கடவுளின் கடவுள்

திடீரென கடவுள் கண்முன்தோன்றி
தினந்தினம் செய்தியாகிய
கொடுமைகளை கொண்டுவா
தீர்த்துவிடுகிறேனென்றார்!

இன்றும் மழையில்லையென்ற
வானிலையறிக்கையுடன்
சென்றார் நண்பரொருவர்-
அவர் கையிலிருந்த வற்றா
கமண்டலம் காணாமல்பொனது!

ஏறுதழுவல் உண்டு ஆனால்
இல்லையென்ற செய்தியுடன்
வந்தார் இன்னொருவர்-
தானமர்ந்திருந்த வாகனத்தைப்
பறிகொடுத்தாரவர்!

காவிரியில் சொட்டுநீர்
கிடையாதென்ற கனடசெய்தியை
நீட்டினார் மற்றொருவர்-
தன்கண்களால் பார்க்கவியலாத
அந்நெற்றிக்கண்ணிழந்தாரவர்!

மணற்கொள்ளை தடுக்கசென்று
தடியடி பெற்றிறந்த தோழர்களின்
செய்தியை காட்டினார் ஒருவர்-
அவரழகுக்கு அழகுசெய்த
ஆடை ஆபரணங்களற்று நின்றாரவர்!

நானோ வறட்சியால், இவ்வரசால்,
வங்கிகளால், பொருப்பற்ற மக்களால்
உழவன் உயிர்விட்டானென்ற
செய்தி கொண்டுசென்றேன்!

தற்கொலை செய்துகொண்டார்
கடவுளென்ற செய்தி கிடைத்தது!

அவரும் என்னைப்போல்
அவர் கடவுளிடம் முறையிட
சென்றிருப்பாரோ என்றெண்ணி
ஏக்கத்துடன் காத்துநிற்கிறேன்
கடவுளின் கடவுளுக்காக!
-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2