மிஷ்கின் என்னும் நான்..

 மிஷ்கின் என்னும் நான்.. மிஷ்கினின், கோபியுடனான நேர்காணலை முழுவதுமாகப் பார்த்தேன். பார்த்தேன் என்று சொல்வதைவிட, வாசித்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒரு முழு நாவலை வாசித்து முடித்த உணர்வு. எத்தனை மனிதர்கள்.. எத்தனை புத்தகங்கள்.. எத்தனை திரைப்படங்கள்.. எத்தனை நினைவுகள்.. என்னவொரு வாழ்க்கை.. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு உலகங்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது.


மிஷ்கின் பொதுவாக மேடைகளில் பேசுவது அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.. ஆனால், இந்த நேர்காணலில் அவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. தான் வாசித்த புத்தகத்தையும், பார்த்த திரைப்படத்தையும், சந்தித்த மனிதனையும் முதலில் தனக்குள் அனுமதிக்கிறார். அது அவருக்குள் ஏதோ ஒன்றைச் செய்த பிறகு, அந்த அனுபவத்தையே நம்மிடம் பரிமாறுகிறார்.. ஒரு படைப்பாளிக்குத் தேவையான முக்கியமான பண்பு இதுதான் என்று நினைக்கிறேன். வெறும் பார்வையை மீறிய கவனிப்பு..

அனைவருமே வாசிப்பது உண்டு.. நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனால், அனைத்தையும் உள்வாங்குகிறோமா என்றால், இல்லை.. அந்த ஒரு வேறுபாடுதான் ஒரு படைப்பாளிக்கும், சாமானியனுக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவருடைய இயல்பு அவருடைய திரைப்படங்களிலும் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் மிஷ்கினின் நடிப்பும் திரைக்கதையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அங்கே நன்மை, தீமை என்று மனிதர்களை இரண்டு பெட்டிகளுக்குள் அடைக்காமல், ஒரு மனிதனுக்குள் இருக்கும் இரண்டையும் பேச முயன்றிருப்பார். நந்தலாலா, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, சைக்கோ என அவரது அனைத்து திரைப்படங்களிலும் மனிதர்களின் இருண்ட பகுதிகளுக்குள் எங்கோ ஒரு சிறிய வெளிச்சத்தைத் தேடும் முயற்சி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.

ஒன்றை நாம் விரும்புகிறோம் என்றால், அதை பயில என்னமாதிரியான சிரத்தையை எடுக்கிறோம் என்பது மிகமுக்கியம்.. இசையை எடுத்துக்கொள்வோம்.. நாம் அனைவரும் இசையை விரும்பி கேட்பவர்கள்தான்.. ஆனால் அவர் இசையை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை, இசையை விரும்புகிற காரணத்திற்காக இசை கற்றுக்கொள்ளவும் தொடங்கியிருக்கிறார்.. இசைப்பண்டிதர் ராமமூர்த்தியிடம் அவர் தீவிரமாகப் பயிற்சி பெற்றதாகவும், ஒரு நாளில் பல மணி நேரம் பயிற்சி செய்யும் மாணவர் என்றும் அவரது ஆசிரியரே பாராட்டியிருக்கிறார் என்பதையும் ஒரு கட்டுரையில் படித்தபின் தான் மிஷ்கின் என்னுள் ஒரு வியப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஒரு துறையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்றவுடன், அதையே நாற்காலியாக மாற்றி உட்கார்ந்துவிடாமல்... மீண்டும் மாணவனாகிவிடுவது, வாசிப்பது, சினிமா பார்ப்பது, இசை கற்பது, மனிதர்களைச் சந்திப்பது, அவர்களிடமிருந்து எதையாவது எடுத்துக்கொள்வது, பிறகு எல்லாவற்றையும் தனக்குள் போட்டு அரைத்து, வேறொன்றாக வெளியில் கொண்டுவருவது.. ஒருவேளை படைப்பாளி என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..

பொதுவாக, நாம் புத்தகங்களை ஏன் வாசிக்கவேண்டும்.. நாம் வாழாத ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்வதற்காக அல்லது நாம் சந்திக்க முடியாத மனிதர்களைச் சந்திப்பதற்காக அல்லது நமக்குள் இல்லாததாக நினைத்த உணர்வுகளை நமக்குள்ளிருந்தே தோண்டியெடுப்பதற்காக.. அந்த வகையில் பார்த்தால், இந்த நேர்காணலும் ஒரு புத்தகம்தான். புத்தகம் வாசிப்பது ஒரு மனிதனின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை ஏதோ காரணங்களால் உங்களால் இப்போது வாசிக்க முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் இதுபோன்ற நீண்ட உரையாடல்களையாவது முழுமையாகப் பாருங்கள்.

மிஷ்கினின் இந்த நேர்காணலைப் பாருங்கள். இதற்கு முன்பு கோபியுடன் வந்த விஜய் சேதுபதியின் நீண்ட நேர்காணலையும் பாருங்கள். ஏனெனில் திரையில் நாம் பார்க்கும் மனிதன் வேறு, அவனுக்குள் இருக்கும் மனிதன் வேறு..

சினிமாவில் சிலரைப் பார்த்துவிட்டு, அல்லது திரைப் புகழால் பொதுவெளியில் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் சிலரை மட்டும் பார்த்துவிட்டு, மொத்தத் திரைத்துறையையும் ஒரே தராசில் எடைபோடுகிறவர்கள் குறிப்பாக சில மனிதர்களைக் கவனிக்க வேண்டும். மிஷ்கின், ராம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ஹெச். வினோத்...

இவர்களின் எல்லா கருத்துகளுடனும் நாம் உடன்படவேண்டிய அவசியமில்லை.. அதுவல்ல விஷயம். அவர்கள் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்குப் பின்னால் வாசிப்பு இருக்கிறது, பெரும் அனுபவம் இருக்கிறது, அரசியல் இருக்கிறது, சமூகத்தைப் பற்றிய பார்வை இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பசி இருக்கிறது.

- சகா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாங்வான் குறிப்புகள்#01

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2