விளையாட்டாக சொல்கிறேன் #13

'என்னங்கிறேன் நிக்கிற, உக்காரவேண்டிதானே, நீயே பேர புள்ளைகள எடுத்தப்புறமுமா எனக்கு மரியாத குடுப்ப, எல்லாம் மனசில இருந்தா போதுங்கிறேன்!' என எப்பொழுதுமே என் அப்பாவிடமும், பெரியப்பா, சித்தப்பாக்களிடமும் என் தாத்தா கேட்பது வாடிக்கை. சனி மூலையில் திரண்டு வரும் மேகம் கூட சிலவேளைகளில் மழையாக மாறாமல் காற்றுடன் சலனப்பட்டு களைந்து சென்றுவிடலாம், ஆனால் அப்பாவோ, அப்பாவின் உடன்பிறப்புகளோ என்றுமே தாத்தாவின் முன்பு இருக்கையில் அமர்ந்ததாக சரித்திரமில்லை. தாத்தா ஒரு வாழ்க்கை நெறி தெரிந்த ஒரு வித்தைக்காரர். முயற்சியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிட முடியாது, கூடவே சிக்கனமும் தேவை என்பதை உணர்ந்தவர். அவரின் தந்தை தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து ஒன்றுமில்லாமல் குடும்பத்தை இவரிடம் ஒப்படைத்த நேரத்தில், வாரத்திற்கு நிலத்தைப் பிடித்து, தம் மகன்கள் அனைவரையும் வரிசைகட்டி ஏர்பிடிக்க வைத்து, சிறிது சிறிதாகத்தான் சொத்தை சேர்த்திருக்கிறார். என் அப்பாவுக்கு முன் இருவரையும், அவருக்கு பின் ஐவரையும் பெற்ற இரும்புப்பெண்மணியான பாட்டி ஒருநாள் இறந்துவிடவே, அத்தை ஒருவரைத்தவிர பெண் என்று வீட்டில் யாருமில்லாத சூழல். அப்பாவும், அவர் உடன்பிறப்புகளும்தான் அனைவருக்குமான உணவையும், வீட்டு வேலைகளையும் செய்திருக்கிறார்கள். உள்முற்றத்துடன், சுற்றிலும் அறைகள் சூழ அமைந்திருந்த அந்த பழமையான பெரிய வீடு, அதன் பின்வாசற்படியின் முடிவிலிருந்து நீண்டிருக்கும் குளம். இப்படி அமையப்பெற்ற அந்த வீட்டின் வேலைகளை ஏற்பது, தனித்து ஒரு போரை களம் காணுவதற்கு சமம். 'எங்கண்ணன், அதான்டா உங்கப்பா, பத்து வருசமா சமச்சி போட்டாருடா எங்களுக்கெல்லாம்' என்று என் இரண்டாவது சித்தப்பா சொல்லும்பொழுதெல்லாம் அவரின் கருவிழி சிறு குளியல் போடுவதை கண்டிருக்கிறேன். அந்த கண்ணீர்த் துளிகள் அவர்களுக்கிடையேயான பாசத்தை செறிவூட்டி ஒளிபரப்பவே செய்கின்றன. ஏறத்தாழ பத்துபேருக்காவது ஒரு வேளை உணவை செய்யவேண்டி இருந்திருந்த காலத்தில், பெரும்பாலான வேளைகளில் வெற்று புளி ரசத்தை மட்டுமே வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். அதிலும், அந்த புளிக்கரைசலில் தவறுதலாக போடப்பட்ட ஒன்றிரண்டு பச்சைமிளகாய் யாருக்கு வருகிறதோ, அவர்கள் அந்த மிளகாயை அடும்பங்கரையில் பத்திரப்படுத்தி வைக்கவேண்டுமென்பது உத்தரவு. அந்த பத்திரப்படுத்திய பச்சை மிளகாய்தான் அடுத்த நாளைக்கான உணவுக்கு காரத்தின் காரணியாக தாத்தாவால் அங்கீகரிக்கப்பட்ட உருப்படி. தவறுதலாக பச்சைமிளகாய் வீசப்பட்டிருந்தால், கருடபுராண தண்டனைகள் கட்டாயம். இப்படி ஏர் பூட்டி, ஒன்றுக்கும் உதவா உணவை உண்டு, உரக்கம் தவிர்த்து, பள்ளி செல்லாது, பால்ய காலத்தை சற்றும் மகிழ்ந்திடாத அந்த சகோதரர்களின் ஒரே இலக்காக இருந்தது, தன் சந்ததிகளுக்காக ஞாயமாய் சொத்து சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே.

