உப்புவேலி - மூன்னோட்டம்

காந்தியின் உப்பு நடைபயணத்தைப் (சத்தியாகிரகம்) பற்றி படித்தபொழுது எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை.. அந்த போராட்டம் எதற்கு என்ற புரிதலற்ற வயது.. அதைப்பற்றி அண்ணாக்கள் பாடமெடுக்கையில் ஒருவித எள்ளலுடனேயே கடந்திருக்கிறேன்..

'என்னது உப்புக்காக போராட்டமா!!
நம்ம வீட்டு தெக்கால பத்து நிமிசம் நடந்தா போதுமே உப்பளத்துக்கு போயிடலாம்.. அங்க கண்டமேனிக்கு படந்து கெடக்குமே உப்பு.. உவரிச்செடிய ரெண்டு கால்ல கட்டிகிட்டு உள்ள எறங்குனா, ஒரு மூட்டய ஒரு மணிநேரத்துல அள்ளிட்டு வந்துடலாமே.. எதுக்கு அதுக்கெல்லாம் ஒரு போராட்டம்..'
இப்படியாய் நினைத்ததுண்டு..
உங்க தாத்தாவ பத்தி தெரியுமாடா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் அறியாத சிறுவனாய் இருந்தபொழுது எனக்கு கிடைத்த பதில், 'அவரு ராசாசி உப்பெடுக்க வந்தப்ப, மரங்கள்ல சாப்பாட்ட கட்டிவச்சி உதவுனவரு..' என்று கேள்விப்படுகையில் அது வெறுமனே வெட்டி பந்தாவுக்குதான் பயன்பட்டுவந்தது..
ஆனால் அந்த உப்பிற்காக இந்த இந்திய நாடே இரண்டாக பிரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்தபொழுது, உப்புசத்யாகிரகத்தின் அப்பொழுதைய தேவையும், அன்றைக்கு வாழ்ந்த மக்களின் இன்னல்களையும் புரிந்துகொள்ளமுடிகிறது..
கடலைவிட ஆழமான, இமயத்தையும் விஞ்சிய திரிப்புகளை கொண்டது நம்மின் வரலாற்றுப் பதிவுகள்.. இப்படியான திரிப்புகளுக்கு மத்தியில் ஒரு உண்மை வரலாற்றை அறிய நம்மின் எதிரி எழுதிய வரலாற்றை உற்று நோக்குவது மிகமுக்கியம்..
அப்படி நம் வரலாற்று ஆசிரியர்களால் முற்றிலுமாக மறைக்கப்பட்ட ஆனால் அன்று எதிரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவரால் குறிப்பிடப்பட்ட ஒன்றுதான் உப்புவேலி..
இந்தியாவை இரண்டாக உடைத்த அந்த வேலி சுமார் 2300 மைல்கள் புதர்களையே வேலியாக கொண்டது.. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்ட இந்த வேலி இமயத்திலிருந்து ஒரிசா வரை நீண்டிருந்ததாம்..
சுமார் 13000 மைல்கள் நீளமுள்ள சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்த ஒரு மிகப்பெரிய சுவர் நம் இந்தியாவில் இருந்தது, அதுவும் இந்தியாவை இரண்டாக பிரித்தது என்றால் நமக்கே சற்று வியப்பாக இருக்கிறது..! இன்னும் இதில் வியப்பு என்னவென்றால், அதுதான் உலகின் மிகப்பெரிய உயிர் வேலி.. அதிகமாக சுங்கவரி சேகரிக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது..
அப்படிப்பட்ட ஒரு வேலியைப்பற்றி நாம் தெரிந்திருக்காததில் வியப்பொன்றும் இல்லை.. ஏனென்றால் நம் வரலாற்றாசிரியர்கள் அதனை பதிவிடவே இல்லை..
ராய் மாக்ஸம் என்றொரு எழுத்தாளர் ஒரு வெறிகொண்ட வாசகரும் கூட.. அவர் ஒரு நாள் (1995 வாக்கில்) பழைய புத்தகக் கடையில் கிடைந்தபொழுது திரண்ட வெண்ணைதான் அந்த புத்தகம்.. அது மேஜர் ஜெனரல் ஸ்லீமன் (WH Sleeman) என்றொரு ஆங்கிலேய அரசு ஊழியர் 1893ல் எழுதி வெளியிட்டிருந்த Rambles and recollections of an Indian official என்றொரு நினைவுத் தொகுப்பு.. அந்த புத்தகத்தின் மூலம் 1850ல் உருவாக்கப்பட்ட சுமார் 1500 மைல்கள் நீளம் கொண்ட ஒரு புதர்வேலியைப் பற்றியும், அதில் சுமார் 12000 காவலாளிகள் பணிபுரிந்ததையும் தெரிந்துகொண்ட எழுத்தாளர், அதனை பற்றி மேலும் கேட்டறிய இந்தியா புறப்படுகிறார்..
இந்தியா வரும் அவருக்கு ஏமாற்றமே மிச்சம்.. இந்தியாவின் வரலாற்று ஆய்வாளர்கள் யாருக்கும் அந்த வேலியைப் பற்றி தெரிந்திருக்கவே இல்லை. அதனால் அவர் திரும்பிப்போய்விடவில்லை.. அவரே ஆய்வில் நேரடியாக ஈடுபடுகிறார். சாதியமும், மதமுமாக பிளவுபட்டு சீர்கெட்டிருந்த இந்தியாவின் அவல நிலையை பதிவிட்டுக்கொண்டே, வேலியையும் ஆய்கிறார்.. அந்த கொடூரமான வேலியின் எச்சம் எங்கேனும் இருக்கிறதா என்று தேடுகிறார்.. அந்த தேடலையும், தேடிய எச்சத்தையும் பற்றி நீண்ட நூலை எழுதுகிறார் ராய் மாக்ஸம்..
அந்த நூலின் பெயர்தான் The great hedge of India.. இப்படிப்பட்ட அதிமுக்கிய வரலாற்று ஆவணத்தை தமிழில் 'உப்புவேலி' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் சிறில் அலெக்ஸ் என்ற எழுத்தாளர்.. திரிக்கப்பட்ட இந்திய வரலாற்றினூடே இந்தியாவை தேடாது, இதுபோன்ற நூல்களின் வழி தேடினால் இந்தியாவை சரியாக புரிந்துகொள்ளலாம் என்பது என் கணிப்பு..
உப்புவேலி புத்தகத்தை படிக்க தொடங்கிய உடனே, நேராக தஞ்சை ரயிலடிக்கு சென்றுபார்க்க மனம் விரும்பியது.. அங்குதான் பழைய புத்தகங்களை விற்கும் கடைகள் சாலையோரத்தில் அதிகமாக இருக்கும்.. ராய் மாக்ஸம் கண்டுபிடித்த ஒற்றை புத்தகம்போல பல நூறு உண்மை வரலாற்று பதிவுகள் அந்த பழைய புத்தக கடைக்குள், தன் தூசி நிறம்பிய றெக்கையை யாராவது தட்டிவிட்டு பறக்கவிடுவார்களா என்று ஏங்கி தவித்திருக்கும்.. காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.. றெக்கைகள் தூசியுடனே காலத்தை முடித்துக்கொண்டன, அந்த புத்தகம் விற்ற மென்பறவைகள் பொருளாதாரத்தால் ஏதோவொரு கூண்டின் செக்யூரிட்டியாக அடைபட்டு காலம்தள்ள சென்றுவிட்டன, இங்கு ஒரு ராய் மாக்ஸம் இல்லையே என்ற கவலையுடன்!

சகா...
15/04/2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2