சாங்வான் குறிப்புகள் #03

 பியான்சன் நோக்கிய பேருந்து பயணம்..

வழியெங்கும் ஆர்ப்பரிப்புடன் கடந்துவந்து இதோ இந்த கழிமுகத்தில் கடலுடன் ஒன்றிப்போய், காணாமல் போகிறது.. இல்லை இல்லை, கடலாக விரிகிறது.. தன் மூதாதைய ஹைட்ரஜனுடனும், ஆக்சிசன்களுடனும் பின்னிப்பிணைந்து நலம் விசாரித்துக்கொள்கின்றன..


கொரியாவின் தஞ்சையான சாங்வானில் இருந்து ஏறத்தாழ முன்னூறு கிலோமீட்டர் தொலைவில், மேற்கு ஓரத்தில், மஞ்சள் கடற்கரையில்  அமைந்திருக்கிறது இந்த பியான்சன்..


யாலு, ஹான் போன்ற வற்றா நதிகள் கொரிய தீபகற்பத்திலிருந்தும், மஞ்சள் நதி சீன தேசத்திலிருந்தும் இந்த மஞ்சள் கடலில்தான் நட்புகொண்டு நல்லவர்களைப்பற்றிய உரையாடலை நிகழ்த்துகின்றன..



பேருந்து ஆற்றங்கரைகளையும், பெரும் மலைக்குன்றுகளையும் கடந்து சென்றுகொண்டிருக்க, அசோகமித்திரன் என்னை ஹைதராபாத்திற்கு அழைத்துச்சென்று கிரிக்கெட் விளையாடவும் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்..


அந்த 18வது அட்சக்கோட்டில் பயணித்துக்கொண்டே, பேருந்தினுள் அடைபட மறுத்து எதிர் திசையில் பயணப்பட்டவற்றை கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன்...



ஓடிக்கொண்டிருத்த நீர் சத்தமிட்டு, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த உரைந்த நீரை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.. குறிப்பிட்ட இடைவெளிகளில், இருளை சுருட்டி பேருந்தில் போட்டவண்ணம் பெரிய பெரிய குகைகள் நீண்டிருந்தன். நீளம் என்றால், பெரும் நீளம்.. சில இரண்டு கிலோமீட்டர், சில ஆறு ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டிருந்தன.. இந்த குகைகள் கட்டும் முன் மலைகளாக மடிக்கப்பட்ட இந்த நிலப்பரப்பில் எப்படி மக்கள் ஊர் விட்டு ஊர் சென்றிருப்பார்கள்.. நீரைப்போலத்தானோ!

 

இதோ, குகைக்கு வெளியே வெளிச்சம் மீண்டும் எட்டிப்பார்க்கிறது.. மீண்டும் ஆற்றங்கரை, வயல்வெளிகள்..

குளிரில் பறவைகள் கூட்டிற்குள் அடைந்துவிட்டன போலும்.. தண்ணீரைத்தவிர வேறு ஒன்றும் சத்தமிடவில்லை.. இலைகள் உதிர்ந்த பைன் மரத்தின் உச்சிக் கிளைகளில் அமைக்கப்பட்டிருந்த பறவைக் கூடுகள் தெளிவாக தெரிந்தன.. மலையடிவார வயல்வெளிகள் யாவும், வெண்போர்வை கொண்டு இழுத்து போர்த்திக்கொண்டு, நீண்ட ஓய்வில் அழ்ந்திருந்தன.. பெர்சிமான் தோட்டங்களில், அம்மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தங்களுக்கென்று சில சந்ததிகளை உருவாக்க, ஒன்றிரெண்டு பழங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தன..

 


விடியும் முன் புறப்பட்ட பேருந்து, பருந்தின் இறகு போல காற்றில் வழுக்கிக்கொண்டு விடியலை தூவிக்கொண்டே விரைந்துகொண்டிருத்தது.. எருமை ஒன்று தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்க, அதனை விரட்டிக்கொண்டே சந்திரசேகரன் வருவதும்.. பின் அதனை வீட்டில் கட்டிவிட்டு, டாங்க் பண்ட் சாலை வழியாக தன்னுடைய மிதிவண்டியில் பயணித்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வதும் கருப்புவெள்ளை பிம்பமாக தெரிந்து மறைந்தது..

 




பேருந்தை துரத்திக்கொண்டேவந்த சூரியன், உச்சியை அடைந்திருந்தபொழுது பியான்சன் வந்தடைந்தாகிவிட்டது.. இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு நேற்றைய இரவே தொடங்கிவிட்டிருந்தது.. டிசம்பர் கடைசியிலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் இன்னும் அதிகப்படியான பனிப்பொழிவை இந்த பகுதி காணப்போகிறது.. அதற்குள் மஞ்சள் கடற்கரையை அடைந்துவிட பரபரப்புடன் சத்தமிட்டு ஓடிக்கொண்டிருந்தது தண்ணீர்.. அவை ஓடும் நிலையிலேயே உறையப்போகிற காலம் இன்னும் சில நாட்களில் வந்துவிடப்போகிறது..

 

உறைந்து நின்ற என்னை மதிய உணவிற்கு வரவேற்றார்கள்.. எனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து உணவிற்காக காத்திருந்தேன்..

சிறு துண்டுகளாக வெட்டிய காய்கள், சில இலைகள், இன்னும் சில தண்டுகள் எனப்போடப்பட்ட ஒரு அகண்ட பாத்திரத்தை என்முன்னால் வைத்தார்கள், அருகிலேயே ஒரு சிறு பாத்திரத்தில் சுடுசோறும், ஒரு குவளை தண்ணீரும், சிறு தட்டுகளில் பீன் பேஸ்ட், கிம்சி, பச்சை மிளகாய் என பரிமாறப்பட்டது.. பீன் பேஸ்டையும், சோறையும், அகண்ட பாத்திரத்தில் போட்டு பிபிம்பாப் என்ற அந்த உணவை தயார் செய்து, சாப்பிட்டுக்கொண்டே, ஜாப் ஸ்டிக் கொண்டு அருகில் வைக்கப்பட்ட பெயர் தெரியாதவற்றை அனைத்தையும் உள் தள்ளிக்கொண்டிருந்தேன்.. சக கொரியர்களுக்கு, இவன் ஒருவேளை கொரியனாக இருப்பானோ என்று சந்தேகம் வருமளவிற்கு நேர்த்தியாக ஒரு கொரியனைப்போல சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.. அருகில் உட்கார்ந்து உண்டுகொண்டிருந்த கொரியர்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டேதான் இதனை செய்கிறேன் என்பதை அவர்கள் கண்டுகொண்டிருக்க முடியாதுதான்..

 


பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதே அருகில் இருந்த கொரியர்கள் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.. கொரியர்கள் மிகவேகமாக சாப்பிடக்கூடியவர்கள், அதே வேளை, ரசித்தும், உறிஞ்சும், சத்தமிட்டும், சப்புகொட்டியும் சாப்பிடுபவர்கள்..

அவர்கள் சாப்பிட பயன்படுத்தும் அகண்ட பாத்திரம், அந்த சத்தம் இவற்றையெல்லாம் என் அம்மா கண்டால் என்னை அதட்டுவார்.. அடிபிடித்த உப்புமாவை சாப்பிட ஆசைப்பட்டு, சட்டியை அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்த என்னை ஒருமுறை கையில் கிடைத்த ஒரு தட்டைவைத்து அடித்திருக்கிறார்.. சாப்பிடும்பொழுது சப்புகொட்டக்கூடாது, நாசுக்காக சாப்பிடவேண்டுமென பல பாடங்களைக்கேட்டு வளர்ந்தவன்தான் என்றாலும், அழுத்திவைக்கப்பட்ட அந்த சுயபண்புகள் மிக மகிழ்சியாக வெளியே வந்தன..

 

பாதி சாப்பிட்டு முடித்தபொழுது, அருகில் இருந்தவர்கள் சட்டென எழுந்து குனிந்து மரியாதை செலுத்திவிட்டு, கிளம்பிவிட்டனர்..

 

நம்மூரில் பந்தி மரியாதை என்ற உண்டு.. ஒரு வரிசையில் நால்வர் அமர்த்திருந்தால், அதில் ஒருவர் சாப்பிட்டு முடித்துவிட்டாலும் மற்ற மூவர் சாப்பிட்டு முடிக்கும் வரையில் காத்திருப்பார்.. ஒருவேளை, அந்த மூவரில் ஒருவர் எதிரியாக அல்லது, சென்றவாரம்தான் தன்னை கொலை செய்ய முயன்றவர் என்றாலும், வயதில் சிறியவராக இருந்தாலும், அவரும் சாப்பிட்டு இலையை மடக்கும் வரை, ஒருவரை ஒருவர் பார்த்து தலையசைத்துதான் பந்தியைவிட்டு எழுந்துகொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.. இதே போலொரு பழக்கம் கொரியாவிலும் இருக்கிறது.. ஆனால், இந்த இளைஞர்கள் அவ்வளவாக அதை பின்பற்றுவதில்லை போலும்..

 

அதே பேருந்து, அதே சன்னலோர இருக்கை, அதே அசோகமித்திரன், அதே 18வது அட்சக்கோடு.. ஆனால் இப்பொழுது கிழக்கு நோக்கிய பயணம்.. இதோ, இந்த சியாங்பியாங் குகையை தாண்டிவிட்டால், சாங்வான் பல்கலைக்கழகத்திற்குள் நேரடியாக குதித்துவிடலாம்.. சாங்வான் ஜுங்காங் ரயில் நிலையம், ஹன்மாயும் மருத்துவமனை, கியாங்சங்நம்தோங் மாநில அலுவலகம், பொங்னிம் பள்ளிகள், சர்வதேச துப்பாக்கி சுடும் இடம் என அனைத்தும் சுற்றி அமைய, நடுவே சாங்வான் பல்கலைக்கழகம் மேகம் மறைத்த இளஞ்சூரிய வெளிச்சத்தில் அழகாக தெரிகிறது.. பயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தைவிட்டு இறங்கிய என்மீது சிறு சிறு மழைத்துளிகள் விழுந்துகொண்டிருக்கின்றன.. நான் இனி எப்பொழுது பியான்சன்னிற்கு பயணிப்பேன் தெரியாது, ஆனால் இந்த மழைத்துளிகள் மீண்டும் பயணத்தை தொடங்கிவிட்டன.. ஊரெல்லாம் சுற்றினாலும், தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் நிம்மதி இப்பொழுது என்னிடம் இருந்தது.. சாங்வான் கொரியாவின் தஞ்சை.. இந்த நீர்த்துளிக்கான கடல்..

 


சகா..

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு...

சாங்வான் குறிப்புகள்#01

விளையாட்டாக சொல்கிறேன் #2