விளையாட்டாக சொல்கிறேன் #15
வாழ்க்கை முழுவதுமான நினைவுகளை எடுத்து சல்லடை கொண்டு சலித்தால், பெரும்பாலும் சல்லடையில் எஞ்சும் பெரும் நினைவுகளாக நிற்பது நாம் மேற்கொண்ட பயணங்கள் தான். மனிதன் தன் கடைசிப் பயணத்தை தவிர மற்ற அனைத்தையும், வேடிக்கையுடன், ரசித்துக்கொண்டேதான் பயணிக்கிறான். பயணங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை விளம்பர இடைவேளை இன்றி, ஒரேயடியாக பார்ப்பதுபோலொரு உணர்வை கொடுக்கவல்லது. அந்த தொடரை காண்பிக்கும் சாளரம், பேருந்தின் சன்னலின் அளவுடையதாகவோ, உந்துருளி பின் இருக்கையிலிருந்து பார்க்க முடிந்த 180 டிகிரி அளவுடையதாகவோ, ஒருசிலருக்கு மகிழுந்தின் சன்னல் அளவுடையதாகவோ இருக்கலாம். பல வேளைகளில், திரையை மறைக்கும் விதமாக, நமக்கு முன்பே வந்து சன்னலோர இருக்கையை பிடிக்க ஒருவர் தயாராக இருக்கலாம். இருந்தும் எக்கி பார்த்த காட்சிகள் நீங்கா நினைவுகளுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எங்கோ, ஏதோவொரு பயணத்தில் பார்த்த துள்ளியாடும் ஆட்டு குட்டிகளை பார்த்து மனம் துள்ளிக் குதித்திருக்கும், என்றோ சாளரம் வழி கண்டிருந்த சிறு சண்டை சச்சரவுகள் நம்மை பாதித்திருக்கும். நானா அவனா ஒரு பங்குடு பண்ணிட்டு வரேனென பயணப்பட்டவர்கள், பயணத்தில் கண்ட காட்சிகளால் மனம்மாறி அன்பு பாராட்டியிருக்கக்கூடும். சன்னல் வழிக்காட்சிகள், சிலவேளைகளில் கொலைகாரனின் இதயத்தைகூட இலகுவாக்கியிருக்க கூடும்.
கால்நடையில் தொடங்கி, கூண்டுவண்டி, டயர் வண்டி, கட்டை வண்டி, சைக்கிள், டிராக்டர், உந்துருளி, பேருந்து, சிற்றுந்து, தொடர்வண்டி, மகிழுந்து என அனைத்துவகை பயணங்களினூடே, இரைந்து கிடக்கும் காட்சிகளை கடக்கும் தருவாயில், ஜெராக்ஸ் மெசின் போல நமக்குள் ஒரு பிரதியை விட்டே செல்கின்றன. அப்படி ஒருநாளைய கூண்டுவண்டி பயணம் என்னை, ஏதோ கைகாலை அசைக்கமுடியாதபடி பேய் அழுத்தியது என்பார்களே, அதுபோல அழுத்தியிருந்தது. வங்கி மட்டுமே அதிக நாட்களாக அணிந்திருந்த ஒரு தங்கநகையை மீட்டிருந்த அம்மா, ஊர்பயணம் சென்ற இடத்தில் காணடித்துவிட, அழுகையுடன் அம்மா என்னை கூண்டு வண்டியில் ஏற்றி ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கொஞ்ச தூர பயணத்திற்குள், பின்னால் அத்தை ஓடி வந்து, அவர் சேர்த்துவைத்த பத்துரூபாய் கட்டு ஒன்றை அம்மாவின் கையில் திணித்து, மனதை தேற்றிவிட்டு அனுப்பிவைத்தார். பயணத்தின் வழி நெடுகிலும் அத்தையின் அந்த முகம்தான் காணக்கிடைத்தது.
திருப்புனவாசல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அண்ணனை பார்க்க அப்பாவுடன் பேருத்தில் பயணிப்பது ஒரு ஆகப்பெரும் மகிழ்ச்சியை தந்திருந்தது. காலை நான்கு மணிக்கே வேதாரண்யத்திலிருந்து மீன்களுடன் புறப்படும் பேருத்தை பிடித்து, சன்னலோர இருக்கையை தேடி கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த இருக்கை கிடைக்கும் பட்சத்தில் எக்காமலும், கிடைக்காத வேளைகளில் எக்கியும் காட்சிகளை காண, மனக்கண் தானே முன்டியடித்து சன்னலோரம் சென்றுவிட்டிருந்தது. அம்மாவின் செல்லபிள்ளையாக வளர்ந்துவிட்ட அண்ணன், விடுதியில் விடியற்காலையில் எழுந்து, குளித்து, அந்த புதிதாக அப்பாவால் பச்சை முலாம் பூசப்பட்ட பழைய இரும்புப் பெட்டியிலிருந்து ஆடையெடுத்து உடுத்தி, கடவுளை தொழுதபின், காலை சிற்றுண்டி முடித்திருப்பார். அவருக்கு பிடிக்குமே என அல்வா கொஞ்சம் வாங்கிக்கொண்டு, பாதிக்குமேல் நான் அபகரிக்க மீதியை அவரிடம் கொடுத்துவிடுவேன் அரைமனதுடன். வீட்டைப் பிரிந்து, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய குமரவேல் மாமாவிடம் மட்டுமே பேசி இளைப்பாறிய அவருக்கு, வேறுயாரையும் அங்கு தெரிந்திருக்கவில்லை. மாலை நாங்கள் திரும்பும் நேரம் வர, அழ தெரியாதவர் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த அண்ணன், மேல் நோக்கி எதையோ பார்த்துக்கொண்டிருப்பார். தான் அழுவதை அப்பாவிடம் காண்பிக்கக்கூடாது என்பதற்காகவே கண்ணீர் வெளிவராத அளவிற்கு மேல் நோக்கி பார்த்தவண்ணம் இமைகளுக்குள் சேர்த்துவைத்திருப்பார். நாங்கள் சென்றிருந்த பின் பாய்ந்து ஓடிய அந்த கண்ணீரை யாரேனும், அவர்களின் பயணத்தின்பொழுது கண்டிருக்கலாம், நாங்கள் வேறொருவரின் அழுகையை கண்டதுபோல!
அக்காவும் வெளியூரில்தான் படித்துக்கொண்டிருந்தார், 96ல் அவர் பூப்படைந்த பொழுது, அவரை ஒரு ஆயா வீட்டிற்கு அழைத்துவந்திருந்தார். அந்த ஆயா பயணத்தின்பொழுது எவ்வளவு துன்பப்பட்டிருப்பாரோ தெரியவில்லை, ஆனால், பயணம் அனைவருக்கும் இனித்துவிடுவதில்லை என்பது மட்டும் தெரிந்தது. அக்காவினால் எனக்கு கிடைத்த பயண அனுபவம் மிக தனித்துவமானது, காரணம் அப்பாவின் செல்லப் பெண்ணான அவருக்கு கிடைக்கும் அளவற்ற பொருட்களில் எனக்கு சிறிதேனும் சிதறி வந்து சேரும் என்பதுதான். மன்னார்குடியில் அக்கா படித்துக்கொண்டிருக்கையில், பெரும்பாலும் பேருந்துபயணத்தை விரும்பாத அக்காவினை அழைக்க அப்பா ஐம்பது கிலோமீட்டர் பழைய இன்டு சுசூகியில்தான் பயணிப்பார். நானும் இனாமாக, பல அடிதடிகளை தாங்கி, கண்ணீர் காய்ந்த முகத்துடன் அவரின் பின் அமர்ந்திருப்பேன். பணமில்லாத போது எதையும் கேட்டு தொல்ல பண்ணக்கூடாது என்று கூறி அழைத்துசென்ற அப்பா, அங்கே அக்காவிற்கு பெயர் தெரியாத பிஸ்கட்டுகளையும், பலவித பொருட்களையும் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருப்பார். தம்பிக்கும் சேர்த்தே வாங்கியிருந்த அக்காவை நினைத்து பூரித்துக்கொண்டே, பெயரை படித்திடாது அந்த பிஸ்கட்டுகளை வாயில் தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். பண்டங்கள் வாங்கி கொரிக்காத பயணம், பயணத்தை சார்ந்ததன்றே!
திருத்துறைப்பூண்டியிலிருந்து, செங்கல்பட்டு வரை சென்ற என் முதல் தொடர்வண்டி பயணத்தில் கண்ட காட்சிகளை பற்றி மூளை பலமுறை எனக்கு சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. வழக்குரைஞர் செந்தில் அண்ணனின் நினைவுகளை இன்றும் கொண்டுவந்து சேர்க்கிறது இந்த கண்களில் படும் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து செல்லும் தொடர்வண்டிகள். செங்கல்பட்டிலிருந்து, சென்னைவரை டாட்டா சுமோவில் அன்னபூரணி அக்காவுடனும், அத்தானுடனும் சென்ற நாட்கள், இந்த உலகத்தில் அம்பாசிடர், சுமோ கார்களைத்தாண்டி நிறைய வகைகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள உதவின.
பள்ளிப்படிப்பை முடித்திருந்த அண்ணன், சண்முகா பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பயில தஞ்சை சென்றபொழுது, அவரை தகட்டூரில் பேருந்து ஏற அழைத்துசெல்வது என் வேலையாக இருந்தது. அந்த சைக்கிள் பயணமும், அண்ணன் வாராவாரம் வாங்கிவரும் பாம்பே ஸ்வீட்ஸ் மசாலா கடலைகளுக்காக அடகு வைக்கப்பட்டிருந்ததுதான். படிப்பை முடித்த கையோடு, குடும்ப சுமை ஏற்று வெளிநாடு பயணப்பட்டுவிட்டார் அண்ணன். பிற்பாடு நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில், அக்காவிற்கு திருமண பேச்சு வந்தது. மாப்பிள்ளை, எனக்கு இயற்பியல் சிறப்பு வகுப்பு எடுத்த சோமு சார். அவரின் இயற்பியல் வகுப்புக்கு யாரும் கட்டைஅடிப்பதில்லை. காரணம் அவரின் இயற்பியலை எளிமையாய் விளக்கும் அறிவுதான். அவரின் இயற்பியல் பாடத்தை கற்க, ஐந்தாறு கிலோமீட்டர், வினோவுடன் சைக்கிளில் பயணித்த பொழுதுகள், என் வாழ்வின் அடித்தளத்தில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய நிகழ்வுகள். அவர் பெயர் மாப்பிள்ளையாக முன்மொழியப்பட்டதுதான் போதும், தாம்தூம்மென குதித்து வழிமொழிந்தவன் நான். திருமண வேலைகள் சூடுபிடிக்க, நானும், வினோவும் திருவாரூர் பயணப்பட்டுவிட்டோம். அங்குதான் வழக்குரைஞர் சித்தப்பா ஒருவரின் அலுவலகத்தில் தங்கி, ஐஐபிஇ கோச்சிங் சென்டரில், நுழைவுத்தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தோம். ஆம்னியில் வரும், அதே அளவையொத்த மேடத்திடம் பணத்தை கொடுத்துவிட்டு, தெரிந்த இரண்டே படிப்புகளான மருத்துவம் அல்லது எஞ்சினியரிங் படிப்புக்குள் நுழைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். இருவருக்குமே தெரிந்திருந்தது, எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் வீட்டில், அந்த படிப்பிற்கெல்லாம் அனுப்பி வைக்கும் நிலையில் இல்லை என்று! இருந்தும் அந்த தெப்பகுளத்தின் காற்றில் கரைந்துகொண்டே, சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து, குளத்தருகில் இருந்த அலங்காரிலும், சற்றே தொலைவில் அமைந்திருந்த நியூ அலங்காரிலும் கிடைக்கப்பெற்ற சுவையான பொங்கலுக்கும், ரோஸ்டுக்கும் மனதை பறிகொடுத்துகொண்டிருந்தோம். லக்ஸ் சோப்பின் மனத்தினூடே அந்த அறையில் தங்கிய பொழுதுகளும், அதன் பின் தஞ்சை சரபோஜி கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுத பயணித்த தருணங்களும் நீங்காத நினைவுகள். அந்த