விளையாட்டாக சொல்கிறேன்#22

பசி பற்றி அறிந்திருக்கிறீர்களா நீங்கள். பசி என்றால் வெறுமனே பசியல்ல முழுமையான பசி, வயிற்றை அப்படியே உள்ளிழுக்கும் பசி. பலருக்கும் பல பசிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. அறிவுப்பசியில் தொடங்கி வயிற்றுப்பசி வரையில். பசிகளுக்கெல்லாம் அதிபதி வயிற்றுப்பசிதான். கொடிது கொடிது வயிற்றுப்பசி கொடிது! இந்த பசுமைப்புரட்சி வந்த காலத்திற்கு முன்பு பசி பல உயிர்களை உண்டு செரித்திருந்தது. அதற்கு பின்னும் பசி என்ற ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டதா என்றால், இல்லவே இல்லை! பரவலாக இல்லையென்றாலும், ஈவுஇரக்கமற்ற மக்களால், அந்த நோய் பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. இடையூறுகள் சூழ வாழ்ந்த வேளைகளில் அப்பா பல வயிற்றுப் பசிகளை அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன். அது வெறுமனே விரதப் பசியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்பாடு இடையூறுகள் கடந்தும் வயிற்றுப்பசியை சில குறிப்பிட்ட நாட்களில் விரும்பி ஏற்றிருந்தார், கடவுள்களின் பெயரால்.

இப்படி யூகித்திப்பாருங்கள், ஒரு பள்ளிப்படிப்பை தொடரும் சிறுவன், அப்பா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார், அம்மாவால் எந்த வேலைகளும் செய்து பணமீட்ட முடியாத நிலைமை, உறவுகளின் கனிவுப் போர்வை சற்றும் படராதவனாக இருக்கிறான் அவன். இளமை, வறுமை, பசி இவைகள்தான் நெருங்கிய உறவுகளாக அவனுடன் கைகோர்த்து நடந்து செல்கின்றன. என்ன செய்ய அடுத்த வேளை உணவிற்கு? தெரியாது! யாரிடமாவது யாசிக்கலாமா? அய்யோ என் மரியாதை என்னாவது! இல்லை இல்லை, யாரிடமாவதிருந்து திருடிவிடலாம் தெரியாமல்? கொடுமையே, என்னமாதிரியான எண்ணமது, இப்படி வாழ்வதற்கு செத்துவிடலாமே! சாவதற்கு முயற்சி வேறு எடுக்கவேண்டுமா, வயிறு ஒன்று போதாதா, இதோ சாகடித்துக்கொண்டிருக்கிறதே, இதைவிட கோரமான சாவேதும் உண்டோ உலகில், பிதற்றுகிறான், பிதற்றுகிறான். வறுமையின் உச்சத்தில், பசியின் கோர பிடியில் வாடிக்கொண்டிருக்கையில், அப்பா ஒரு இருள் சூழ்ந்த அறைக்குள் இருமிக்கொண்டிருந்தார். இடைவிடாத இருமல். மருந்து தீர்ந்துவிட்டதா, இவர் தீர்ந்தால் ஒருவேளை என் பசி தீருமோ! மீண்டும் பிதற்றல், எல்லைகள் ஏதுமற்ற குரூர எண்ணங்கள், பசி கொடுத்த எண்ணங்கள்..

பல இடங்களில் அலைந்து திரிந்தும் வேலை கிடைத்தபாடில்லை. எது தெரியக்கூடாது என்பதற்காக அணிகிறோமோ, அந்த இடத்தில் மட்டும் கிழிந்திருந்த கால்சட்டையும், பெயரளவில் ஒரு மேல் சட்டையும் அணிந்துகொண்டு அவன் ஏறாத கடைகள் இல்லை. அவனின் வறுமைக்கு இரங்கும் முன் அவன் ஆடைகளை பார்த்து எடைபோட்டுவிட்டிருந்தார்கள்.. 'வெளியே போ' என்றொரு ஒற்றை சொல்லை கேட்டுக்கொண்டே, வடைகளும், அன்றுவரை அவன் சுவைத்திராத பலகாரங்களும் அடுக்கப்பட்டிருந்த தெருவழியாக மனதில் எந்த சூதுவாதுமின்றி, ஏக்கத்துடன் கடந்துகொண்டிருந்தான். அவன் எண்ணம் சட்டென்று சலனப்பட்டு, அடங்கியது. உண்மைமான், பசியை தாங்கிக்கொள்ள முடியாத நான் ஒருவேளை அந்த இடத்தில் இருந்திருந்தால், ஏதோவொரு கடையில் களவாண்டிருக்கலாம், அவன் ஏன் அப்படி செய்யவில்லையென தெரியவில்லை. பசியிலிருந்த தன்னைக் காப்பதைக்காட்டிலும், தன்னின் மரியாதையைக் காப்பாற்றி என்ன செய்யப்போகிறானோ இந்த சிறியவன். சிலபல ஏழைகளுக்கு, எதாவதொரு கருத்தில் தற்பிடித்தம் எப்பொழுதும் இருப்பதில்லை, ஆனால் சுயகவுரவம் அளவற்று இருக்கும் என்றே நினைக்கிறேன். என்னுடைய இந்த கருத்திற்கு அவனின் நடத்தைதான் காரணம்.

வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது, அவனிடம் அம்மா சொல்லி அனுப்பியிருந்த செய்தி, அவனின் மனதை ஏதோ பிசைந்துகொண்டு இருந்தது. 'எப்படியாவது காசோட வாடா சாமி, நாமனாலும் தண்ணிய குடிச்சிட்டு படுத்துக்கலாம், அப்பாவால முடியாதுடா சாமி, மருந்துவேற கொஞ்சமும் இல்ல!' அந்த குரல், ஓலமிடுவது போலவே அவன் மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. முந்தைய இரவிலிருந்து சாப்பிடாத அவனுக்கு, மாலைவரையில் வேலைதேடி அலைந்தது, இன்னமும் அலுப்பையும், மயக்கத்தையும் தந்திருந்தது. சற்றே, கைவிடப்பட்ட சாலையோர சாய்ந்த மரத்தின் மீது உட்கார்ந்தான். ஏறக்குறைய ஒருமணிநேரமாக, சுற்றி நடக்கும் காட்சிகளை தன்னை அறியாது கவனித்துக்கொண்டே, கண்ணயர்கிறான். அப்படியே அந்த எமன் என் உயிரை எடுத்துக்கொண்டு போனால்தான் என்ன! சிறுவனுக்கு அந்த எண்ணம் உதிப்பதெல்லாம் அதீதம்தான். அவன் அழைப்பிற்கு இணங்க, வெளிறிய உருவத்தில், வெளியில் நீட்டியிருந்த கூர்மையான மஞ்சள் பற்களுடன், பசுவின் மீது அமர்த்துகொண்டே, அந்த சிறுவனின் கழுத்தில் கயிற்றை எரிகிறான் எமன். ஏதோ ஒரு சைக்கிள் பெல் சத்தத்தில், எமன் பசுவை அரட்டிக்கொண்டே பயந்து ஓட, திடுக்கிட்டு எழுந்துவிட்ட அந்த சிறுவன், செய்வதறியாது திகைத்தான். சாவு வீட்டில், சவப்பெட்டி முன் அயர்ந்து தூங்கிவிட்டு, கனவில் பற்பல காட்சிகள் கண்டுவிட்டு, திடீரென்று எழுந்தது போலொரு உணர்வு அவனுக்கு. தன்னை எழுப்பிவிட்ட சைக்கிளை நோக்கியவன், ஏதோ மனதில் தோன்றியதுபோல் ஓடினான். ஆமாம் அவனுக்கு உண்மையாக ஏதோ ஒரு எண்ணம் தோன்றியருக்கிறது, அப்படிதான் இருந்தது அவனின் ஓட்டம். நம்பிக்கை ஓட்டம்!

வண்டிக்காரதெருவில், சாலையோர கோயில் ஒன்றில், பெயருக்காக அந்த சாய்ப்பு போடப்பட்டிருந்தது. மாலை ஆறுமணியை கடந்துவிட்டிருந்ததால், அந்த சாய்ப்பால் என்ன பயனென அவனால் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாததாக இருந்தது. 'அண்ணே, அண்ணே', இரண்டுமுறை கூப்பிட்டால்தான் திரும்பவேண்டும் என்ற முடிவில் இருந்திருப்பார் போல, அவனின் அந்த கனிவான குரலுக்கு செவிசாய்த்தார் அவர். "எனக்கு ஏதாச்சும் வேல குடுங்கண்ணே, எந்த வேலையானாலும் செய்வேன், காலையில எத்தன மணிக்குனாலும் எந்திரிச்சி வந்திருவேன், பிளீஸ் அண்ணே", அவனையும் மீறி, அந்த வேலை கிடைத்தே ஆகவேண்டிய அழுத்தத்தை அவனின் கண்கள் விளக்கிக்கொண்டிருந்தன. 

தொடருங்கள்.

விளையாட்டாக சொல்கிறேன்#22

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10