விளையாட்டாக சொல்கிறேன் #18

வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம்.

பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையில், எனக்கு கல்வியில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது அவரின் கவனிப்புதான். பின்பு பலநாட்களாக அந்த சிறு கண்கள் தேடியும் தென்படாத சிங்கப்பூர் தாத்தாவை மீண்டும் ஒரு நாள் சந்தித்திருந்தேன். என்ன ஒரு கனிவு, பண்பு, பற்று, அன்பு அவரின் சொற்களில். தாத்தாவின் பேரன் பேத்திகள் என்னை மச்சான் மச்சான் எனக் கூப்பிட்டு ஓட ஓட அன்பாய் வம்பிழுப்பதே வாடிக்கை. கொஞ்ச நாட்களே ஆனாலும் அவர்கள் செலுத்திய அன்பு பல ஆண்டுகளாக என் நெஞ்சில் அப்படியேதான் இருக்கிறது. கோடை வந்ததும், வம்படித்து வாங்கிய ஒற்றை ரஸ்னா பாக்கெட்டை திருவிழா கணக்காய் கலந்து குடிக்க, பல நாட்களாக அந்த மாடிவீட்டிற்கு போர்தொடுத்து சென்றிருக்கிறேன். பலவித பவுடர்களை கலந்து உருவாக்கிய ரஸ்னா எஸ்சன்சை ஒரு கரண்டி எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் இதமாக இருக்கும், சற்றே ஒன்றிரண்டு ஐஸ் கட்டிகளை போட்டுக்குடித்தால் பேரினிமைதான். அந்த ஐஸ் கட்டிகளை வாங்க மாடிவீட்டினுள் நுழைந்ததும், 'வாங்கடி, ஐஸ் வேணுமா, பிரிட்ச தொறந்து எடுத்துங்குங்கடி' என்று அத்தையின் அன்பு சொற்களுக்கு உருகிய நான், உறைந்த நீரை மீன் வாசம் நிறைந்த குளிர்பதன பெட்டிக்குள் தேடினேன். குறைவழுத்தத்தால் மேகமிட்ட கண்ணீர் துளிகள் பல குளிரால் ஹைட்ரஜன் பிணைப்பிணூடே திடமாய் குழுமியிருத்தன ஒரு பிளாஸ்டிக் தட்டினுள். பிணைப்பு என்றுமே திடமாக்கும்தானே. அந்த தட்டினை எடுத்து முதுகில் வலிக்காமல் இரண்டுதட்டு தட்டி, கட்டிகளை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் அடிவாங்கி உருண்டிருந்த சாலை வழி ஓடியவண்ணம் பாத்திரத்திலிருந்த ஐஸ் கட்டிகளை கவனித்தேன், சிங்கப்பூர் தாத்தாவின் அன்பு முகம் தெரிந்திருந்தது. 

தம்பிகளாக பிறந்த என்னைப்போன்றோர்களுக்கு பெரும்பாலும் கிடைக்கப்பெறுவது அண்ணன்களின் சட்டைகளும், அக்காக்களின் புத்தகங்களும்தான். சில வேளைகளில் அக்கா எழுதாமல் விட்டிருந்த பக்கங்கள் யாவும் ஒன்றுகூடி புது அவதாரமெடுக்கும் அப்பாவின் கைவண்ணத்தில். பள்ளி தொடங்கி, சில நாட்களுக்கு செல்ல விருப்பப்படும் நேரங்களில், புது புத்தக வாசம் மிகமுக்கிய தூதுவராக அமைந்திருந்தது. பிறந்த குழந்தையின் பொக்கைவாய் வாசத்திற்கு சற்றும் குறைவில்லாத புது புத்தகம் கிடைத்த சில நாட்களுக்கு, புத்தகவாசம் தாங்கி நிற்கும் எழுத்துகள் யாவும், கண்களுக்கு முன்பே மூக்கால் வாசிக்கப்பட்டுவிடும். ஆனால், அந்த புது புத்தகங்கள் பாழாகிவிடுமென பிடுங்கப்பட்டு மூக்கின் சாபத்தை பெறவே கையில் வந்துநிற்கும் அந்த பயன்படுத்திய புத்தகங்கள். அக்காவின் புத்தகங்கள் என்றால் பாடமாக்கப்பட்ட மயிலிறகுகளும், வண்ண மலர் இதழ்களும் இலவசம். அண்ணனின் புத்தக்கங்கள் என்றால் முதல் நான்கைந்து பக்கங்கள் காற்றுக்கு காணிக்கையாகியிருக்கும். வாசத்தை மறந்துபோன எழுத்துகளை வாசிக்க மூக்கு சற்றும் அனுமதி கொடுப்பதில்லை. அதனால், பலவேளைகளில் அருகாமை தலைப்பிள்ளை நண்பனின் புதிய புத்தகம் ஊறுகாயாக்கப்பட்டிருக்கும். அப்படியான சிறப்புகள் வாய்ந்த அன்பின் வாசத்தை பரப்பும் புதிய புத்தகங்கள் எளிதில் நம்மை வந்து அடைந்துவிடுவதில்லை. அந்த புத்தகத்தின் பின்னால் சுமைதூக்கிகளாக மாறிய அன்பு ஆசிரியர்கள் இருந்திருந்தார்கள். புத்தகங்கள் மட்டுமல்ல வெள்ளை நிற மேல்சட்டை, காக்கி அரைக்கால் சட்டை, நோட்டு, செருப்பு என பலவற்றை சுமந்துவந்து கொடுக்கும் அன்பர்கள் அவர்கள். பெரும்பாலும் பேருந்தில் போட்டே எடுத்துவருவது வழக்கம். ஒருமுறை தலைமை அண்ணா அவர்கள் காலை வரிசையின் பொழுது சொல்லியிருந்தார், உங்களுக்கு கொடுக்க செருப்புகளை மூட்டையாக்கி எடுத்து வருகையில், அது பேருந்தில் யார்மீதாவது பட்டுவிட்டால், பிரச்சினை ஆகிவிடுகிறது, அதனால் செருப்பைத் தவிர ஏனைய பொருட்களை அனைவருக்கும் கிடைக்கும்வண்ணம் எங்கள் வேலையை செய்கிறோம், என்று. ஆசிரியர்களைவிட நம்மீது அன்பு பாராட்டுபவர்களும், நம்மை மற்றவர்மீது அன்பு பாராட்டவைப்பவர்களும், வேறுயாரும் இலர். ஆசிரியர்கள் மனிதமென்ற அன்பை மனிதனுள் வளர்த்து, ஒரு நல் சமுதாயம் படைக்கும் விவசாயி.

