விளையாட்டாக சொல்கிறேன் #16

நரிகள் ஊளையிடும் சத்தம் காதை பிளந்துகொண்டிருந்தது. தினம்தினம் ஆடுகளையோ, கோழிகளையோ இழப்பதே மக்களின் பெரும் இடையூறுகளாக இருந்தன. மனிதனின் மூதாதையர்களான குரங்குகள் பல இன்றும் குரங்குகளாக இருப்பது போலவே, நாய்களின் மூதாதையர்களான நரிகள் அப்படியே கொடுங்குணத்துடந்தான் இருக்கின்றன. பொழுதுபோக்கிற்காகவே வேட்டையாடும் அந்த கொடிய நரிகளை, உலக சமூகத்தில் மங்கோலியர்கள் மட்டுமே தன் குலச்சின்னமாக தொழுதனர் என்பதை பிற்பாடு ஓநாய்குலச்சின்னம் (wolf totem in english written by Jiang Rong, தமிழில் சி. மோகன்) புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொண்டேன். காரணம், அவைகள் மங்கோலியாவின் 'புல்வெளி பகுதிகளை', புற்களை உண்டு வாழும் முயல்கள், மான்களிடமிருந்து காக்கின்றன என்பதுதான். ஆனால் அதில் மற்றுமொரு பயனும் இருந்திருந்தது அந்த மஞ்சள் நிற மங்கோலியர்களுக்கு. இந்த உலகத்தையே ஆட்சி செய்த மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான், போர்முறை தந்திரங்களை இந்த ஓநாய்களிடம்தான் கற்றிருந்தார். அதனால்தான் இந்த உலகத்தையே வென்றிருக்க முடிந்தது செங்கிஸ்கானால். இயற்கையாக படைக்கப்பட்ட எதுவும் எதோவொரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அதை அழித்தொழிப்பதே மனிதனின் தலையாய கடமையாக இருப்பது நகைப்பிற்குரியது. அப்படிதான், மங்கோலிய சின்னமும் அழிக்கப்பட்டன சீனர்களின் புரட்சியால்.

பஞ்சந்திக்குளதில், வீட்டின் பின்புறம் சவுக்கு தோப்பு, அதன் பின் கருவேல மரக் காடுகள் என, நரிகள் எளிதில் வந்துசெல்ல, ஏதுவாக, நெடுஞ்சாலையில் இருக்கும் பெரிய உணவம் போல இருந்தது. உணவகத்தின் வெளிப்புற அழகிற்கு மயங்கி, பசியின்றியும் ஏதாவது உண்ண செல்வோமே அதே போலத்தான் நரியின் எண்ணமும், பசியற்று இருந்தும் ஆட்டுக்குட்டியினை கண்டால் போதும், கண் குளிர்ந்து வேட்டைக்கு தயாராகிவிடும். இப்படி பல ஆட்டுக்குட்டிகள், வளர்ப்பவர்களுக்கு இரையாகும் முன்பே நரிகளுக்கு படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆட்டுக்குட்டிகளை சுவைத்த கையுடன், தாகமெடுக்கும் நரிகள், வாய் நனைக்க, ஓடை தாண்டி இருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றுவருவதுண்டு. ஆட்டுக்குட்டிகளின் ஆவிகள் கரைக்கப்படும் அந்த நரித்துறை பகல்நேரங்களில் எங்களின் வசம் வந்துவிடும். டெய்லர் அன்பு அண்ணன்தான் அங்கு குளிக்க அழைத்து செல்வார். உள்நீச்சல், மேல் நீச்சல், தலைகீழ் நீச்சல் என அனைத்திலும் வல்லவர் அன்பு அண்ணன். கடலுக்கு ஒரு மரியான் என்றால், அந்த நரித்துறைக்கு ஒரு அன்பு அண்ணன். நீரில் மூழ்கிவிட்டால் போதும், அவர் எங்கு எழுந்திருப்பார் என ரேடாராலும் கணித்துவிட முடியாது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் நீச்சல்போட்டியில் நாம் தங்கம் வெல்லாததற்கு காரணம், அவர் நரித்துறையில் மட்டுமே நீந்திக்கொண்டிருந்ததுதான். நரிகள் ஆற்றங்கரையை கைப்பற்றும் நேரத்திற்கு சற்றுமுன்பாகவே, ஆட்கள் இல்லாதபொழுதை கணித்து நகரும் நரிகளைப்போல, ஊறிப்போன கால்களுடன் வீட்டினுள் நுழைந்திவிடுவது வழக்கம். 

