விளையாட்டாக சொல்கிறேன் #7
எழுபது, எண்பதுகளுக்கு பின் பிறந்தவர்களெல்லாம் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்தான். தகட்டூர் பெரியப்பா அவர்கள் பல முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன், பியூசி படிக்க அவர்கள் இருபது கிலோமீட்டர் நடந்தே சென்றார்களென்று. ஆனால் எழுபதுகளுக்கு பின் கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றமும், ஊருக்கு ஒரு பள்ளி தொடங்கிய காரணத்தாலும், கல்வியென்ற, மனிதனின் நாகரீகம் காக்கும் குறைந்தபட்ச ஆடை அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது. ஆடையற்ற மனிதன் அரைமனிதனாயிற்றே! அப்படியாய், பஞ்சநதிக்குளம் சின்னாங்காட்டில் அமைந்திருந்த நக்கீரனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளிதான் எங்கள் ஊரார்கள் அனைவருக்குமான முதல் ஆடையை தைத்துக்கொடுக்க தொடங்கியது. அ.வீராசாமி அண்ணா (அண்ணா, அக்கா என்றே ஆசிரியர்களை அழைப்பது அந்த பள்ளியின் நடைமுறை!) அவர்கள் போட்ட முதல் (பருத்தி)விதையது. பின்னர் பஞ்சுகளாக வெடித்து சிதறியபொழுது, அதிலிருந்து நூல் எடுத்து பின்னலாடைகளை செய்தவர்கள் பலர்.
பாட புத்தகத்தில் இருக்கும் எந்த பழமானாலும், அதனையே நேரடியாக எடுத்துவந்து சாப்பிடக் கொடுத்து, சொல்லிக்கொடுத்த கனகவள்ளி அக்காவில் தொடங்கி, கம்யூனிச சிந்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிய முத்து அண்ணா, அடிகளை காணிக்கையாக கொடுத்து எங்களுள் கல்விக்கடவுளை ஏற்றிவிட்ட மணிமேகலை அக்கா, ஆங்கிலத்தின் அவசியம் அறியாத பொழுதே, ஆங்கில எழுத்துகளை எப்படி சேர்த்து எழுதவேண்டுமென சொல்லிக்கொடுத்த முருகையன் அண்ணா, மோதிர விரல் குட்டுக்கு பெயர்போன தமிழ்ச்செல்வன் அண்ணா, பால்பாய்ன்ட் பேனா இருக்காடா என எப்பொழுதும் அழகு தோரணையில் கேட்கும் தோட்ட அண்ணா, அறிவியலையும் ஒரு நையாண்டியுடன் விளக்கி எளிதில் எங்கள் மூளைக்குள் ஏற்ற காரணமாக இருந்த பாரதி அண்ணா, அவசரமாக எங்கேனும் செல்லும் தமிழன்னையும் சற்று நின்று காது கொடுத்து கேட்கும் நேர்த்தியான குரலுக்கு சொந்தகாரரான சதாசிவம் அண்ணா என நூல் நூற்றி எங்களை நூல் இயற்றுமளவிற்கு உயர்த்தியவர்கள் பலர். பள்ளியின் ஏதேனும் ஒரு அறையில் சிரிப்பொலி கேட்கிறதென்றால், அங்கே பாரதி அண்ணா இருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. ஒருநாள் அவர் சிறு சாப்பாட்டு டப்பாவை எடுத்துவர, ஏன் இவ்வளவு சிறிதாக இருக்கிறது என கேட்டதுதான் போதும், உடனடியாக அவர், இது வெறும் பொடிதான், இட்லி பின்னால் மாட்டுவண்டியில் வருகிறதென்றார். இதை கேட்டிருந்தால் அந்த வரப்போகாத மாட்டிற்கும் கட்டாயம் சிரிப்புதான் வந்திருக்கும்! கனகவள்ளி அக்கா கொடுத்த பெரும்பாலான பழங்களை அன்றுவரையில் ருசித்ததே இல்லை. அவர் கொடுத்து சுவைத்த பாலைப் பழம், அன்றுதான் கடைசியாகவும் சுவைத்திருந்தேன், இன்றுவரையில் எங்கு தேடியும் கிடைத்தபாடில்லை!
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், சிலம்பு சொல்லும் மூன்று அறத்தில் முதல் அறம். அந்த அறத்தை போதித்தது அந்தப்பள்ளி. எட்டாம் வகுப்புவரையில் ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமைகளிலும் அமைச்சரவைத்தேர்தல் நடப்பது வழக்கம். தேர்தல் அதிகாரி என்றுமே சதாசிவம் அண்ணன்தான். சத்துணவு அமைச்சருக்கு நிக்கபோற நபர்கள் கை தூக்கலாம் என்பார், அவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதிக்கொண்டு, அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் உருப்படிகளெல்லாம் கைதூக்கலாம் என்று ஒவ்வொரு வேட்பாளர் பெயர்களையும் அறிவிப்பார். கிடைக்கப்போகும் தேன் மிட்டாய்களுக்கு மயங்கி இருகைகளையும் தூக்கி கள்ள ஓட்டுகளை போட்டாலும், தேன் மிட்டாயுடன் இலந்தவடை கிடைக்குமென நப்பாசையில் ஒருவரே இரு வேட்பாளர்களுக்கு தன் ஓட்டை பதிவு செய்தாலும், அவற்றையெல்லாம் செல்லாதவைகளாக அறிவிப்பதில் டிஎன் சேஷனைப் போன்றே கண்டிப்புடன் நடந்துகொள்வார் அந்த தேர்தல் அதிகாரி. இப்படியாக அனைத்து அமைச்சர்களும், கடைசியாக முதல் அமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநரான தலைமை ஆசிரியர் முன் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள்.
விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நான், பள்ளியில் விளையாட்டு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் யாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்வேன் என்று மனமார உறுதிகூறுகிறேன், இப்படியாக, சத்துணவு வழங்குவதையும், நீர் மேலாண்மையையும் சத்துணவுத்துறை அமைச்சரும், பள்ளியின் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது, செடிகளை பராமரிப்பதை தோட்டத்துறை அமைச்சரும், ஆசிரியர் வராத ஓய்வு வேளையில் அனைவரும் சத்தமின்றி படிக்கின்றனரா என்பதை கல்வித்துறை அமைச்சரும், பள்ளி வளாகத்தின் சுத்தத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், செய்வதாக உறுதி அளிக்கவேண்டும். பதவியேற்ற அன்றிலிருந்து அனைத்து அமைச்சர்களும் அவரவர் வேலைகளை சரியாக செய்யவில்லை எனில் அவர்கள் மீது எந்த மாணவ குடிமகனும் கேள்வி எழுப்பி முதல் அமைச்சரிடம் கடிதம் மூலமாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம். அவரும் செவிசாய்க்கவில்லை எனில் ஆளுநர் தலையிட மக்களாட்சி மாய்ந்து போகும். மக்களாட்சி தழைக்கவைக்க முதலமைச்சரின் பங்கு அதிகம்தானே!
ஆண்டுக்கொருமுறை சர்க்கஸ், விளையாட்டு விழா, ஆண்டுவிழா, கட்டுரை கவிதைப்போட்டிகள் நிறைந்த இலக்கிய விழா, கல்வி சுற்றுலா என சொர்க்கத்தின் வாசலிலேயே அமையப்பெற்றிருந்த பள்ளி அது. ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக தஞ்சையிலிருந்து பேருந்து எடுத்து வர மணி அண்ணா சென்று திரும்ப கால தாமதம் ஆனபொழுது, தலைமை ஆசிரியர் முருகையன் அண்ணாவின் வீட்டு மாடியில் அமைச்சர்களுடன் அடித்த லூட்டி, கூவத்தூர் ரிசார்ட்டிலும் நடந்திருக்காத ஒன்று. ஊட்டியில் மூன்று ரூபாய்க்கு கிடைத்த 3 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அதிர்ச்சியாய் பார்த்ததும், கனகவள்ளி அக்கா என்றோ காண்பித்த அன்னாசிப்பழத்தை அன்று மீண்டும் கண்டு வியந்து போனதும், மலை மேடு பள்ளங்களில் மனம் சொக்கிப்போனதும், இலையுடனேயே கிடைத்த கேரட்டை, ஏதோவென்று நினைத்து வாங்காமல் விட்டதும், இரண்டுக்கு மேல் தின்றாலே தலைசுற்றிப்போக வைக்கும் வரிக்கி ரொட்டிகளும், போகியில் எரிக்கப்பட்ட ஊட்டி நாட்கள் குறிக்கப்பட்ட டைரிகளின் என்றும் எரியாத பக்கங்கள்! பிற்பாடு ஒருநாள் பாரதி அண்ணாவின் மேற்பார்வையில், கருவேல மரத்தைப்பற்றி ஆய்வுசெய்து நான், ஆனந்தபாபு, அருள்முருகன் மூவரும் இளம் அறிவியலாளர்கள் மாநாட்டிற்கு நாகப்பட்டினம் சென்றதெல்லாம், இணை உலகத்தில் (parallel word) நடந்தது போலொரு பிரம்மை இன்று. பள்ளி பாடவேளைகளுக்குள் அடங்கிய விளையாட்டு நேரமெல்லாம், ஸ்கௌட், செஞ்சிலுவை சங்கம் பயிற்சிக்காகவும், சிறு சிறு குச்சிக்குச்சித் தாம்பாலம், கிட்டிப்புல்லு, தாண்டு குதிரை, குளம் கரை போன்ற ஆட்டங்களுக்காகவும், முன்பதிவு செய்யப்பட்டவைகள். அவ்வப்பொழுது கல்வி ஆய்வு செய்ய வரும் செல்வராசு வாத்தியார் நடத்தும் வினாடிவினா போட்டிகளெல்லாம் பார்த்தால், அவர் அன்றையை பிக்பாஸ்தான் என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். நாவலந்தீவு, மொகஞ்சதாரோ, ஆர்க்கமிடிஸ் தத்துவமெல்லாம் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள்!
பொழுதுக்கும் விளையாட்டாக திரிந்த எங்களுக்கு, பள்ளியில் கற்றவற்றை பழக வீட்டில் எப்பொழுதும் நேரம் இருந்ததில்லை. அது மட்டுமன்றி, எங்களின் அட்டகாசத்தை தாங்க முடியாத அப்பாக்களுக்கு, எங்களை சமாளிக்க ஊருக்குள்ளே ஒரு மத்திய சிறைச்சாலையும் தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட வாசன் டியூசன் சென்டர் எங்களின் விளையாட்டுத்தனத்தையெல்லாம் முறியடித்து அப்பொழுதைய ஊராரின் கவனத்தையெல்லாம் கவர்ந்திருந்தது. முருகன் சார், பெரிய ரவி சார், சின்ன ரவி சார், செந்தில் சார் என பலர் எங்களை வார்த்து எடுத்திருக்கிறார்கள், வாங்கு வாங்கென வாங்கியும் இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அடியின் வலிக்குள் புதையலாய் புதைந்திருந்தது எங்களின் எதிர்காலம்!
இப்படி மனம் மட்டுமே கடந்தகால நினைவிற்குள் பயணப்பட்டு கிடக்கையில், என்றாவது ஒரு நாள் இந்த பிரபஞ்சத்தின் குறுக்குவழியான இன்டர்ஸ்டெல்லாரை கண்டுபிடித்து, வார்ம் துளைகளை (warm hole) கடந்து, ஐந்தாவது பரிணாமத்தை புரிந்து, அந்த அழகான வாழ்க்கைக்குள் நுழையலாமோ என்ற கனவுடனே காத்துக்கொண்டிருக்கிறேன்.
தொடருங்கள்!
விளையாட்டாக சொல்கிறேன் #7
-சக்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக