விளையாட்டாக சொல்கிறேன் #19
ஏதோ ஒரு கடிதம் வந்ததாக அப்பா சிரித்துக்கொண்டே என்னிடம் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு திறந்தே இருக்கும் மஞ்சள் நிற சிறு காகிதத்தில், ஒரு பக்கத்தின் வலது மூலையில், சிரித்துக்கொண்டே இருந்த காந்தித்தாத்தாவின் கீழே, என்பெயரிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் மறுமுனையில் கீழே அனுப்பியவர் முகவரியுடன், மேலே நீண்டிருந்தது முதல்பக்க எழுத்துகளின் தொடர்ச்சி. 'அன்புள்ள ஜிஎஸ் க்கு, அன்புடன் எஸ்எஸ்பி எழுதிக்கொண்டது, நலம் நலமறிய ஆவல். ஜிஎஸ்பி கடிதம் எழுதினானா, விடுமுறை எப்படி கழிகிறது', என நீண்டுகொண்டே போன சொற்கள், அன்புடன் எஸ்எஸ்பி என்று முடிந்திருந்தது. நான் படிக்க படிக்க, பின்னணி இசை போல சிரித்துக்கொண்டே இருந்தார் பெரியண்ணன். அவர் முன்பே அந்த கடிதத்தை படித்துவிட்டார் போல. அனைத்து பெயர்களுமே இனிசியலாக மட்டுமே குறிப்பிடப்பட்டதை நினைத்து சிரித்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், ரிமோட்டிலிருந்து பாய்ந்து செல்லும் கண்ணிற்கே புலப்படாத அந்த அகச்சிவப்பு கதிரை, தொலைக்காட்சி பெட்டி மட்டும் கண்டுகொள்வதைப்போல, அந்த கடிதத்துள் பதுக்கப்பட்டிருந்த நண்பனின் அன்பு என்னிடம் மட்டுமே எழுதப்படாத செய்திகள் சிலவற்றையும் ஒப்பித்துக்கொண்டிருந்தது. யார் வேண்டுமானாலும் கடிதத்தை படிக்துவிடமுடியும் என்றாலும், யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவருக்கு மட்டுமே சரியாக புரிந்திருக்கும் அந்த கடிதத்தில் இருக்கும் சொற்கள். அதுதான் ரீடிங் பிட்வின் த லைன்ஸ், வரிகளுக்கிடையே படிப்பது என்பார்கள். அந்த வரிகளுக்கிடையேன இணைப்பை கொடுப்பது, இருவருக்கிடையேயான நெருக்கம்தான்! அந்த நெருக்கத்தால்தான், முன்பெல்லாம், அந்த அன்பை வரிகளுக்கிடையே புதைத்து கடிதமாக அனுப்பிய சந்தனாங்காட்டு நண்பன் எஸ்எஸ் பழனியப்பனின் வீட்டிற்கு ஞாயிறு தோறும் சைக்கிளில் சென்றுவிடுவது வழக்கம். ஊராட்சி மன்ற டிவி கட்டிடத்தின் அருகில்தான் நண்பர்களின் வீடுகள் இருக்கும். அனைவரும் சேர்ந்து விளையாடி பிரிந்த பின்னும் காகிதக் கடிதங்கள் இணைத்தே வைத்திருந்தன.
புகையிலைக் கொல்லைகளுக்கும், பூக்கொல்லைகளுக்கும் ரேடியோ அலைகள் கொண்டுவந்திருந்த ஒலிகளை கேட்டு பல கடிதங்கள், கவிதைகளை சுமந்துசென்று அன்பு செலுத்தியிருந்தன. கடிதங்கள் நல்ல கதைசொல்லிகள். கடிதங்களை கொண்டு சேர்க்கும் போஸ்ட்மேன், அமைதி பேச்சு நடத்தும் தூதர், போஸ்ட்மாஸ்டர்கள்தான் ஐநா சபை பொதுச்செயலாளர்கள்! ஒரு ஒயரால் பின்னப்பட்ட பையை முன் கைப்பிடியில் மாட்டி, அதனுள் பலநாட்டு தலைவர்களுக்கான தூது ஓலைகளை வைத்துக்கொண்டு, சைக்கிளில் சிரித்த முகத்துடன், சாலையெங்கும் சந்திப்பவர்களையெல்லாம் பரிகசித்துக்கொண்டே, கடந்துசெல்வார் எங்கள் ஊரின் அன்பு