விளையாட்டாக சொல்கிறேன் #6
சலவை செய்த வெண்ணிற ஜிப்பா, வேட்டியுடன் வயதான நாட்டு வைத்தியர் ஒருவர் வீட்டிற்கு மாதம் ஒருமுறை வருகை தருவது வழக்கம். அவர் வரும் நாட்களில், என்னை வீட்டுக்காவலில் வைத்துவிடுவார் என் அம்மா. உடலுக்கு பிரச்சனையோ இல்லையோ, அவரிடம் கையை கொடுத்து பத்து நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். பொறுமையாக இருகைகளையும் பிடித்து நாடி பார்த்து, பித்த நாடி, மூல நாடி, கப நாடிகளின் ஏற்ற இறக்கம் பற்றி முப்பது நிமிடங்களானாலும் விளக்கமளிப்பார். அவரின் சொற்கள் அனைத்தும் நடுக்கத்துடன் அகடுமுகடுகள் நிறைந்த 20 டெசிபெலுக்கும் குறைவான ஒலி அலைகளாக இருந்தாலும், அதனை செறிவூட்டி புரிந்துகொள்ளும் பிரத்யேக உணரி (சென்சார்) அம்மாவின் காதுகளில்தான் இருக்கும். 'ஆஆடுஉதொடாஆஆ எலையஅ கொஅஞ்சமாஆஆ எடுத்துஉஉ, அதுலஅஅ கொஞ்சமாஆஆ வெஅல்லத்தஅஅ சேஅர்த்துஉ' என அவர் கூற அம்மாவிற்கு உடனடியாக இன்வைவோ (invivo) ஆய்வு நடத்த நான்தான் நினைவுக்கு வருவேன். அவர் மாதாமாதாம் கொடுக்கும் பேதிமாத்திரைகளுக்கு ஆற்றங்கரையே அஞ்சிதான் நிற்கும்.
அப்பொழுதைய அனைத்து சனிக்கிழமை நாட்களையும் இரவுகளாக மாற்றிய பெருமை அவரையே சேரும். காரணம் அவரின் மூலிகை எண்ணெய். இரு மாதங்களுக்கு ஒருமுறையேனும் அவரே வீட்டுற்கு வந்து தங்கி, விடியற்காலையில் நான்கு மணிக்கெல்லாம் குளித்து, நல்லெண்ணையை எடுத்து, இஞ்சி, சீரகம், மிளகு, மல்லி என பலவகை மூலிகைகளை சேர்த்து கொதிக்கவைத்து, பக்குவமாய் குளிர்ச்சி எண்ணெய் தயாரித்துவிடுவார். முதலில் அந்த எண்ணெயின் செய்முறை பக்குவத்தை அவர் கூறவில்லையாயினும் அம்மா தன் சர்வைலென்ஸ் கேமரா, அதாங்க மூக்கை வைத்து கண்டுபிடித்துவிட்டார். பின்னென்ன இன்று வரை அந்த மூலிகை எண்ணெய் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த எண்ணெயை சனிக்கிழமை காலையிலே உச்சந்தலையில் ஒழுக ஒழுக தேய்த்து ஒருமணிநேரம் வைத்திருந்து, நன்கு பொடிக்கப்பட்ட நாட்டு சிகக்காய் பொடியை வைத்து சூடு பறக்க தேய்த்து குளிக்க, நம் தலையின் பின்னால் ஒளிவட்டத்தையே உணரலாம். அந்த எண்ணை குளியல் பத்து தூக்கமாத்திரைகளுக்கு இணையானதாக இருக்குமென நினைக்கறேன். சாப்பிட்டு பதினோரு மணிக்கு தூங்கி, மதிய வேளையில் எழுந்தால் நமக்கே ஒருமுறை குழப்பம் ஏற்படும், பூமியில்தான் இருக்கிறோமா இல்லை வேறு கோளுக்கு ஏலியன்கள் நம்மை கடத்திவந்துவிட்டனவா என்று!
பத்தியம்தான் நாட்டு வைத்தியத்தின் முதுகெலும்பு என்று பலமுறை அவர் கூறி கேட்டிருக்கிறேன். அவரைப்போலவே இன்னொரு வைத்தியரும் வீட்டிற்கு வருகைதருவார், அவரைக்கண்டாலே அலறிஅடித்துக்கொண்டு ஒடிவிடுவோம். காரணம் அவர் உள்நாக்கில் வைக்கும் ஒருவகை தைலம். உள்நாக்கு வளர்ச்சியை தடுக்கும் மருந்தாம், அந்த மருந்தை தடவிய அடுத்த ஒரு மணிநேரம், பெரும் பிரச்சினை வந்தாலும், வாய்மூடி மௌனமாகத்தான் இருக்க நேரிடும் ஏனெனில் வாய் இருப்பதே நம்மால் உணர முடியாத அளவிற்கு மரத்துப்போய்விடும். அந்த மருந்திற்கு வியாதியே பரவாயில்லையென அறியாமையால் நினைத்ததுவும் உண்டு.
