதேசிகளால என்ற அர்ச்சனைகளுக்கு நடுவே பாலை குடிக்க வரும் பூனைபோல, அந்த ஆர்எஃப் கார்டு பின்னை மாற்றி சொருக, வெறும் கருப்பு அலைகள்தான் மிஞ்சும். அண்ணன் மாடியிலேறி ஆன்டனாவை திருப்ப, நானோ வருது வரல என உடனடி பிரேக்கிங் நியூஸ்களை கொடுத்து, ஒருவழியாக கிரக்கெட் ஓடத்தொடங்கிவிடும். பிற்பாடு அந்த அன்டா சைஸ் ஆன்டனாவை திருப்பினாலே, நேஷனல் வந்துவிடும் என்பது தெரியவந்தது!

அண்ணன் திருப்புனவாசலிலும், தஞ்சை சண்முகாவிலும் படித்த பொழுதுகளிலெல்லாம், என் ஒருவனால் அன்டா சைஸ் ஆன்டனாவை திருப்பியும், வீட்டுற்குள் போய் டிவியை பார்த்தும் இரட்டை வேடங்கள் பூணமுடியாது, மாறன் அண்ணன் வீட்டிற்கோ, வீரபாண்டி அண்ணன் வீட்டிற்கோ சென்றுவிடுவது வழக்கம். கிரிக்கெட்டை வெறுமனே பார்ப்பதைக் காட்டிலும், புரியவில்லையாயினும் அதன் வர்ணனையுடன் பார்த்தே பழகியிருந்தோம். ஆனால் வீரபாண்டி அண்ணன் வீட்டில்மட்டும், ஒலியை மியூட் செய்துவிட்டு, இளையராஜா பாடல்களையும், ரகுமான் பாடல்களையும் ரேடியோவில் ஒலிக்கவிட்டுவிடுவார். இது பாட, அவர்கள் ஆட என அந்த கிரிக்கெட்டை பார்க்கும் எங்களையே நான்கு பேர் ரசிக்கலாம், அப்படி ரசித்த நாட்கள் அவை. god என்று அழைக்கப்பட்ட வீரபாண்டி அண்ணன் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகரும் கூட காரணம், பஞ்சநதிக்குளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் அவர்தான். அவருடன் பயணித்து பல ஊர் டோர்னமன்டுகளுக்கு சென்றிருக்கிறேன், பந்து பொறுக்கி போட மட்டுமே. அந்த அணியில் மாறன் அண்ணன், செல்வம் அண்ணன், செந்தில் அண்ணன், ரவி சார், சிவா அண்ணன், சுதாகர் அண்ணன், என் அண்ணன் என பெரிய பட்டாளமே இருந்தது. அந்த முதல் தலைமுறை கிரிக்கெட் அணியினர், ஓய்வு வயது நெருங்கியும், எங்கள் தலைமுறை கிரிக்கெட் அணியிலும் நீங்காது இடம்பிடிக்கவே செய்தனர்! ஒருநாள் டோர்னமென்ட் நடத்தலாம் என்ற முடிவுடன், பணமெல்லாம் திரட்டி, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் கொடுக்க உள்ளூர் மைனர்களையும் பிடித்து, ஏற்பாடுகள், தெற்கு அலத்தில் தடபுடலாக நடந்தது. நேரடி அரை இறுதி நுழைவு, கலைஞரைப் போல் பேசி அசத்திய வெளியூர் வர்ணனையாளர் ஒருவர், அடிக்கும் சிக்ஸர்களுக்கு வாழைப்பழம், என மறக்கமுடியா நினைவுகள். அணி வெல்வதற்காக, ஐபிஎல்-கு முன்னோடியாக வெளி ஆட்களை அணியில் சேர்க்கும் பொருட்டு, மாறன் அண்ணன் கல்லூரியிலுருந்து கூப்பிட்டு வந்த பரத் அண்ணன் ஆடிய ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

தொடக்க நாட்களில் கார்க் பந்துகளை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். அதற்கு காரணம், அதை என்ன அடி அடித்தாலும், அதனையெல்லாம் தாங்கிக்கொள்ளும் திறன் இருந்ததால்தான். மீறி உடையும் பட்சத்தில், ஆணிகளை குறுக்கும் மறுக்குமாக அடித்து விளையாடியதை நினைத்தால் இன்று உடல் நடுங்குகிறது. ஆணிகளே, அந்த கார்க் துகள்களை இனியும் ஒன்றிணைக்க முடியாது என மனத்திடம் இழந்த பொழுது கைகொடுக்கும் ஒரு வஸ்துதான், பனங்கொட்டை. பௌலர் கையிலிருப்பது பனங்கொட்டை என்றாலும், அக்தரைப்போல பல கிலோமீட்டர் பயணித்து வந்து எறிவதையும், பேட்ஸ்மேன் கையிலிருப்பது தென்ன மட்டையானாலும், அப்படியே சச்சினைப்போல சுழற்றி அடிப்பதையும் பார்க்கும், குறுக்கும் மறுக்குமாக ஆடுமாடு பிடித்துசெல்லும் பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் கிரிக்கெட் மீது எங்களுக்கான பைத்தியத்தை. ஒருநாள் கணேஷ் எறிந்த பந்து என்றழைக்கப்பட்ட பனங்கொட்டை என் மூஞ்சியை பதம்பார்த்து, முகமே வீங்கிவிட, மூச்சுபேச்சில்லாமல் மாடியில் சென்று தூங்கியதுபோல் பாவனை காண்பித்து, கட்டிலிலிருந்து விழுந்துவிட்டதாக சொல்லிய பொய்களெல்லாம், தோற்றதற்கு கங்குலி சொன்ன காரணங்களை விடவும் மிகக் கண்றாவியானது!

பிற்பாடு ஸ்டெம்பர் பந்துகள் வரவிற்கு பிறகு எங்கு நோக்கினும் கிரிக்கெட்டும், கிரிக்கெட் டோர்னமென்டுகளாகவும்தான் தென்பட்டன. கபடி விளையாட்டு, வாழ்ந்துகெட்ட குடும்பத்தைப்போல, கிரிக்கெட்டை உற்றுநோக்கிக்கொண்டருந்தது. கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள், போன்சாய் போல வயது மூத்த மரங்களானாலும், நேற்றே முளைத்த குரோட்டன்ஸ் செடிகளுடன் ஈடுகட்டமுடியவில்லை. போன்சாய் மரங்களின் மகத்துவம் அறிய வெகு நாட்கள் பிடிக்கும்தான்.. எத்தனை நாட்களென பார்ப்போமே!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #10

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #2