விளையாட்டாக சொல்கிறேன் #17

பழைய மரத்தாலான கேன்வாஸ் ரக சாய்வு நாற்காலி ஒன்றில் கால் மீது கால் போட்டு, நடு வகுடெடுத்த தலையில் வெள்ளி இழைகள் முட்டிமோதி மேலெழுந்து அசைந்துகொண்டிருக்க, வலது கை கடிகாரம் ஆடும் படி கையை அசைத்து அசைத்து எதையோ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கீற்று மட்டைகள் வேய்ந்த மாடியில், தென்னங்காற்றில் கரைந்துகொண்டே இந்த காட்சிகள் நடந்திருக்கலாம் என அவதானிக்கிறேன். அவரின் பேச்சின் இடையே, அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை அவரின் நண்பர்கள் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் அமர்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலி அவரைப்பற்றி நினைவுகளை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. 'பெரும்பாலும் உங்க தாத்தா, கேன்வாசுலதான் தூங்குவார், அப்படி தூங்கயில நாய் கட்டிலுல தூங்கும், தாத்தா கட்டிலுல தூங்குனார்னா, நாய் கேன்வாசுல படுத்திருக்கும்' என்று வடக்கு வீட்டு பெரிய அண்ணன், அந்த கேன்வாசிற்கும், தாத்தாவிற்கும் இடையே நாயின் அன்பு எப்படி பரவிக்கிடந்தது என்பதை பலதடவை சொல்லியிருக்கிறார். எத்தனை திருமண பேச்சுகளையும், சொத்து தகராறுகளையும், குடும்ப பிரச்சினைகளையும், சுமூக ஒப்பந்தங்களையும் அந்த நாற்காலி சாய்ந்துகொண்டே ஒட்டு கேட்டிருக்கும் என்பது நாற்காலிக்கே வெளிச்சம். தாத்தா பயன்படுத்திய வெற்றிலைப்பாக்குப் பெட்டி என பிற்பாடு பாட்டி காண்பித்தவற்றில் ஒரு இரும்பு பாக்குவெட்டி, இருபக்கமும் திறக்க முடியும் சுண்ணாம்பு டப்பா என பல இருந்தன. இவையனைத்தும் தாத்தாவுடன் அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து, அவரின் பேச்சிற்கு பின்னணி இசை கோர்த்திருக்கும் என்றே எண்ணுகிறேன். 

நம் மனதுக்கு நெருக்கமான சிலரை ஞாபகப்படுத்துவதில், அவர்கள் அமர்ந்து சிறப்பித்த இதுபோன்ற இருக்கைகளுக்கு பெரும்பங்குண்டு. பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் சில கிடைத்தால் கூட அதனை சேர்த்துவைத்து ஒவ்வொரு ஊரிலும் மியூசியம் அமைத்துவிடுவது வெளிநாடுகளில் வழக்கம். ஆனால் நம்மவர்கள் அப்படியில்லை, அந்த பழைய பொருட்களை மீட்டு பயன்படுத்துவதில் வல்லவர்கள், கடைசி எச்சமான மரச்சட்டம் அடுப்பாங்கரைக்கு சென்றிவிடும் வரையில்!

இப்படித்தான், தாத்தாவுடன் பயணித்த அந்த சாய்வு நாற்காலியில் துணியை பல முறை மாற்றியாகிவிட்டது, நாற்காலி மட்டும் மாற்றப்படவில்லை. அதே கம்பீரத்துடன் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு இடத்தில் சாய்ந்துகொண்டேதான் எங்களை தாத்தாவைப் போல கவனித்துக்கொண்டிருந்தது. அதற்கு துணிவாங்கமுடியா கடினமான நிலையில் கூட, புல்லையும் பிள்ளையராக்கும் அப்பா, யூரியா சாக்குகளை தைத்துப்போட்டிருந்தார். 'டேய் அதுலயே படுத்து கெடந்தீனா கூன் விழுந்த கெழவியாட்டந்தான் நடப்ப' என அம்மாவின் அர்ச்சனைகள் காதில் விழுந்தும், கடைசி மரச்சட்டம் எஞ்சும் வரையில், எங்களை அழைத்து அரவணைத்துக்கொண்டேதான் இருந்தது, தாத்தா நினைவுகள் தாங்கிய அந்த சாய்வு நாற்காலி!

