விளையாட்டாக சொல்கிறேன் #3

சிறுவயதில் தொடுவானம் தொட போய், பல முறை தோற்ற வரலாற்றை அம்மா விளையாட்டாய் என்னிடம் பலமுறை பகிர்ந்திருக்கிறார். அவர் சொன்ன பொழுதுகளில் எல்லாம் எனக்கு தோன்றுவது, 'தொடுவானம், பார்வைக்கு தொடும் தூரத்தில்தானே இருக்கிறது ஏன் இவர் ஏமாற்றமடைந்தார்!' என்றுதான். நான் ஒரு நாளும் தொடுவானம் தொட எத்தனித்ததே இல்லை ஆனால் ஒரு ஆவல் மட்டும் என் நெஞ்சில் இருந்தது, வீட்டின் தெற்கில், தென்னடார் (தெற்கில் இருப்பதால்) என்ற ஊரில் இருக்கும் உப்பளத்திற்கு என்றாவது ஒரு நாள் போய் பார்த்துவிடவேண்டும் என்பதே!

ஒரு நாள் காலையில் பத்து மணிக்கெல்லாம் விளையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, தெற்கே செல்லத் தொடங்கினேன் நண்பர்களுடன். இரண்டு கிலோமீட்டர் தொலைவு இருக்குமென நண்பன் ஒருவன் சொல்லியதை நம்பி நடக்க தொடங்கினோம். நடக்கும் வழியில் ஒரு சுடுகாட்டை வேறு கடக்க வேண்டுமே என்ற பயமும், எங்கள் கூடவே பயணித்து வந்தது. பயத்தின் பாரம் ஒரு புறம் இருக்க, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணொருவர் இரவு நேரம் இங்கு பாட்டு பாடிக்கொண்டே நடமாடுவதாக நண்பர்கள் சொன்ன கதைகள், அதிகமாய் தண்ணீர்தாகம் எடுக்க வைத்தது. ஒருவழியாய் அதனை கடந்து, பாழடைந்த அனுமார் கட்டிடத்தையும் அடைந்த நேரம், உரத்த சத்தமொன்று ஓங்கி ஒலிக்க, சற்றே வெடவெடத்துப்போய் அந்த பெண் தான் என முடிவு செய்து, கண்ணிமைக்கும் பொழுதில் கடந்துவிட்டு கப்பிக்கல் சாலையை அடைந்துவிட்டோம். கடந்த சாலையெங்கும், அந்த சத்தம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க ஏதுவாக மூளைக்கு அதிகமாய் அனுப்பப்பட்ட இரத்தத்தால் வெளிவந்த  எங்களில் வியர்வைத் துளிகளின் நெடிகளாகத்தான் வீசியிருக்கும். பதட்டம் தீர்ந்தாய் இல்லை ஆனால், உப்பளத்திற்கு நீண்ட பாதை முடிந்துவிட்டது. ஆமாம், கடைசியாக உப்பளத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

பார்வைக்கு எட்டிய தொலைவு வரை ஆள் நடமாட்டமே கிடையாது, மரம் செடி கொடிகளும் கிடையாது. நாங்கள் நிற்கும் வடக்கு திசை மட்டும் நிலம், மற்ற திசைகள் எங்கும் முற்றிலும் மழித்த மாநிற முகத்தைப் போல் இருந்தது. தொடுவானம், தூரத்தில் காற்றில் ஆடிக்கொண்டே கண்ணுக்கு புலப்படும் கானல் நீரில் முகம் கழுவிக்கொண்டிருப்பது போல தோற்றமளித்தது. பொய்யானாலும் இன்று எப்படியும் தொடுவானமும் கைகூடிவிடுமென நினைத்து எல்லையற்ற மகிழ்ச்சி, அந்த சத்தம் பற்றிய சிந்தனையையும் மீறி! அந்த மகிழ்ச்சியுடனே காலை உள்ளே வைத்ததுதான் தெரியும், அந்த உச்சி வெயிலில் வெப்பமாகிய சேற்றில் புதைந்து கால் வேகும் அளவிற்கு ஆகிவிட்டது. பின்னர்தான் அறிந்தேன், கரையோரத்தில் மண்டிக்கிடக்கும் உவரிச் செடியை காலில் கட்டிக்கொண்டுதான் இறங்கவேண்டும் என்பதை!