அப்பா, அம்மாவை திருமணம் செய்துகொண்டபின், தான் அரைவயிறு, கால் வயிறுடன் இருந்த இடமானாலும், நிறைவாய் வாழ்ந்த வளையநெறி (வலைநகர்) ஊரைவிட்டு, தன் அப்பா விருப்பத்திற்கிணங்க, வெளிவந்து அம்மாவின் ஊரான பஞ்சந்திக்குளத்திற்கு புலம்பெயர்ந்துவிட்டார். பெண்ணுக்கு மட்டுமே பிறந்தவீட்டிலிருந்து புகுந்தவீட்டிற்கு செல்கையில் ஆயிரம் பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என்று எண்ணும் இந்த சமூகத்தில், ஆண் புலம்பெயர்ந்தால் அதை விட அதிக சிக்கல்கள் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு அப்பா. புதிய ஊர், புதிய மக்கள், புதிய உறவுகள் என வாழ்வை நடத்திய அப்பாவுக்கு உறவுகளிடமிருந்து வந்த சிக்கல் அவரை நிம்மதியற்றே வாழவைத்திருந்தது. ஊரார்கள் அப்பாவின் பெயரை அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை, ஏனென்றால் அப்பாவை மாப்பிள்ளை என்று கூப்பிட்டே பழகிவிட்டதால். ஊரார்களுக்கு அப்பாவின் மீதான பற்று எல்லையற்றது. அப்பா படித்தவரில்லை ஆனால் பல படிப்பினைகள் மூலம் கற்றவர். எந்த ஒரு எந்திரமானாலும், அதனின் வேலைசெய்யும் திறனை புரிந்துகொண்டு, பிரித்து சரிசெய்துவிடுவார். ஊரார்களுகான இலவச மெக்கானிக், என்றும் அப்பாதான்.

நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது, ஒரு சாதிய பிரச்சினையில், சாதியை ஒரு பொருட்டாக கருதாத அப்பாவின் பெயர் வலுக்கட்டாயமாக உட்சேர்க்கப்பட, அதனால் அவர் அடைந்த பின்னடைவும் மனசோர்வும் யாராலும் சரிசெய்யமுடியாத ஒன்று. அன்றைய பொழுதுகளில் நாட்காட்டிகளில் பெரும்பாலான பக்கங்களில் 'கியரிங் (hearing)' என்று எழுதிவைத்திருப்பார் அப்பா. அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் நடத்தப்பட்ட சிபிசிஐடி ரைடுகள், காவலர்களின் கிடுப்பிடிகளுக்கு மத்தியில்தான் நான், என் அக்கா, அண்ணன் மூவரும் வளர்ந்திருந்தோம். அப்பா, சொத்துகளை பெரிதாக மதிக்காது, மனிதர்களை மதிக்கும் மாண்பு கொண்டவர். அதனால் பல சொத்துகளையும் பறிகொடுத்தார். அதை நினைத்து என்றும் வருந்தியதாக எனக்கு நினைவில்லை.

அப்பாவின் தம்பிகளிடமிருத்து, அப்பாவுக்கு கிடைத்த அரவணைப்பு என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது, அன்பின் உச்சமது! அப்பாவும், அவர் உடன் பிறந்தவர்களும், என்றும் சொத்திற்காக தங்களை ஆட்படுத்திக்கொண்டதே இல்லை. அண்ணன் சொல்வதை தம்பிகள் செய்வார்கள், தம்பி சொல்வதை அண்ணன்கள் காது கொடுத்து கேட்பார்கள். அப்படித்தான் தாத்தா அவர்களை உருவாக்கியிருந்தார். அண்ணனுக்கோ தம்பிக்கோ, சொத்து பிரச்சினை வருகிறதென்றால் அதற்கு முழுமுதற் காரணம் அண்ணனோ தம்பியோ தன் சொத்தை அவரே தீர்மானித்துக்கொள்வதால்தான். இதை உணர்ந்த தாத்தா, ஒவ்வொருவர் திருமணம் முடிந்ததும் அவரவர்களுக்கான தனி வீட்டையும், சொத்தையும் பிரித்துக்கொடுத்துக்கொண்டே வந்தார். 

அப்பொழுதுதான் கடைக்குட்டி சித்தப்பாவிற்கு பெண் தேடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் நான்காவதாக வீடும் தயாராகிக்கொண்டிருந்து. மாதத்திற்கு ஒரு முறையாவது வலையநகர் போய்விடும் நான், அரையாண்டு, முழாண்டு விடுமுறை தினங்களிலும் அங்கு போய்விடுவது வழக்கம். அந்த கடைசி வீட்டில்தான், அனைத்து பெயரன், பெயர்த்திகளும் ஒன்றுகூடி விளையாடிக்கொண்டிருப்போம். தாத்தாவின் முன் பேசுவதற்கே தயங்கும் அப்பாக்களுக்கு அப்படியே நேர் எதிராக, தாத்தா மீது ஏறி இறங்கி விளையாடுவது எங்களின் வாடிக்கை. மதிய உணவு உண்பதற்காக, நான்காவது வீட்டிற்கு அந்தப்பக்கமாக இருக்கும் வாழை மரத்தில் மட்டைகளை பறித்து வருவார் தாத்தா. இலையில்தானே சாப்பிடுவார்கள் என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்போம் அனைவரும். அவரோ மட்டைகளின் பின்புறம் நன்கு சீவி, ஒரு முழத்திற்கு அறுத்து, ஒன்றை ஒன்று ஈக்குச்சியால் பிணைப்பார். அப்படி தயாரான வாழை மட்டை இலையில்தான் தாத்தா உணவருந்துவார், ரசம் உட்பட. நாங்களும் பல முறை முயற்சி செய்து, தரையை கழுவ வைத்ததுதான் மிச்சம். கடைக்குட்டி சித்தப்பாவிற்கு, திருமணம் முடிந்தது, புல்லாங்குழல் இசைக்கச்சேரியுடன். ரசத்தில் இருக்கும் மிளகாயை காயவைத்து மீண்டும் பயன்படுத்திய குடும்பம், ஊரார்கள் சூழ, பல உணவு பதார்த்தங்களுடன் விருந்தளிக்க, புல்லாங்குழல் கச்சேரியுடன் திருமணம் நடந்தது. இந்த வளர்ச்சியை, முயற்சியைக் காட்டிலும், கடின உழைப்பும், சிக்கனமும்தான் பெற்றுத்தந்திருந்தது. அதற்கு பிற்பாடும் மகிழுந்து வாங்கவேண்டி விருப்பத்தை தெரிவித்த அப்பாக்களிடம், 'பிளசர் காரு என்ன வெலங்கிறேன்' என தாத்தா கேட்க, 'அஞ்சாறு லட்சம் வரும்' என அப்பாக்கள் சொல்ல, 'அப்ப அதவிட பல லட்ச ரூவா மதிப்புள்ள பஸ்ல போறதுதாங்கிறேன் மதிப்பு' என சிக்கனத்தின் சிகரமாய் திகழ்ந்தார் வாழ்வின் முடிவு வரையில்.