அதேபோலொரு நரி சுவடுகள் நிறைந்த ஆற்றங்கரையை கொண்டதுதான் அந்த கோரையாறு. கல்லையும் மண்ணாக்கி கல்லணை வந்துசேரும் காவிரி, வெண்ணாறு வெட்டாறாகி பாய்ந்து செல்ல, வெண்ணாற்றிலிருந்து புறபட்டு பசுமை விரிக்கும் கிளைதான் கோரையாறு. கோழி அடைகாத்து பிறக்கும் குஞ்சிகளை போல, கோரையாறு அடைகாத்து பெற்றெடுத்த பிள்ளைதான் உதயமார்த்தாண்டபுரம் ஏரி. அகலவாய் நாரை, நீலத் தாழைக்கோழி, கூழைக்கடா, துடுப்புவாயன், வெண்கழுத்து நாரை, நீர்க்கோழி என சகலவித பறவைகளெல்லாம் அலங்கரிக்கும், முத்துப்பேட்டை தாண்டி அமைத்திருக்கும் அந்த ஏரிக்கரையின் அருகில்தான் அப்பாவின் சொந்த ஊரான வலைநகர் (வளையநெறி) இருக்கிறது. வளைந்து நெளிந்த நெறிகளுடன், ஆற்றங்கரையோரமாய் கண்புருவம் போல அமைந்திருக்கும் அந்த குறுகிய பெருங்கப்பி சாலை. அதனால்தானோ என்னவோ அந்த ஊருக்கு வளையநெறி என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. வலையில் வாழும் நரிகள் அங்கு அதிகம் என்பதால் வலைநரி என வழங்கப்பட்டது என்றுகூட சிலர் கூறக் கேள்விப்பட்டதுண்டு. எது எப்படியோ, நரிகளுக்கும், நமக்குமான தொடர்பு மிக நெருக்கமாகவே இருந்திருக்கிறது. பிற்பாடு கால ஓட்டத்தில், உலகமயமாக்கலின் விளைவு, வலை'நரி' அல்லது வளைநெறி, வலை'நகர்' என்றாகிவிட்டது.

பெரும்பாலா வேளைகளில் கூண்டு வணடியில், இருபக்கமும் பூட்டப்பட்ட காளைகளின் பின்புறம், ஓட்டுனரின் அருகில் அமர்ந்தே அந்த ஆற்றங்கரை சாலையை பயணிப்போம். அன்றைய பொழுதுகளில் அடிதடி தகராறுகளுக்கு விதையாக இருந்த அந்த இருக்கைதான் அப்பொழுதைய வின்டோ சீட். சில வேளைகளில் அண்ணன்களுடன், பற்பல சத்தங்களால் அடைப்பட்டுகிடக்கும் அந்த ஆற்றங்கரை சாலையில், சைக்களில் பயணம் செய்ததுண்டு. கதண்டுகள் ரிங்காரிக்க, கீச்சான்கள் கீச்கீச்சென்று ஆர்ப்பரிக்க, தேன் சிட்டுகள் அங்குமிங்கும் தேன் தேடி அலைந்துதிரிய, கரட்டானின் கதறலால் காது பொடபொடைக்க, அண்ணன்களின் பாம்பு, பல்லி பற்றிய கதைகளை கேட்டவாறே அந்த சாலையை பகலில் கடப்பதே பெரிய பிக்பாஸ் டாஸ்க்காகத்தான் இருந்தது. தோலி கிராமத்திற்கு இறங்கும் சாலை வந்ததும்தான் மனம் நிம்மதி பெறும், ஏனெனில் அங்கிருந்து பார்த்தால் சித்தப்பாக்களின் வீடுகள் தெரியவரும். அந்த தோலி சாலை தாண்டி, வலதுபக்கமாக இயற்கையாக உருவாகியிருந்த அனைத்து மரங்களுக்கும், எங்கள் நாவிற்கும் பெருநட்பு இருந்திருந்தது. பனை நுங்குகளும், ஈச்சை பழங்களும், நாவற் பழங்களும், இலந்தை பழங்களும்தான் நட்பாம் கிழமை நல்கியது. ஒத்த இடைவெளியில், வரிசையாக அமைந்த நான்கு சித்தப்பாக்களின் வீடுகளும், அவ்வீடுகளுக்கு இடையிடையே அமையப்பெற்ற ஒரே மாதிரியான மாட்டுக்கொட்டைகளும், வைக்கோல் போர்களும், வைக்கோல் பிரி தரித்து நெல் கொட்டப்பட்டிருக்கும் பெரும் கோட்டைகளும், சாணம் மொழுவிய சிறு கோள கோட்டைகளுக்குள் சேமிக்கப்பட்ட விதைநெல் களஞ்சியங்களும் என பெரும் இயற்கை சூழலால் உருவாக்கப்பட்டிருந்தன வளைநெறி நகரத்து வாழ்விடம்! 

ராணுவ வீரர்களின் குதிரைகளை அழித்து அட்டூழியம் செய்ததற்காக, மொத்த மங்கோலிய சின்னமாக விளங்கிய ஓநாய்களும் இரையாக்கப்பட்டன, புல்லட்கள் துப்பும் எந்திரங்களுக்கு. குதிரைகள் காப்பாற்றப்பட்ட வேளையில் பல்லுயிர் வாழ்வு அழிவிற்குள்ளாகின. புற்களை தின்னும் முயல்களும் மான்களும் அதிகமாகி, புற்கள் வெற்று தரைகளாயின, அதை நம்பிய பூச்சிகள் செத்தொழிந்தன, பூச்சிகளை உண்டுவாழும் விலங்குகள் செய்வதறியாது திகைத்தன, மொத்த உயிரியல் வெளியும், மனிதன் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, லாக்டவுனில்தான் உயிர் வாழ்ந்தன, உயிரியல் பூங்காக்களில் மட்டும். இப்படித்தான் இயற்கையை நம்பி, இயற்கையாய் வாழ்ந்த மொத்த மனித சூழலும் ஒழிக்கப்பட்டுவிட்டன பேராசைக்காக! ஆமாம், வளைநெறி, வலைநகர் ஆனது, ஏரி சுருங்கியது, பல்லுயிர் ஓம்பிய நரிகள் இல்லை, நரித்துறையில் நன்னீரும் இல்லை, நீந்துவதற்கு உடல் தகுதியும் இல்லை, பறவைகளும் தென்படுவதில்லை, ஆற்றங்கரையில் காடுகளையும் காணவில்லை, இதோ லாக்டவுனில் மனிதர்கள்!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #16

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17