விளையாட்டாக சொல்கிறேன் #5

கடந்தகால நினைவுகளை பெரும்பாலும் சேமித்து வைப்பதில் சிறந்தது மணம்தான். நம் மூளையிலிருந்து, வாய்ச்சொற்களாக சட்டென மாற்றம்பெறாத, அதாவது சொல்லமுடியாத பெயர்களை,  'ஆமாங்க நல்ல பேருங்க அது, தொண்டையில இருக்கு, ஆனா வாயில வரமாட்டேங்குது' என்று ஞாபகத்திற்கு வரா பெயர்கள் அனைத்தும் நல்ல பெயர்கள் என்று சொல்வது நமது பொது வழக்கம். அப்படி ஞாபகத்திற்கு வராமல் மூளைக்குள் ஒரு மடிப்பினுள் புதையுண்டு உயிரற்றதுபோல் கிடக்கும், வாழ்க்கையில் நடந்த ஏதோவொரு சுவாரசியமான நிகழ்வை, உயிர்பெறவைக்க நல்ல நறுமணம் போதுமானது. 

அப்படி எங்கு எனக்கு விக்கோ பற்பொடியின் மணமோ, மைசூர் சேண்டல் சோப்பின் மணமும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் விளம்பர இடைவெளியில்லாது மாங்குடி கிராமத்தின் படம் ஓடிக்கொண்டே இருக்கும் என் மனதுள். வெறும் புழுதி மணலும், உப்பங்காற்றும் நிறைந்த வெளியினூடே காற்றை உறிஞ்ச பழக்கப்பட்ட என்னுடைய மூக்கிற்கு இதமான ஒரு மணத்தை காண்பித்துக் கொடுத்தது மாங்குடி கிராமம். அந்த ஊர் என்னுடைய இரண்டாவது வீடு என்ற அளவிற்கு பரிச்சயமானது. ஏப்ரல், மே மாதங்களில் அந்த ஊருக்கு அழைத்து போகாவிட்டால் என் மூக்கின் சாபத்திற்கு எங்கள் ஊர் ஆளாக நேரிட்டுவிடும்.

பெரும்பாலான வேளைகளில் பெரியப்பா வருவார் அங்கிருந்து, என்னை அழைத்துச் செல்ல. அவர் வால்நட்டைப்போல, வெளிப்புறம் எப்படி கரடுமுரடாக பேசினாலும், உள்ளுள் சுவையான காதலால் நிரப்பப்பட்டவர். அவருடன் நான் பயணிக்க, பெரியம்மாவும் கூடவே இருந்தார். பேருந்தில் திருத்துறைப்பூண்டி சென்று, பட்டுக்கோட்டை பேருந்து பிடித்து எடையூர் சங்கேந்தியில் இறங்கவேண்டும், மாங்குடி செல்ல. சங்கேந்தியிலிருந்து சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் இருக்கலாம் சரியாக, நடந்தேதான் கூப்பிட்டு செல்வார். செல்லும் வழியெங்கும் இருபுறமும் மரங்களும், வயல்களாகவும்தான் இருக்கும். வீடுகள் அமாவாசைக்கு முதல்நாள் நிலவைப்பார்பது போல எங்கேனும் ஒன்றிரண்டு இருக்கும். அந்த வழியில் அதற்கு முன் டிராக்டரில் பலமுறை அண்ணன்களுடன் பயணித்திருக்கிறேன், ஆனால் அன்றுதான் முன்னிரவு நேரத்தில் நடந்தே கடக்க நேர்ந்தது. அமாவசையன்று மட்டுமே பளிச்சென்று ஒளிரும் திருவாதிரை விண்மீன் போல ஒருவர் அந்த வழியாய் மிதிவண்டியில் கடக்க, பெரியப்பா அவரை மறைத்து என்னை ஏற்றிவிட்டுவிட்டார். பேரானந்தமாய், வாழ்வில் ஏதோ சாதித்ததாய், மிதிவண்டியில் பின்புறம் அமர்ந்திருக்க, கொஞ்சநேரத்தில் இறக்கிவிட்டுவிட்டார் சாலையோர ஒரு வீட்டில். அரை நிலவொளியில், நாய்களின் ஒலியினால் தடுப்பு சுவர் எடுக்கப்பட்டிருந்த அந்த கூரை வீட்டின் முற்றத்தில் காண்டா விளக்கொளியில் தங்கள் பேச்சினை வெளிச்சமிட்டுக்கொண்டிருந்த நான்கைந்து பேருடன் நானும் அமர்ந்து கொண்டேன். பள்ளி வரலாற்று ஆசிரியர்களைவிடவும் அதிகமான வரலாற்று, புவியியல் கேள்விகளை என்னிடம் கேட்க, அதுவரையில் நான் அந்த அளவிற்கு வேறுயாருக்கும் என் வரலாற்றை சொல்லியிருந்ததில்லை! ஃசுவிக்கி, சொமேட்டோ, கூகுளால் கண்டுபிடிக்க முடியாத இடங்களும், ஆதார் வழங்கும் அரசிற்கு கூட தெரியாத பெயர்களும் அவர்களுக்கு அத்துபடி! நடந்தே வந்திருக்கலாமோ என்றொரு எண்ணம் மனதில்  முளைக்கும் அளவிற்கு கேள்விகளை தொடுக்க, தெரியாத கேள்வித்தாளை வைத்துக்கொண்டு விழிக்கையில் தேர்வு நேரம் முடியும் விதமாய், பெரியப்பா வந்துவிட்டார். தேர்வெழுதிய களைப்பில் பெரியப்பா கைப்பற்றி ஒருவழியாய் வீடு வந்துவிட்டேன். 

பெரியம்மாவின் கவனிப்பு என்றுமே நீண்ட நெடிய ரேடியோ அலைநீளத்தை ஒத்தது. அவரின் பரிமாறலில் சாப்பிடுபவர், சாப்பிட உட்காரும் முன்பே போதும் என்றால்தான், சரியாக தேவையானதை சாப்பிடலாம். இல்லையேல் அடுத்த இரண்டுநாட்களுக்கான சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். பெரியம்மா கைப்பக்குவத்தில் தயாராகும் மைசூர்பாகுவின் சுவை, மைசூரில் கிடைக்கும் மைசூர்பாகுவிற்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். வீட்டிலேயே உருக்கி எடுத்த நெய்யை கடலைமாவிற்கு கணக்கின்றி பரிமாறி சுடச்சுட, மணத்துடன் கொடுப்பார்! நல்லவேளையாய் இந்த செய்தியை, எழுத்து மூலமாக கூறுகிறேன், உங்கள் முன் பேச்சாய் பேசியிருந்தால், நீங்கள் அனைவரும் மூஞ்சை கழுவ நேர்ந்திருக்கும். 

குழல் முறுக்கை அடுக்கியதுபோல அழகாய் காட்சிதரும் வீட்டின் கூரை. சுண்ணாம்பு,  தொரட்டோடுகளால் கட்டப்பட்ட வீடு என்பதால் காற்றாடிகளுக்கும் தலைசுற்றாது குளிர்ந்து நிலையாகவே நிற்கும். களிமண்ணால் கட்டப்பட்டு, சாணம் பூசப்பட்ட வீட்டின் முற்றம், நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் மேல் முற்றம், எதிர்புற பள்ளிக்கூடம், பின்புற சாண எரிவாயு டேங்க், அருகிலேயே அமைந்திருக்கும் அடிபைப், அதனருகில் அழகிய பரந்த அல்லி குளம், கரைமீது அல்லிகளின் அழகை ரசித்தவண்ணம் காற்றில் நடனமாடும் சர்க்கரை நார்த்தை, எலும்பிச்சை, கொய்யா, வாழை செடிகள்,  என ரம்மியமான இடம் அது.

அண்ணன்கள்தான் அங்கு என்றுமே ஆற்றலை கொடுக்கும் குளுக்கோஸ் பாக்கெட்டுகள். அவர்களின் விளையாட்டுகளை நேரில் கண்டதில்லை எனினும் அவர்கள் வென்று சேர்த்திருந்த நூற்றுக்கணக்கான பளிங்கிகளும், பம்பரங்களும் அவர்களைப்பற்றிய வரலாற்றை சொல்லிக்கொண்டேதான் இருந்தது. அண்ணன்கள் ஒருமுறை கால்நடையாக வயலினுள் அழைத்துசென்று, குலதெய்வத்தை வணங்க வைத்து, பன ஓலையால் வேயப்பட்ட கொட்டியில் கேப்பைக் கூழ் ஊற்றி குடித்த ஞாபகம், பன ஓலை மணம் மூக்கை அடையும் பொழுதெல்லாம், மூளை கண்களின் வாசலில் சிறிது நீரைத்தெளித்துக்கொண்டேதான் இருக்கும். 

போர்செட்டு குளியலுக்காக மேல மாங்குடிக்கு வயல்வழியில் செல்கையில், வயலில் விரிசல் விட்ட களிமண் தரைகள் நம் கால்களுக்காகவே காத்திருந்ததுபோலவே கவ்விக்கொள்ளும். அந்த களிமண்ணை பக்குவமாக எடுத்து, சப்பாத்திமாவு பதத்திற்கு நீர்விட்டு பிசைந்தால் போதும், என்ன வடித்தில் வேண்டுமானாலும் செய்துவிடலாம் பொம்மைகளை. தீமூட்டி செங்கல் வடிவங்களாக மாற்றியதெல்லாம், ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் தொடர்ச்சியாகத்தான் கொள்ளவேண்டும்.

திரௌபதி அம்மன் கோயில்தான் மாங்குடியின் மிகப்பெரிய அடையாளம். ஏப்ரலில் காப்பு கட்டிவிட்டால் அடுத்த இருபத்தோரு நாட்களும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போலத்தான், மாங்குடி வாழ் மக்களுக்கு! என்னையும் உட்பட. ஒவ்வொருநாள் இரவும் ராமாயணம் கதை கேட்க ஆவலாய் திரண்டுவிடுவோம் கோயிலின் தென்புற வீதியில். பீமன் வேடமிடும் சச்சி சித்தப்பா, அதற்காகவே பிறந்தவராக தோற்றமளிப்பார். மாநிற உடலில் கரியை முழுவதுமாக அப்பி, கரு உடைகளை உடுத்தி, இடுப்பை சுற்றி மணிகளையெல்லாம் கட்டிமுடித்தபின் அவரை பார்க்க, உண்மையான பீமனே அருகில் வந்து நின்றாலும், வாரமலரில் வரும் 'வித்யாசத்தை கண்டுபிடி' பக்கம் போலதான் காட்சிதருவார். ஆனால் ஆறு வேற்றுமைகளைக் கண்டறிவதுவே சற்று கடினம்தான். கம்பீரமான நடையுடன் கையில் கதாயுதத்துடன் தப்பாட்டத்தின் இசைக்கு நடுவே அவரை பார்க்க, கடவுளின் கதைகள் உண்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்ற வைக்கும். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மாக்கோலமிட்டு அதன் மீதுவைக்கப்பட்ட மட்டை உரிக்கப்படாத முழு தேங்காயை ஒரே அடியில் உடைத்துவிடுவார் பீமன். உடைத்த மாத்திரத்தில், தன் இடுப்பு மணிகளை ஆட்டி உள்ளே உட்கார்ந்தால் அவருக்கான கவனிப்பு தனிதான். அவருடன் கூடவே கூட்டமாய் செல்லும் எங்களுக்கெல்லாம், எலும்பிச்சை, வெல்லம், இஞ்சி, ஏலக்காய் போட்ட சுவையான பானக்கம் இனாமாய் கிடைக்கப்பெறும். வேடமிடும் முன் நன்றாய் சிரித்து பேசுபவர், நம் சச்சி சித்தப்பாதானே என பலதடவை அவரின் முகம் பார்த்து சிரித்தாலும், உர்ரென்றே முகத்தை வைத்திருப்பார். காரணம், அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ தொடங்கிவிடுவார்.

மோர்ப்பந்தல் இல்லாத திருவிழா கடவுளற்ற கோயில் போன்றது. அதற்காக, திருத்துறைப்பூண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட ஐஸ்கட்டிகளைப்போட்டு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்க்க, கோடையையும் பொருட்படுத்தாது வந்த பக்தகோடிகளின் தாகம் போக்க இதமான மோர் தயாராகிவிடும். ஒலிபெருக்கிகளில் மந்திரங்களும், திருடர்கள் பற்றிய விழிப்பூட்டும் அறிவிப்புகளும் ஓங்கி ஒலிக்க, தாயக் கட்டைகளை உருட்டும் சத்தம் அதனையும் விஞ்சும்.  பலூன்கள், பொம்மைகளின் கடைகளை சூழ்ந்துநிற்கும் குழந்தைகளுக்கு அறிவிக்காமலேயே தீமிதியல் மறுபுறம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும். தீமிதிக்கும் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் உசைன் போல்ட் அன்றுதான் வெளிகாண்பிக்கப்படுவார்கள்.

ஞாயிறு மாலையில், ஐடி கம்பெனியில் வேலைபார்ப்பவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் திருவிழா முடிந்த அடுத்தநாளே அனைவருக்கும் இருக்கும். விறுவிறுப்பாய் தேருடன் போனநாட்கள் போய் அலுப்புதட்ட ஆரம்பமாகும். அதற்கும் சலிக்காமல் ஒரு விளையாட்டை முன்னெடுப்பார்கள் மாங்குடிக்காரர்கள். அதுதான் 904 (தொல்லாயிரத்து நான்கு) விளையாட்டு. இது சீட்டாட்டத்தில் ஒருவகை, மிகவும் விறுவிறுப்பான ஆட்டமும் கூட. சூரியன் முதுகுவலியெடுத்து மாலையில் சாயும் வரைதான் பொறுத்திருப்பார்கள், பிறகு அனைவரும் முதல்நாளே சொல்லிவைத்தாற்போல நைனா வீட்டு முற்றத்தில் கூடிவிடுவார்கள். இரண்டு, நான்கு, ஆறு நபர்கள் விளையாடக்கூடிய ஆட்டமான இதில் அனைத்து அட்டைகளும் பயன்படுத்துவது கிடையாது. நால்வர் விளையாடுவதாக எண்ணிக்கொண்டால் எதிரெதிர் துருவத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே அணியினராக இருப்பார்கள், மொத்த அட்டைகளில் இருந்து ஒவ்வொரு பூவிலும், 2,3,J,9,A,10,K,Q அட்டைகளை மட்டுமே எடுத்துக்கொள்வர். ஆகமொத்தம் 32 அட்டைகள். அதனை கலைத்து நான்குநான்காக அனைவருக்கும் பகிர, அந்த நான்கு அட்டைகளை பார்த்து கேள்விகளை கேட்க வேண்டும். வெறும் கேள்வியாக இருக்கலாம், இல்லையென்றால் 10, 20, 30 என்று போய்க்கொண்டே இருக்கலாம், எதிர் கேள்விகளுக்கும் அனுமதி உண்டு. கேள்வியை பொறுத்து எதிரணிக்கு எடுக்கவேண்டிய புள்ளிகள் நிர்ணயிக்கப்படும். ஆஃப் ஸ்கூட் கூட அடிக்கலாம். அதாவது நான்கு அட்டைகளுடன் மட்டுமே விளையாடுவது ஆஃப் ஸ்கூட். எதிரணி ஒரு பிடி பிடித்தாலும் தோல்விதான் கேள்வி கேட்டவர்களுக்கு. ஆஃப் ஸ்கூட் இல்லையென்றால், அடுத்த நான்கு அட்டைகளும் வழங்கப்படும், ஏற்கனவே கேள்வி கேட்டவர்கள், எந்த பூவில் கேள்வி கேட்கிறார்களோ அதனை யாரிடமும் காட்டாது மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மறைத்த அந்த துருப்பு அட்டையை, இறக்க பூ இல்லையென்று யாரும் கேட்கும் வரையில் காண்பிக்க தேவையில்லை.  2,3,J,9,A,10,K,Q க்கான புள்ளிகள் முறையே 10, 5, 3, 2,1,1, 0, 0. 10 ஐ விட A பெரியது, Q ஐ விட K பெரியது. பெண்கள் விளையாடும்பொழுது K வை விட Q பெரியது என மாற்றிக்கொள்ளலாம், தவறில்லை. அட்டையின் புள்ளி செரிவை பொறுத்துதான் கேள்வியின் வீரியமிருக்கும். எடுத்துக்காட்டாக, முதல் நபர் ஒருவர் கேள்வி ஒன்று ஆர்ட்டீன் பூவில் வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம், மற்றவர்கள் யாருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்காத நிலையில் , மற்றொரு நபர் முதலில் ஒரு அட்டையை கீழ் இறக்குவார், அனைவரிடமும் அதே பூவில் அட்டைகள் இருப்பின் அதை மட்டுமே போட அனுமதி உண்டு. போட்டவற்றில், முதலில் இறக்கிய பூவில் யார் அதிக புள்ளிகள் கொண்ட அட்டையை இறக்கினார்களோ அவர்களுக்குத்தான் அந்த கீழ் இறக்கப்பட்ட நான்கு அட்டைகளும். ஒருவேளை யாரிடமாவது அந்த பூவில் அட்டை இல்லையென்றால், தேவையெனில் கேள்வி கேட்டவரோ, இல்லையேல் கேள்வி கேட்டவரிடம், எந்த பூவில் கேள்வி என தெரிந்துகொண்டோ அந்த இறக்கத்தை வெட்டிவிடலாம். அப்படி வெட்டுபவர்களுக்கே மொத்த பிடியும். ஒருவேளை இருவர் வெட்டிவிட்டால், யார் அதிக புள்ளிகள் கொண்டு வெட்டினார்களோ அவருக்குத்தான் பிடி முழுதும். இப்படி பிடித்த அட்டைகளின் புள்ளியை கேள்வி கேட்ட அணியின், எதிரணி எண்ண வேண்டும். அவர் வெறுமனே கேள்வி கேட்டிருந்தால் எதிரணி 60 புள்ளிகள் எடுக்கவேண்டும். எடுத்தால் வெற்றி, இல்லையேல் கேள்விகேட்ட அணி வெற்றி. இப்படியாக போகும் ஆட்டத்திற்கு முடிவும் கிடையாது, உற்சாகமும் குறையாது. மூளையை எழுச்சி படுத்தும் ஒரு விளையாட்டு இது! எழுச்சிபெற்ற மூளை மணம் நுகர்ந்து பழைய நினைவுகளை கொடுக்கவல்லது! 

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #5

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17