இப்படியாய் மணம் மூலம் மூளையில் பதிந்த நிகழ்வுகள் மற்றும் ஆட்களைப்போலவே, நாக்கு உணரும் சுவை மூலமும், மூளைக்கு சமிக்ஞைகள் சென்று சேர்வது இயற்கையே. அப்படி சுவை மூலம் மூளையை சென்று சேர்ந்தவர்தான் அந்த அல்வா விற்கும் மாமா ஒருவர். தகட்டூரிலிருந்து வாரத்திற்கு ஒருமுறையாவது ஒரு பெரிய கிண்ணத்தில் அல்வா செய்து, மிதிவண்டி பின்புறம் வைத்து 'அல்வாஆஆ, அல்வாஆஆ' என உரக்க கத்திவருகையில், ஊரில் எந்த மூலையில் இருந்தாலும், யாரும் அழைக்காமலும், வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம். ஏனேனில் அவர் சிறு துண்டு அல்வாவை தாத்தாவின் போட்டோவிற்கு வைத்து படைப்பது வழக்கம். அவர் வீட்டைவிட்டு கிளம்பும் வரைதான் நான் அம்மாவின் கண்களின் கட்டுப்பாட்டிற்குள் அடைந்திருப்பேன், பின்னர் 'ஓடுற பஸ்ல இருந்து ஒருரூபா விழுந்தாலே, தாவி எடுப்பான் இந்த சைல்டு சின்னா, இத விடுவனா' போலத்தான். அல்வாவிற்கு உயிரிருந்தால், அதன் சுவை உப்பாகியிருக்கும்! அதுபோல சுவையால் நினைவுக்கு வருபவர் அம்மாவும் கூட! அதனால் சுவைதான் அம்மாவை நினைவுபடுத்தும் என்றில்லை ஆனாலும் அம்மாவின் கைபக்குவத்தில் கிடைத்த சுவை, மெடுல்லா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டபின் குறிப்பிட்டவற்றை ஞாபகம் வைத்து மற்றவைகளை மறந்துவிடுவது போல, மற்ற அனைத்தையும் மறக்க வைத்துவிடும் அந்த சுவை! மருந்தையே உணவாக உட்கொள்ளும் பொதுவான நிலையில், உணவையே மருந்தாக்குவதே அம்மாவின் வழக்கம். அம்மாமட்டும் நகரத்தில் வாழ்ந்திருப்பாரேனால், இன்று ஏதேனுமொரு தொலைக்காட்சி நிறுவனம் அவரை குத்தகைக்கு எடுத்திருக்கும் அவரின் சமையல் திறமைக்கும், மருத்துவ உணவு முறைக்கும்.
முள்ளுமுருங்கை மரத்திற்கு முள் இருப்பது, அம்மாவிடமிருந்து தன் இலைகளை காப்பாற்றிக்கொள்ளத்தான் என்று நினைக்கிறேன். ஆமாம், தொண்டைவலி என்றாலே ஊரில் முள்ளுமுருங்கை மரத்தை தேடித்தேடி மொட்டை அடிப்பதுதான் வழக்கம். பறித்த இலைகளிலிருந்து நார்களை அகற்றி, அதனை அரிசி மாவில் இட்டு நன்கு அரைத்து, தேவையெனில் சிறிது உளுந்து மாவையும் சேர்த்து, உப்பிட்டு, தோசையாக செய்து சாப்பிட, தொண்டைவலி தொடர்ந்து வரவைக்கவே நம் மூளை எத்தனித்துக்கொண்டிருக்கும். அப்படி ஒரு சுவை அதற்குண்டு. மரவள்ளிக்கிழங்கு இருக்கிறதே அதனை கொண்டு அடையோ வடையோ செய்கையில் அம்மா ஒரு உணவிற்கான கடவுளைப்போலத்தான் காட்சியளிப்பார் நம் நாக்கின் கண்களுக்கு. பருப்பு அடை-பூண்டு துவையல், கார் அரிசி இட்லி-வெங்காய சட்னி, கம்பு தோசை-தயிர்/பூண்டு சட்னி, பச்சைபயறு இட்லி-தக்காளி தொக்கு இவைகளெல்லாம் மேட் ஃபார் ஈச் அதர் ரகம். சளியா கேழ்வரகு அடை, தும்மலா தூதுவளை தோசை/அடை, உடல் வலியா பிரண்டை துவையல், இடுப்பு வலியா உளுந்தங் கஞ்சி, உடல் சூடா வெந்தய இட்லி/தோசை, உடல் எடை குறைக்க கேழ்வரகு கூழ், வயிற்று வலியா கருணைக்கிழங்கு சட்னி, வாய்ப்புண்ணா மணத்தக்காளி கூட்டு, செரிமான குறைபாடா இஞ்சி சட்னி என நீண்டுகொண்டே போகும். இடியாப்பம், ஆப்பம்-தேங்காய்ப்பால், பணியாரம், கொழுக்கட்டையெல்லாம் வாராவாரம் இவரிடம் ஆசிபெற வீடுவருவது வழக்கம். இதைத்தவிர்த்த பலகார வகைகள் என்றால் தேந்தலை, மகிழம்பூ, குழல் முறுக்கு, சுத்து முறுக்கு, சீடை, கெட்டி உருண்டை, ரவா லாடு, லட்டு, திணைஅதிரசம், இனிப்பு கார பூந்தி, சோமாசு என வளர்ந்து கொண்டே போகும் அனுமார் வால்போல!
எத்தனை வகையான உணவு வகைகளை வக்கனையாய் அம்மா செய்தாலும், சேனா கடை இலந்த வடை பாக்கெட்டுகளையும், பால் பன்களையும்தான் என் நாக்கு தேடிக்கொண்டிருக்கும். கபடி, பேப்பே, நொண்டி குதிரை, நின்னா புடிச்சி உக்காந்தா புடிச்சி, நாயா உடும்பா, சில்லுகோடு, பம்பரம், பளிங்கு, ஓடி புடிச்சி, ஒளிஞ்சி புடிச்சி என நக்கீரனார் பள்ளி வளாகத்தில் ஆடும் ஆட்ட இடைவெளிகள் யாவும் நிரப்பட்டது அந்த இலந்தை வடைகளாலும், பால் பன்களாலும்தான்.
தொடருங்கள்!
விளையாட்டாய் சொல்கிறேன் #6
-சக்தி
கருத்துகள்
கருத்துரையிடுக