மாங்குடியில், கடவுளைப் பற்றியே சதா நினைத்துக்கொண்டிருந்த பாட்டி அப்படி ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்ததை கண்டிருக்கிறேன். அதே போலொரு நாற்காலி பிற்பாடு கண்ணில் படும்பொழுதெல்லாம், கேப்பி சுந்தரம்பாலைப்போல திருநீறு பட்டை போட்டு, சிவப்பு மணிகளை கழுத்தில் போட்டுக்கொண்டு, இருகால்களையும் சரிக்கு சமமாக வைத்துக்கொண்டு, எங்களிடம் அறத்தைப் பற்றி உரையாடிய மாங்குடி பாட்டியின் ஞாபகம் வந்துசென்றிருக்கிறது. காலையில் எழுந்ததும், எந்த எதிர்பார்ப்புமின்றி, யாருக்கோ மாடு வாங்குவதற்கு கிளம்பிவிட்டு திரும்பிய பெரியப்பா இளைப்பாறிய நாற்காலியை ஒத்த ஒன்று கண்ணில் படும்பொழுதெல்லாம், எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவுபவர்கள் யாவரும் இதில்தான் ஓய்வெடுப்பார்களோ என்று நினைத்ததுண்டு. 

சிவப்பு, வெள்ளை நிற கோடுகள் நிறைந்த, ஏறத்தாழ ஐநூறு ஜிஎஸ்எம் தடிமனுடைய துணியை உடுத்திய கேன்வாசை கண்டால் போதும், அந்த சுறுசுறுப்பின் இலக்கணம் என் மூளை முழுவதும் வேதிவினைகளை ஏற்படுத்திவிடும். காலை நான்கு மணி என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத நமக்கு மத்தியில், நான்கு மணிக்கே குளித்துவிட்டு பெரிய வீட்டின் முன்வாசலில் உட்கார்ந்திருப்பார் அந்த சுறுசுறுப்பிற்கு இலக்கணமான நடுதாத்தா. அந்த பெரிய வீட்டில் இடதுபுறம் பெரிய தாத்தாவுடையது, வலது புறம் நடுதாத்தாவுடையது. வலது ஓரத்து தாத்தா வீட்டில் முன்புற வாசலைத்தாண்டி சென்றால், தூண்களுடன் அமைந்த கட்டையும், அதனை அடுத்த சுவரில் விளக்கு மாடமும் இருக்கும். அதனையும் தாண்டி மாமாக்களின் ஓய்வறையும், ஊஞ்சல் மாட்டிய சிறு இடைவெளியும், அதையொட்டி ஒரு பத்தாயமும் இருக்கும், அதற்கும் மேல் சமையலறை இருந்திருந்தது. மாரியம்மன் கோயில் விழாவானாலும் சரி, ஊரில் யார் வீட்டு விழாவானாலும் சரி, நடந்தே தொலைவுகளை கடப்பது தாத்தாவின் முதன்மை பணியாக இருந்தது. அவர் நடந்த தொலைவுகளை ஹெல்த் வாட்சாலும் அன்று கணக்கிட்டிருக்க முடியாது. அப்படி நடைகளை ஓடிக்கடந்த தாத்தாவின் கால்களை நன்கு அறிந்திருந்த அந்த கேன்வாஸ், நம் பார்வைகளுக்கு பலமுறை பதில் சொல்வதுண்டு, அந்த வீட்டின் மொத்த காட்சியமைப்புடன். தாத்தா, இந்த பாட்டியைதான் மணம் செய்வேன் என பிடிவாதமாக இருந்து திருமணம் முடித்த கதைகள் சொல்லியிருந்ததும் இதே போலொரு மர நாற்காலியில் உட்கார்ந்துதான். நூறு கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், எங்கேனும் கண்ணில் படும் மர நாற்காலிகள், கதர் உள்பனியனுடன், கதர் சட்டை அணிந்த நடுதாத்தாவை மூளை முழுதும் பரப்பிவிடுகிறது.

