விளையாட்டாக சொல்கிறேன் #8

மிதிவண்டியில், மதிய உணவு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் கதையடித்துக்கொண்டே செல்லலாமென்ற ஒற்றைக் கனவை நெஞ்சில் சுமந்து, எட்டாம் வகுப்பு தேர்வுகளை மாங்கு மாங்கென எழுதியாகிவிட்டது. இப்படி, ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிக்க மிதிவண்டியில் தகட்டூர் செல்லவேண்டுமே என்றொரு ஆர்ப்பரிப்பில், பல ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டு மூன்று பேரீச்சை பழங்களுக்கு சற்றும் சளைத்திராத சைக்கிள் பிடித்த துரு ஒன்றில் குரங்கு பெடல் போட்டு கற்றுக்கொண்ட வித்தைகள் பலன்கொடுக்க தொடங்கியிருந்தன. எளிதில் வழுக்கிவிடும் கைப்புடிகளில் செருகப்பட்ட பளபளக்கும் ஞெகிழி இழைகள், அடம்பிடித்து அப்பாவால் சரிசெய்துவிக்கப்பட்ட டைனமோ, புது சீட்டு, வெண் தக்கைகள் பொருத்தப்பட்ட இரு சக்கரங்கள் என அந்த பழைய சைக்கிளைப் பார்ப்பதற்கு மணப்பெண் கோலத்தில்தான் இருந்தது. மனிதனின் முதல் சிறந்த கண்டுபிடிப்பென்று நினைத்தால் அது சக்கரமாகத்தான் இருக்கும், ஆனால் அதற்கடுத்த சிறந்த கண்டுபிடிப்பு இன்னொன்று வரும் வரையில் யாரும் அந்த முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தை பயன்படுத்தியிருக்க முடியாது. அந்த இராண்டாம் கண்டுபிடிப்பு வேறு ஒன்றுமில்லை, சக்கரத்தை நிறுத்த உதவும் பிரேக்தான்! ஆனால் அந்த வஸ்து எங்கள் வண்டிகளில் இருந்ததாக எந்த வரலாற்று ஆவணமும் கிடைத்திருக்கவில்லை. ஆடிக்காரையும் அளேக்காக நகர்த்தும் ஆற்றல் படைத்த ஆடிக்காற்றானாலும், தள்ளுக்காற்றில் பிரேக் பயன்படுத்த முயற்சித்ததும் இல்லை, எதிர்க்காற்றில் இறங்கி சைக்கிளை தள்ளிய வரலாறும் இல்லை. 

புது பள்ளிக்கு செல்லும் வழியெங்கும் மகிழ்ச்சியை சிந்திக்கொண்டே, எப்பொழுதோ தொலைந்த நண்பன் வினோவை மீண்டும் சந்திக்கலாமே என்ற ஆவலுடன் முன்டியடித்துக்கொண்டு வந்தேன். ஆனால் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டி, எங்களை வேறுவேறு செக்‌ஷன்களில் கிடத்திவிட்டது. என்றாலும் எங்களை ஒன்றாக இணைத்த இடங்கள் என்றால், அது நாங்கள் சைக்கிளில் பயணித்து பள்ளி வந்து செல்லும் சாலை, மதிய உணவு உண்ணும் பிள்ளையார் கோயிலடி மற்றும் நியூட்டன் கோச்சிங் சென்டர் (NCC). 

நாங்கள் அனைவருமே, 'கழுத கழுத என்ன கழுத' என காதை கையுடன் எடுத்துச்செல்லும் KDM சார், மூன்று புள்ளிகளை வைத்து வாழ்க்கையையே முடித்துவிடுவாரென மற்றவர்கள் உருவாக்கிய ரூமரால் தீவிரவாதியைப்போல காட்சியளித்த கணித மேதை KS சார், முதன் முதலில் ஆங்கிலத்தை, ஆங்கிலத்தில் சொல்லித்தந்த VK சார், எங்கள் கை நகங்களையும், தலை முடியையும் எப்படி சுத்தமாக பாதுகாக்கவேண்டுமென்று, குதிகாலில் லாடம் கட்டி கற்றுக்கொடுத்த PT வாத்தியார், என பலரின் தொழிற்சாலைகளுக்குள் புடம் போடப்பட்டிருந்தோம். NCC நாட்கள், எங்கள் வாழ்வின் மிக உன்னதமான பகுதி. எந்த பாடமானாலும் எடுக்க தகுதி படைத்த ஒளி சார், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களை சொல்லிக்கொடுப்பதற்காகவே வரம் பெற்று வந்த உதயகுமார் சார், வேதமூர்த்தி சார் என பத்தாம் வகுப்புவரை அவர்களின் துணையொற்றியே நடந்தது எங்கள் பயணம். தேர்வு என்றால் மட்டும்தானே படிக்கிறீர்கள், அப்படியானால் வாரம் ஒருமுறை தேர்வுதான் என எங்களை கசக்கி பிழந்த ஒளி சாரை என்றுமே வெறுத்தது இல்லை நாங்கள். புடம்போடப்பட்ட எங்களை, ஆபரணங்களாக மாற்றியவர்கள் அவர்கள். வாய்மேடு ஊரின் முக்கிய சாலையோரம் அமைந்திருந்த அந்த NCC தான், எங்களின் எனர்ஜி. கல்வியில் போட்டி மிக முக்கியமென புரியவைத்த அந்த NCC, எங்களுக்கு முதன்முதலில் அருகிலிருந்த இந்தியன் வங்கிக்கு அழைத்துச் சென்று, கணக்கு துவங்கும் படிவம், காசோலை படிவம், டிடி படவம், பணமெடுக்கும், போடும் படிவங்கள் என அனைத்தையும் நிரப்ப சொல்லிக்கொடுத்தது. 

