சாங்வான் குறிப்புகள் #08

சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து கருவக்காட்டிற்குள் புகுந்து தொலைந்துபோவது வழக்கம்.
அதைக் கண்டுபிடிப்பதற்கு எங்களிடம் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாடு ஒன்று இருந்தது.. பந்து எந்தத் திசையில் சென்றது என்பது ஓரளவிற்கு நினைவில் இருக்கும், ஆனால் எங்கே விழுந்தது என்பதுதான் தெரியாது..
அதனால் உடனே இன்னொரு பந்தை எடுப்போம், தொலைந்த பந்து எந்த திசையில், எந்த வேகத்தில் சென்றதாக நினைக்கிறோமோ, கிட்டத்தட்ட அதேபோல இன்னொரு பந்தை எறிவோம். இந்த முறை எல்லோரும் கண்சிமிட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருப்போம்.
இரண்டாவது பந்து எங்கே விழுகிறதோ, அந்த இடத்தைச் சுற்றி ஒரு பத்து மீட்டர் வட்டமடித்துத் தேடினால், முதல் பந்து கிடைத்துவிடும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..
சில நேரங்களில் கிடைத்திருக்கிறது.
பல நேரங்களில் கிடைக்காமல் போயிருக்கிறது.

ஆனால்...

பந்து கிடைக்காததால் எங்கள் கோட்பாடு ஒருபோதும் பொய்யாகிவிடுவதில்லை..
செய்முறைப் பிழை - experimental error என்று எடுத்துக்கொண்டு இன்னொரு பந்தை வைத்து, அடுத்த ஆட்டத்திற்கு போய்விடுவோம்.. சில வேளைகளில் அந்த கோட்பாட்டை செயல்படுத்துவதற்காக பயன்படுத்திய பந்தும் காணாமல் போய்விடுவதுண்டு.. அது வேறு கதை..

கடந்த வாரம் கடலில் நீந்திக்கொண்டிருந்தபொழுது, எதிர்பாராத ஒரு பெரிய அலை என் கண்ணாடியை அடித்துத் தூக்கிக்கொண்டு போய்விட்டது.
தேடினேன்.. தேடினேன்.. ஆறு மணிவரை தேடினேன்.. 
கொரியாவில் ஆறு மணிக்கு பின்பு யாரையும் கடலில் குளிக்க அனுமதிப்பதில்லை.. அதனால், கடலில் தேடுவதை வேறு வழியின்றி நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு கண்ணாடி மிதந்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..
கடல் திருப்பித் தருவதாக இல்லை. அதனால் கனத்த இதயத்துடன் கண்ணாடியை கடலுக்குக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிவிட்டேன்.

இந்த வாரம் மீண்டும் அதே கடற்கரை, அதே கடல்.. கிட்டத்தட்ட அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். அங்கும் இங்கும் திரிந்து பார்த்தாகிவிட்டது.. என்னுடைய கண்ணாடியைத்தவிர பல கண்ணாடிகள் கடற்கரையில் கிடக்கின்றன.. கடல் என்னுடைய கண்ணாடியை மட்டும் திருப்பிக் கொடுப்பதாக இல்லை..
திடீரென்று சிறுவயது கருவக்காட்டு கோட்பாடு நினைவுக்கு வந்தது..
மகனிடம் சொன்னேன், உன் கண்ணாடியைக் கழற்றி என்னிடம் கொடு.. என்னுடைய கண்ணாடி தொலைந்த அதே இடத்தில் கடலில் விடுவோம்.. அது எந்த வழியில் போகிறது என்று கவனித்துக்கொண்டே போனால், என்னுடைய கண்ணாடியும் அங்கே எங்கேயாவது கிடைத்துவிடும்...

ஒரு நொடி கூட யோசிக்காமல்,
முடியாது... என்கிறான்.
என்ன தலைமுறையோ...
ஒரு கோட்பாட்டை சோதனை செய்யக்கூட தயாராக இல்லை!

இந்த ஒரு வாரத்தில் இன்னொரு கண்ணாடியையும் வாங்கிவிட்டேன்.. அதை போட்டுப்பாருங்கள் என்கிறான்.. கோட்பாட்டை செயல்படுத்துவதற்கு ஏவப்பட்ட பந்தும் காணாமல் போவதுபோல, இந்த கண்ணாடியும் தொலைந்துவிட்டால் நான் என்ன செய்ய..

- சகா..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2