இயற்கையின் படைப்பில் உவரிச் செடி ஒரு அற்புதம். அதிகப்படியான நீரை தன்னகத்தே சேர்த்து வைக்கும் என்பது மட்டுமின்றி அதனை மிகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் என்பதுதான் அதன் சிறப்பு. அதனை காலில் கட்டிக்கொண்டு உள்ளே பல நூறு மீட்டர்கள் பயணித்திருந்தும் எங்களுக்கு சூட்டின் பாதிப்பு தெரிந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்த பைகளில், அங்கே புதுப்பெண் முகமுலாம் பூசப்பட்டதுபோல் படிந்திருந்த உப்பினை கூட்டி அள்ளிக்கொண்டே நினைத்திருந்தோம் இந்த உப்பு ஏது என்று வீட்டில் கேட்டால் என்ன சொல்வதென்று! அதனால், எடுத்த உப்பை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டே தொடுவானம் நோக்கினோம். முகம் கழுவிக்கொண்டிருந்த தொடுவானம் இப்பொழுது மஞ்சள் தேய்த்துக் குளிப்பது போல் தோன்றியது. மாலை சூரியன் மறையப்போகிறேனென மஞ்சள்நிறமாய் மாறி சமிக்ஞை கொடுத்ததுதான் காலதாமதம். உடனே அங்கிருந்து, சேற்றுமணல் சேமித்துவைத்திருந்த எங்கள் காலடிகளை பின்பற்றி ஒருவழியாய் கரை சேர்ந்தோம்.  இந்த உப்புக்கா வரி போட்டு நம்மை அடிமையாக்கினார்கள் என்று உணரும் பக்குவம் அன்று இல்லை என்றாலும் ஏதோ ஒரு பெருமகிழ்ச்சி, தம் கைகளாலேயே அந்த உப்பை அள்ளியதில்!

கல் மண் பாராது ஆங்காங்கே சிறு ஓட்டப்பந்தயங்கள், ஆற்று நீரில் சிறு நீச்சல் போட்டிகள் என அனுமார் கட்டிடத்தை அடைந்தாகிவிட்டது. நேரில் கப்பிக்கல் சாலைவழியாகவே வீடு போய் சேரமுடியும் என்றாலும், யாருக்கும் தெரியாமல் வீட்டின் மாடியை அடைந்தால்தான், இவ்வளவு காலதாமதம் ஆனதற்கு கொஞ்சப்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். எனவே குறுக்குவழிதான் சிறந்தது, அம்மாவின் கொஞ்சலை விடவும் பேயே பரவாயில்லை என அனுமார் கட்டிடத்தை கடக்க, பேரமைதி.  அந்த சத்தம் கூட இந்தளவிற்கு பயமுறுத்தி விடவில்லை. பேரமைதிதான் மிகப்பெரிய சத்தமாக இருக்குமோ, தெரியவில்லை! அந்த பெண் மீண்டும் வருவாரோ? பார்க்கும் இடமெல்லாம் அந்த தாவணி போட்ட பெண்ணின் உருவம். அந்த பெண் இறந்த பின் அவரை பல இடங்களில் கண்டதாக பலர் கூறிக் கேட்டிருக்கிறேன். மனிதன் இறந்தபின் எந்த ஆற்றலும் இருக்காதா! நம்ப முடியவில்லை.. ஏனேனில் ஆற்றலை அழிக்க முடியாதே! மனித ஆற்றல் பேய் ஆற்றலாக மாறி இருக்குமோ! அறிவியல் ஞானம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருக்கிறது தலைக்குள்.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #3

-சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2