தூதர். அதுவும், எங்கள் ஊரில் அமைந்திருந்த ஐநாவின் பொதுச்செயலாளர் பெரியார் கண்ட புதுமைப் பெண். அவர் ஒரு இரும்பு பெண்மணி. முன்பெல்லாம் பாரவண்டியை கூட ஒத்தையாக ஓட்டிவருவார் என அவரைப்பற்றி அம்மா கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொங்கல் சமயங்களில் அனைவருக்கும் வாழ்த்து கடிதங்களை அனுப்புவது வழக்கம். 'வாய்மேட்டு செட்டியார் கடையிலதான் நெறைய இருக்கும்' என சொல்லிக்கொண்டு, பலதரப்பட்ட வண்ண வண்ண படங்கள் அச்சடிக்கப்பட்ட கார்டுகளை வாங்கி முகவரி எழுதி அனுப்பிவிடுவதுண்டு. சஞ்சாயிகா சேமிப்பு பெரும்பாலும் இதற்குதான் பயன்பட்டது. சேமிப்பு இல்லையெனில், இருபத்தைந்து பைசா மஞ்சள் கடிதங்களையும், பென்சில் ரப்பர்களையும் வாங்கி வந்துவிடுவது வழக்கம். அக்கா இல்லை அம்மாவின் வளையல்களை வைத்து பொங்கல் பானைகளை வரைந்து, பொங்கல் நுரைப்பது போல சற்று முப்பரிமாண கோணத்தில் வளைந்து தீட்டிவிட்டு, இருபக்கங்களிலும் இரண்டு குச்சிக்கிழங்குகளைப்போல கரும்புகளை தோவையுடன் வரைந்து, எச்சிலில் தொட்டு வண்ணம் தீட்டப்பட்டு, நண்பர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். நண்பர்களிடமிருத்து வரும் வாழ்த்து கடிதத்தைவிட நம்முடைந்து சிறந்ததாக இருக்க வேண்டுமென்று முனைப்புகாட்டிய தருணமது. என்னுடைய பெரிய மாமா, தவறாமல் பொங்கல் வாழ்த்தினை அப்பாவின் பெயரிட்டு அனுப்பிவிடுவது வழக்கம், பிற்பாடு அக்கா, அண்ணன், என் பெயர்களிலெல்லாம் மாமாவிடமிருந்து வந்து விழும் வாழ்த்து அட்டைகளால், மனம் சொக்கிப்போய் நின்றிருந்தது.
என்றாவது வரும் சில கடிதங்களின் முனைகளை படித்தவுடன் கிழித்துவிடுவார் அப்பா, கிழிப்பதற்கேற்ப அதில் கருப்பு அடையாளமும் இருக்கும். என்றோ ஒருநாள் வந்த கடிதத்தில், யாருடைய அந்தரங்கத்தை பற்றியோ, அனுப்பியவர் முகவரியற்று வந்திருந்தது. அதனை எளிதில் கணிக்கும் இசட் பிரிவு டிடக்டீவ்களும் ஊரில் இருந்திருந்தார்கள். கடித வழி பரிவர்த்தனைகள் கொடுத்த மகிழ்வுகளும், எல்லைதாண்டிய அன்புகளும் ஏராளம். சில வேளைகளில் பல நன்மைகளும் கூட கிடைத்திருந்தன, தொடர்வண்டிகளில் கழிப்பறை வசதிகள் கிடைக்கப்பெற்றது போல! ஆமாம், பலாப்பழத்தை சாப்பிட்ட அக்கில் சந்திரா சென் என்பவர், தொடர்வண்டியில் 1909 ஆம் ஆண்டுவாக்கில் பயணிக்க, அவரின் வயறு உறுமல்களை கொடுத்திருக்கிறது. கழிப்பறை இல்லாத தொடர்வண்டியிலிருந்து இறங்கவும் முடியாமல், அமரவும் முடியாமல் தவித்த அவர், ஒருவழியாக சமாளித்து, இறங்கி கழுவிய கையோடு கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப, அவரின் ஆங்கிலப் புலமையை பார்த்து கடுப்பாகிய ஆங்கிலேய அரசு, உடனடியாக தொடர்கவண்டிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முடிவு செய்தார்களாம்.