எங்கோ நகரத்தில் படித்துவிட்டு எங்களுடன் அப்பள்ளியில் சேர்ந்திருந்த நவீனின் ஆங்கிலப் புலமை கண்டு வாய்பிளக்கையில், அதனை இரவு சிறப்பு வகுப்பிற்கு வந்து படித்தால்தான் முறியடிக்கலாம் என்ற முடிவுக்கு எங்கள் மூளை வந்திருந்தது. ஆனால் என் மூளையின் அந்த முடிவிற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அது NCC அருகில் இருக்கும் கிருஷ்ணா உணவகம்தான். தினம்தினம் மாலையில் பரோட்டா மாஸ்டரின் வொர்க்கவுட் ஒலி அலைகள், எல்லைகள் தாண்டி ஒளி சாரின் குரலையும் மீறி எங்கள் மூளைக்கு எட்டியிருந்தது. பல நாளைய கனவு, நனவானது இரவு சிறப்பு வகுப்புகளால். அந்த பரோட்டாக்களுக்கு ஏமாந்து, வாழ்க்கை பேய்களுக்கு இரையாகிவிடுமோ என சம்பந்தமற்ற இரவு அழுகுரல்கள் எங்களுக்கு எச்சரித்ததுண்டு. ஒரு மணிநேர படிப்பும், இடையிடையே பேய்களைப்பற்றிய விளம்பரங்களுமாக இரவு படிப்புகள் அதகளமாய் முடிய, வீடு வர காலை ஆறு மணியாகிவிடும். மீண்டும் எப்பொழும் போல மாயன் கணித்த காலெண்டரைப்போல, ஒரே நேரத்தில் முச்சந்தியில் சந்தித்து, ஒரே நேரம் காலை டியூசன் செல்வதுண்டு. 

நண்பன் வினோதனின் தின செய்தி வாசிப்பு, வினாடிவினாவிற்காக சன் டிவி செய்திக்கு இடையே வரும் எங்கே? யார்? எதற்கு? எப்படி? லிருந்து சுட்ட கேள்வி பதில்கள், மரத்தடி படிப்பு நேரம், மழைநேரத்து சத்துணவு சாப்பாடு, தேற்றத்தை எழுதி கையொப்பம் வாங்க முன்டியடித்த நாட்கள், சீனியர்களைப்பற்றிய காதல் ரூமர்கள், ஆண்டுவிழா, விளையாட்டு விழா என அத்தனையும், விறுவிறுப்பு முழுநீள சார்லி சாப்லின் படங்கள்தான். அப்படிதான் ஒருநாள் VK சாரின் ஆங்கில வகுப்பு நடந்துகொண்டிருக்கையில், வகுப்பிற்குள் நுழைந்த PT சார், முடி வைத்திருக்கிறான் என்று ஒரு மாணவனை சரமாரியாக அடித்துவிடவே, கோபத்துடன் VK சார், 'என் வகுப்பு மாணவனை எப்படி அடிப்பீர்கள், இப்பொழுதே பள்ளியைவிட்டு போகிறேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். கிளம்பியவர், மதியம் வரை வரவில்லை என்று தெரிந்ததும் எங்கள் அனைவருக்கும் PTசார் மீது எல்லையற்ற கோபம் வரவே, VK சார் வரும் வரை போராட்டமென, வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மையத் திடலுக்கு வந்து உட்கார்ந்துவிட்டோம். டம்மிப்பேப்பரில் எழிதிய கண்டன வாசகங்கள், ஏசல்கள் என போராட்டம் கலைகட்டியபொழுது மூன்று புள்ளகளை வைத்து வாழ்க்கையை முடிக்கும் கணித மேதை களத்திற்கு வர, போராட்டக்காரர்களெல்லாம் கப்சுப்! 'அவர் வந்துவிடுவார், எல்லாம் வகுப்பிற்கு செல்லுங்கள்' என்ற அவரின் குரலுக்கு மதிப்பளிக்கலாம் என்று நினைத்த வேளை அவரின் உறவினர் மாணவன், நண்பன் செந்தில், ஏற்றுக்கொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அந்த நேரம் KS சாரின் உக்கிர கண்களை பார்த்து மனம் கலக்கினாலும், வெளியில் அவ்வளவாக தெரியப்படுத்தவில்லை. மாலை ஐந்தானது, ஆறானது, VK சார் வளாகத்திற்குள் நுழைகிறார், செய்தியை கேள்விப்பட்டு, நேரில் வந்து சொன்னார், 'கேள்வி தாள்கள் எடுக்க நாகப்பட்டினம் போயிருந்தேன், அதப்போயி தவறா புரிஞ்சிகிட்டு இப்படி பண்ணிட்டீங்களேப்பா' என்றதுதான் போதும், மனங்கள் யாவும் மகிழ்ந்தன, கண்கள் யாவும் மிரண்டன KSசாரை நினைத்து. மாலை, தலைமை ஆசிரியர் நரேந்திரன் சார், VK சார், KS சார், PT சார் அனைவரும் கூட, அறிவுரைக் கூட்டம் நடந்துமுடிந்தது. கூட்டம் முடிந்து கலைகையில் சத்தமாக கேட்டது அந்த குரல்கள் 'நான் அப்பவே சொன்னேன்ல வேண்டாமென்று', 'இதலாம் நடக்கும்னு எனக்கு முன்னயே தெரியும்', 'KS சார் கிழிக்கப்போராருடா', 'PT சார் உரிச்செடுக்க போராருடா'!

