விளையாட்டாக சொல்கிறேன் #14

எங்கோ கேட்ட குரல் அது, சற்றே உரக்க கேட்கிறது. 'அய்யோ கொடும்பாவி, ஆகாச சக்களாத்தி, சுக்கீரம் பொண்டாட்டி, சுக்கீரன விட்டுடடி' என்ற அந்த ஒப்பாரி, பாப்புவின் குரல்தான். உண்மையில் ஒரு ஒப்பாரிப்பாடல், மனிதனின் மனதை மாற்றவல்லது, துக்கத்தையும் எளிதில் கடக்க துணைபுரிவது. கையறுநிலையை பாடலாக வடித்து இசைப்பது என்பது ஒரு பெரிய இலக்கிய வடிவம். பாரியின் இறப்பையும், அதியமானின் இறப்பையும் விளக்கும் சங்க இலக்கியங்கள், கையறுநிலை பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட ஒப்பாரியை உலகளவில் எடுத்துச்செல்ல நம்மவர்கள் தவறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். 

மழை வேண்டி கொடும்பாவி எரிப்பது கிராமங்களில் வழக்கமான ஒன்றுதான். பாப்புவின் குரலைத்தான் பெரும்பாலான வேளைகளில் கொடும்பாவி கேட்டுக்கொண்டே எரிந்து மகிழும். மூளை சுருக்கங்களை ஒத்த தோல்கள், மேலாடை அணியாது, கைத்தறி புடவையால் மறைக்கப்பட்ட உடல், இடுப்பு சுருக்கு பை, கனிவான சொற்கள், அளவில்லா அன்பு என தனிப்பெரும் அடையாளம் கொண்ட பாப்பு ஒரு அமைதிக்கான நோபெல் பரிசுக்கு தகுதிபெற்றவர். பாப்புவிற்கு உழவன் மீதும், உழவு மீதும் அவ்வளவு பற்று. உழவின் மீது உழவனுக்கு பற்றுதல் இருந்தால்மட்டும் போதுமா என்ன, உழவுக்கும் உழவன் மீது பற்றுதல் வேண்டாவா! உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு மிஞ்சுமா, என்பது உண்மைதானே. வெயிலும், மழையும் உழவனுக்கு இதமான நண்பர்கள் மட்டுமல்ல, கொடூர எதிரிகளும் கூட. அப்பா, மழை பெய்கையில் ஆவாரம் பூ கணக்காய் மகிழ்வதையும், அதே மழை மூன்றாவது நாளும் தொடர்ந்தால் பலநாளைய துரோகியை பார்த்ததுபோல் மனம் நொறுங்கி கிடப்பதையும், பார்த்தே வளர்ந்திருக்கிறேன்.