இளங்கலை வேதியல் படித்துக்கொண்டிருக்கையில், வீட்டில் சோப் ஆயில், பினாயில், துணி துவைக்கும் பவுடர் என தயாரித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த வாய்ப்பு தேடிவந்தது. அந்த ஐநாவின் பொதுச்செயலாளர், மாறன் அண்ணனின் அம்மா, என்னை அழைத்திருந்தார். அவருக்கு அறுவைசிகிச்சை நடந்திருப்பதால், சிறிது காலம் ஆக்டிங் போஸ்ட்மாஸ்டராக இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். நமக்கு வரும் கடிதங்களையே பார்த்து பிரமித்து படித்துக்கொண்டிருந்த எனக்கு, தினம் தினம் வரப்போகும் பல கடிதங்களை கையாளலாமே என்று எல்லையற்ற மகிழ்ச்சி. அந்த சமயம்தான் என்னுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவருக்கு, இரும்பு பெண்மணியின் மகளை திருமணம் முடிக்க, அப்பா சம்மந்தம் பேசியிருந்தார். திருமண வேலைகள் ஒருபுறம் நடக்க, என்னுடைய ஐநா வேலையும் மறுபுறம் செவ்வனே நடந்துகொண்டிருந்தது. உண்மையில் அஞ்சலகத்தில் பணிபுரிபவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை புரிந்துகொண்ட நாட்கள் அவை. ஒருநாளில் வந்திருக்கும் அனைத்து அஞ்சலட்டைகளில் ஒட்டப்பட்டிருக்கும் அஞ்சல் தலைகளிலும், அன்றைய தேதியிட்ட, தம்புல்சை ஒத்த இரும்பு அச்சுகளைக்கொண்டு, கொட்டுவைத்து, அதில் குறிபிடப்பட்ட முகவரிகளை ஒரு நோட்டில் எழுதவேண்டும். அஞ்சல் தலை வாங்க சிலரும், சஞ்சாயிகா சேமிப்பிற்காக சிலரும், அஞ்சல் அட்டைகள் வாங்க சிலரும் என வந்துகொண்டே இருப்பார்கள். நாமும் சளைக்காமல் கொடுத்துவிட்டு ஒவ்வொருமுறையும் எண்ணிவைத்து மற்றொரு நோட்டில் குறித்துக்கொள்ளவேண்டும். அன்றைய நாளின் கடைசியில், இருப்பு கணக்கும், விற்ற கணக்கும், கல்லாவில் இருக்கும் காசு கணக்கும் கச்சிதமாக பொருந்திப்போனால் தப்பிக்க வழியுண்டு, இல்லையேல் மண்டையிலிருந்து வியர்வை சுரப்பிகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடும். ஒருவேளை, கடைசி வரை ட்டேலி ஆகவில்லை எனில், கைகாசுதான் கல்லாவில் குதித்து கும்மாளமிட்டு கலகலவென சிரிக்கும், மத்திய அரசில் வேலையென்ற தலைக்கனத்துடன். ஒரு நாள், எந்த அஞ்சல் அட்டையும், அஞ்சல் தலையும் விற்கப்படாத நேரத்தில், சற்றே மூச்சிவாங்கலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் விற்கவில்லை என்பதையும் அந்த பத்து நோட்டுகளிலும் பதிந்து, முதல் நாளைய கணக்குடன் தொடர்ந்திருக்க வேண்டுமென தெரிந்தது. சிலநாட்களில், 'என் மொவளுக்கு கடிதாசி போடணும்' என வருபவர்களுக்கு, ஒரு அப்பாவைப்போல நலம்பேண எழுதிக்கொடுக்கவும் வேண்டியிருந்தது. பிற்பாடு, படிப்பை தொடரும் பொருட்டு, ஆக்டிங்கிற்கு முழுக்குபோட்டிருந்தேன். ஊதியம் வீடு தேடி வந்திருந்தது. புதுப்பணக்காரனாக வலம்வந்தேன் சில நாட்களுக்கு!
அண்ணன் சிங்கப்பூரில் இருந்தபொழுது, ஏர்மெயில்கள் பல, அன்புபாலம் கட்டிக்கொண்டிருந்தது அனுமாரைப்போல. அதே வேளைகளில், அக்கா, தங்கைகளின் திருமணத்திற்காகவும், பெற்றவர் கடனை அடைப்பதற்காகவும், குச்சி வீட்டினை, ஓட்டு வீடு, மாடி வீடாக கட்டுவதற்காகவும் சொந்த ஊரினையும், மண்ணையும் பிரிந்து, ஆசைகளை துறந்து வெளிநாட்டில் கண்ணீருடன் உறவாடி, வியர்வைகளை விற்றுக்கொண்டிருந்தவர்கள் பலரையும் சற்றே ஆசுவாசப்படுத்தியது அந்த ஏர்மையில்கள் தான். 'அண்ண லெட்டர் அனுப்சிருக்கு', என்று ஏதோ வீட்டுற்கு வந்த ஆனந்த விகடனை திரும்பத்திரும்ப புரட்டுவது போல, செல்வம் அண்ணன் அனுப்பிய ஏர்மெயில்களை, அவரின் தங்கைகள் மீண்டும் மீண்டும் வாசித்து, ஒவ்வொரு முறையும் வரிகளுக்கிடையே கசிந்திருந்த அன்பினைக்கொண்டு வலிகளை போக்கிக்கொண்டிருந்த காட்சியை அஞ்சல்துறை அருகிலிருந்தே கண்ணீருடன் கவனித்துக்கொண்டிருந்தது!
தொடருங்கள்!
விளையாட்டாக சொல்கிறேன் #19
-சக்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக