உப்புவேலியில் பிறந்த ஊழல்..

கடந்த பதினெட்டு நாட்களாக ஒரு போர் முனையில் நின்றது போன்றதொரு மாயை.. உடலை அதிகமாகவே வருத்திவிட்டான் இந்த பூசணிக்காய் தலையன்.. தினந்தினம் இறப்பு செய்திகளை கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் நாள் குறிக்கப்பட்டுவிட்டதோ என்றொரு அய்யம்.. முகக்கவசம் இன்றி நான் எங்குமே பயணித்தது இல்லை.. எங்கே எப்படி என் அழகை பார்த்தானோ அந்த பூசணிக்காய் தலையன்.. அவன் பிடியிலிருந்து விலகுவதற்குள் ஒரு பெரும் பாடு பட்டுவிட்டேன்.. பல நூறு அழைப்புகள்.. அனைத்தும், என்னுடைய தோழி மற்றும் குழந்தைகளுடைய உடல்நிலையை பற்றிய கேள்விகளை சுமந்து வந்திருந்தன.. என் தோழியும், நண்பன் வினோவும் இல்லையென்றால், என் நிலை என்னவாகியிருக்கும் என்றே தெரியவில்லை... மிகப்பெரும் அன்பு செலுத்தும் கூட்டம் என்னருகில் இருப்பதை நினைத்து கட்டற்ற மகிழ்ச்சி.. பெற்ற அன்பினை திருப்பி செலுத்திக்கொண்டேதான் இருக்கிறேன், இருப்பேன்.. இந்த பூசணிக்காய் தலையனை தகர்க்க ஒரேவழி அன்பை பரப்புவதுதான்..

என்னதான் இந்த பூசணிக்காய் தலையன் என்மீது பாய்ந்திருந்தாலும், அவன் கொடுத்த ஒற்றை நண்மை, 'நேரம்'.. பல நேரங்களில் நினைத்ததுண்டு, ஒரு பத்துநாட்கள் தனியாக புத்தக அறைக்குள் அடைபட்டு, வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று.. அதனை எப்படி இந்த பூசணிக்காய் தலையன் ஒட்டுக்கேட்டானோ தெரியவில்லை.. ராய் மாக்சமின் உப்புவேலியை படித்துமுடித்தபின் பிரமிளை சற்றே சுவாசித்து மன அமைதி பெற்று பின் இமையம் அவர்களின் செல்லாத பணம், நகுலனின் நிழல்கள், ஜென் கதைகள், நகுலனின் நாய்கள், மாடசாமியின் சொலவடைகளும் சொன்னவர்களும் என இந்த பதினெட்டு நாட்கள், பூசணிக்காய் தலையனுடன் போனதே தெரியவில்லை..
இப்படி வாசிப்பினுள் இளைப்பாறிய என் நெஞ்சம் சும்மா இருப்பதாகவே நினைத்துக்கொண்டது.. இப்படியான சும்மா இருந்த நாட்கள் பல உண்டு.. சிறுவயதில் விடுமுறைகளில் பெரும்பாலும் சும்மா இருப்பதுதான் வழக்கம்..
இப்படிதான் ஒரு மதிய வேளையில் வீட்டில் சும்மா இருக்கும்பொழுது, "அப்பா வெளியூரு போயிருக்காங்கன்னு தெரியாதா, மாட்ட புடிச்சி கட்டுத்தறில கட்டித்தொல" என்ற அம்மாவின் வழக்கமான பாட்டு சத்தத்தில் அந்த மாடுகளை பிடித்து தண்ணீர் காண்பிக்க நேர்ந்தது.. என்னதான் பருத்திக்கொட்டை புண்ணாக்கு போட்டாலும் மாடு என்னையே உபி முதல்வரை பார்ப்பது போல வெறித்து பார்த்தவண்ணம் இருந்தது... அது புரியாதவனாய் அதை உற்று நோக்கையில்தான் அறிந்துகொண்டேன் அதற்கு உப்பு வேண்டுமென்று.. உப்பிட்டதுதான் தெரியும், கடும் வெயிலில் குளிரான பன்னீர் சோடாவை ஒரே மொடக்கில் குடிக்கும் தாகமெடுத்தவனைப்போல ஒரே இழுவையில் தொட்டி நீர் முழுவதையும் முடித்தது.. பலமுறை உப்பு முடிந்துவிட்ட வேளைகளில், உப்பைப் போடுவதுபோல பாவனைகளை செய்து மாடுகளின் உளவியலுடன் விளையாண்டதுண்டு..
