கனவு...

இது உண்மையாக விந்தையான உலகம்தான்.. பல ஆண்டுகளாக கனவு கண்டு, என்றாவது ஒரு நாள் நமக்கான கனவு இல்லத்தை அமைக்கவேண்டும் என்று நினைத்து மனதிற்குள் வரைந்துவைத்திருக்கும் வீட்டில் பால்கனி ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.. தினமும் வேலை கொடுத்த கலைப்பையோ, பயண அசதியையோ, நண்பர்களுடனான அரட்டையையோ, மனைவி குழந்தைகளுடனான உரையாடலையோ, ஆகச்சிறந்த வாசிப்பு ஒன்றையோ அந்த பால்கனியில் வைத்து செய்துதீர்த்துவிடுவதென, அந்த கனவு பல கிளைகளை பரப்பியிருக்கும்... என்றேனும் அப்படி ஒரு வீட்டை அமைத்துக்கொண்டபின் எவரும் அந்த பால்கனியில் அமர்ந்து நினைத்த எதையாவது ஒன்றை கூட அனுபவித்துவிடுவதில்லை.. இந்த வாழ்க்கைமுறையும் நம்மை அப்படிசெய்ய அவ்வளவு எளிதில் அனுமதித்துவிடுவதில்லை..

இதோ, இந்த சொற்களின் கட்டுமானம் கூட ஒரு பால்கனி பற்றி கனவுகண்டுகொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து, வாடகை வீட்டு பால்கனியிலிருந்துதான் பிறந்துவருகிறது.. 

இதேபோலொரு கனவுதான் அன்றும் கூட.. அதுவொரு இதமான தென்றல் வீசும் இரவு, வெயில் காலமென்பதால் திறந்தவெளியில் தூங்குவது சிறந்தது எனப்பட்டது.. என்னதான் கீற்று வேய்ந்த கூரையும், மாட்டுசாணம் மொழுகிய தரையானாலும், கத்தரிவெயில் புழுக்கத்திற்கு, வீட்டிற்கு எதிரே இருக்கும் பள்ளியின் மொட்டைமாடியில் படுத்து நட்சத்திரவெளிகளை கண்டு உறங்குவதே சிறந்ததாகப்பட்டது அண்ணனுக்கு.. அண்ணன் என்றுமே அங்குதான் உறங்குவாரானாலும், நான் இருப்பதால் யோசித்துக்கொண்டே இருந்தார்.. ஏனெனில் அந்த மாடிக்கு படிகளே கிடையாது.. பள்ளி சுவரின் ஓரமாக வளர்ந்திருக்கும் மரத்தின் கிளைகளே அதன் படிக்கட்டுகள்.. பக்கத்துவீட்டு அய்யப்பன், மகேந்திரன் இருவரும் அண்ணனின் மொட்டைமாடி சிநேகிதர்கள், தினமும் இருவரும் அண்ணனின் கனவுகளுக்கு வலுசேர்க்க வருவதுண்டு.. ஆனால் எனக்கு மொட்டைமாடி தூக்கமே பலநாட்கள் கனவாகிப்போய்விடுவதுண்டு.. என்றாவது ஒருநாள் அண்ணன் மனமிறங்கி என்னை மொட்டைமாடிக்கு தூக்கிவிடுவார்.. பால்வெளியில் பலகோடி நட்சத்திரங்களுக்கு நடுவே ஒரு கருந்துளையின் ஈர்ப்பினுள் வீழ்த்துகிடப்பதாகவே தோன்றும், அந்த மொட்டைமாடியை அடையும்பொழுதெல்லாம்... 

அந்த கோடைகால வயல்வெளியின் வெடிப்பு இருக்கிறதே, அதிலிருந்து ஒருவகை களைச்செடி முளைத்து, அதன் நுனியில் அழகாய் பூத்திருக்கும்.. அதன் மணத்தை களவாடி வரும் தென்றல், அதனை எங்கள் மூக்கடியில் கடாசியிருக்கும்... மயக்கும் மணம்கொண்ட அந்த கலை செடிகளுக்கு களைகளென பெயர் வைத்தது யாரோ.. தெரியாது.. ஆனால் அந்த மணத்திற்கு உயிருண்டு என்பதைமட்டும் உணர தெரிந்திருந்தது..

என்னவென்று தெரியவில்லை, இந்த தம்மாத்தூண்டு ஹிப்போகேம்பஸ் என்னுடைய மாங்குடி நினைவுகளை இன்று இரவுமுழுவதும் நினைத்துக்கொண்டே இரு என்றவாறு வற்புறுத்துகிறது.. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, வரும் வழியில் எந்தவித முன்ஏற்பாடுமின்றி வாங்கிய மைசூர் சேன்டல் சோப்தான்.. எப்பொழுதுமே ஒரே வகை சோப்பை பயன்படுத்தாத என்னை சிலவேளைகளில் சிலர் கேலி செய்வதுண்டு.. ஆனால் எனக்கு அந்த சோப் கொடுக்கும் மணம் முக்கியமாக இருக்கிறது.. அது எதையோ எனக்குள் செய்துவிடுகிறது.. இப்படித்தான், லக்ஸ் சோப் என்னை திருவாரூர் ஐஐபிஇ கோச்சிங் சென்டருக்கு அழைத்து சென்றுவிடுகிறது, லிரில் சோப் வல்லத்தில் தங்கியிருந்த பொழுதையும், ஓல்டு சிந்தால் என்னுடைய தாழ்வுமனப்பான்மையும், மெடிமிக்ஸ் சோப் அண்ணனின் திருமண நாளையும், ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன...

இந்த மணமும், சுவையும் இருக்கின்றனவே இவைகள் இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவைகள்.. நேர எந்திரத்தைப் போன்று செயல்படுபவைகள்.. பெட்ரோல் செலவில்லாமல் இறந்தகாலத்திற்குமட்டும் நம்மை சுமந்து செல்லும் உந்திகள்.. அன்று பள்ளிக்கூட மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு இதே நட்சத்திரக்கூட்டத்திற்குள் மூழ்கி மூழ்கி, பலிக்க வாய்ப்பேயில்லையென கண்ட கனவுகள் பல பலித்துவிட்டன.. ஆனால் அதே நட்சத்திர கூட்டத்திற்குள் மூழ்கி இன்று நான் காணும் இரண்டு கனவுகள் பலிக்க வாய்ப்பேயில்யை.. அதில் ஒன்று பால்கனியுடன் ஒரு வீட்டை நானே உருவாக்கி, அந்த பால்கனியில் அமர்ந்து இளைப்பாறுவது பற்றியது, இரண்டாவது மாங்குடி பள்ளி மொட்டைமாடியில் மீண்டும் உறங்கி கனவு காண்பது பற்றியது.. 

வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை.. எல்லாம் மாறிவிட்டது.. ஆனால் நட்சத்திரங்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன.. என் கனவுகளைப்போல..

- சகா..
05/05/2022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

ஒரு ஆடு நரியான கதை..