பரோட்டாவுடனும், பேயுடனும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கையில், காலம், சைக்கிள் சக்கரம் சுற்றுவதுபோல் சுற்றி, பன்னிரண்டாம் வகுப்பில் கொண்டுவந்து சேர்த்துவிட்டது! வினோ ஆறேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆயைக்காரன்புலம் பள்ளியில் படிக்கப்போகிறேன் என மீண்டும் தொலைந்தான். ஆசோக், தசா, அருள், செந்தில் இவர்களுடன் மதன்மோகன், பாஸ்கர், நவீன், GS பழனி, SS பழனி, என புது வட்டங்களுடன் இணைந்து சுழன்றுகொண்டிருந்த நேரம். வேதியியல் பாடமெடுத்த ஜான் சார் தான் வகுப்பாசிரியர். "ஆஃபா தத்துவம் என்னடா சொல்லுது, முதல்ல முதல் பெஞ்ச்ல ஒக்காந்து இடமில்லனாதான் பின்னாடி பெஞ்சுல உக்காரனும்னு சொல்லுது, கூஃண்ட் ரூல் என்னடா சொல்லுது, பேருந்துல போம்போது எல்லாரும் வேடிக்க பாக்க ஏதுவா வின்டோ சீட்ல உக்காந்து அப்புறந்தான் டபுள் டபுளா உட்காருவல, அதான் சொல்லுது" என நாகர்கோயில் தமிழில் வேதியியலை எங்கள் மூளைக்குள் வினையூக்கியின்றி பிணைத்தவர். கணிதமென்றால் ராஜா சார்தான் என்றும் ராஜா. அவர் கேட்கும் கணித கேள்விகளுக்கு, முதலில் பதில் கொடுப்பவருக்கு வெரிகுட்டும், அடுத்தவருக்கு குட்டும், போடமுடியாதவர்களுக்கு தலையில் கொட்டும் வைப்பது அவர் பாணி. இயற்பியலுக்கு பள்ளியில் ஆசிரியர் கிடையாதென்றாலும், அந்த குறை சற்றும் இல்லாது இயற்பியலை NCCல் வைத்து எளிதாய் கற்றுக்கொடுத்தவர் சோமு சார்தான். சோமு சார் ஆயைக்காரன்புலத்தில் நடத்தும் இரவு சிறப்பு வகுப்புகளுக்கு, அருகில் பரோட்டா கடை இல்லையென்றாலும், வினோவின் ஆசைக்கினங்க சைக்கிளில் ஏழு கிலோமீட்டர் தூரம் பயணித்து இயற்பியல் கற்றுவந்தேன். சைக்கிலோட்ரானை சோமு சார் விவரிக்கும் பொழுதெல்லாம், சைக்கிளை ஓட்டிக்கொண்டுதான் வந்தோமென மனதிற்குள் நினைத்துக்கொண்டு, பாடத்தை கவனித்துக்கொண்டருந்தோம். ஆண்டுக்கு ஐந்து பேரையாவது இருநூறுக்கு இருநூறு வாங்க வைத்துவிடும் சோமுசார் பிற்பாடு, என் மைத்துனராக அமைந்ததெல்லாம், அவர் சொல்லிக்கொடுத்த இயற்பியல் கோட்பாட்டுக்கு உட்பட்டதுதான்!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #8

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2