சாங்வான் குறிப்புகள்#02

 வரலாறு காணத அளவிற்கு மழையை கொடுத்துவிட்டாயே மாரியம்மா, என்கிறார்கள்.. அதே வேளை, ‘அந்த காலத்துலயெல்லாம் எவ்வளவு அடைமழை பெய்யும் தெரியுமா, பக்கத்துல இருக்க ஆளே தெரியாதுன்னா பாத்துக்கயேன்’, என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்..

 


அப்படியேதான் கொரிய மாரியம்மனும்.. ஆனால் கொரிய மாரியம்மன், மழைக்காக தனிக்காலத்தை ஒதுக்கி வைக்கவில்லை.. எல்லா காலங்களிலும் மாதம் மும்மாரி பொழிய வைத்துவிடுவாள்.. அதனால்தான் என்னவோ, இங்கு மாரியம்மனைத் தூக்கி சுமப்பதே இல்லை..

 

வழக்கத்திற்கு மாறாக, இங்கு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே, குளிர் தொடங்குகிறதே, என்று பலரும் கூறுவது வழக்கம்..

 

கொரியாவில், குளிர்காலம், கோடைகாலம், வசந்த காலம், இலையுதிர்காலம் என நான்கு காலங்களும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக வந்துபோகும்..

 

நவம்பரில் தொடங்கும் குளிர், டிசம்பர், ஜனவரி என உச்சம் தொட்டு, பிப்ரவரியில் முடிய வேண்டுமா, மார்ச்சில் முடியவேண்டுமா என்று வட்டமேசை மாநாடு நடத்தி, ஒரு முடிவுக்கு வரும்.. குளிர் முடிந்தால் வசந்தம்தானே... வசந்த காலம் மார்ச், ஏப்ரல், மே என சென்று.. ஒருவழியாக கோடை தொடங்கும்.. அன்றுவரை கும்பகருணனைப்போல தூங்கிக்கொண்டிருந்த கதிரவன், ஜூனில் கண்விழிக்கத்தொடங்குவான், ஆகஸ்டில் தன் மொத்த வித்தையையும் காட்டித்தீர்த்து, செப்டம்பரில் மீண்டும் தூங்க ஆயத்தமாகி ஒற்றைக்கண்ணை மட்டும் மூடத்தொடங்குவான்..

 


செப்டம்பரில் குளோரோபில் தட்டுப்பாட்டாலும், தன்னை ஆந்தோசயனின்களால் நிரப்பிக்கொண்டும், குளிரைக்கண்டு முகம் சிவக்க கோவமுற்றவனாக காட்சி தருவதுபோல இருந்தாலும், ஒரு பூவினிடம் சபதமிட்டது போல, பூவைப்போல அழகுபடுத்திக்கொண்டு, கடைசியில் அக்டோபரில் தன்னை உதிர்க்கவும் செய்துகொள்ளும் இந்த இலைகள்.. மீண்டும் நவம்பர், குளிரின் பிடியில் ஆட்கொள்ளும்..

 


பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கி வான் ஜாங், என்னை ஒரு முறை அவரின் தோட்டத்திற்கு கூட்டிச்சென்றிருந்தார்.. அது ஒரு அக்டோபர் வேளை.. இளையுதிர்காலம்தான் என்றாலும், வெப்பநிலை பத்து டிகிரிக்கும் குறைவாக இருந்தது.. அவர் தோட்டத்தில் இருந்த பெர்சிமான் மரங்கள், பெர்சிமான் பழங்களை மட்டும் தாங்கி நின்றது.. இலைகள் யாவும் தரையுடன் நட்புகொண்டிருந்தன. அருகில் ஓடையில் தண்ணீர் சலசலத்துக்கொண்டிருந்ததை கேட்கமுடிந்தது, அப்படியே அந்த பேராசிரியரும், அவர் மனைவியும், நானும் பெர்சிமானை அறுவடை செய்யத் தொடங்கினோம்.. ‘யூ சிட், யூ நீட் நாட் டு டூ திஸ்’ என்று பலமுறை பேராசிரியர் ஆங்கிலத்திலும், அவரின் மனைவி கொரியனில் சொல்லியும், எனக்கு பெர்சிமான் காய்களை பறிக்கவே ஆர்வம் அதிகம் இருந்தது.. அதனால், மதியம் உச்சிவெயில், அதாவது பதினைந்தைத் தொடும் வரையில் பறித்துக்கொண்டிருந்தேன்..

