சாங்வான் குறிப்புகள் #04
When Life Gives You Tangerines, என்ற கொரிய இணைய தொடருக்கு மனதை பறிகொடுத்தோர் பட்டியலில் என் பெயரும் உண்டு..
கதை ஜேஜு என்ற கொரிய தீவு ஒன்றில்தான் தொடங்கும்.. கடலில் மூழ்கி மூச்சுபிடித்து சிப்பிகளை எடுத்துவரும் அம்மா, தன் மகள் எப்படி வளரவேண்டும் என நினைக்கிறாள், மகள் அம்மா நினைத்தபடி எப்படி வளர்கிறாள் என்பதே மொத்த கதையும்.. அம்மா இறந்து, மகள் அம்மாவாகி, பாட்டியாகி, கடைசி காலம் அவளின் கவிதை தொகுப்பு வெளிவரும் வரை நீளும்.. ஜேஜுவில் தொடங்கும் கதை, சியோல்வரை நடந்தே பயணிக்கும் என்றாலும் பயணம் முழுவதும் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்..
கொரிய தஞ்சை சாங்வானில் இருந்து நாற்பது கிலோமீட்டர் சாலை வழி பயணித்து, ஒரு மணிநேரம் விமானத்தில் பயணித்தால், அந்த ஜேஜு தீவை அடைந்துவிடலாம்.. பல தீவுகள் கொரியாவை சுற்றி இருந்தாலும், ஜேஜுதான் இருப்பதிலேயே பெரிய தீவு.. அதுமட்டுமே சிறப்பென்றில்லை.. அந்த தீவே எரிமலை படிமங்களால் ஆனது என்பது அதன் மிகமுக்கிய சிறப்பு..
குறுக்கும் நெடுக்குமாக சாலை வழியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயணிக்க மேலும் சாலையில்லை என்றாலும் ஐந்தாறு நாட்கள், தூக்கமின்றி அலைந்தாலும், அனைத்து இடங்களையும் பார்த்து முடித்துவிடமுடியாது..
கொரியாவிற்கு வரும் எவரும் தவற விடக்கூடாத இடம் இந்த ஜேஜு என்றாலும், அதற்கு ஈடு இணையான அழகியலை கொண்டிருக்கும் இன்னொரு குட்டித்தீவு கோஜே.. இதுவும் சாங்வானுக்கு மிக அருகில் இருப்பது கொரிய தஞ்சைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியே..
கோஜேவிற்கு செல்ல சாலை வழியிலேயே பயணித்துவிடலாம்.. பாலம் இணைக்கிறது என்றாலும் தீவு என்ற பெயருக்கு எந்த களங்கமும் இல்லை.. ஏனெனில் அந்த பாலம் கடலுக்கு அடியில் செல்கிறது.. மகிழுந்திலோ, பேருந்திலோ பயணிக்கையில், பிரமிப்பாக இருக்கும்.. இந்த உலகத்தையே மூழ்கடிக்கவல்ல இந்த பெரும் சமுத்திரத்தின் அடியில் பயணித்துக்கொண்டிருப்பது பிரமிப்பை யாருக்குதான் தராமல் இருக்கும்..
இந்தியா என்றதும் நினைவில்வரும் டெல்லி, ஆக்ராவைப்போலவே, கொரியா என்றதும் சியோல் நகரம் மட்டுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலாததுதான்.. ஆனால், இந்தியாவில் தெற்கே மொத்த இந்தியாவின் பேரழகும் புதைந்திருப்பது போல, கொரியாவிலும் தெற்கே குறிப்பாக சாங்வான், பூசான், கோஜே, ஜேஜு பக்கம்தான் மொத்த அழகும் புதைந்திருக்கிறது.. அதனால்தான் இதற்கு கொரியாவின் தஞ்சை என்ற பெயர்..
கொரிய நகரங்களைப்பற்றி குறிப்பிட இப்படி பல முக்கிய காரணிகள் இருந்தாலும், அந்த பகுதிகளைவிடவும் முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒன்று உண்டு..
அது கொரிய அஜ்ஜுமாக்களும், ஹல்மொனிகளும்தான்.. அஜ்ஜுமா என்றால் நடு வயதுடைய பெண்கள்.. அத்தைகள் என வைத்துக்கொள்ளலாம்.. ஹல்மொனி என்றால் பாட்டிகள்.. யார் மீதும் கொள்ளை பிரியம் வைத்துவிடும் அன்பர்கள் இவர்கள்..
ஹரபொஜிகளான கொரிய தாத்தாக்கள், தள்ளாடும் வயதிலும் கர்வத்தையும், அகந்தையையும் கூடவே வைத்திருப்பார்கள்.. ஆனால் பாட்டிகள் அவ்வளவு மென்மையானவர்கள்..
அஜ்ஜுமாக்களுடைய, ஹல்மொனிகளுடைய சேட்டைகளையும், அன்பையும் இந்த கட்டுரையில் முதல் வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையத்தொடரில் கண்டால் மிகச்சிறப்பாக விளங்கிக்கொள்ளமுடியும்.. இருந்தாலும் எனக்கான பல நேரடி அனுபவங்கள் உண்டு.. அதில் ஒன்று..
ஒருமுறை என் மகனுக்கு உடல்நிலை சரியில்லையென அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருந்தேன்.. முகக்கவசம் அணிந்திருந்தாலும், மகன் இருமும்பொழுது, அருகிலிருந்த அனைவரும் சற்று தொலைவில், நுண்ணியிர்களின் பார்வையில் படாத தூரத்தில் சென்று ஒளிந்துகொண்டிருந்தனர்.. ஆனால், அங்குவந்த ஒரு பாட்டி, சட்டென மகனின் அருகில் வந்து நெற்றியில் தன் புறங்கையை வைத்து கவனித்து, அவனின் முகக்கவசத்தை எடுத்து அவன் முகத்தை முழுவதையும் பார்த்து, எதையோ கூறிச் சென்றார்.. பின்னர் மகனிடம் அவர் என்ன சொன்னார் எனக் கேட்டதற்கு, 'கவல படாத சரியாகிடும்..' என்று சொன்னதாக கூறினான்..
சமயம் கிடைத்தால், தாக்க காத்திருந்த லட்சக்கணக்கான நுண்ணுயிர் சமுத்திரத்தின் மத்தியில் பாட்டியின் அன்பு, இளைப்பாற கிடைத்த ஜேஜு தீவுபோல முளைத்திருந்தது..
இடங்கள் உலகமெங்கும் காட்சியளிக்கின்றன..
மென்மேலும் அவ்விடங்கள் அழகுபடுத்தப்படுகின்றன..
அழகு இடங்களில் மட்டுமே தேடப்படுகின்றன.. ஆனால்
உண்மை அழகு நல்லிதயங்களில்தான் குடிகொண்டிருக்கிறது..
கொரியாவிற்கு நீங்கள் பயணிக்கும்பொழுது கொரிய பாட்டிகளிடம் பேச்சுகொடுத்து பாருங்கள்..
- சகா..
கருத்துகள்
கருத்துரையிடுக