விளையாட்டாக சொல்கிறேன்#24

புதுப்புது வேடமிட்ட திகதிகளுடன் நேரம் யாருக்காகவும் காத்திருக்க விரும்பாமல் கடந்துகொண்டே போயின, கேள்விகள் மட்டும் எப்பொழுதும் போல, மேப் இல்லா புதையலைப் போல தோண்டும் வரை மனதைவிட்டு வரமாட்டேன் என அடம்பிடித்து அழுந்திப்போய்க் கிடந்தன.. ஒரு பொழுதும் அவனை கல்லூரி கேண்டினில் பார்த்ததில்லை, பதினோறு மணிக்கு அவசரமாய் கடிபடும் சூடான பப்சுடனும் கண்டதில்லை. வேறுபட்டவன்தான், அவன் தனிமை விரும்பி, ஒரு கவிஞனைப் போல, ஒரு புத்தனைப் போல, ஒரு சந்நியாசியைப் போல.. கவிஞன் தனிமையைப் பிழிந்து சொற்களை தேடுவான், நண்பன் வாழ்க்கையைத் தேடினான். புன்னகை பழகாத முகம், மாற்றம்பெறாதா அவனது ஆடைகள், பெயருக்கென ஒரு செருப்பு, தன்னை உடைக்கப்போகிறானோ என அஞ்சி நடுங்கி எழுத்துகளை அவன் எழுதும்பொழுதெல்லாம் பாழாக்கும் அவனது எழுதுகோல், காது அழுக்கை எப்பொழுதுமே சிறிது தாங்கி நிற்கும் அவனது சைக்கிள் சாவி கொத்து, என அவனது அடையாளங்கள் அனைத்துமே ஒரு கவிஞனின் கற்பனைக்கு தீனிபோடவல்ல இயற்கையின் அழகை ஒத்த கருப்பொருட்கள். 

இரண்டாம் ஆண்டு பாதி கடந்திருக்கும், எனக்கேதோ ஒரு திடீர் புத்தி ஒன்று உதித்திருந்தது.. அறிவென்றால் ஆங்கிலம்தானென்ற நம்பிக்கை வளர்ந்திருந்தது. ஆங்கிலம் கற்கலாமே என்றே முடிவு செய்தேன்.. தஞ்சையில் சிலபல திரைக்கொட்டகைகளையும், பேருந்து நிலையத்தையும், புரோட்டா ஸ்டால்களையும் தவிர வேறு எதுவும் அறியாத நான் அழைத்தது, அன்பை வெளிப்படுத்த தெரியா அந்த அன்பு நண்பனைதான்.. 

டேய், என்னை ஒரு நல்ல ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர்ல சேத்துடுவேன்..

ஆமா, இங்கிலீச படிச்சி என்னத்த கிழிக்கப்போற நீயி.. வேற வேல இல்ல பாரு எனக்கு..

சரி விடு, நானே பாத்துக்கிறேன்..

எப்பொழுதும் போல அலட்சிய பதிலுடன், கண்டுகொள்ளாதவனாக சென்றுவிட்டான். அன்று மாலையே எனக்கொரு அழைப்பு,

ஹலோ, யாரு!

நாந்தான், உனக்கு பேர சொன்னாத்தான் தெரியுமோ.. 

ஓ.. சொல்லுடா..

ஸ்போக்கன் இங்கிலீஷ் போக கேட்டியே, நமக்கு தெரிஞ்ச ஒரு மேடம் இருக்காங்க, சாந்தபுள்ள கேட்டுகிட்ட வந்துடு ஒரு எட்டு மணிபோல!

எதையும் பதிலாக எதிர்பாராது, அந்த ஒற்றை ரூபாய் துட்டுக்குள், அவன் அன்பை அடக்கி அந்த ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வழியாக அனுப்பியிருந்தான்..

ஏதோவொரு பேருந்தில் ஏறி சரியாக எட்டுமணிக்கு சென்றடைந்தேன்.. காலதாமதத்திற்கு ஒரு கடியை ஏன் இனாமாக வாங்க வேண்டும், அவனுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கிறதென்றானே!

வாடா, சரியா வந்துட்டியே.. இங்கதான் இருக்கு, அந்த முக்கத்துலதான்.. எதுவும் சாப்டுறியா

சாப்புடுறேன்னு சொன்னா மட்டும் பொறுமையாவா இருக்க போற என்று மனதில் நினைத்துக்கொண்டே, வேண்டாம் என்ற பதிலுடன் நடந்தேன், அவன் என்னை தூக்கிக்கொண்டுதான் போனான்.. ஆமாம் அப்படிதான் உணர்ந்தேன்.. அப்படியொரு வேகம், என் கால் தரையில் பட்டதாக தெரியவில்லை.. ஏன் இப்படி ஓடுகிறான் அவன், அப்பொழுது விளங்கிக்கொள்ளவில்லை நான்..

மேடம், மேடம்
நடந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை மறைத்து பேசத்தொடங்கினான்..

இவன்தான் நான் சொன்ன பையன், ரொம்ம நல்லா படிப்பான்
(இவனென்ன, என்னைய வேலைக்கா சேத்துவிட போறான்.. மனதிற்குள்ளேயே கவுன்டரை கண்ட்ரோல் செய்தேன்)

சரி சரி.. நாளையிலேர்ந்து வாங்க, அஞ்சிலிருந்து ஏழு வர நடக்கும் பாடம்.. அதுல ஒரு மணிநேரம் டிப்ளமோ இன் கம்யூட்டர் அப்ளிகேசன், மீத ஒரு மணிநேரம் ஸ்போக்கன் இங்கிலிஷ்.. அட்வான்சலாம் சொல்லிடுங்க சார், உங்க நண்பர்ட்ட..