கருத்தமாயி வருவாரே வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போரில், அவரின் நிலைதான் இங்கு பல உழவர்களுக்கு. கருத்தமாயி ஒருநாள், தோட்டத்தில் மேய்வதற்கு வந்த முயலை துரத்தி ஓடுகிற நாய், எங்கே அந்த அழகு முயலை கொன்றுவிடப்போகிறதோ என, அருகிலிருந்த கம்பை எடுத்து சுழற்றி வீசுவார். நாயை அடிக்க காற்றில் பயணப்பட்ட கம்பு, F=mA என்ற இயற்பியல் விதிக்கு உட்பட்டு, முயலை அடிக்க, சுருண்டு விழுந்துவிடும் அந்த முயல். வேறென்ன செய்யவது, கொன்றால் பாவம் தின்றால் போச்சிதானே! கருத்தமாயி முயல் கறி செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு குளித்து உண்ணலாமென திண்ணையில் மூடி வைக்க, அதை, அந்த முயலை பிடிக்க துரத்திய நாய் இருக்கே, அதுவே மோப்பம் பிடித்து சாப்பிட்டுவிடும்! எப்படியோ முயல் என்னவோ நாய்க்குதான் போய் சேரும். அப்படிதான் உழவன் நிலையும், நல்ல மகசூல் கிடைக்க காசை தூக்கி வெளிநாட்டு உரங்களில் எறிந்தால், அது அந்த உரங்களை பின்தொடர்ந்து வந்த வெளிநாட்டு விதைகளில் விழ, இப்பொழுது உரங்களுக்குதான் இரையாகி மலடாகிக்கொண்டிருக்கின்றன அந்த விதைகள். முன்பெல்லாம் கோட்டைகட்டி வைத்திருத்த வரை, விதைகள் உரத்திற்கு இரையானதில்லை. பலமுறை அம்மாவின் கதைகள் மூலம் தெரிந்துகொண்டிருந்தேன், தாத்தா கார் நெல்லை அனுமார் கட்டிடத்திலிருந்து வால் போல நீண்டிருந்த அளத்தில் தெளித்துவிட்டுவருவார்கள் என்று. நான்கு மாதங்கள் எடுக்கும் அதன் அறுவடைக்கு. அந்த வேளையில் மிகப்பெரிய மழை பொழிந்து அளமும், அளத்திற்கு எதிர்புறமாக கழிமுகம் தேடி சீறிப்பாயும் முள்ளியாறும் ஒன்றாகிவிடும். படகில் சென்று, ஏழடியில் வளர்ந்து வெள்ளநீரின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் நெல் முடிகளை அறுத்துக்கொண்டு வருவார்களாம். அறுவடை நேரத்தில் ஊரில் கடை வைத்திருந்த செனா அவர்கள், அங்கு காராச்சேவும், இனிப்பு சேவும் விற்க கடை போட்டிருப்பாராம். அப்படி ஒரு காட்சியை நினைக்கும் பொழுதே, நேரம் கடக்கும் எந்திரத்தை முனைப்புடன் உருவாக்க மனம் எத்தனிக்கிறது. அந்த அழகான தெற்கு காற்றில், நீர் சூழ் நிலத்தின் நடுவே புற்களை செதுக்கி கதிர் அடிக்க களமொன்று அமைத்து, அறுத்த நெல் இழைகளை மர சாய்ப்பில் வைத்து அடிக்க, அறுத்த புற்களின் மணமும், நெல் உதிரும் இசையும், காரசேவின் சுவையும், ஆகா ஆகா, வாழும் பொழுதே சொர்க்கத்தில் வாழ்ந்து, நமக்கு நரகத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம் முன்னவர்கள் என்றே மனம் கொதிக்கிறது. 

ஒரு காலத்தில் கார் நெல் விளைந்த, வீட்டின் தெற்கே, ஓடையை தாண்டி இருக்கும் நாலுமா நிலத்தில் அப்பா உரம் தெளித்துக்கொண்டிருந்தார், அவருக்கு மதிய உணவு கொண்டுசெல்ல எனக்கு எப்பொழுதுமே ஆர்வம் அதிகம். காரணம், அந்த நிலத்தின் அருகே, புது லெட்சுமி வாய்க்காலின் வரப்பில் அமைந்திருந்த மரத்தின் நிழலில் அமர்ந்து அப்பாவுடன், அந்த உணவை சுவைக்கலாம், என்பதுதான். மொட்டையடித்து ஐந்தாவது நாள் தலையில் முளைத்திருக்கும் ஒரே அளவுகொண்ட சிறு முடிகளைப்போல, செதுக்கி பின் அந்த தரையில் வளர்ந்துவிட்ட சிறு புட்கள் நிறைந்த மேட்டில், வாழை இலைபோட்டு, ரச சாதத்தை கட்டைவிரலும், சுட்டுவிரலும் விரிக்க, கடிகார முள் சுற்றும் திசையில் ஒருமுறையும், சிறுவிரல் இலையில் பட எதிர் திசையில் ஒருமுறையுமென வழித்து வாயில் போடுகையில், அதன் சுவை எத்தனைமுறை சுவைத்தாலும், விளக்கப்பட்டாலும், நாச்சுவையும், சொற்சுவையும் புதிதாகவேதான் தோன்றும். 