சித்தப்பாவின் திருமணம் முடிந்தபின் ஒரு நாள், தாத்தா, அப்பாவை கூப்பிட்டு ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார், என் அன்றைய சின்னஞ்சிறிய மூளைக்கு எட்டியவரை, அது அந்த வழக்கு சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். அப்பாவோ, ஏதோ கடன் கொடுத்தவர் திடீரென கடனை கேட்பதால், சொல்வது அறியாது திகைப்பதைப் போல, பவ்வியமாக பதிலுரைத்துக்கொண்டிருந்தார். பின், ஏதோவொரு வேளையில், தாத்தா வாயிலிருந்து அந்த சொற்கள் வந்ததை கேட்டிருந்தேன், 'என்னங்கிறேன், உம்பேரு காந்தின்னு வச்சத்துக்காவ இப்படியா அமைதியா இருப்ப, உனக்கு தொந்தரவு பண்றவனுக்கு, நீயும் தொந்தரவு கொடுக்க வேண்டிதானே, ஒன் எடத்துல வேறு யாராச்சும் இருந்தா நாலு பேர வெட்டிருப்பாங்க, இல்ல தற்கொல பண்ணியிருப்பாங்க'. இந்த சொற்கள் அவரிடமிருந்து வந்ததற்கு பல காரணங்கள் உண்டு, அதில் ஒன்று அப்பாவின் உயிரையும் குடிக்க தயாரான சதியும் கூட. முதல் சித்தப்பா அதைப்பற்றி கூறி கேள்விப்பட்டிருக்கிறேன், அப்பா அன்று வீட்டில்தான் இருக்கிறார், அவரின் உயிரை எப்படியும் எடுத்துவிடவேண்டுமென்று வெளியூர் ஆட்கள் அருகில் தயாராக இருக்கிறார்கள், இதை கேள்விபடும் சித்தப்பாக்கள் அன்று கிடைத்த கார்கள் பலவற்றை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காரிலும் ஒருவரை உட்கார வைத்து, பலர் வந்து இறங்குவது போல பாவனை காண்பித்து, அந்த கொலைகார கும்பலுக்கு பயத்தை கொடுத்து விரட்டியிருக்கிறார்கள். இப்படித்தான் பல நாட்கள், அப்பாவிற்கு முட்கள் மீது நடக்கும் வாழ்க்கையாக மாறியிருந்தது அன்றைய நாட்கள். ஆனால், அப்பாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாகத்தான் இருக்கும். நான் பலமுறை அம்மாவிடம் வாக்குவாதத்தால் சண்டையிட்டு கோபித்துக்கொள்ளும்பொழுதெல்லாம், அப்பா என்னிடம் கூறுவது, 'இந்த கைய பாரு, அஞ்சு வெரலும் ஒன்னாவா இருக்கு, அப்படிதான் மனுசங்களும், ஒரே மாதிரியால்லாம் இருக்கமாட்டாங்க, அப்படி வேற்றுமைய நீ புரிஞ்சிகிட்டு, விட்டுக்கொடுத்துதான் போகணும்', என்றுதான். உண்மைதான் விட்டுக்கொடுத்தலில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. வாழ்க்கையின் இந்த உன்னதத்தை புரிந்துகொண்டதால்தான் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் தகர்த்து முன்னேறிச் செல்கிறார் வெற்றியுடன்! வெற்றி என்பது, எதிர்ப்பவரின் வீழ்ச்சியல்ல, அஃது எதிர்ப்பவர்களையும் அன்பால் மாற்றும் வித்தை! அந்த வித்தையை எங்களுக்கும் கற்பித்துக்கொண்டிருக்கிறார் அப்பா.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #13

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2