கொய்யா, நெல்லி, பால் என விற்பனை செய்து அம்மா பணம் சேர்ப்பது வழக்கும். சேர்த்த பணமெல்லாம் அந்த பாத்திரகார அம்மாவிடம் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு வாரமும் ஓரிரு புது பாத்திரங்கள் வீட்டில் சேர்ந்துகொண்டே இருக்கும். வெள்ளை சேலை கட்டிக்கொண்டு, கொங்கு தமிழ் பேசி வரும் அந்த பாத்திரம் விற்கும் அம்மாவின் பேச்சு தேன் தடவியே இருக்கும்.

சாயும் காலம் ஆனதும், சாலையில் அந்த உயர்ந்த மனிதனுக்காக தினந்தினம் காத்துக்கொண்டேதான் இருந்திருந்தேன், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் பொல, சாலை கடக்கும் சைக்கிள்களில் அவரின் முகம்தான் தெரிந்திருந்தது. கடைசியாக ஒரு வழியாய் வந்து சேர்வார், அப்பா கடிந்துகொண்டே இருக்கையில், சின்ன புள்ளதான என அந்த மிட்டாய் மடித்த பொட்டலத்தை கையில் அழுத்திவிட்டு சிட்டாக பறந்துவிடுவார் கோணார். அவரின் அண்ணன் அய்யா வைரகண்ணு கோணார் வந்தாலே கலகலப்புதான். முருகனை உருகிஉருகி பாடி மகிழ்பவர். மாட்டு வைத்தியமும் பார்பதுண்டு அவர். அவரின் சிறுவயதில் இன்றுபோல் பல டிவி சேனல்கள் இருந்திருந்தால், ஏதோவொரு சேனலிலாவது அவருக்கு பாட வாய்ப்பு கிடைத்திருக்கும். கடைசிவரை இதோ ரம்பம் வந்துடிச்சி பாரு என்ற கற்பூரத்தின் மணமறியாதவர்களின் எள்ளல்களுடனே முடிந்திருந்தது அவரின் திறமை. இடுப்பின் இடது பக்கம் சற்றே அடி வயிற்றை ஒட்டி இருந்த ஒரு சிறு கட்டியும், நான்கு மூலை வேட்டியும், மேல்துண்டுமென ஓடியாடி அன்பு செலுத்தும் முருக பக்தன், கோபமாக பேசி பார்த்தில்லை.

'என்னடி கண்ணு நல்லாருக்கியலா, என்ன பெத்த ராசா' என்று கனிந்த குரலில் வீட்டிற்கு வரும் நெய் ஆத்தா, 'சக்தி நம்மவீட்டில சாப்டமாட்டியா' என பிடிவாதத்துடன் சாப்பிட வைத்த அருள்முருகன் அம்மா, வாங்கும் பாதரசத்திற்கும், பந்திற்கும், பம்பரத்திற்கும், பளிங்கிற்கும் இலவசாமாக அன்பை கொடுத்த செட்டியார் அம்மா, ரூபாய்க்கு பத்து மிட்டாய் கணக்குடன் காசு கொடுத்து மடித்து வாங்கிவந்த பொட்டலத்தில் இனாமாக இரண்டை வைத்துவிட்டிருந்த பெரியகடைக்காரர், என என்னை சுற்றிய ஒரு அன்பினால் கட்டமைக்கப்பட்ட உலகமே இருந்திருந்தது. தென்னடார் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கும்பொழுதெல்லாம், வயலின் குறுக்கே நடந்து சென்றுவிடுவது வழக்கம், அங்கு கடை வைத்திருக்கும் எஸ்கே என்ன வேணும் சத்தி என கேட்க, பிடித்த அல்வாவை காண்பிப்பேன், ஒரே வெட்டில் எவ்வளவு வருகிறதோ அதை அப்படியே சாப்பிடக் கொடுத்த அவரின் கனிவு இருக்கிறதே, நிலாவில் தெரியும் வடைப்பாட்டியைவிடவும் பிரமாண்டமானது!

