விளையாட்டாக சொல்கிறேன்#23

வேளாவேளைக்கு இல்லையென்றாலும், இருவேளை உணவுக்காகவேணும், வேலை கிடைத்ததில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அதிலும் சிலநாட்களுக்கு ஒரு வேளை உணவை இழக்க நேரிடலாம், அப்பாவின் மருந்து செலவிற்காக! இருந்தென்ன, ஊதியத்தை தாண்டி ஏதேனும் முதலாளி கொடுத்துவிடமாட்டாரா என்ன? அபரிவிதமான நம்பிக்கை அவனுக்கு, முதலாளியின் மீதல்ல, அவனின் உழைப்பின் மீது.

'என்னடா, விடியிறத்துக்கு முன்னயே எந்திரிஞ்சி போயிடுற, அப்படி என்ன வேலன்னு சொல்லிட்டுதான் போயேன்', அம்மா பலமுறை கேட்டும், அவனிடம் சரியான பதிலில்லை.. அதெல்லாம் நல்லவேலதான், வரேன், என்றவன் பேச்சற்று சாய்வு நாற்காலியில் கிடந்த தன் அப்பாவின் காலின் விழுந்து வணங்கி, புறப்படலானான். என்னதான் உதவாக்கரை, பெற்ற பிள்ளையை வளர்க்க தெரியாதவரென ஊர் சொன்னாலும், அப்பாவாயிற்றே! தான் பெற்ற மகனுக்கு தன்னை பிடிப்பதற்கு, தமக்கு சிறப்பு பண்புகள் எதுவும் வேண்டுமா என்ன! 
அப்பாவையும், அம்மாவையும் தவிர, வேறு யார் காலிலும், ஏன் கடவுளின் காலிலும் விழுந்தவனில்லை அந்த சிறுவன். யார் சொன்னது சிறுவனென்று, அந்த பெரிய மனிதன்!

சரியாக மூன்றரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்ட அவன், திரும்பும்பொழுது மணி பத்தோ, சில வேளையில் பதினொன்றோ ஆகிவிடலாம். தினந்தினம் பள்ளிக்கு காலதாமதமாக செல்வதுதான் வழக்கம். பாட நேரங்களில் கவனிக்கமுடியாது தூங்கிவிழுவதும், அதற்காக ஆசிரியரிடம் அடிவாங்குவதும் அவனுக்கு வாடிக்கை. அப்படி அடிவாங்கும் வேளையில் கூட, தன் நிலைமையை சொல்லி அனுதாபத்தை சேகரிக்க நினைக்காத தைரியசாலி அவன்.

அதற்குபின் பல ஆண்டுகள் இருக்கும், அதே வேலை, அதே நிலைமை. கல்லூரிப் படிப்பிற்கு வந்துசேர்ந்துவிட்டான். அவனுக்கான முதல் நண்பனாக அவனால் அங்கீகரிக்கப்பட்ட என்னிடமும் அவனின் கதையை என்றுமே கூறி கை நீட்டியதில்லை. என்ன மனிதனவன், என் நிலைமை இதுதானென அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தால் யார்தான் உதவி செய்ய வரமாட்டார்கள்... கேள்வி எனக்குள் மட்டும்தான் இருந்தது, வெடுக்கென கடித்துவிடும் கோவக்காரனிடம் நான் கேட்டதில்லை அந்தக் கேள்வியை.. அந்த கோபம், அவன் வாழ்வு முறை கொடுத்த பரிசு, அவனின் இயற்கை சுபாவமன்று. வாராவாரம், கல்லூரி விடுதியிலிருந்து ஊருக்கு செல்லும்பொழுதெல்லாம் ஐம்பது ரூபாயை மட்டுமே கையில் கொடுக்கும் என் அப்பாவைப்பற்றி எனக்கேன் கோவம் வரவேண்டும்.. எனக்கு உதவ அப்பா நலமோடு இருக்கிறாரே, ஆனால் அவனுக்கு? மென்மேலும் தடிமனான கேள்விகள் என் மனதிற்குள், இருண்ட பெட்டிக்குள் அகப்பட்டிருந்த ஸ்காடிஞ்சரின் (Schrödinger's cat) பூனை போலவே, அமைதியற்று எழ, எதுவும் அறியாதவனாய், அனுதாபமற்று வெறும் நண்பனாக பேசலானேன் அவனிடம்.

காலை எட்டரை மணிக்கெல்லாம் தொடங்கும் கல்லூரியில், அவன் வரும் நேரம் எப்பொழுதும் இரண்டாவது பிரியட்தான். ஆனாலும் முதல் பிரியடில் அவனுக்கு ஆப்சென்ட் விழுந்ததில்லை. சரியாக நூற்றுபன்னிரெண்டு மாணவர்கள் படிக்கும் அந்த வகுப்பில், யாரை தயார்செய்து வைப்பானோ நானறியேன், ஆனால் என்னைப்பற்றி அறிந்து என்னை ஒருகாலும் செய்யச்சொன்னதில்லை அந்த வேலையை. பிராக்ஸி கொடுப்பதெல்லாம் கலையென வளர்ந்த காலமது! பிசிக்கல் கெமிஸ்ட்ரி ஈஸ் லைக் அன் ஓஷன், என்ற ஆசிரியரின் சொற்களுக்கு பின்னணி இசை கோர்கத் தொடங்கிவிடுவான் தன் பெருமூச்சு சத்தத்தால், அவன்தான் அமர்ந்த ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே தூங்கிவிடுவானே!

இப்படி அயர்ந்து பிசிக்கல் கெமிஸ்ட்ரி என்ற கடலையும் மறந்து தூங்குமளவுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டு வருகிறான் என்பது விளங்கவில்லை. ஒரு நாள் வீட்டிற்கு அழைத்திருந்தானென, அவனுடனே செல்ல நேர்ந்தது. சாதாரணமாக நான் வெளியில் செல்வது கிடையாது, காரணம், கையிருப்பு தொகை மீண்டும் வீட்டிற்கு பேருந்தில் செல்லவே சரியாக இருக்கும்.. அப்படி இப்படி தேர்த்தி வைத்திருக்கும் தொகையை கொண்டுதான் சினிமாவுக்கும், சில வேளைகளில் தஞ்சை ஆத்துப்பாலத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஓடும் கிரிக்கெட்டை எட்டிப்பார்க்கவும் சென்றிருக்கிறேன். இந்த முறை அவனின் இல்லத்திற்கு.. முதல்முறையாக அழைத்துச்செல்கிறான். அடர்த்தியாய் அமைந்திருந்த தெருக்களின் வழி சென்று, குறுகலான சந்துகளுக்குள் பாம்பைப்போல வளைந்து நெளிந்து ஓடும் சாக்கடை குழாய்களை அளந்து, சிறிய பாதைகளுக்குள் உடலை நுழைத்து சென்றடைந்த வீட்டில், தன் அம்மாவை அறிமுகப்படுத்தினான். அப்படியொரு பாசம் அவரின் சொற்களில். எந்த மனிதனையும் எளிதில் கரைத்துவிடும் மனதுக்காரர். எல்லா அம்மாக்களுக்குமே உரிய ஒரு பண்பான, தன் மகனை, அந்த மகனின் நண்பனிடம் குறைகூறுவதையும் கேட்டு அவனை விளையாட்டாக திட்டிக்கொண்டே உணவருந்திவிட்டு, திரும்புகையில், அப்பா இருக்கும் அறையை காண்பித்துவிட்டு அனுப்பிவைத்தான், நானும் என் உடலை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்படலானேன். 

வழி நெடுகிலும் அந்த இருள் பீடித்த அப்பாவின் அறைதான், ஆற்றின் மூலையில் அடர்த்தியாய் சேர்ந்திருக்கும் வெங்காயத்தாமரை போல, என் மூளை பள்ளங்களின் வரப்புகளில் தேங்கி நின்றது.. நினைவுகளை சற்றே மாற்றிவிட எண்ணி செய்த வேலைகளெல்லாம் பயன்கொடுப்பதாக இல்லை.. இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது, நாளையே அவனிடம் இந்த கேள்விகளை கேட்டுவிடவேண்டும், என்னென்ன கேள்விகள், ஆமாம், என்ன வேலை செய்கிறாய்? அப்பாவிற்கு என்ன செய்கிறது? கவனச்சிதறலில் இருக்கும் உனக்கு, படிப்பை பற்றிய சிந்தனைதான் என்ன?

மறுதாள், மறுபடியும் அதேபோலொரு பொழுதுதான், மனிதர்கள் யாருமில்லையெனில், அந்த நாள் இன்னுமோர் புதுநாளென்ற எண்ணமும், பதிவும் இங்கிருந்திருக்க வாய்ப்பில்லை. அதே உடை, அதே ஆள், ஒருவழியாக வந்து சேர்ந்தானா.. இல்லை இல்லை, அவனில்லை.. அவனைப்போலவே தெரிகிறது எனக்கு.. மூன்றாவது பிரியட் முடிந்தும் ஆளைக் காணவில்லை.. இரு இரு, சற்றே யோசித்தேன், ஏன் அவனுக்கு யாரும் இன்று பிராக்ஸி கொடுக்கவில்லை.. அப்படியானால் இன்று வரமுடியாததைக் கூட அவனால் சொல்லமுடியாத நிலைமையோ. அப்பாவிற்கு எதுவும்.... அதேதான், தகவல் வந்துசேர்ந்தது. மகிழ்வதா, வருந்துவதா, சத்தியமாக தெரியவில்லை எனக்கு!

மீண்டுமொரு புதிய காலெண்டர் நாளில் சந்தித்தோம், அதைப்பற்றி தெரிந்தது போல காண்பிக்காதவனாக, துக்கத்தை பகிர்ந்துகொள்ளவே பயந்தவனாக அவனின் முன், மீதமிருக்கும் இரண்டு கேள்விகளைமட்டும் தாங்கிக்கொண்டு நின்றிருந்தேன்.. 
என்னடா, இன்னைக்கு வேலைக்கு போனியா? 
இல்லடா..
ஏன்!
ஒன்னுமில்ல, சும்மாதான்..
அதற்கு மேல் கேட்க துணிவில்லை எனக்கு.. என்ன வேலை செய்கிறாய் என்றால், சட்டென சொல்பவனல்ல அவன், அந்த கேள்வி தவறென்று நினைத்தானாயின், பல நாட்களுக்கு மூஞ்சை கூட காண்பிக்கமாட்டான் என் பக்கம். அன்பான முரடன் அவன்.. அறிவான முட்டாள் அவன்.. நமக்கேன் வம்பு.

தொடருங்கள்.

விளையாட்டாக சொல்கிறேன்#23

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17