 

‘ஐ திங்க், இட்ஸ் எனஃப் டுடே.. லெட் அஸ் கோ ஃகோம்...’ என்று பேராசிரியர் கூறி என்னிடம் நம்மூர் கட்டைப்பை அளவிற்கு இருக்கும் ஒரு ஈமார்ட் பை முழுவதும் பெர்சிமான் காய்களை நிரப்பி கையில் கொடுத்துவிட்டார்..

ஏறத்தாழ ஐம்பதாயிரம் வொன் கொடுத்தால்தான் அவ்வளவு பெர்சிமான் காய்களை அன்று கடைகளில் வாங்கியிருக்க முடியும், அதன் நம்மூர் மதிப்பு மூவாயிரம் ரூபாய்..

 


அந்த பெர்சிமான் கிடைக்குமென அந்த வேலையை செய்துகொடுக்கவில்லையென்றாலும், ஒரு வேளை அதற்காகத்தான் செய்தோமோ என்று அவர் நினைத்துவிடப்போகிறார் என்ற ஒரு எண்ணத்தில் உழன்று அந்த பையை வாங்கிக்கொண்டேன்.. அவர் என் நகர்வையும், முகத்தையும் உற்றுநோக்கி, புரிந்துகொண்டவர் போல, ‘வீ டோண்ட் செல் திஸ்.. வீ ஒன்லி கிவ் டூ அவர் ரிலேட்டிவ்ஸ்’ என்று என் கையில் வைத்திருந்த பையில் மேலும் மூன்று காய்களைத் திணித்தார்..

அடுத்த சில நாட்களுக்கு, தீபாவளிக்கு அடுத்த ஒருவாரம் நம் தட்டை நிரப்பும் முறுக்கைப்போல தன் முகத்தை மிகவும் பொலிவுடன் வைத்திருந்தது அந்த பெர்சிமான் காய்கள்..

 

சரியாக பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன.. அக்டோபர் 28, 2025.. அன்று பேராசிரியர் கொடுத்த ஒரு பை அளவிற்கான பெர்சிமான் காய்களை இன்று வாங்கியிருந்தால், ஏறத்தாழ இரண்டு லட்சம் வொன், அதாவது பன்னிரெண்டாயிரம் ரூபாய்..

நிறமாறிய இலைகள் முன்னும் பின்னும், மேலும் கீழுமென ஆடி தரைமீது வந்தமர்ந்து உறக்கம் கொள்கின்றன.. இதோ என்னக்கு முன் செல்பவர்கள் முன்னதாகவே குளிர் தொடங்கிவிட்டதாக, தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.. ஆனால், குளிர் சட்டென அப்படியே குறைந்துவிடவில்லை..

 

எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவின்பொழுது, மாரியம்மனை தூக்கி சுமப்பவர்கள் அவளை ஒரு திசையில் தூக்கிச்செல்லமாட்டார்கள்.. முன்னும் பின்னும் என பலமுறை அலைக்கழித்து, கடைசியில், கோயிலில் கொண்டுவந்து வைக்கும்பொழுது மேலும் கீழுமென ஆட்டி, நீண்ட நேரம் தூங்காமல் தொந்தரவு தரும் குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டி மயங்கவைக்கும் ஒரு அம்மாவைப்போல, அவளை மயக்கி மழையை கொண்டுவர முற்படுவார்கள்..

அந்த ஆட்டத்திற்கு உட்பட்டு, மயங்கும் மாரியம்மனைப்போலவே, இந்த வெப்பநிலையும், மூன்றைத்தொட்டு, பின் பதினைந்து, இருபது வரை சென்று, பின் மீண்டும் மூன்று, அதற்கும் கீழே சுழியம், மைனஸ் பத்து வரைக்கும் செல்லும்..

 

மாரியம்மனும் அப்படியே இருந்துவிடுவதில்லை, அடுத்த திருவிழாவில் இன்னொருமுறை மயங்க ஆயத்தமாவதற்காக ஓய்வெடுப்பாள்.. தரையில் உறங்கும் இலைகளைப்போல..

வசந்தகாலத்திற்கான காத்திருப்பு தொடங்குகிறது இலைகளுக்கும், அனைவருக்கும், எனக்கும், மாரியம்மனுக்கும்..

 

-சகா..

28/10/2025

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2

சாங்வான் குறிப்புகள்#01