சாங்வான் குறிப்புகள் #07
பியோதர் தஸ்தோவஸ்கியின் வெண்ணிற இரவுகளில் வரும் கனவுக்காரனைப் போல, இந்த வெக்கை இரவுகளில் நானும் நடக்கிறேன். அவன் நாஸ்தென்காவைத் தேடினான். நான் காற்றைத் தேடுகிறேன்..
கொரியாவில் கோடை காலம் வந்துவிட்டது.. வெப்பநிலை முப்பதிலிருந்து முப்பதைந்து வரைதான் என்றாலும், காற்றில் இருக்கும் அதீத ஈரப்பதத்தால் வியர்வை சுரப்பிகள் அழுது தீர்க்க தொடங்கிவிட்டன..
வெளியில் இப்படி என்றால், வீட்டினுள் கேட்கவே வேண்டாம்..
எட்டாவது மாடியில் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்களிலும், மொத்தமாக நான்கு சன்னல்களுக்கு நடுவே நான் அடைந்திருப்பதால், காற்று முதலில் என் உரோமங்களுடன் கைகுளுக்கிய பின்தான் கீழிறங்கும்.. ஆனால் இன்று அந்த உரோமத்திற்கு கூட.. சாரி.. சூடான காற்றுக்கு கூட வழியில்லை.. இறுக்கமாக இருக்கிறது..
என்னதான் கேட்ஜட்களிடம் என் மனதை, முன்பணம் இல்லாமலேயே வாடகைக்கு கொடுத்திருந்தாலும், இந்த குளிரூட்டிகளை மட்டும் ஏற்கமுடியவில்லை.. காரணம், இரவில் அதன்துணையுடன் தூங்கிவிட்டு காலையில் வெளியில் வரும்பொழுது, இந்த உலகமே என்னை வெறுத்து வெப்பதை என் மேல் உமிழ்ந்து உடல்முழுவதும் நீர் கடுப்பு ஏற்படுவதுபோல் இருக்கும்..
இதனால், வெக்கைக்கு பயந்து இரவானதும் பல்கலைக்கழக மைதானத்திற்கு சென்றுவிடுகிறேன்.. கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒருவனுக்கு வீடு அமைந்தால், அதைவிட சொர்க்கம் ஏது.. அரிது அரிது ஆய்வாளனுக்கு பெண் கிடைத்தல் அரிது, அதனினும் அரிது அந்த ஆய்வாளனுக்கு வளாகத்திற்குள்ளயே வீடு கிடைத்தல்.. (பொதுவா சொன்னேன்..)
எனக்கு கிடைத்ததே.. (வீடு.. வீடு..) முதலாம் ஆண்டு கிடைத்ததில் வியப்பில்லை.. இரண்டாம் ஆண்டும் கிடைத்தது, அரிதிலும், அரிதிலும் அரிது..
அதீதமாகவெல்லாம் பில்ட் அப் கொடுக்கவில்லை.. இந்த வளாகத்தைப்பற்றி சொல்கிறேன் கேளுங்கள்..
இந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு கடைசி, பொங்ரி(லி)ம் எனப்படும் பகுதியில் இருக்கும் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும் கட்டிடத்தில் எட்டாவது மாடிதான் வீடு, குன்றின் மீதமைந்த வீடு, எட்டாவது மாடி வேறு என்பதால், இங்கிருந்து சாங்வான் நகரம் மொத்தத்தையும் காணலாம்.. அருகில் இருக்கும் ஜின்னே, ஹிம்கே நகரங்கள் கூட தெரியும்.. மேலோகத்தில் வாழும் இந்திரன், சந்திரன் கூட சிலவேளைகளில், குளவி வேடம் தரித்தும், கொசுவாகவும் என்னை கண்காணிக்க வருவதுண்டு..
பல்கலைக்கழகத்தின் மத்தியில் இருக்கும் மைதானத்திற்கு, இந்த வீட்டிலிருந்து ஒரு கிமீ தொலைவு.. நடந்தால்.. அதுவே மகிழுந்தில் இரண்டு கிமீ..
அப்படியே வளாகத்திற்குள்ளேயே இன்னொரு கிமீ நடந்தால், கிழக்கு ஓரத்தில், சங்னம் பகுதியில் ஹம்மாயும் என்றொரு பெரிய மருத்துவமனை..
தெற்கே பேருந்து நிலையம் என்றால் வடக்கு கடைசியில் பழநி படிக்கட்டுகள் போல அமைந்த நூற்று இருபது படிகளை ஏறி சென்றால், மணிக்கு இருநூற்று இருபது கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக கேடிஎக்ஸ் ரயில் நின்று செல்லும் ரயில்நிலையம்.. அந்த ரயில் நிலையத்தை தாண்டி ஐநூறு மீட்டரில், மலையடிவாரத்தில், அழகான புத்தர் கோயில்.. அதற்கு முன்பு ஒரு ஏரி.. வளாகத்திற்குள்ளேயே, வீட்டின் அருகிலேயே ஒரு ஏரி..
இப்போழுது இரவு பன்னிரெண்டு மணி.. ஏரி வழியாக, மைதானத்தை அடைந்து, அங்கு ஒரு சுற்று சுற்றிவிட்டு, அப்படியே பழநி படிக்கட்டுகள் வழி ரயில் நிலையத்தை அடைந்து, பானி வாட்டரும், சாய் டீயும் இன்றி பொலிவற்று கிடக்கும், டிக்கெட் தேவையில்லா பிளாட்பாரத்தில் ஒரு முறை சுற்றிவந்து, அடுத்த ஐநூறு மீட்டரில் எனக்காக தவமிருக்கும் புத்தருக்கு ஒரு தரிசனத்தை கொடுத்துவிட்டு, வரலாம் என்று புறப்படுகிறேன்..
ஏ நாஸ்தென்கா, எங்குசென்றாய் நீ..
- சகா..
கருத்துகள்
கருத்துரையிடுக