விளையாட்டாக சொல்கிறேன்#21

சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற மகனின் கேள்வியிலிருந்து ஒளிபெற்றிருந்தது அன்றைய இரவு. சத்தத்திற்கும் காற்றுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு, காற்றை எந்த வழியில் எப்படி அழுத்தி அனுப்புகிறோமோ, அதைப்பொறுத்தே சத்தம் அமையும் என்பதை விளக்க, ஏற்றுக்கொள்பவனாக இல்லை மகன்! நீ பேசுவதே, காற்றை வேறுபட்ட அழுத்தத்தில் வெளிப்படுத்துவதனால்தான் என்றவுடன், அப்படின்னா காத்து இல்லாத வெளியில் சத்தம் இருக்காதா, என்ற அவனின் கேள்வியில் உரைந்து விட்டேன். இவ்வுலகம் தோன்றியதன் காரணம் ஒரு பெருவெடிப்பெனில், அந்த வேளையில் சத்தம் தோன்றியிருக்காதோ என்றொரு கேள்வி எனக்குள் எழுந்துவிட்டது. அடடா, எப்படிப்பட்ட முட்டாள்தனமான விளக்கம் நான் கொடுத்திருக்கிறேன் என்றவாறு, இரு பொருட்கள் உராய்வினால்தான் சத்தம் ஏற்படுகிறது, அது எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி உராய்வால் உருவான சத்தம் காற்றின் மூலமோ, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலமோ பயணித்து நம் காதுகளை அடைகிறது, என்றேன். 

அன்னைக்கு ஒருநாளு புயல் அடிச்சிச்சுல ஓஓஓஓன்னு, அந்த சத்தம் எது எதோட உராஞ்சுச்சுனு வந்துச்சி, என்றவனிடம், காற்று உராய்ந்த சத்தமென்ற ஒற்றை பதிலுடன் மடக்கி தூங்கவைத்துவிட்டேன். 

மணி சரியாக ஞாபகமில்லை, கட்டிக்கிடந்த மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு, என்றும் இல்லாதது போல் கம்மென்று கிடந்த வானத்தை பார்த்துவிட்டு, வந்து படுத்துவிட்டேன். சற்றுநேரத்தில் ஏதோ பேய் வந்ததுபோலொரு சத்தம். அப்படியே ஆடிப்போய்விட்டேன், வீடே ஆடிக்கொண்டிருந்தது, தெற்கிலிருந்து வந்தது அந்த கடும் சத்தம், காற்று கடத்திவந்திருந்த சத்தம் அது! ஆயிரம் யானைகள், பட்டுப்போன பனைமட்டைகள் மீது நடப்பதுபோலொரு பெருஞ்சத்தம். என் வயதிற்கு இப்படியொரு சத்தத்தை இதுவரை கேட்டதில்லை. இப்படித்தான் பலர் கூறியிருந்தனர் கஜா புயலடித்த இரண்டாவது நாளில்.

இந்த பிரபஞ்சம் முழுதும் விரவிக்கிடக்கும் எண்ணற்ற விண்மீன் கூட்டங்களும், விண்மீன் பேரடைகளும், கோள்களும், துணைக் கோள்களும், தன்னுடைய நிறைக்கு தகுந்தாற்போல ஈர்ப்புவிசையை கொண்டு ஒரு காற்றற்ற வெற்றுவெளியில், கேட்பாரற்ற பம்பரத்தை போல சுழன்று கொண்டிருக்கின்றன. அப்படியான வெற்று வெளியில், சுற்றும்பொழுது, தலைசுற்றி ஒன்றையொன்று மோதிக்கொள்வதால் உண்டான சத்தங்கள் யாவும் நம் காதுகளை வந்தடைவதில்லை, நீரினுள் மூழ்கி கத்தினால் வெளியில் கேட்பதில்லையே அதைப்போல. சலனமற்ற வெளியினுள், கோளின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் காற்றுமண்டலம்தான், சத்தத்தை கடத்திசெல்லும் ஊடகம். நாம் கேட்பதும், பேசுவதும், வாழ்வதும், சாய்ந்த கோணத்தில் தன்னைத்தானே சுற்றும் இந்த உருண்டையினால்தான். இந்த சாய்வின் மர்மம்தான் கடவுள்களுக்கான கதவாக இருக்கலாம். இந்த சாய்வின் விளைவுதான் பருவநிலை மாறுபாடும், புயலும், மழையும்!

சாலைகளெங்கும் மரங்கள் சாய்ந்து கிடந்ததால், இரண்டு நாட்கள் ஆகிவிட்டன ஊர்போய் சேர. வழியெங்கும் பலநாட்களாக கவனிக்கப்படாத கூந்தல் போல மரம் செடி கொடிகள் பிய்ந்து கிடக்க, ஷாம்பு விளம்பரங்களில் கொட்டிக்கிடக்கும் பொடுகினைப் போல தென்னைமரங்கள் யாவும் பிடுங்கி கிடத்தப்பட்டிருந்தன. போகும் வழியெங்கும், ஒவ்வொரு முறை சாலையோரத்தில் கண்பார்வை செல்லும்பொழுதெல்லாம், பிரமிப்பும் கவலையும் ஒரு சேர வந்து மனதை பிசைந்தெடுத்தன. கடந்த ஒன்றிரண்டு நாட்களாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதைப்பற்றிதான் விவாதமாக ஓடிக்கொண்டிருந்தாலும், ஏன் இவர்கள் கவனக்குறைவாக இருந்தார்கள் என்றொரு கோபமும் கூடவே பள்ளிகொண்டதை தவிர்க்க இயலாதவனாக, மொட்டைவெளியாய் காட்சிதந்த ஊருக்கு வந்து சேர்ந்திருந்தேன்.

இன்றைய இரவை உயிரோடு கடந்துவிட்டால், நண்பர்கள் இருக்கிறார்கள் நம்மை காப்பாற்ற என்று மனதுள் நம்பிக்கையால் உயிரை பிடித்துக்கொண்டு, வீட்டினுள் கதவை இருகைகளால் அழுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள் பலர். இரவை கடந்தும் உயிர் இருந்தாலும், அதன் பிற்பாடு தம்மை காக்கப்போகும் மாடுகன்றுகளை காக்க, அதனை ஓட்டிவர சென்று, மாட்டுக்கொட்டகையிலேயே அந்த நரக இரவை ஏதோவொரு சிறு நம்பிக்கைக்குள் ஒளிந்து கழித்திருக்கிறார்கள் சிலர். என்றோ ஒருநாள், ஏதோ தேவைகளுக்காக குருவிகளைப்போல, அரைவயிற்றை மிச்சம் பிடித்து, சேர்த்துவைத்திருந்த உடமைகளை பொருட்படுத்தாது, வயலில்களிலும், ஓடைகளிலும், ஆற்றினுள்ளும், சேற்றினுள்ளும் இறங்கி ஓடி பள்ளிகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் பலர். ஒற்றை இரவில், காற்றில் மட்டுமே கடக்க வல்ல பெருஞ்சத்தத்தில், மொத்தத்தையும் இழந்த மக்களுக்குள், எவ்வளவு விட்டுகொடுத்தல்கள், அன்பு பரிமாற்றங்கள், உதவிகள். அன்றைய இரவிற்கு பின், கடவுள்களின் எண்ணிக்கை அதிகமாகவும், சிலைகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்திருந்தன கோயில்களுக்குள்.

ஆண்டுகள் மூன்றாகியும், சரியான வீட்டினை கட்டிக்கொள்ளமுடியாமலும், இழந்த பொருட்களை மீட்டுருவாக்க முடியாமலும், அழிந்த உயிர்களை மறக்க இயலாமலும், எங்கோ ஒரு மூலையில் அழுகை சத்தம் நிற்காமல் கேட்டுக்கொண்டேதான் இருந்திருந்தது. அப்பொழுதுதான் தோன்றியது என் மகனின் கேள்விக்கான சரியான பதில்! தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாது நினைத்துக்கொண்டேன், "இந்த பெருவெடிப்பு நிகழாமல் இருந்திருக்கலாமோ, குறைந்தது இந்த பேருருண்டை, உயிர்களுக்காக சற்றே சாய்ந்துகொடுக்காமல் இருந்திருக்கலாமோ, அதுவும் இல்லையென்றாலும், அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட கடவுள்கள், காற்றற்ற வெற்றுவெளியினூடே உயிர்களை படைத்திருக்கலாமோ", என்று!

விளையாட்டாக சொல்கிறேன்#21

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2