உப்பு மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் மிகவும் தேவையான ஒன்று என்பதை அறித்துகொண்ட நாட்கள் அவை.. அது வேறுமனே சுவையூட்டி மட்டுமல்ல.. நம் உடலுக்கு தேவையான சோடியம், குளோரின், மெக்னீசியம் போன்ற அயனிகளை கொண்டிருப்பன, அந்த table salt எனப்படுகிற உப்பு..
சோடியம் இரத்தத்தில் ஒரு எலக்ரோலைட்டாக செயல்படுகிறது.. அதன் அளவு குறைந்தால் விபரீத விளைவுகள்தான் மிஞ்சும்.. இரத்தத்தில் சோடியம் குறைந்தால் ஏற்படும் hyponatremia, கோமா நிலைக்கு கூட இட்டுச்சென்றுவிடும்.. அவ்வளவு ஏன், மருத்துவமனையில் உடல்நலக் குறைபாட்டால் அனுமதிக்கப்பட்டால் நமக்கு உடனே டிரிப்ஸ் ஏற்றிவிடுவார்கள்.. அதுவும் ஒருவித உப்பு கரைசல்தான்.. இப்படி உப்பு நம் வாழ்வில் முக்கிய பங்கினை வகிக்கிறது.. உப்பிற்கு ஐரோப்பியர்கள் மிகமுக்கிய இடமளித்தனர்.. ரோமன் அரசு கிமு 506 வாக்கில், உப்பினை வாங்குவதற்காக படைவீரர்களுக்கு 'சலேரியம்' எனப்பட்ட தனி ஊதியத்தை வழங்கியது.. அதுவே பிற்பாடு நாம் மாத ஊதியத்தை குறிக்க பயன்படுத்தும் 'salary' என்ற சொல்லாக மருவியது.. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்த உப்பினை, உப்புதானே என்ற குறைத்து மதிப்பிடும் பண்பு, நம் உடல்நலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.. இதனை உப்புவேலியில் ராய் மாக்ஸம் அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார் "உப்பு பற்றாக்குறையால் மக்கள் நோய்வாய்ப்பட்டனர்.. ஏறத்தாழ பல லட்சம் மக்கள் உப்பு தட்டுப்பாட்டால் இறந்திருக்கக்கூடும்.. இந்தியர்கள் உப்பை பெரிதாக மதிப்பளிப்பவர்கள் இல்லையென்றாலும் உப்பில்லாமல் எதனையும் உண்ணாதவர்கள்.."
உண்மைதான் நாம் உப்பை பெரிதாக மதித்ததே இல்லை.. அதற்கு காரணம் உப்பு மிக எளிதாக நமக்கு கிடைத்ததுதான்.. என் சிறுவயது முதல் பல முறை பார்த்திருக்கிறேன்.. ஐந்தாறு சாக்குமூட்டைகளில் உப்பை ஒவ்வொரு வீடுகளிலும் போட்டு செல்வார்கள்.. அது உணவுக்காக பயன்படுத்தப்பட்ட உப்பல்ல.. புகையிலை பதப்படுத்தலுக்காக வந்திருந்தவைகள்.. காயவைத்து, இலைகளை பிரித்து, குஞ்சம் கட்டி அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட புகையிலை கட்டுகள், உப்புக் கரைசலில் புனிதநீராடவிட்டு சிலபல நாட்கள் குழிக்குள் பதப்படுத்தப்படும்..
இப்படி உப்பின் தேவை கிராமங்களில் மிக அதிகமாக இருந்தது.. அப்படிப்பட்ட உப்பை ஒரு பெரும் வேலி கொண்டு தடுத்தது கிழக்கிந்திய கம்பெனி.. ஆமாம், 1869-70 ஆண்டில் மட்டும் உப்பால் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்த தொகை ரூ 4,25,00,000.. இது எவ்வளவு பெரிய தோகை என்பதை அறிய அன்றைய விவசாய கூலியை அறிவது முக்கியம்.. அன்றைய விவசாய கூலி மாதம் ரூ 3..