கோயில் கணக்கை எழுத வரும் கணக்குப்பிள்ளை இரண்டு பால்பாயின்ட் பேனா வாங்கிக்கொண்டு, துளசியாபட்டினத்திலிருந்து நடந்தேதான் வருவார். வறுமையின் பிடியிலிருந்த அவர், தீபாவளி பொங்கல் தினங்களில் வீடு வருவதுண்டு. அவரின் கண்கள் ஏதோ கவலை தோய்ந்த கதை சொல்லிக்கொண்டேதான் இருந்தாலும், நலம் விசாரித்து புன்னகை செய்வாரே அதில் பேரன்பு பரிவர்த்தனைகள் நடந்திருக்கும். வீட்டிற்குள் நுழையும்பொழுதே சவ்வாதின் நறுமணத்தை காற்றில் வீசியெறிந்து வரும் சென்டு காரர், தாத்தா போட்டாவின் முன் அவரே பலநாட்களாக செருகி செருகி உருவாக்கி வைத்திருந்த துளையில் நான்கு ஊதுபத்தியை கொளுத்தி செருகிவிட்டு செல்வார். அவரின் முகம் எங்களை கண்டுகொள்ளாது என்றாலும், அவர் வந்து சென்ற வாசம் மட்டும் அந்த திண்ணை முழுதும் பரவி அன்பு பாராட்டி நிற்கும். 

மிகக் கொடூரமான உருவமாக செய்யப்பட்டு, கருந்துணியால் சேலையுடுத்தி கம்பீரமாக உருவாக்கப்பட்டிருந்த சடச்சி சிலையில் ஸ்தபதி, துண்டால் போர்த்திக்கொண்டு பெருத்த சத்தத்துடன் கண் திறக்க, ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வந்த அந்த மெகா சீரியலின் கிளைமேக்சை பார்ப்பதுபோல் உன்னிப்பாக கண்மூடி கவனித்துக்கொண்டருந்த பக்தகோடிகளுக்கு நடுவே, சத்தம் கேட்டு பயந்து நின்ற என்னைப்பார்த்து ரகசியமாக கண்ணடித்து, சிரித்து சென்ற காட்சி நெஞ்சில் அழியா செப்பேடு போல பதிந்திருக்கிறது. அந்த ரகசிய கண்ணடித்தலில், ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம், எனக்கு அன்று புரிந்தது என்னுடைய பயத்தை போக்கவேண்டுமென்ற அவரின் அன்பு மட்டும்தான். 

எண்ணற்ற உறவுமுறைகளை கொண்டிருக்கும் நம் சமூகத்தில், வீட்டில் இருந்த அனைவருமே ஒருவரை, ஒரே உறவுமுறை சொல்லி அழைத்திருந்தோம். அவர்தான் பூமி அண்ணன். அவரின் பெயரை ஒரு நாளில் ஏறத்தாழ நூறுமுறையாவது உச்சரித்திருப்போம். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, வளைநெறி சித்தப்பாக்கள், அத்தை, மாமாக்கள், நான் என அனைவரும் அவர் அண்ணன்தான். 'அண்ண, வீட்டுக்கு போம்போது கொய்யாபழத்த எடுத்துட்டு போங்க' என எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டார். ஒற்றை மண்துகளைக்கூட எடுத்துச்செல்ல ஆயிரம் முறை யொசித்து, எங்களின் இதயங்களை கொண்டுசென்று, அன்பை மட்டுமே விட்டுசென்றிருந்தார். அந்த அன்பு அவரை இந்த குடும்பத்தில் ஒருவராகவே இணைக்கவைத்திருந்தது.

தாயுமான தாத்தா வீட்டு பஞ்சுமிட்டாய்க்காரர் முதல், பக்கத்து வீட்டு செல்வராசு அண்ணன், அண்ணாதுரை அண்ணன் வரையில் காரணமின்றி இந்த இரும்பு பாதைக்கு அரணான கற்களாக இறைந்துகிடப்பவர்கள் ஏராளம். கற்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். இப்படி ஏதோவொரு நிலையில் நம்மிடம் எதையும் எதிர்பாராது தற்செயலாக அன்பு செலுத்தும் முத்துக்களால் நம் வாழ்வு அலங்கரிக்கபட்டுக்கொண்டே இருக்கிறது.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #18

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2