பருவமடைந்த நாடகம்
மழை பெய்து கிளம்பிய
நுண்ணுயிர் நறுமணம்
மூலையில் சாய்த்துவைக்கப்பட்ட
கிரிக்கெட் மட்டையின் மீயொளி
விளையாட்டில் தோற்றதன் பலனாய்
தங்கை கையால் சிதறடிக்கப்பட்ட
பல்லாங்குழிச் சோழிகள்
எப்பொழுதாவதுதான் பயன்படுமென்று
தாயம் விளையாட டாட்டு பெற்ற
சப்பாத்திக்கட்டையின் புறமுதுகு
பிரிட்டாணியா ரொட்டிகளை வாங்கி
100 புள்ளிகளெடுத்து உலகக்கோப்பை
பார்க்க போக கனவுகண்ட பொழுதுகள்
செருப்பின்றி ஓடிய இடங்களெல்லாம்
பாத தடங்களை சேமித்துவைத்த
கிருமிகளற்ற புழுதிமண்
காற்றுக்கே உப்பிட்டு சுவைத்து நுகர
கட்டாயப்படுத்தும் உப்பள சமவெளி
அவ்வெளி நடக்க அணிந்த
வெப்பந்தாங்கும் உவரிச்செடியிலைகள்
என்னருகாமை வீட்டு நண்பன்
விளையாட அழைத்த கூக்குரல்
பயணித்த மாசற்ற காற்று வெளி
இவையாவும் நினைவாய் நிலைத்திருக்க
பருவம் மட்டும் மாறியது பக்குவமென உரைத்து
பக்குவப்பட்டிருக்க வேண்டாமோ
என்றிருக்கிறது இன்று!
-சக்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக