விளையாட்டாக சொல்கிறேன் #12
காலை நான்கு மணி இருக்கும், கூட்டமாக தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை, ஏதோவொரு கனத்த குரல் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கத்துடன் விழிகள் திறந்தும் நோக்காத கண்களுடன், காலைக் கடமைகளை வலுக்கட்டாயமாக செய்துவிட்டு, முழுக்கை வெள்ளை சட்டையை முட்டிக்கை தாண்டி மடித்து, இடுப்பில் நிற்காத காக்கி அரைக்கால் டவுசரை பட்டையான பெல்ட் கொண்டு முடிந்துகொண்டு, தலையில் நிற்காத அந்த குல்லாவை பிடித்துக்கொண்டே, இரண்டு கிலோமீட்டர் மூங்கில் தடி கையிலேந்தி ஓடிக்கொண்டிருந்தோம். புத்தர் விரும்பியதுபோல் அமைதி வடிவில் மனிதனைக் காணவேண்டுமானால், மனிதனின் சிலையை மட்டும்தான் காணமுடியும். அப்படி ஆரஞ்சு நிறத்தில் அமைதியாய் நின்றிருந்த விவேகானந்தர் சிலை முன்பு நீண்டிருந்த மைதானத்தில், அந்த மூங்கில் கம்பை முன்னும் பின்னும் சுற்றி பின் பல உடற்பயிற்சிகளை உடற்பெயர்ச்சி இல்லாது செய்துவிட்டு, காலை வெயில் கண்ணை எட்டியதும் வேதாரண்யம் கோயிலுக்கு கால் நடையாக சென்றிருந்தோம். கோயில் சுற்றுப்பாதையில் நாமாக எந்த குப்பையும் இடாது, இருக்கும் குப்பைகளை சுத்தப்படுத்தி சுவச் பாரத்தாக்கிவிட்ட பெருமிதப்புடன் கோயில் தளத்திற்குள் இருக்கும் தெப்ப குளத்தில் சிவனே என்று குளித்துக்கொண்டிருந்தோம். குளங்களில் குளிக்கும் இனிமை என்பது ஒரு உன்னதமான குளியல் விரும்பிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. வீட்டில் எதிரிலேயே இருக்கும் குளத்திலோ, ஊரிலேயே இருக்கும் உப்பு குளத்திலோ, மாங்குடி அல்லி குளத்திலோ, வலையநகர் (வளைநெறி) தெருவில் சிவா அண்ணன் வீட்டு பின் வாசல்படிக்கு அருகிலேயே இருக்கும் தாமரைக் குளத்திலோ, தலைமை ஆசிரியர் முருகையன் அண்ணா வீட்டின் எதிர்புற ஆற்றங்கரையிலோ, முள்ளியாற்று நரித்துறையிலோ அன்பு அண்ணனுடனும், தசரதனுடனும் தலைகீழாய் டைவ் அடித்து தினம் தினம் ஊறிய பொழுதுகள் சிறிதேனும் சிறுமூளையில் பதிந்திருந்தாலும், புது குளமென்பதால் வெளிகாண்பிக்கப்படாத சிறு பயமும் கூடவே குளித்துக்கொண்டிருந்தது. காரணம், அந்த இனிய முன் குளியல்களுடனே சிறுமுளையில் மறக்காது தங்கிவிட்ட கால் தழும்புகள் தான். தன்னைவிட வலிமை என்று அறியாது எதிரி நாட்டுடன் போர்புரிய செல்லும் அரசன், எதிரி வலிமை ஒற்றன் வழி தெரிந்தவுடன், பூனைபோல் பின்வாங்குவானே, அப்படித்தான் சேறு காலில் பட்டவுடன் பின்வாங்கவேண்டும். சேறு, குளத்தின் ஆழத்தை அறிந்த ஒற்றன். பொருட்படுத்தாது முன்சென்றால், மொடாக்குடி, குடியைக் கெடுக்கும் என்ற பழமொழிக்கு மேலுமொரு புதிய உசாத்துணையாகிவிடுவோம்.
ஒருவழியாய் பத்து மணிக்கு அந்த தங்கியிருந்த மண்டபத்திற்கு வந்து சேர, பசியால் அடைத்த காதுகளும் நன்றாய் கேட்டுக்கொண்டிருந்தன, அந்த வயிற்று அமிலத்தின் டிடிஎஸ் பொருமல்களை. எங்களுக்காக பல புரவலர்களிடம் வாங்கிவந்த பல வீட்டு அரிசி போட்ட கஞ்சியும், எலும்பிச்சை ஊறுகாயும் இருக்குமிடம் தெரியாது நொடிப்பொழுதில் மறைந்தே போய்விட்டன. சாப்பிட்டு ஐந்து நிமிட இடைவேளைக்கு பின் மீண்டும் பல்வேறு அரசியல், கலை வகுப்புகள் என நீட்டி, ஒரு வழியாய் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது. கொடுக்கும் புரவலர்களை பொருத்து அன்றைய மதிய உணவும் அமையப்பெறும். மதிய உணவிற்கு பின், வேலை செய்த களைப்பில் சில நாட்களும், இரையால் நிறம்பாத இரைப்பையின் பசியால் சிலநாட்களும், அசந்து ஒரு மணிநேரம் மயக்கத்தில் துயில, மீண்டும் அதே டபுல் கொட்டுடன், கனத்த குரலுக்கு சொந்தக்காரர் எழுப்பிவிட, டவுசர் போட்ட எமனாகத்தான் எங்கள் ஞானக் கண்களுக்கு தெரிந்திருந்தார். கதை நேரம், தந்தி என சிற்சில விளையாட்டுகளுடன் பொழுது போக, அரசியல் வினாடிவினாவும், கேள்விபதில்களும் நடைபெறும். ஒரு நாள் மட்டும் அந்த இயக்கத்தை நடத்தும் முன்னவர்கள் செய்த வீரதீர செயலான, மாற்று மார்க்கத்து கொயிலை இடிக்கும் காணொலியை காண்பித்து, கைதட்டியும், ஆரவாரம் செய்யவும் சொல்வார்கள். என்றோ ஒருநாள் என்னிடம் மனப்பாடம் செய்யச்சொல்லி கொடுக்கப்பட்ட செந்தூர நிற துண்டு காகிதத்தில் உள்ள 'நமஸ்தே சதா வட்சலே மாத்ரு பூமே' என தொடங்கும் பாடலை கண்ணை மூடி முழுவதையும் ஒப்பித்ததால், கிடைத்த பரிசு என வீட்டில் நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தில் இருந்திருந்த வழக்குரைஞர் செந்தில் அண்ணன்தான் என்னை வார்த்(வறுத்)தெடுக்க வேண்டி அந்த ஒன்றரை வார பயிற்சிக்கு அனுப்பிவிட்டார். பிற்பாடு அவரும் அந்த இயக்கத்தின் நோக்கம் புரிந்து வெளிவந்து தமிழ் தேசிய இயக்கங்களுடன் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டார். நான் பிற்பாடு திராவிட அரசியலின் மையப்புள்ளியை அறிய அவர்களின் கோட்பாடுகள் உந்தாற்றலாக விளங்கியது.