உப்புவரி வசூலுக்காக செய்யப்பட்ட செலவு ரூ 16,20,000 மட்டுமே..
அப்படியானால் நிகர லாபத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.. ஒரு விவசாய கூலி பெறும் குடும்பம், தன் ஆண்டு வருமானத்தில் மூன்று மாத வருமானத்தை முழுவதுமாக ஒரு ஆணடிற்கான உப்பு தேவைக்காக செலவிட நேர்ந்தது என்றால் அதனை இப்பொழுதைய நிலையில் நாம் நம்புவது மிகக் கடினம்.. அதுவும் இந்த கணக்கு வெறுமனே வங்காளப் பகுதிகளுக்கு மட்டுமே.. அப்படியானால் முழு இந்தியாவில் எவ்வளவு லாபத்தை உப்பின் மூலம் மட்டுமே இந்த கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருக்கும்..
நம்மவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன. உப்பை வேலியிட்டு மறுத்தால், உரிமையை நிலைநாட்ட போராடுபவர்கள் ஒருபுறம் இருந்தால், நீ தடுத்தால், நான் கடத்துவேன் என்பவர்கள் மறுபுறம் இருக்கவே செய்தார்கள்.. இந்த கொடுமையான உப்புவரி மிகப்பெரும் கடத்தலையும், கையூட்டையும் வளர்த்தெடுத்தது.. உண்மையில் இந்தியர்கள் முதன்முதலில் கையூட்டு பெற கற்றுக்கொண்டது உப்புவேலியில்தான்.. கடத்தல்கள் நீர்வழியே ஒரு புறம் நடக்க, கொட்டைகள் எடுத்து செல்கிறோம் என்றவாறு மறுபுறம் நடக்க.. கடத்தலை கற்றுகொடுக்கும் பல்கலைக்கழகமாகியது அந்த உப்புவேலி..
குறப்பிட்ட தொலைவில் இரவு நேரங்களில் உப்பு மூட்டைகளை அடுக்கிவிட்டு, அடுக்கியவர்களே அலுவலர்களிடம் காட்டிக்கொடுப்பது.. காட்டிக்கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு பணம் (incentive) இதற்கு ஒரு காரணம்.. இப்படியாக ஒரு புறம் அறங்கேறினாலும் மறுபுறம், அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகக்குறைந்த ஊதியத்தால், உப்பு வியாபாரிகள் அனைவரிடமிருத்தும் கட்டாய கையூட்டு பெற்றனர் அலுவலர்கள்.. அது உப்பின் விலையை மிக அதிகமாக்கியது.. பல லட்சம் கோடிகளை வரியாக பெற்று, அதன்மூலம் இந்தியர்களுக்கு கடத்தல் தொழிலையும் கையூட்டு பெறுவதையும் கற்றுக்கொடுத்த பெருமை உப்புவேலியையே சாரும்..
இந்த பூசணிக்காய்த் தலையன் இன்று பல லட்ச மரணங்களை நிகழ்த்துவதற்கும் இதுவே காரணம்.. ஆமாம் நண்பர்களே மனிதமற்று, வணிகத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு கையூட்டுகளையும் கள்ளச்சந்தைகளையும் ஊக்குவித்த அந்த உப்புவேலிதான் இதற்கு காரணம்.. அடுத்தடுத்த தலைமுறைகள் உப்புவேலியை மறந்து போனாலும் கள்ளச்சந்தைகளையும், கையூட்டுகளையும் மறக்கவே இல்லை.. நன்றாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.. அதன் பலன்தான் இன்று உட்கட்டமைப்பின்றி மருத்துவ வசதிகளின்றி எண்ணெற்ற இந்திய சகோதர சகோதரிகள் மரணத்தை தழுவுகின்றனர்..
பேய் அரசாள்கிறது, சாத்திரங்கள் பிணங்கள் தின்கின்றன.. இன்றளவும் சிப்பாய் கலகத்தின் தேவையும், ஒத்துழையாமை இயக்கத்தின் தேவையும் அப்படியேதான் இருக்கின்றன..
இவை அனைத்திற்கும் காலம் மட்டுமே பதிலுரைக்க வல்லது..
(இவ்வேளையில் போரை முன்னின்று எதிர்கொள்ளும் அனைத்து போராளிகளுக்கும், தொழிலாள நண்பர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..)

சகா..
01/05/2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2