தற்பொழுதைய தேவை நல்ல கல்வியுடன் கூடிய சமூக மாற்றமே.
இன்றைய தந்தியில் ஒரு செய்தி, 'சென்னை பல்கலையில் படிக்கும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு மாணவரை அப்பல்கலையின் பேராசிரியர்கள் அடித்துவிட்டனர்'. இது உண்மையில் நம்மையெல்லாம் வெட்கப்படவைக்கும் செய்திதான். ஆசிரியர்கள் அடித்ததற்கான காரணம் அவர் அப்பல்கலைக்கு வருகைதந்த விருந்தினரிடம் கேள்வி கேட்டார் என்பதுமட்டுமே. கேள்வி கேட்கும் அடிப்படை மனித உரிமை கூடவா நம் மாணவர்களுக்குக் கிடையாது..?!
நான் இளங்கலை படிக்கையில் எங்களது கல்லூரியின் தேர்வு இயக்குனருக்கு அஞ்சாதவராக யாரும் இருந்ததில்லை எங்கள் துறைத் தலைவர் உட்பட. இதுமட்டுமன்றி பொதுவாக பார்த்தோமானால், மாணவர்களை தம் சொந்த வேலைக்கு பயன்படுத்துதல், மாற்று பாலின மாணவர்களை அலட்சியப்படுத்துதல், பெண் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகள், அடுத்தவர்கள் உடைகள் மீதான கருத்து திணிப்பு, கல்வி பெற்றும் பெண்ணை போகப்பொருளென நினைத்தல், இளைய தலைமுறை ஆசிரியர்களை அடிமைகள் போல் நடத்துதல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
எப்பொழுதுமே அடுத்தடுத்த தலைமுறையினரிடத்தில் அதீத ஆற்றலும், திறமையும் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் அப்படிபட்ட இளம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் மத்திய, மாநில அரசாங்க பல்கலையில் 'இருக்கும்' முதிர்ந்த ஆசிரியர்கள் நடத்தும் விதமே மிகக்கோரமாய் இருந்துவிடுகிறது. அதுமட்டுமா மத்திய பல்கலை ஆசிரியர்கள், மாநில பல்கலை, கல்லூரி ஆசிரியர்களை, ஆசிரியர்களாகவே நினைப்பதில்லை.
கற்பித்தல், கற்றல் என்ற தத்தமது வேலைகளை மட்டுமே சரியாக செய்யப்பட வேண்டிய இடத்தில் எப்படி இவ்வாறான மனித உரிமை மீறல்கள் நடந்தேற முடியும்.
மொத்தமாய், இச்செய்தி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், 'கல்வி மட்டுமே ஒருபொழுதும் நமக்கு ஒழுக்கத்தையும், நல்லறிவையும் கொடுத்துவிடுவதில்லை, அது சமூகத்தினூடே வளர்த்தெடுக்கப்பட வேண்டிய விடயம் என்பதுதான்'.
அனைவரும் இணைந்து நற்சமூகத்தை வளர்த்தெடுப்போம். அதற்கு முன்னர் இதற்கும் சிலபல ஆகமவிதிகளை கற்பித்து எங்களுள் இன்னும் ஆயிரம் பெரியார்களை உருவாக்கிவிடாதீர்கள். ஏனெனில், சீர்திருத்திக்கொண்டே இருந்தால், எப்பொழுதுதான் நாங்கள் சீர்திருத்தப்பட்ட சமூகத்தில் வாழ்வது...!!
சக்திவேல் காந்தி
கருத்துகள்
கருத்துரையிடுக