விளையாட்டாக சொல்கிறேன் #1

பள்ளிப் பருவத்தில் விடுமுறை என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான். என்னுடைய பள்ளிப் பருவத்தில் விடுமுறை விடுவதற்கு ஒரு வாரம் முன்னரே வரைவதற்கு, படிப்பதற்கு என பலவற்றை வாங்கி சேர்த்துவிடுவது வழக்கம். ஆனால் கடைசியில் நினைத்தவற்றை எதுவும் செய்யாது விளையாட்டு, தூக்கம், உணவு என மூன்றால் அடைபட்டுக்கிடக்கும் அந்த விடுமுறை நாட்கள்!

தமிழ்நாடு வரைபடத்தில் மூக்கைப்போல் நீண்டிருக்கும் வேதாரண்யம் (மான்காடு) பகுதியில் கடைகோடியில் அமைத்திருக்கும் பஞ்சநதிக்குளம் என்ற கிராமம்தான் எங்கள் ஊர். கிராமம் என்பதால் எதுவும் இருக்காதோ என்று நினைப்பவர்கள் தெரிதுகொள்வதற்காக சொல்கிறேன், அலைபேசி தொடர்பு அலைவரிசையை (டவர்) தவிர அனைத்தும் கிடைக்குமிடமாய் எங்கள் ஊர் இருக்கும். பெரும்பாலான வீடுகளில், வீட்டிற்கொருவர் ஆசிரியராகவும், ஒருவர் வெளிநாட்டிலும் இருப்பார்கள். அதனால் என்னுடைய நண்பர்கள் கைகளில் வெளிநாட்டு எழுதுகோல்களும், சட்டையில் கோடாரி தைல வாசமும் எப்பொழுதும் இருக்கும். எங்கள் கிராமத்து மக்கள் உழைப்பிற்கு பெயர்போனவர்கள். ஆண்டு முழுவதும் ஏதோவொன்றை விளைவித்துக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக நெல், பயறு வகைகள், எள், உளுந்து, மல்லிகை, புகையிலை, சவுக்கு, சணல், கம்பு, கேழ்வரகு, காய்கறி வகைகள், வாழை, கீரை, பச்சைமிளகாய், பழ வகைகள், தென்னை, புளி, பனை என நீண்டுகொண்டே போகும்!

காலை நான்கைந்து மணிக்கே மல்லிகை பூக்களை எடுக்க தொடங்கி, பின் வயல் வேலைகள், அது இதுவென மாலைதான் வீடு வருவார்கள். வந்தவர்களும் தம் தோட்டத்து புகையிலை, மிளகாய் செடிகளுக்கு நீர் பாய்ச்சி, ஒரு எட்டு மணிக்குதான் வீட்டினுள் உட்கார முடியும் அவர்களால். இப்படியே சுழன்றுகொண்டு இருக்கும் மக்களுக்கு மத்தியில், எங்கள் பார்வைகள் அனைத்தும் விளையாட்டு திடலிலும், மற்றவர் வீட்டு கொய்யா மரத்திலும், வீவோ (VAO) மாமா வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலும்தான் இருக்கும்.

சனி, ஞாயிறு மட்டும்தான் நாங்கள் உண்மையில் முழுமையாக வாழ்வதாக எண்ணம், மற்ற நாட்களெல்லாம் சனி ஞாயிறுக்கான காத்திருப்பு நாட்களாகவே நகரும். காலை பழையசோற்றுடன் துவங்கும் விடுமுறை நாட்கள் பல அன்றைய மாலையே முடிவதும், அடுத்தநாள் நீள்வதும் விளையாட்டின் வீரியத்தை பொறுத்தது. பலநாட்கள் மதிய உணவு வெளியில்தான், உணவகத்தில் அல்ல, விளையாடும் இடத்தின் அருகாமையிருக்கும் வீட்டில் இல்லையென்றால் அந்த வீட்டு கொய்யாமரத்தில்.

அப்படி என்ன விளையாட்டு இருக்கிறது இந்த உலகத்தையே மறப்பதற்கென்று கேட்கிறீர்களா! மட்டைப்பந்தோ என்று தவறாக நினைத்துவிடாதீர்கள், அந்த சோம்பேறிகளின் ஆட்டம் எங்கள் ஊருக்கு வரும்முன்னரே நடந்த விளையாட்டு கதைகள் இவை! விளையாட்டாக சொல்லப்போகிறேன், விளையாட ஆயத்தமாக இருங்கள்!

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #1

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10