வேலை செய்பவர்களின் ஊதிய பிரச்சினை தலையெடுத்த வேளை அது, சிறிதும் வேலை செய்பவர்களை கடிந்துகொள்ளாது, அன்புடன் அணுகும் அப்பா, அனைத்து வேலைகளையும் அவரேதான் செய்துகொண்டிருந்தார். வேலை செய்பவர்கள் இருந்தாலும், சரிக்கு சமமாக, இருவரின் வேலையை செய்யுமளவுக்கு உடல் தகுதி பெற்றவர். தன்னிடம் உள்ளவர்களை வேலையாட்களாக நடத்தாத அவரின் மனப்பாங்கு சொற்களில் அடுங்கிவிடாது. தான் கூப்பிட்ட நேரமெல்லாம் ஓடி வருபவர் என்பதற்காகவே பாலையனை அளவு கடந்து நேசித்தார், அதனால்தான் அவர் இறந்த பின்னும் அவரின் மகன் முருகனுக்கு வசிக்க வீட்டினை தன் கண்காணிப்பில் அமைத்துக்கொடுத்திருந்தார். உழவு வேலையை உள்ளிருந்து விரும்பி செய்பவர்களுக்கெல்லாம் இலவச இணைப்பாகவே இருப்பது போல, இந்த இலகிய மனது.

பல வேளைகளில் பெருமழைகளையும், சில வேளைகளில் பெரும் புயல்களையும், சில நேரங்களில் மழையற்ற வறட்சிகளையும், வறட்சி போக்கிய பாப்புவின் கொடும்பாவி சங்கீதங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த கார்காலம் கடந்து, மார்கழி பின் கைகொடுக்கும் தையென மாறிமாறி, மாற்றத்தை காலம் காட்டிக்கொண்டிருந்தாலும், வீட்டின் நாட்காட்டி என்னவோ அப்பாவின் மீதான வழக்கு, அக்காவின் படிப்பு, அண்ணனின் படிப்பு என 'செலவு' என்ற ஒற்றை சொல்லைத்தான் காட்டிக்கொண்டிருந்தது. அது ஒரு இக்கட்டான சூழல்தான் அப்பாவுக்கு. இருந்தும் ஒரே பச்சை மிளகாயை ஐந்து நாட்களுக்கு வைத்து உணவு உண்டவருக்கு, அது ஒன்றும் பெரிய விசயமாக இல்லை. பல கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட வீதி வழியே பயணித்து, சிலரது வீட்டில் கடனாக பணத்தை பெற்றுவர என்னை அப்பா அனுப்பியது உண்டு. பண்ணை வீட்டில் பிறந்த பிள்ளையென்பதை சற்றே மறக்கடித்து, மனிதத்தை புகட்டிய நிகழ்வுகள்தான் அவை. நூறோ, இருநூறோ வாங்கிவர வெற்றிசெல்வி அவர்களின் வீட்டிலோ, வீவோ வீட்டு பாட்டியிடமோ, பேபி சுந்தரம் அவர்களின் வீட்டிலோதான் நின்றிருப்பேன், அவர்களும் நான் ஏதோ அவர்களுக்கு கொடுத்த கடனை திருப்பி கொடுப்பதுபோல, பதறியடித்துக்கொண்டு கொடுப்பார்கள். அடுத்த ஓரிரு நாட்களில், நானே கொண்டுபோய் அந்த கடனை திருப்பிக்கொடுத்தால்தான் உள்ளூர மகிழ்ச்சியடைவேன். 

உழவனின் வாழ்வு என்றுமே கடினமானதுதான் அந்த எரிகின்ற கொடும்பாவி போல. அறம் என்ற ஒற்றை கூறுதான் பாப்புவின் ஒப்பாரிப்பாடலைபோல இனிமை தரவல்லது. அறத்தை கடைபிடித்து, மகிழ்வுடன் எரிந்து இந்த உலக மக்களுக்கு மழையாய் உணவை கொடுப்பவன்தான் உலகத்தவர்களால் 'கொடும்பாவி'யாக ஆக்கப்பட்டு எரிக்கப்படும் உழவன்! 
எனில் உழவனைப் போற்றுவோம்.

-தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #14

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17