ஒரு ஆடு நரியான கதை..

ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்...

அப்பா, இந்த கதைய நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களே..
இது வேற ஊரு, வேற நரி..
சரி சரி..
அந்த நரிக்கு தொப்பை பசி வந்துடுச்சி.. பசி எடுக்காத போதே ஹாபிக்காக வேட்டையாடும் மிருகம் நரி.. பசி எடுத்தா என்ன பண்ணும்...
தூங்கிடுமா!?
யாரா இருந்தாலும் பசி எடுத்தா சாப்பாட தேடி ஓடுவாங்க அதுதான் இயற்கை.. தூக்கமெல்லாம் வராது.. அதனால நரி என்ன பண்ணும்னா, கண்மூடித்தனமா வேட்டையாட கிளம்பிடும்.. அப்படி சிவந்த கண்களுடனும், வெற்று வயிற்றுடனும் வேட்டையாட கிளம்பிய நரி கொஞ்ச தூரத்தில் ரெண்டு ஆட்டு குட்டிகள பார்த்துவிட்டது..
அப்போ அந்த நரி பயந்து ஓடிடுமா.. ஏன்னா ஆட்டுகுட்டி ரெண்டு இருக்கு, நரி ஒன்னுதான..
அடேய், அப்ரசன்டி.. நீயே மீதி கதைய சொல்லுடா..
அப்பறம் என்ன நரி தல தெரிக்க ஓடிப்போயி அவங்க அப்பா அம்மா எல்லாரயும் கூப்டு வந்துருக்கும்..
அப்படிதான் இல்ல.. இதுதான் இயற்கையோட விளையாட்டே.. ஆட்டுகுட்டிக்கு நரிய விரட்டும் அளவுக்கு உடலில் வலிமை இருந்தாலும், மன வலிமை சுத்தமா கிடையாது.. அதனால ஆட்டுக்குட்டி நரிக்கு விருந்தாகிவிடும்..
அச்சோ..
ஆமா, அந்த நரி ரெண்டு ஆட்டுக்குட்டிகள்ல ஒன்ன புடிச்சிக்கிட்டு போய்ட்டு.. இன்னொன்னு அழுதுகிட்டே வீட்டுக்கு வந்துச்சு.. வந்த ஆட்டுக்குட்டிகிட்ட அம்மா ஆடு, 'ஏம்மே அழுறமே'னு கேட்டுச்சு..
ஆடு எப்டிபா பேசும்...
அடேய் அதுக்கு ஆண்டவனின் அனுக்கிரகம் இருந்துச்சு அதான் பேசுது.. கதைய கேளு மேன்..
அப்போ நமக்கும் அந்த கிரகம் இருக்கா.. ஏன்னா நாமும் பேசுறமே..
ஐ ஆம் ஸ்பீகிங், யூ ஆர் கிராஸ் ஸ்பீக்கிங். யூ சிட் டவுன் பிளிஸ்...
அப்டி நரி கத்துச்சா..
அய்யோ... ஒரு கதைய சொல்ல விடுறியாடா..
செரி.. சொல்லுங்க..
தப்பிச்சி வந்த ஆட்டுக்குட்டி, அம்மா ஆட்டுக்கிட்ட ஒரு ஆட்டுக்குட்டிய நரி தூக்கிட்டு போச்சின்னு சொல்லுச்சு.. அதிர்ந்துபோன அம்மா ஆடு உடனடியா நரி வாழும் பனங்காட்டுக்கு போனது..
'நரியாரே நரியாரே, கொம்பு கூட முளைக்காத அந்த அழகான ஆட்டுக்குட்டியை என்னிடமே கொடுத்துவிடேன்' என்று மன்றாடி நின்னுச்சி..
'அப்படினா நீயோ, உன் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த ஆட்டுக்குட்டியோ என் இரைப்பையை நிறைக்க ஒத்துழைக்கலாமே' என்றதும் ஆடிப்போன ஆடு பின்னால் பார்க்க.. அந்த இன்னொரு ஆட்டுக்குட்டியும் அம்மா பின்னாடியே வந்து அங்கே நின்னுட்டு இருந்துச்சு..
எலேய் உன்னைய யாரு இங்க வரச்சொன்னா.. ஓடிவிடு வீட்டிற்கு என ஆடு, பின்புறத்தில் நின்ற ஆட்டுக்குட்டிய அரட்ட, ஆட்டுக்குட்டியோ, 'ஏய் நரியாரே, அந்த ஆட்டுக்குட்டிய விட்டுவிடு அதற்கு பதில் என்னை வேண்டுமானால் தின்றுகொள்'.. என்றது..
இதைக்கேட்ட அம்மாவுக்கு பேரதிர்ச்சி, என்னது நீ உன்னை கொடுக்கிறாயா.. நீங்களெல்லாம் வாழ வேண்டிய வயது, நான் என்னை ஒப்படைத்துக்கொள்கிறேன்..
நரியாரே என்னை உண்டுவிடு, என் இரு கண்மணிகளையும் விட்டுவிடு' என்று சொல்ல..
நரிக்கு சற்றே ஒரு யோசனை.. பேசாமல் அம்மாவின் டீலிங்கை ஓகே செய்துவிட்டால் அம்மாவை உண்ட பிறகு இரு குட்டிகளையும் நாமே யார் எதிர்ப்புமின்றி உண்டுவிடலாம்... பிரச்சினை இல்லை, நரி திட்டமிட்டது..
அச்சச்சோ அப்ப மூனு பேருமே சாப்பாடாக போறாங்களா!!
ஆமா.. திட்டமிட்டபடி நரி அம்மாவ சாப்டு முடிச்சிட்டு, குட்டிகளிடம் வந்துச்சி.. அந்த நேரம் பாத்து குட்டிங்க ரெண்டும் ஒரு ப்ளேன் பண்ணாங்க.. அது படி ஒரு குட்டி நரியிடம் சொல்லிச்சாம், நாங்க ரெண்டு பேரும் குட்டிங்கதான், உங்க தொப்பைக்குள்ள சின்ன எடத்தகூட நெரப்ப மாட்டோம் அதனால எங்கள விட்டுடு.. அதற்கு பதில் தினமும் ஒரு பெரிய ஆட்டை உனக்கு உணவாக்க இங்கே ஏதாச்சும் பொய்ய சொல்லி கூப்டு வந்துடுறோம்.. என்றது..
நரிக்கு ஒரே மகிழ்ச்சி.. துள்ளிக்குதித்தது..
அப்போ, நரி பல ஆடுகள திங்கபோகுதா..
ஆமா... இப்போ ஏதுமறியா ஆட்டுக்குட்டிகளையும் நரியாக ஆக்கிவிட்டது அந்த நரி.. இன்னும் எத்தனை அடுகளை, இந்த ஆட்டுக்குட்டிகளோட உதவியுடன் நரி திங்கப்போகுதோ தெரியவில்லை..
அப்பனா, இந்த காட்டுக்கு ராஜா இருப்பாருதானே, அவருகிட்ட யாராச்சும் சொன்னா, நரிய அடிச்சு தொரத்திடுவாருதான..
நல்ல ஐடியாதான்.. ஆனா, அந்த காட்டுக்கு ராஜாவே நரிதான்...

-சகா..
04/06/2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10