சாங்வான் குறிப்புகள் #09 - முகக்கவசம் உயிர்கவசம், நன்நடத்தை இனத்திற்கான கவசம்..
முதன்முதலில் கொரியாவில் வந்திறங்கியபோது குளிர்காலம் தொடங்கியிருந்தது. கடும் குளிரிலிருந்து உடலைக் காத்துக்கொள்ள மூன்று அடுக்குகளாக ஆடை அணிய வேண்டியிருந்தது. உடலை எப்படியோ மூடிக்கொள்ளலாம்.. ஆனால் மூக்கும் வாயும் என்ன செய்யும்? அதனால், அப்போதே முகக்கவசம் அணிவது எனக்குப் பழகிவிட்டது. பொதுவாகவே கொரியர்களுக்கு முகக்கவசம் அணிவது பழக்கப்பட்ட ஒன்று. குளிர், தூசு, உடல்நலக் குறைவு என்று பல காரணங்களுக்காக அவர்கள் முகக்கவசம் அணிவார்கள். பிறகு கொரோனா வந்து நம்மவர்களையும் அந்தப் பழக்கத்திற்கு ஆட்படுத்தியது. ஆனால், நம்மவர்களில் பலர் வேண்டாவெறுப்பாக, ஏதோ வீட்டுப்பாடத்தைச் செய்வதுபோல கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்தார்கள். இப்போது கேட்கவே வேண்டாம், பெரும்பாலும் அணிவதே இல்லை.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது முறையாகக் கொரியாவில் வந்திறங்கியபோதும், அது ஒரு குளிர்கால மாலை. அதனால் முகக்கவசத்துடன்தான் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். ஆனால், கொரியர்களிடம் ஒரு பெரிய மாற்றத்தைக் கவனித்தேன். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் சாலைகளில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிந்த...