பூசணிக்காய் தலையன்




டாக்டர் அஞ்சா சிங்கம் ஹீலர்பாண்டி சொல்லியது போல என் மூச்சையே திரும்பத்திரும்ப உள்ளிழுத்துக்கொள்வதால், சோர்வாகவே உணர்ந்தேன்.. கையில் ஏதோ ஐநூறு வைரஸ்கள் தொங்குவது போல காட்சி தருவதாகத்தான் மூளை புரோகிராம் செய்து வைத்திருந்தது.. அடிக்கடி அந்த தொங்கிக்கொண்டிருக்கும் வைரஸ்களை குளிப்பாட்டி டெட்பாடியாக்கும் பொருட்டு உலகின் தலைச்சிறந்த மருந்தான மாட்டு கோமியத்தை பூசிக்கொண்டேன்..
யாரோ ஒருவர் என்னருகில் கண்ணை மூடிக்கொண்டு, வாயை அங்கும் இங்குமாக பிளந்துகொண்டு வருவது போலவே வந்தார்.. பின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.. ஒன்று, இரண்டு, மூன்று முறை இப்படியே நடந்தது.. நான்காம் முறை அவர் தோற்றுவிட்டார்... விட்டார் ஒரு தும்மலை... ஏவுகணை வெடித்தது போலொரு பீதி அனைவருக்கும்.. அப்பொழுதுவரை தாடைக்குதான் மாஸ்க் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கொடி உயர்த்தப்பட்டு, மூக்கு, துணியால் செய்யப்பட்ட பதுங்கு குழிக்குள் அடைக்கலம் புகுந்தது..
மறுபுறம் இருமிக்கொண்டிருந்த வயதானவரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. இருமலுக்கு என்ன கொரானாதான் சோல் புரபரேட்டரா.. ஆனால் அப்பொழுது இருமிய அனைவரும் கொரானாவின் உறவினர்களாகவே எடுத்துக்கொள்ளப்பட்டனர்.. அந்த கொரானா உறவுக்காரரை கண்ட கண்கள் யாவும் பயத்தில் நடுங்கின.. அதே வேளை வெறுப்புடனும் பார்த்தனர், வைவாவிற்கு வெளியிலிருந்து வந்த எக்ஸாமினரை காணுவது போல....
முன்பை விடவும் காதுகளுக்கு மூளை அதிக முக்கியத்துவம் கொடுத்தது உண்மைதான்.. ஏனென்றால் அது ஒன்று மட்டும்தான் ஒளிவு மறைவின்றி இருந்தது.. ஆனால் தும்மல், இருமல், பொறுமல் சத்தங்களை அலர்ட் செய்யும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது..
நிலைமை இப்படி இருக்க, வரப்புமீது அமர்ந்த கொக்கு ஒன்று சக காதலி மீனுவுடன் காதலை புரப்போஸ் செய்யும் ஒரு மீனை கப்பென பிடிப்பதைப் போல, இந்த எழவு அரிப்பு அப்போழுதுதான் வந்தது... நானே பெரும் எச்சில் திவலைகளிலிருந்து காக்க ஒரு மாஸ்க்கும், சிறுசிறு திவலைகளில் இருந்து காத்துக்கொள்ள இன்னொரு மாஸ்க்கும் என்று டபுள் மாஸ்க்கை, ஆயிரம் வைரஸ் சேர்ந்தாலும் அவிழ்க்கமுடியாதபடி நன்றாக இறுக்கி கட்டிவிட்டேன்.. என் தோழியும் பதிலுக்கு, அவரின் முழு சந்திரமுகி பவரையும் 'பவர்ர்ர்ர்' என்ற பெருஞ்சத்தத்துடன் மேலும் இறுக்கிவிட்டுவிட்டார்.. இனி கொரானா இல்லை, நான் நினைத்தாலும் அனைத்தையும் டிஸ்மேன்டில் செய்வது கடினமே.. இப்படியான இக்கட்டான சூழலிலா அறிப்பு வரும்.. அதுவும் சரியாக நடு மூக்கின் மீது.. அறிப்புக்கு இந்த சனநாயக மாண்பெல்லாம் இருக்காதா..
அது கெடக்கு கெரகம் என்று அந்த ரெட்டை மாஸ்க்குடனேயே சரபுரவென சொறிந்துகொண்டு மாஸ்க்கை சரி செய்துகொண்டேன்.. இருந்தும் ஒரு டவுட்... ஒருவேல அதா இருக்குமோ என்று.. இருந்தாலென்ன அதான் நசிக்கிவிட்டோமே என்று பெருமிதப்பட்டுக்கொண்டே, லிஸ்டை படிக்க தொடங்கினேன்..
காட ஒரு புல்லு, கவுதாரி ஒரு புல்லு, முட்ட ஒரு புல்லு, பிரியாணி ஒரு புல்லு ஆக மொத்தம் பத்து புல்லு.. என்று படிக்க படிக்க அண்ணாச்சியும் எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தார்.. கட்டுக்கடங்கா கூட்டம்.. முணுமுணுத்துக்கொண்டேன், 'என்ன நாளைக்கு ஒலகம் அழியறாப்லல்ல மொய்க்கிறாய்ங்க...'
பக்கத்திலிருந்தவர் காதுக்கும் என் இரு மாஸ்க்கால் அடைபட்ட வாய்க்கும் சுமார் ஒன்றரை மீட்டர் தொலைவிருந்தும், எப்படி கேட்ச் பண்ணினார் தெரியவில்லை.. தறுதலை, புரஞ்சிக்கிடுச்சி..
'அப்பறம் நீர் என்ன வெண்ணெய்க்கி ஓய் பத்து புல்லு வாங்குற..' என்ற ஓசை மாஸ்க் போட்டிருப்பதால் என் காதுக்கு எட்டாதது போல எதார்த்தமாய் நின்றிருந்தேன்... எப்பொழுதுமே ஒரு பெயரை நினைத்தால் சட்டென ஞாபகப்படுத்தாத அந்த பிலடி மூளை, வாயும் மூக்கும்தான் மறைந்திருக்கிறது, காது வெளியில்தானே இருக்கென்று சட்டென புரியவைத்தது.. அடடே.. ஆமால என்று மாஸ்க்கிற்குள்ளேயே வழிந்துவிட்டு, மாஸ்க்கைக்கொண்டே துடைத்துக்கொண்டு, சொன்னது என்னாச்சி அண்ணாச்சி, மணியாச்சி.. என்று அதட்டியதுதான்.. என்னது மணியாச்சா.. மொத்தம் ஆயிரத்து சொச்சம் மணியாச்சி, கொடுத்துட்டு எடுத்துட்டுபோவென திட்டிவிட்டார் அந்த அண்ணாச்சி..
நானும், டாக்டர் அஞ்சா சிங்கம் பேசிய பல விசயங்களை கேட்டிருக்கிறோம் என்ற முறையில், 'அண்ணாச்சி தினமும் காலையில எந்திருச்சி காத்தாடி பக்கமா மூக்க வச்சிக்கோங்க, ஆக்ஸிஜன் சும்மா கும்முனு ஏறும்..' என்று தாயத்தை உருட்ட.. மனிதன் என்ன கோவத்தில் இருந்தாரோ, 'காத்தாடி இல்ல ராசா, ரெண்டு பச்சை மொளகாய எடுத்து மூக்குல தினிச்சுக்கோ, பச்ச மொளகால உள்ள பச்ச உனக்கு தேவையான ஆக்ஸிஜன கொடுக்குமென' சொல்ல.. 'எத்தன மாஸ்குகள வாங்கி மாட்டினாலும் அலேக்கா பச்ச மிளகாய நொழச்சே நம்ம மூக்க ஒடச்சிறானுங்களேன்னு' நினைத்து, வீட்டிற்கு திரும்ப ஆயத்தமானேன்... திடீரென ஒருவன் கூட்டத்தை விளக்கிக்கொண்டுவந்து, 'அப்ப எனக்கு பச்ச மொளகாய அஞ்சி கிலோவா போடுங்க அண்ணாச்சி' என்றான்...
எங்கள் டாக்டர் சகலகலா வல்லவனை நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்..
டாக்டரின் ஆசான்கள் சொல்லியபடி, வந்ததும் வீட்டின் பின்புறமாக சென்று என் முன்புறத்தை மாட்டின் பின்புறத்தில் வைக்க, சாணக்குளியலால் கொரானாவை கொன்று வீட்டினுள் நுழைய அனுமதியைப்பெற்றேன்.. அப்பாடா..
சட்டென யாரோ என்னை கடினமான ஆயுதங்கள் கொண்டு தாக்குவதாக உணர்ந்தேன்...
'என்ன பகல் தூக்கத்துலயே கனவா, இன்னைக்கு மட்டுந்தான் கட இருக்குமாம், போயி எல்லாத்தயும் வாங்கிட்டு வா'...
வீட்டிலிருந்து கையுறை, முகக்கவசங்களை போட்டுக்கொண்டு, சாணிடைசருடன், சாரி சேனிடைசருடன், 'நல்ல வேள நாம தமிழ்நாட்டுல பொறந்தோம்' என்ற குறைந்தபட்ச கொரனா கால மகிழ்ச்சியுடன் கடைக்கு கிளம்பினேன்...
அனைவரும் வீட்டிலிருங்கள், தனித்திருங்கள்.. ஆனா நா ஒரேயொரு தடவ மட்டும் கடைக்கு போய்ட்டு வந்துடுறேன்..

-சகா..
22/05/2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2