வேளை அத்தான் என்னிடம் கொடுத்திருந்த 'வாட் நெக்ஸ்ட் 2003?' என்றொரு புத்தகத்தை புரட்டிப்பார்த்தும் புரியாது நின்றபொழுது, ஒளிபோல அண்ணன் வந்தார். ஆமாம், மகேஷ் அண்ணன்தான், உலகம் அறியா என்னை அப்படியே இழுத்துக்கொண்டு, பேருந்தில் அமர்ந்தி, கூடவே பெரியப்பாவின் நண்பர் வாண்டையார் ஒருவரையும் இழுத்துக்கொண்டு, தஞ்சைக்கு அழைத்துசென்றிருந்தார். அங்கே அய்யாறு வாண்டயாரை பார்த்தபொழுது, அவர் கடிந்து கொண்டார், என்னயா நீ வேதியல்ல 186, கணக்குல 194, இயற்பியல்ல 178 னு எடுத்து சும்மா இருந்திருக்க இவ்வளவு நாளென்று, ஒரு கடிதத்தை அண்ணனின் கையில் கொடுத்து அனுப்பினார். தஞ்சையிலிருக்கும் ஒன்றுவிட்ட சித்தப்பாவீட்டில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் அவரின் ஸ்கூட்டரில் நீண்ட நேரம் பயணித்து வந்திருந்தோம் பூண்டி புஷ்பம் கல்லூரிக்கு. ஏதோ தெலுங்கு படத்தில் வில்லன் ஒளிந்திருக்கும் பகுதி போல இருந்தது. இடையே ஏதோ முதுகு தண்டுவடம் போல நீண்டிருந்தது இரும்பு பாதை. கல்லூரி முதல்வரை சந்தித்து, கடிதத்தை கொடுக்க, அவரும் கொடுத்துவிட்டார் இளங்கலை வேதியல் படிப்பிற்கான சீட்டை, 03CHM139 என்ற வரிசை எண்ணுடன். அந்த கல்லூரியில் படித்த வரையில், தஞ்சையிலிருந்து வாராவாரம் ஊருக்கு சென்றுவிடுவது வழக்கம். கணேசாவிலும், கணநாதனிலும் இசைஞானியுடன் பயணித்த தருணங்கள் சல்லடை ஓட்டைக்குள் நுழையாத நினைவுகளில் மிக முக்கியமானது. மூன்றாவது ஆண்டு படிக்கையில்தான் அந்த ஒரு மேஜிக் என் வாழ்வில் நடந்திருந்தது.
சோமு அத்தான் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு, சென்னையிலிருக்கும் ஐஐடி க்கு அழைத்துசென்றுவிட்டார். அங்கு ஆய்வு மாணவராக இருந்த அவரின் நண்பர் வெங்கடேஷ் அண்ணன் தங்கியிருத்த காவிரி தங்கும் விடுதியில் என்னை ஐந்தாறு நாட்கள் அடைத்து வைத்துவிட்டார். அந்த ஐஐடி பயணம் என்னை ஏதோ செய்துவிட்டிருந்தது. பின்னர், ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள பதினைந்து கல்லூரிகளில் நுழைவுத்தேர்வை எழுத பயணப்பட அது தூண்டுகோலாக இருந்தது. அந்த பயணங்கள் நிறைய படிப்பினைகளை கொடுத்திருந்தன. ஒருநாள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியல் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சென்னை, மகேஷ் அண்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்றுகொண்டிருந்தேன். அடுத்தநாள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை கனிம வேதியலுக்கான நுழைவுத்தேர்வு. அதற்கு முதல்நாள் திருச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய அசதியால், பயண நெடுகிலும் என்னைப்போல சிறப்பான பயணக்கனவுடன் எனதருகில் அமர்ந்து பயணித்த ஒருவரின் மீது தூங்கி விழுந்து விழுந்து, 'சில வேளைகளில் பயணம் கொடுமையானதும்கூட' என்பதை புரியவைத்துக்கொண்டிருந்தேன்.
அத்தான் காண்பித்திருந்த என்ஐடியில், முதுகலை பயன்பாட்டு வேதியலுடன் தொடர்ந்தது அடுத்தடுத்த பயணங்கள், வாழ்க்கையின் அதிமுக்கிய பயணமும்.
தொடருங்கள்!
விளையாட்டாக சொல்கிறேன் #15
-சக்தி
கருத்துகள்
கருத்துரையிடுக