சரி மேடம், அதெல்லாம் சரியா வந்துடும்..

(டிப்ளமோவா, நானெப்ப அத கேட்டேன்.. இவன் வேற, என்ன கேட்டேன், எதுல கோத்துடுறான் பாரு- மீண்டும் அதே மைன்ட் வாய்ஸ்தான்)

சரிங்க சார், எனக்கு கிளாஸ் இருக்கு, பேப்பர் காச நாளைக்கு அனுப்பி வைக்கிறேன், என்று சொல்லி மேடம் கிளம்பிவிட்டார்..

வெளியில் சற்றுதூரம் வந்திருப்போம், ஒரு இளம்பெண், அவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.. அந்த பெண் பார்வை அப்படி அனைவராலும் புரிந்துகொள்ளும்படி அவ்வளவு எளிமையானதாக இல்லை. அவனுக்குமே நன்றாக தெரிந்தது, அந்த பெண் தன்னைத்தான் பார்க்கிறார் என்பது.. சற்றும் சலனப்படாத அவன் எளிதாய் கடந்து வந்தான், எதிரிலேயே அமைந்திருந்த தேநீர் நிலையத்தில் ஸ்ட்ராங் டீயை குடித்துவிட்டு, பேருத்து நிறுத்தத்தில் நின்றிருந்தோம்.

சரிடா, பஸ் வருது, இதுலயே போய்டுறேன்.. நாளைக்கு பாக்கலாம்..

சரி பத்தரமா போ.. கைல சில்ர காச எடுத்து வச்சிக்க டிக்கெட் எடுக்க, இல்லனா கண்டெக்டர் கண்டமேனிக்கு கடிப்பார்டா, 
(அத நீ சொல்ற) - பிராக்கெட் இட்டு சொல்வதனால் அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை..

விழுந்தடித்து ஏறி, எனக்காகவே காத்துக்கிடந்த அந்த சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். அவனை எட்டிப்பார்க்கும் சாக்கில், அந்த கோச்சிங் சென்டரையும் ஒரு பார்வையிட்டேன், என்னதான் இருந்தாலும் நான் படிக்கப்போகும் சென்டர் அல்லவா, உண்மையில் வேறு காரணமேதும் இல்லை..
அதே பெண், அதே பார்வை..
அப்பொழுதும் அவனின் உர்ர்ர் என்றிருந்த முகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை..

இவன் நல்லாவே நடிக்கிறானே! நாம வந்த பிறகு கட்டாயம் அந்த பெண்ணை பார்க்கப்போவான், பேசவும் செய்வான்..
சற்றே பின்னால் கூர்த்து பார்த்தேன்..
இல்லை இல்லை, அவன் நான் நினைத்தது போலில்லை.. என்னை பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, அம்பி விக்ரமைப் போல, பேருந்தின் பின் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.. 

பேருத்து வளைவுகளில் சுற்றும்பொழுதெல்லாம் தலை சுற்றியது எனக்கு, அதெப்படி ஒரு பெண் தன்னைப் பார்த்து, மதித்து பேச நினைக்கும் பொழுது, அதனை தட்டிக்கழிக்கிறானே, அடடா இதென்ன சோதனை, ஒரு கேள்வி குறைந்துவிட்டதே என்று மகிழ்ந்தால் மீண்டும் அதற்கு இணையானதொரு வேறு கேள்வி தோன்றிவிட்டதே.. மீண்டும் மூன்று கேள்விகள்.. எங்கே வேலை? படிப்பை பற்றிய சிந்தனை? இப்பொழுது யார் அந்தப் பெண், ஏன் நீ முகம் கொடுக்கவில்லை? இருங்க இருங்க.. எங்கே வேலை? எங்கே வேலை? மேடம் சொன்னாங்களே ஏதோ.. ஆமா, அந்த பேப்பர் காச நாளைக்கு வாங்கிக்கலாம் என்று.. அச்சோ, அவன் பார்க்கும் வேலை என்னவென்று தெரிகிறதா, பேப்பர் போடும் வேலை.. தினந்தினம் பள்ளி படிப்பின்பொழுதிலிருந்து, விடியும் முன் எழுத்து சென்று அவன் பார்த்த வேலை, இந்த நகரம் முழுவதும் சைக்கிளில் சென்று பேப்பர் போடும் வேலை! சைக்கிள் வாங்கியதற்கு முன், நடந்தே இந்த வேலையை செய்திருப்பான்..

அதனால்தான் அந்த சில நிமிடங்களில் கனிந்த காதலையும் துறந்திருக்கிறான். அம்மாவை கவனிக்க, சேமிக்க, படிக்க, வீட்டு வாடகை கொடுக்க, உணவிற்காக என தன் செலவினங்களை தானே இந்த சிறுவயதில் ஏற்றிருக்கிறானே. எப்பொழுதும் யார் அழைத்தும் எந்த சினிமாவுக்கும் வந்ததில்லையே அவன்.. அவ்வளவு ஏன், பூங்காவில் கூட அவனின் காலடித்தடங்கள் பதிந்திருக்க வாய்ப்பில்லை. வேலை, முதலாளி, பேப்பர், அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. படிப்பின் மீது நாட்டமற்று இருப்பதற்கும், காதல் மீதும், காதலை கற்பிக்கும் சினிமாவின் மீதும் அவனுக்கு ஏன் அவ்வளவு வெறுப்பென்றும் இப்பொழுது அவன் விளக்க தேவையில்லை. 
பேருந்து மௌனமாக இருளை கிழித்து பயணிக்கிறது..
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கிறது இந்த குறள்,

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு" - குறள்782

தொடருங்கள்

விளையாட்டாக சொல்கிறேன்#24

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2