கேன்வாசை அதிகம் பயன்படுத்தாத வளைநெறி தாத்தா, மரத்தாலான நாற்காலியில்தான் அமர்வார். சட்டதிட்டங்களுடன் வாழ்ந்த தாத்தா, சரியாக நான்கு மரச் சட்டங்கள் கீழும், நான்கு மரச் சட்டங்கள் சாய்வாகவும் அமையப்பெற்ற நாற்காலியில்தான் தன் பயண ஓய்வை மேற்கொண்டிருந்தார். பெரிய மாமா பல முறை சொல்லியும் கேட்காத தாத்தா, மிருதுவான இருக்கையில் அமர சம்மதித்ததில்லை. அதற்காகவே தூத்துக்குடியிலிருந்து வரும்பொழுது, பஞ்சாலான சிறு மெத்தையை கொண்டுவந்து, அந்த நாற்காலியின் மீது பொருத்திக்கொடுத்திருந்தார் மாமா. இப்படி மெத்தைகள் பொருத்தப்பட்ட மர நாற்காலிகள் என்றுமே சிக்கனத்தில் உயர்ந்தவரின் கதை சொல்ல தவறியதில்லை.

வாழ்வில் ஒளியூட்டிய ஆசிரியர்கள் அமர்ந்த நாற்காலிகள் பல, படிப்பை முடித்தபின்னும் பாடமெடுத்திருக்கின்றன. சில வேளைகளில், சில நாற்காலிகள் ஆசையை தூண்டியதும் உண்டு, அமரச்சொல்லி. அப்படி ஒருநாள் தற்செயலாக கண்ட ஒயர் பின்னப்பட்ட எஸ் பென்ட் நாற்காலியை என்றாவது ஒருநாள் வாங்கிவிடவேண்டும் என்று பலநாள் கனவு கண்டதுண்டு. ஊதியம் எடுக்க தொடங்கிய நிலையிலும் பல முறை ஃபர்னிச்சர் கடைகளுக்குச் சென்று, விலையை மட்டும் கேட்டு திரும்பிவிடுவது வழக்கம். என்றோ ஒருநாள் தஞ்சை, மருத்துவ கல்லூரி சாலையோர கடையில் விற்கப்பட்டுக்கொண்டிருந்த ரோலிங் சேரில் கண்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அதனை வாங்கிவிட ஆசையிருந்தும் மனம் வந்தபாடில்லை. தாத்தாவின் கம்பீரத்திற்கு காரணமென நம்பப்பட்ட ஈசி சேரைப் போலொரு நாற்காலியை வாங்கி, இரவு நேரம் மொட்டைமாடியில் அதனை போட்டு உட்கார்ந்து, வானத்தில் தெரியும் பால்வழித்திரளையும், அண்ட வெளியையும் பார்த்தவண்ணம் முழு இரவையும் கடக்க வேண்டும் என்ற பேராசையும் ஒரு சமயம் எழுந்திருந்தது. இப்படியான பல நாற்காலிகளை சுற்றியே, மியூசிக் சேர் போல ஓடிக்கொண்டிருக்கும் மனம், அந்த நாற்காலிகளில் எதில் அமர நினைத்தாலும், வாழ்க்கையென்ற இசை இடைவேளை இன்றி இசைத்துக்கொண்டேயிருக்கிறது. அந்த இசையின் இடைவேளை நோக்கி காத்துக்கொண்டே இருக்கிறது மனம். கடைசியில், நம்மின் நாற்காலிகளை இசை, இடைவேளை விடும் காலம்தான் தீர்மானிக்கப்போகிறது. அதுவரையில் நமக்கு தகுந்த நாற்காலிகளை தேடிக்கொண்டே சுற்றுவோம்!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #17

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2