பணக்கார வீட்டில் முதல் குழந்தையாகவும், ஏழையின் வீட்டில் கடைசிக் குழந்தையாகவும் பிறக்கவேண்டும் என்பார்கள். அப்படித்தான் வழக்குரைஞர் செந்தில் அண்ணன் அவரின் வீட்டில் முதற் பிள்ளை, எங்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி. ஆனால் அவர் நெஞ்சில் அன்போடு அணைத்துக்கொண்டதில் நான்தான் முதற் பிள்ளையென நினைக்கிறேன். என்னை வைத்து விளையாடுவதே அவரின் வழக்கம். பன்னியென்றாலும், குட்டியாக இருந்தால் கொள்ளை அழகுதானே, அதுபோலத்தான் நான் குட்டியாக இருக்கும்பொழுதும்.. அதனால் என்னை ஒரு டெட்டி பியர் பொம்மை போலவே கையாள்வார். அப்படித்தான் முதன்முதலில் என்னை செங்கல்பட்டு ஊருக்கு அழைத்து சென்று அன்னபூரணி அக்கா இருந்த வீட்டிற்கு வெளியே என்னை நிற்க வைத்துவிட்டு, தங்கச்சி உனக்கொரு பொம்மை கொண்டுவந்திருக்கேன் விளையாட என்று என்னை காண்பித்தார். அக்காவும், அய்ய்ய் சக்தி என ஆரத்தழுவி, ஒரு பன்னிக்குட்டியைப் பார்த்து ஆரவாரிப்பது போலவே விளையாட ஆரம்பித்துவிட்டார். அவர் வைத்திருந்த ஆர்எக்ஸ்100 உந்துருளியும் தொடர்வண்டியில் பயணித்து சென்னை வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு, அன்றைய வழக்குரைஞர் பயிற்சி முடிந்து கண்ணன் அத்தானை பின் அழைத்துக்கொண்டு, வந்தபொழுது ஒரு சிறிய விபத்தில் சிக்கியதும், கால் முறிந்து, ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும், சிகிச்சையின் பொழுது, இரண்டாவது முறையாக அக்கா அழுததையும், முதல் முறை, திருமணம் முடிந்து அத்தானுடன் செல்கையில், முதல் முறை சென்னை மகிழுந்து பயணங்களும், முதல் முறை லிப்டில் சென்றதும், நீங்கா நினைவுகள்.
பிற்பாடு பல ஆண்டுகள் கழிந்திருந்தன அவரின் முகத்தை மீண்டும் காண. அதற்குள் நான் பள்ளிப்படிப்பையும், இளங்கலை அறிவியல் படிப்பையும் முடித்திருந்தேன். அவர் அதே அன்புடன், என் சிறு கலக்கத்தையும் ஏற்று, என்னை அரவணைத்துக்கொண்டார். அவரின் தமிழ் தேசிய எண்ணமும், பிரபாகரன் மீதான பற்றையும் தவிர அரசியல் ஒற்றுமைகள் எங்களுக்குள் பெரிதாக இல்லை. ஆனால், இன்னாருக்கு கொடுக்கலாமா என மூளையில் நிறுவப்பட்ட மனமென்ற செயலி முடிவு செய்யும் முன்பே, கொடுக்கும் பண்பும், கொடுப்பதையும் புதிதாக வாங்கித்தான் கொடுப்பேன், இருப்பது தேவையற்றது என்பதற்காக ஒருவருக்கு கொடுக்கமாட்டேன் என்ற மாண்பும், என்னை மீண்டுமொருமுறை அவரின் பால் காதல்கொள்ள செய்தது. உலகத்தவர் சாட்சியாக ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு பின்பு, பாதிகப்பட்ட மக்களுக்கு மருந்துபொருட்கள் வாங்க பெரும் பணத்தை செலவிட்டவர். இறையின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக அவரை வைத்திருந்த இறைவன், என்னை மறுப்பாளனாக இருக்கவே பயிற்றுவித்தது. ஒருவேளை அவரையும், அவர் நம்பிக்கையையும் காத்திருந்தால் மாறியிருப்பேனோ என்னவோ, தெரியவில்லை, இயற்கையென்ற இறைவனுக்கே வெளிச்சம்.
தொடருங்கள்!
விளையாட்டாக சொல்கிறேன் #12
-சக்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக