விளையாட்டாக சொல்கிறேன் #4

பேய்கள் உண்மையில் மனிதர்களைவிட மாண்புமிக்கவர்களாக இருக்கலாம்! ஏனெனில் அவர்களுக்கு மண்ணையும் பொன்னையும் காப்பாற்றவேண்டிய அவசியம் இருக்கபோவதில்லை. கடவுள்கள் கூட போருக்கு காரணமாக இருந்துவிடுகின்றனர், அது சைவ-பௌத்தப் போர், சைவ-சமணப் போர், யூத-கிருத்துவப்போர், கிருத்துவ-இஸ்லாமியப்போர், இந்திய-பாகிஸ்தான் போர் என நீண்டுகொண்டே போகலாம். ஆனால் பேய்களுக்காக போர் யாரும் தொடுத்ததாக வரலாறில்லை. கடவுள்களே ஆகாதவர்களாயினும், அவர்களுடனேயே போரை விரும்பா பேரமைதிக்கு சொந்தக்காரர்கள் பேய்கள்! எனில் மாண்புமிக்கவர் யாராக இருக்கக்கூடும், கடவுளா, பேயா, அல்லது இரண்டையும் படைத்த மனிதனா!

பாரா எழுதிய நிலமெல்லாம் ரெத்தம் என்ற புத்தகத்தைப் படித்த பொழுதுகளில் நான் நினைத்ததுண்டு, பேய்கள் உண்மையென்றால் ஏன் கொன்றொழிக்கப்பட்ட அரேபியர்கள், தங்களைக் கொன்ற யூதர்களையும், கிருத்துவர்களையும் அழிக்க பேயாக வரவில்லை என! மூளையின் இன்னொரு மூலையில், 'கடவுள்களை நம்புபவர்கள் பேயாக வரமாட்டார்களோ!' என்ற எண்ணமும் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படியானால் நான் எப்பொழுது வேண்டுமானாலும் பேயாகிவிடுவேனா! கலக்கம் என்னுள்.

மதிய நேரத்தில் பேய்கள் அதிகமாக விரும்பும் என சொல்லப்படும் நாவல் மரங்கள்தான் எங்களுக்கான விளையாட்டு களம் பல வேளைகளில். எளிய காரணம்தான், பசியின் கேள்விகளுக்கு நாவற்பழங்கள் இனிப்பாய் பதில்சொல்லிவிடும்! இந்த நாவற்பழங்களில் கொட்டைகளை மட்டும் இயற்கை படைக்காமலிருந்தால், திருவிளையாடலில் இந்த பழம்தான் கதையை ஏற்று நடித்திருக்கும். என்ன சுவையென சொல்லியும் புரியாது, திண்பவர்களால் சொல்லவும் இயலாது! பதிலுக்குபதில் பேசி சண்டையிட்டுக்கொள்ளும் இருவரிடம் இந்த பழத்தைக்கொடுத்தால், உண்டபின் அவர்களால் பேச்சுசண்டை போடமுடியாது என்பது நிதர்சனம். அப்படி பேசமுடியாத அளவிற்கு நாக்கினுள் ஏதோ ஒரு கசமுசா செய்துகொண்டிருக்கும் அதன் சுவை!

அந்த பேயின் ஃபேவரைட் மரத்தின் நிழலில் விளையாட ஆயிரம் விளையாட்டுகள் இருந்தாலும், மரத்தின் மீதேறி விளையாடும் ஆட்டம், ஒன்றே ஒன்றுதான். அதுதான் 'நாயா உடும்பா' ஆட்டம். நாயென்றால் மரத்தின் கீழே நிற்கவேண்டும், உடும்பென்றால் மரத்தின் மீது தாவிக்குதித்து ஏற வேண்டும். நாயாவதும் உடும்பாவதும் வெற்றி தோல்வியை பொறுத்தென்றாலும் ஆட்டத்தின் துவக்கத்தில் அது, ஏதோவொரு பேயாகத் திரியப்போகாத ஒருவனின் இருபத்தைந்து பைசாவிற்குதான் வெளிச்சம். அந்த பைசாவும் இல்லாத நாட்களில் சாபூத்திரிகளையும், கல்லா-மண்ணாவையும், ஒத்தையா-ரெட்டையாவையும் பொறுத்தது. வென்றவனுக்கு உடும்பென்று தெரிந்ததும் மரத்தின் உச்சி சென்றுதான் மறுமூச்சுக்கான நேரம் ஒதுக்க எத்தனிப்பான். நாய்பாடு சற்று திண்டாட்டம்தான், கீழிருந்து சிறு கம்பு ஒன்றை எடுத்து உடும்பை குறிபார்த்து அடிக்கவேண்டும். அனைத்து உடும்புகளும் அடிபடாத வரை அல்லது முதல் உடும்பு அடிபடும் வரையில் நாயாகத்தான் இருந்தாக வேண்டும் கீழிருப்பவன். பெரும்பாலான நேரங்களில் உடும்புகளுக்கு வலிக்கும் வரையில் அவைகள் மீது அந்த கம்பு படாதவைகளாகவே இருக்கும்.

ஒரு மழை இரவில், மூன்றடுக்கு போர்வைகளின் பாதுகாப்பிற்குள், வயலில் விளைந்த நிலக்கடலைகளை சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்பொழுதுதான் அந்த செய்திவந்தது. 'நாவற்பழம் பறிக்கையில், நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழ்விழுந்த ஒரு சிறுவன் இறந்துவிட்டான்'. மனதிலோ அவனின் உருவம் வந்து போக, அவன் இருந்தநேரத்தைவிடவும் இறந்தபின்தான் அதிகமாக அவனைப்பற்றியே மூளை சிந்தித்தது. பிற்பாடு நாவல் மரங்கள் யாவும் பேய் சுற்றும் வீதிகளாக ஆக்கப்பட்டுவிட்டன. என்றாவது ஒருநாள், அந்த நாவற்பழங்களையும் சுவைக்காது, நாவல் மரத்தடியில் வெறுமனே சுற்றிக்கொண்டிருக்கும் அந்த சிறுவனிடம், "கடவுள் மீது  உனக்கு நம்பிக்கை உண்டா இல்லையா?" என்ற ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் இன்றும்.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #4

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10